மறையினும் தூயான்

ஶ்ரீ ந்ருஸிம்ஹர் (எ) ஶ்ரீ அழகிய சிங்கர் அவதாரம் மற்ற அவதாரங்களை விடக் கொஞ்சம் வித்தியாசமானது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

பரமன் தன் பக்தன் பிரகலாதனின் உறுதியான பக்தியை உலகுக்குக் கொணர வேண்டும் என்பதால் பல கடுஞ்சோதனைக்கு உள்ளாக்கி, அவன் நம்பிக்கையை இறுதியில் தூணிலிருந்து வெளிப்பட்டு உறுதிப்படுத்துகிறார்.  ஆக, அவர் திருத் தோற்றம் இங்கு இறுதியில் வெளிப்படுத்துவதால் ‘சிறப்புத் தோற்றம்’ ஆகிறது.

எல்லா அவதாரங்களிலும் பரமன் தான் கதாநாயகன்.  அவரைச் சுற்றியே நிகழும் கதை.  ஶ்ரீ அழகிய சிங்கர் அவதாரத்தில் மட்டும் தன் பக்தனை, இளஞ் சிறுவனை, பிரகலாதனைக் கதாநாயகனாக முன்னிலைப்படுத்தி, ‘பக்தி என்றால் இப்படி இருக்க வேண்டும்’ என்று நமக்கு உதாரணம் காட்டுகிறான் பரமன்.

வலிமையும், வரமும், துவேஷமும் கொண்ட வில்லன்; அவன் பெற்ற வரங்களை வைத்துப் பார்த்தால் அவனைக் கொல்வது அவ்வளவு எளிதல்ல.  மிகவும் யோசிக்க வேண்டும்; ஆனால், அதற்குரிய நேரத்தை அவன் தருவானா?  தெரியாது.  தன் அருமை மகன் என்றாலும், ‘ஓம் நமோ நாராயணா!’ வைத் தவிர வேறு உச்சரிக்காததால் கடும் தண்டனைகளுக்கு உள்ளாக்குகிறான்.  இறுதியில், அவன் ‘பரமன் எங்கு இருப்பான், இங்கு இருப்பானா? இங்காவது?’ என்று கேட்பானோ, நம் பக்தன் பிரகலாதன் ‘ஆமாம்! இங்கிருப்பான்; இங்குமிருப்பான்!’ என்றெண்ணி, அவனைச் சுற்றி நீக்கமற நிறைந்து விடுகிறான் பரமன்.  பரம அமைதியாய் பக்தன் இருந்தாலும், பரமனையே பரபரக்க வைத்துவிடும் அவதாரம் ஶ்ரீ அழகிய சிங்கர் அவதாரம்.

வில்லன் இரணியனை வலிமையை, வரத்தை விளக்கப் பல பாக்கள் அருளிய கம்பன், நாயகன் பிரகலாதனை விளக்க ஒரே பாடலை அருளுகிறான்.  அதை இங்கு எழுதும்போதே கண்கள் பனிக்கின்றன.

ஆயவன் தனக்கு அருமகன் உளன் ஒரு தக்கோன்

இரணியனுக்கு, மேலான தகுதியுடைய அரிய மைந்தன் ஒருவன் உள்ளான்.  அவன்…

அறிஞரில் அறிஞன்

அறிவாளிகளில் சிறந்த அறிவாளி

தூயர் என்பவர் யாரினும், மறையினும் தூயான்

தூயவர்கள் என்று சொல்லப்படுபவர் எவரை விடவும், ஏன் நான்மறைகளை விடவும் தூயவன்.

நாயகன், தனி ஞானி

எவ்வுயிர்கட்கும் தலைவன், ஒப்பற்ற ஞானம் உடையவன்

நல் அறத்துக்கு நாதன்

நல்ல அறங்களுக்குத் தலைவன்

மன்னுயிர்க்குத் தாயின் அன்பினன்

உலகத்து உயிர்களுக்குத் தாயை விட அன்பைக் காட்டக் கூடியவன்.

இதில் ‘மறையினும் தூயான்’ என்கிற சொற்களை இட்டு நம் சின்னஞ்சிறு பாலகன் பிரகலாதனின் தன்மையை உணர்த்தி, அயர வைத்து விடுகிறான் கம்பன்.  ‘தாயை விட அன்பானவன் அவன்’ என்று அருளும்போது ‘அட!’  கம்பன் குறிப்பிட்டது போல நாம் இருக்க முயன்றால், பிரகலாதனின் அருளை நிச்சயமாகப் பெற முடியும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.