ராகு கேது பெயர்ச்சி 23.09.2020

ஜெய் ஸ்ரீமன் நாராயணா! ராகு கேது பெயர்ச்சி 23.09.2020 5.56.10மணி முதல்  12.04.2022 இரவு 8.57.41 வரை

ராகு மிதுன ராசியில் இருந்து ரிஷபத்துக்கும், கேது தனுசு ராசியில் இருந்து விருச்சிகத்துக்கும் மாறுகிறார். (இது லஹரி பஞ்சாங்கப்படி நடக்கிறது)

லக்னம் 05.14(செவ்வாய்) 02.40ராகு 29.59.99 
   கிரஹ நிலைகள் 23.09.2020 – 5.56.10 மணிக்ககு  சுக்ரன் 25.05
(சனி) 01.14 
குரு 23.27சந்திரன் 29.44 கேது 29.59.99புதன் 01.20சூரியன் 06.48

அடியேன் ஜகந்நாத் ஹோரா கணித முறைப்படி லஹரி பஞ்சாங்கப்படி பலனை எழுதி இருக்கிறேன். ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் அடுத்த 18 மாதங்களில் ராகு/கேது சஞ்சரிக்கும் 9 நக்ஷத்திர அதிபதிகளின் பலம், மற்ற கிரஹங்களின் சஞ்சாரம் இவற்றை ஒட்டி கணிக்கப்பட்டது.

மேஷம் : (அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம்பாதம் முடிய) :55/100

மேலோட்டமாக பார்த்தால் உங்கள் ராசிக்கு 2ல் ராகு 8ல் கேது இது நல்ல பலனை தராது ஆனால் ராகு/கேது சஞ்சரிக்கும் நக்ஷத்திர அதிபதிகள் பலம், இந்த காலத்தில் மற்ற கிரஹ சஞ்சார பலம் ஓரளவு நன்றாக இருப்பதால் கவலை வேண்டாம். பொறுமை நிதானம் யோசித்து செயல்படல் என்று இருந்தால் நன்மை. மேலும் சந்திரனின் நக்ஷத்திரத்தில் ராகு சஞ்சரிக்கும் காலம் அதிக நன்மை உண்டாகும். 27.01.2021 – 25.09.2021 வரை

குடும்பம் பொருளாதாரம் :ஜூன் 2,2021 வரை சந்தோஷம் புதிய திட்டங்கள் நிறைவேறுதல், இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குரு, புதன், சுக்ரன் மூலம் நல்ல சூழல் உருவாகுதல் கணவன் மனைவி ஒற்றுமை, குழந்தைகள் மூலம் சந்தோஷம், புதுவீடு போகுதல், பண வரவு என்று நன்றாக இருக்கும்.பின் பிப்ரவரி 9, 2022 முதல் ஏப்ரல் 12 வரை கொஞ்சம் மன சஞ்சலம், விட்டுக்கொடுத்து போனால் பொறுமை அமைதி கொண்டால் ஓரளவு நன்றாக இருக்கும். மற்ற கிரஹ சஞ்சாரங்கள் ஓரளவு நன்மை தந்தாலும் குரு, புதன், சனி நன்மை தராது.09.02.2022 வரை எவ்வளவு சேமிக்க முடியுமோ சேமித்தால் அடுத்துவரும் காலங்கள் கஷ்டம் இல்லாமல் இருக்கும்.

உடல் ஆரோக்கியம் : ராகு உடல் ஆரோக்கியத்தை மனதை பாதிப்பதாக இருந்தாலும் அது பிப்ரவரி 9,2022க்கு மேல் கேதுவின் சஞ்சாரத்தால், பெரிய உடல் பாதிப்பு வராது ஏற்கனவே இருக்கும் வியாதிகள் இருந்து கொஞ்சம் படுத்தும். வாழ்க்கை துணைவர், பெற்றோர்கள் உடல் நலத்தில் கொஞ்சம் அக்கறை எடுக்கவும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். தகுந்த மருத்துவ சிகிச்சை, ஆகார கட்டுப்பாடு போன்றவை ஓரளவு நன்மை தரும்.

உத்யோகஸ்தர்கள் : அனைத்து பிரிவினரும் 02.06.2021 வரை பொறுமை காக்கவும் தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் பதவி உயர்வு சம்பள உயர்வு நல்ல வேலை கிடைக்கும் ஜூன் பிறகு 09.02.2022 வரை மிக நல்ல காலம் விரும்பிய இடமாற்றம், நல்ல உத்தியோகம் வெளிநாட்டு வாய்ப்பு, வீடு மனை யோகம், திருமண பாக்கியம் என்று மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது. 09.02.22 – 12.04.2022 வரை கொஞ்சம் மந்தமாக இருக்கும் எதிலும் கவனம் தேவை வார்த்தைகளை விடுவதில் கவனம் தேவை நண்பர்களே ஏமாற்றுவார்கள். பகை அதிகரிக்கும்.

தொழில் செய்வோர் (அனைத்தும் விவசாயம் அரசியல் கலை உட்பட):10,11க்குடையவர் சனி, 6க்குடையவர் புதன் இருவரும் ஓரளவு நன்றாக இருப்பதால் இந்த பெயர்ச்சி முழுவதும் பரவாயில்லை என்று இருக்கும். அதே நேரம் சுக்ரன் & கேது இணைவு குரு இவர்கள் மற்றும் 2ல் ராகு சுக்ரனின் நக்ஷத்திரத்தில் அதனால் 9.02.22 வரையிலுமே ஏற்றம் இறக்கம் இருந்துகொண்டிருக்கும். அரசாங்க தொந்தரவு இருக்கலாம் கணக்கு வழக்கை சரியாக வைத்துக்கொள்வது தொழிலாளர்கள் தொண்டர்கள் ரசிகர்கள் என்று மோதல்போக்கை கடைபிடிக்காமல் இருப்பது நன்மையை தரும். 02.06.2021 – 09.02.2022 வரையில் சிரமம் அதிகம் இருக்கும் அதற்கு முன் அதற்கு பின் நன்றாக இருக்கும். மொத்தத்தில் சுமார். திட்டங்களை யோசித்து செயல்படுத்துவது வார்த்தைகளை விடுவதில் கவனம் என்று இருந்தால் நலம் உண்டாகும்.

மாணவர்கள் : 23.09.20 – 02.06.21 வரை ஓரளவு முன்னேற்றம் இருக்கும் புதனும், புதன் நக்ஷத்திரத்தில் பயணிக்கும் கேதுவும் நன்மை செய்வர். வெளிநாட்டு படிப்புக்கு முயற்சிப்பவர் வெற்றி பெறுவர். நல்ல தேர்ச்சி இருக்கும். 02.06.21 – 09.02.2022 வரை கொஞ்சம் கவனம் தேவை புத்தி தடுமாற்றம் இருக்கும். ஆசிரியர் பெற்றோர் அறிவுரை கேட்பது நல்லது. 09.02.22 – 12.04.22 வரை நன்றாக இருக்கும் நினைத்தது நடக்கும் போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். பொதுவில் இந்த பெயர்ச்சி பரவாயில்லை

ரிஷபம் : (கிருத்திகை 2,3,4, ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய): 50/100

ராகு ராசியிலும், கேது 7லும் சஞ்சாரம். ராசிநாதன் சுக்ரன் வலு, ஜனன ஜாதகத்தில் ராகு கேதுக்களின் பலம் அவர்கள் அமர்ந்த நக்ஷத்திராதிபதி பலம் நன்றாக இருந்தால் அடுத்த 18 மாதங்களுக்கு கெடுதல் இல்லை. மேலும் ராகு கேது சஞ்சரிக்கும் நக்ஷத்திராதிபதிகள் செவ்வாய், சுக்ரன், சூரியன், புதன், சனி,குரு இவர்கள் இந்த 18 மாத சஞ்சாரம் நன்றாக இருப்பதால் பெரிய பாதிப்புகள் கிடையாது. பொதுவாக ராகு ராசியிலும் கேது 7லும் சஞ்சரிக்கும் போது உடல் ஆரோக்கியம் பாதிப்படையும், முயற்சிகள் தோல்வி அடையும் வாழ்க்கை துணைவர் பிரிதல் ஜீவன வகையில் குறைவு என்று சொல்வர் ஆனால் மேற்படி நக்ஷத்திரக்கால்களில் பயணிக்கும் ராகு கேதுகள் செவ்வாய்,சுக்ரன்,சூரியன், புதன், சனி குரு பலனைத்தான் தரும். அவர்கள் நன்றாக இருப்பதால் பெரிய கெடுதல் கிடையாது.

குடும்பம் பொருளாதாரம் :02.06.2021 வரை குரு பார்வை, புதன், சுக்ரன் சஞ்சாரம், சூரியனின் பலம் இவை நன்றாக இருப்பதால் வியாதிகள் கட்டுக்குள் இருக்கும். முயற்சிகள் மெதுவாக வெற்றிபெறும், பொருளாதாரம் நன்றாகவே இருக்கும். 12க்குடைய செவ்வாய் திருமணம் போன்ற சுப செலவுகளை தரும். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய வீடு வாகனம் வாங்கும் யோகமும், குழந்தை பாக்கியம் ஏற்படலாம். 02.06.2021 – 09.02.2022 கொஞ்சம் சுமாராக இருக்கும் சனி குரு கொஞ்சம் சஞ்சலம் முன்னேற்ற தடையை கொடுப்பர், பொறுமை நிதானம், எதையும் யோசித்து செய்தல், பணத்தை சிக்கணமாக செலவு செய்தல் என்று இருந்தால் ஓரளவு நன்றாக இருக்கும். 09.2.22க்கு பின் நல்ல நிலை இருக்கும் வளர்ச்சி கூடும்.

உடல் ஆரோக்கியம் :ஏற்கனவே இருந்து கொண்டிருந்த வியாதிகள் தொடரும், புதிதாக வாழ்க்கை துணைவர், பெற்றோர்கள் உடல் நலத்தில் பாதிப்பு இருக்கலாம் இது 09.02.2022 வரை இருக்கும். சரியான மருத்துவ சிகிச்சை, ஆகார கட்டுப்பாடு போன்றவை நலம் தரும். கவனமாக இருத்தல் அவசியம். மன சஞ்சலம் நீங்க இஷ்ட தெய்வ ப்ரார்த்தனை பலன் தரும்.

உத்யோகஸ்தர்கள் (அனைத்து பிரிவினருக்கும்):பொதுவாக இந்த 18 மாதங்களும் 12.04.2022 வரை கொஞ்சம் கடுமையாக உழைத்தால் முன்னேற்றம் காணலாம். ஜூன் 2021க்கு பின் ஜனன ஜாதகத்தில் 10,11,2,6 இடங்கள் வலுவாக உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு புதிய வேலை என்று கிடைக்கலாம். வாக்கு கொடுப்பது, கோபத்தில் சக தொழிலாளி, மேலதிகாரி இவர்களுடன் மோதல் போக்கை கொள்வது, நிர்வாக குறைகளை சக தொழிலாளியிடம் சொல்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது இது வேலை இழப்பை மட்டுமல்லாது வழக்கு என்று ஏற்பட்டு மன உளைச்சலை தரலாம். அதேநேரம் ஜாதகம் நன்றாக இருந்தால் நல்லபலன் கூடுதலாக இருக்கும்.

தொழில் (வியாபாரம், சொந்த தொழில், கலைஞர்கள், அரசியல்வாதி, விவசாயி) :

23.09.2021 – 02.06.2021 வரை சுமார் கொஞ்சம் கவனம் தேவை, கணக்குவழக்குகளை சரியாக வைத்து கொள்ளுதல், கடுமையான உழைப்பு, வாக்கு கொடுப்பதில் எச்சரிக்கை, புதிய திட்டங்களை ஒத்து போடுதல் என்று இருக்க வேண்டும், அதேநேரம் பொருளாதாரம் நன்றாக இருக்கும். பணத்தட்டுப்பாடு இருக்காது. செலவும் அதிகரிக்கும். ஜூன் 2021க்கு பின் பெயர்ச்சி முடியும் வரை நன்றாக இருக்கும் புதிய தொழில் விஸ்தாரணம் நன்மை தரும். பணப்புழக்கம் தாராளம், வங்கி கடன்கள், புதிய வாய்ப்புகள், எதிலும் வெற்றி என்று இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் நிதானம் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது. பெரிய பிரச்சனைகள் இருக்காது பரவாயில்லை என்று சொல்லும் பெயர்ச்சி

மாணவர்கள் :தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் மட்டுமே நன்மைகள் அதிகம், புதன் சஞ்சாரம் ஓரளவு நன்மை தரும். இருந்தாலும் ஆசிரியர் பெற்றோர் அறிவுரை படி நடப்பது நல்லது. மற்ற சுக்ரன், குரு, செவ்வாய் நன்மைகளை தருவதால் போட்டி பந்தயங்களில் வெற்றி, வெளிநாட்டு படிப்பு முயற்சி வெற்றி பெறுதல் எதிலும் தேர்ச்சி என்ற நிலை இருக்கும். பொதுவில் இந்த பெயர்ச்சி ஓரளவு நன்மை தரும்.

மிதுனம் : (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய):  65/100

உங்கள் ராசியை விட்டு ராகு விலகி 12ல் &கேது 6ல் இது நன்மை செய்யும் நிலை. பொதுவாக 12ல் ராகு கடன் வியாதி எதிரி இந்த மூன்றும் இல்லாமல் செய்திடும் பொருளாதார நிலை மேம்படும். 6ல் கேதுவும் வருவாயை அதிகரித்து மேல்மட்ட மனிதர்கள் செல்வாக்கை ஏற்படுத்தும். ஜனன ஜாதகம் நன்றாக இருந்தால் இவை அதிகம் ஆகும். மேலும் இந்த 18 மாதத்தில் மற்ற கிரஹங்களின் சஞ்சாரம் பரவாயில்லை என்று சொல்லும் படி இருப்பதால் பெரிய நஷ்டங்கள் இல்லை மனம் நிம்மதியாக இருக்கும். அஷ்டமத்தில் சனி குரு சஞ்சாரமும் பெரிய பாதிப்பை தராது. சூரியன் சந்திரன் செவ்வாய் நக்ஷத்திரத்தில் பயணிப்பது அவர்களின் பலம் தத்கால நட்பு இதனால் நன்மைகள் அதிகம் இருக்கும்.

குடும்பம் பொருளாதாரம் : மகிழ்ச்சி அதிகரிக்கும் கேதுவால் வருவாய் பெருகும் போட்ட திட்டங்கள் வெற்றி அடையும், 02.06.2021 வரை ஜீவன வகையில் அதிக லாபம் வரும். அதனால் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை சிரமம் இல்லாமல் நடத்துவீர்கள், புதிய வீடு, புதிய இடமாற்றமும் இருக்கும். யாத்திரைகள் கேளிக்கைகள் என்று நன்றாகவும். ஆடை ஆபரண சேர்க்கையும் இருக்கும். 02.06.2021-  09.02.22 வரை நன்மை தீமை கலந்து இருக்கும். குருவால் மன சோர்வு கொஞ்சம் மந்த நிலை அல்லது குடும்பத்தில் சஞ்சலம் இருந்து கொண்டிருக்கும். பணவரவு தாராளமாக இருந்தாலும் அதே அளவு செலவும் இருக்கும். 09.02.22 – 12.04.22 வரை நல்ல சூழல் நினைத்தது நடக்கும் வாழ்வில் ஏற்றம் இருக்கும்.

உடல் ஆரோக்கியம் :6ல் இருக்கும் கேது, மற்றும் செவ்வாய்,புதன் சஞ்சாரங்கள் 12.04.2022 வரையிலும் கூட பெரிய ஆரோக்கிய பாதிப்பை தராது எனினும் குரு, சுக்ரனால் வாழ்க்கை துணைவர் & சனி சஞ்சாரம் பெற்றோர்கள் வழியில் வைத்திய செலவை கொடுக்கும். மன சோர்வு அவ்வப்போது ஏற்படும். தகுந்த மருத்துவ சிகிச்சை, ஆகார கட்டுப்பாடு இறைத்யானம் இவை நன்மை தரும். பொதுவில் இந்த பெயர்ச்சியில் ஏற்கனவே இருந்த வியாதிகளின் தாக்கம் மிக குறைவாக இருக்கும் என்பது உறுதி.

உத்யோகஸ்தர்கள் (அனைத்து பிரிவினரும்): அலுவலகத்தில் வாங்கிய கடன் அல்லது வெளியில் வாங்கிய கடன் அடைபடும் நேரம் இது அதற்கு ஏற்றார் போல் வருவாய் பெருகும். சிலருக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு அல்லது நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.  அதே சமயம் 02.06.2021 – 09.02.2022 வரையில் கொஞ்சம் வேலை பளு, சக தொழிலாளிகளுடன் கருத்து வேறுபாடு அதனால் வேலையில் மாற்றம் அல்லது இடமாற்றம் சின்னச்சின்ன பிரச்சனைகள் என்று இருக்கும் ஆனால் பணப்பற்றாக்குறை வராது. கொஞ்சம் கவனமாக இருப்பது பேச்சை குறைப்பது நன்மை தரும். 09.02.2022 முதல் லாபம் ஆரம்பிக்கும்.

தொழில்(வியாபாரம், கலை, அரசியல் விவசாயம், அனைத்து சொந்த தொழில்):10,6,2 அதிபதிகள் சஞ்சாரம் இந்த பெயர்ச்சியில் 02.06.21 வரை நன்றாக, 02.06.21 -09.2.22 வரை சுமாராக அதன் பின் சிறப்பாக இருப்பதால் முதலில் நல்ல வருவாய் இருக்கும் தொழில் வளர்ச்சி இருக்கும். செவ்வாய் ஜூன் 2021 வரை புதிய தொழில் அல்லது தொழில் விரிவாக்கம் என்று செய்ய வைத்து புகழையும் தருவார். அரசியல்வாதிகள் பதவி பெறலாம். 02.06.2021 – 09.02.2022 வரை கொஞ்சம் நிதானத்துடன் செயல்படவேண்டும். பணத்தை கையாள்வதில் சிக்கனம் தேவை தொழிலாளிகள் பார்ட்னர்கள் ரசிகர் தொண்ட என்று தொல்லைகள் அதிகரிக்கும் பேச்சை குறைப்பது நல்லது. போட்டிகள் ஒருபக்கம் இருந்தாலும் தொழிலில் வருமானம் குறையாது 09.02.2022க்கு பின் நினைத்தது நிறைவேறும். பொதுவில் நன்மை அதிகம் தரும் பெயர்ச்சி

மாணவர்கள் : புதன் & கேது ஓரளவு நன்மை செய்யும் படிப்பில் கவனம் தேவை முயற்சிகளில் சொல்ப பலனே இருக்கும். பெற்றோர் ஆசிரியர் அறிவுரை படி நடப்பது. நட்பை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துவது. போட்டி பந்தையங்களில் அதிக முயற்சி தேவை. 09.02.22க்கு பின் தான் வெற்றி அதிகம் இருக்கும். பொதுவில் இந்த பெயர்ச்சி ஓரளவே நல்ல பெயர் மதிப்பெண் நல்ல கல்விக்கூடம் என்று கிடைக்கும். அதிக முயற்சி தேவைப்படும்.

கடகம் : (புனர்பூசம் 4ம்பாதம், பூசம், ஆயில்யம்) : 85/100

ராகுவால் நன்மை பெறும் ராசி இது. பொதுவாக ராகு/கேது ஜென்ம ராசிக்கு 3,6,10,11ல் சஞ்சரிக்கும்போது நன்மை அதிகம் இருக்கும் என்பது பொதுவிதி. இப்பொழுது ராகு 11லும் கேது 5லும் சஞ்சரிக்கிறார். மேலோட்டமாக பார்த்தால் 5ல் கேது கௌரவ பாதிப்பு, குழந்தைகள் ஆரோக்கியம் பாதித்தல், பணத்தட்டுப்பாடு என தரும் ஆனால் கேது இங்கு நீசம் என்ற ஒரு நிலை இருப்பதால் இது இருக்காது அல்லது குறைவாக இருக்கும். ராகு அதிக நன்மை தரப்போகிறார். ராசியாதிபதியின் ரோகிணி நக்ஷத்திரத்தில் சஞ்சரிக்கும் காலம் 27.01.2021 – 25.09.2021 வரையில் மிக அருமையாக இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

குடும்பம் பொருளாதாரம் : ராகு 11ல் குடும்பத்தில் மகிழ்ச்சி சுப நிகழ்வுகள் உண்டாகுதல், திருமணம் எதிர்பார்த்தோர்க்கு திருமணம் அமைதல், பொருளாதாரத்தில் உயர்ந்த நிலை, சொந்த தொழில் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம், வீடு வாகன யோகங்கள் அமைதல் உயர்ந்த மனிதர்களின் நட்பு கிடைத்தல், விருந்து கேளிக்கைகள், 5க்குடைய செவ்வாய், லாபாதிபதி சுக்ரன், சூரியன் இவர்களும் 7ல் வரும் குரு சனி என்று பல கிரஹங்களும் நல்லதை செய்வதால் நினைத்த காரியங்கள் வெற்றி அடையும் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிக்ஷம் இருக்கும்.

உடல் ஆரோக்கியம் : வியாதிகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். குடும்ப அங்கத்தினர்கள், வாழ்க்கை துணைவர் என்று அனைவரது ஆரோக்கியமும் நல்ல முன்னேற்றம் இருக்கும் மருத்துவ செலவுகள் குறையும். 02.06.2021 – 09.02.2022 இந்த காலங்களில் கொஞ்சம் கவனம் தேதை பெற்றோர் ஆரோக்கியம் பாதிக்கப்படும் 4,9 அதிபதிகள் சஞ்சாரம் சனியின் தொடர்பு மருத்துவ செலவை கொடுக்கும்.

உத்தியோகஸ்தர்கள் (அனைத்து பிரிவினரும்) : புதிய வேலை தேடுவோருக்கு உடன் கிடைக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்பும் சிலருக்கு உண்டு. வேலை பளு குறையும். உழைப்பதில் நாட்டம் அதிகரிக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் இவை இருக்கும். இருந்தாலும் 02.06.2021 – 09.02.2022 வரையில் கொஞ்சம் வேலை பளு அதிகரிக்கும் சக தொழிலாளியால் தொல்லை வரும். விரும்பாத இடமாற்றம் உண்டாகும் ஆனாலும் ஜீவன வகையில் பாதிப்பு வராது. அதன் பின் நல்ல லாபம் உண்டாகும்

சொந்த தொழில் (வியாபாரம், விவசாயம், கலை, அரசியல்) : நல்ல முன்னேற்றம் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்துவீர்கள், நாள்பட்ட சரக்குகள் விற்று லாபம் வரும். இதுவரை சிரமமாக இருந்த தொழில் மந்த நிலை மாறி வருவாயை தருவதாக அமையும். ராகு 11ல் இருப்பது சூரியனும் பலமாய் இருப்பது அரசாங்க ஆதரவு, மாற்று மதத்தவர், மொழியினர் மூலம் லாபம், கேட்ட வங்கி கடன் கிடைத்தல், தொழில் விரிவாக்கம் புகழ், பெயர், அரசியல் செல்வாக்கு என்று நன்றாகவே இருக்கும். அதே நேரம் சனி, கேது சம்பந்தம், சனியின் வக்ர காலங்கள் என்று 09.02.22 வரையில் சில சிறு பிரச்சனைகள் வழக்குகள் வரும் கவனம் தேவை பெயருக்கு களங்கம் உண்டாகும். நிதானமாக செயல்பட வேண்டிய நேரம் இது. ராகு அடுத்த ராசிக்கு பெயர்ந்த பின்னும் நன்மை தரும்

மாணவர்கள் : உற்சாகமாக படிப்பீர்கள் நல்ல மதிப்பெண், விரும்பிய பள்ளி, கல்லூரி கிடைக்கும், ஆசிரியர் பெற்றோர் ஆதரவு கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும். சிரத்தையுடன் படிப்பீர்கள் அதே நேரம் 7ல் சனி குரு சஞ்சாரம் நண்பர்கள் விஷயத்தில் கவனத்துடன் இருக்கவேண்டும். நண்பர்களால் தொல்லை வரும் கவனம் சிதறும் படிப்பில் தடை ஏற்படும்

சிம்மம் : (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் முடிய) :60/100

கடந்தகாலங்களில் ஏற்பட்டதை போலவே தற்போதய ராகு பெயர்ச்சியும் நன்மைகளை தருவதாக இருக்கு பத்தில் ராகு இருவித வருவாய், பூமி லாபம், வீடு வாங்குதல், பிள்ளைகளால் நன்மை, குடும்பத்தில் சுப நிகழ்வுகள், 6ல் இருக்கும் சனி குரு அவர்கள் பங்குக்கு எதிரிகள் கடன் தொல்லை வியாதிகள் இவற்றை இல்லாமல் செய்வர். 4ல் கேது பலவீனமாக இருப்பதால் கெடுதல் ஏதும் விளையாது கொஞ்சம் மன அழுத்தம் இருந்து கொண்டிருக்கும் தியானப்பயிற்சிகள் உதவும். பொதுவில் இந்த ராகு பெயர்ச்சி 12.04.2022 வரையும் கூட பெரிய கெடுதல்கள் இல்லை. ஜனன ஜாதக கிரஹ நிலைகள் நன்றாக இருந்தால் மகிழ்ச்சி கூடுதலாக இருக்கும். மேலும் 9க்குடைய செவ்வாய் சஞ்சாரம் 25.01.2022 வரையிலும் நன்று அதனால் வேண்டியது ஆசைப்பட்டது கிடைக்கும்.

குடும்பம் பொருளாதாரம் : 2ம் இடம் புதன் நல்ல நிலையில் இருப்பதாலும் குருவின் 2ம் இடத்து பார்வை அக்டோபர் 2020 முதல் வருவது குடும்பத்தில் சுப நிகழ்வுகள், திருமணம், புதிய உறவுகள் உண்டாகுதல் என்று சந்தோஷத்தை கொடுக்கும் 10ல் ராகு வருவாயை அதிகரிக்கும் பொருளாதாரம் நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். நினைத்த தீர்த்த யாத்திரைகள் பயணம் நிறைவேறும், புதிய ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பெரிய கஷ்டங்கள் பொருளாதார சிக்கல்கள் 12.04.2022 வரை இல்லை.

உடல் ஆரோக்கியம் : நல்ல முன்னேற்றம் இருக்கும் வியாதிகள் தனிய ஆரம்பிக்கும். புதிய வியாதிகள் உண்டாகாது. 7க்குடைய சனி 6ல் மறைவது போல இருந்தாலும் அது ஆட்சி வீடு என்பதால் வாழ்க்கை துணைவரின் ஆரோக்கியத்திலும் பெரிய பாதிப்புகள் இருக்காது வைத்திய செலவு குறையும். குடும்ப அங்கத்தினர்களது ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

உத்தியோகம் (அனைத்து பிரிவினரும்) :  வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் தற்போதய வேலையில் பதவி உயர்வு சம்பள உயர்வு இருக்கும் அல்லது இதைவிட நல்ல வேலை கிடைக்கும். புதிதாக வேலை தேடுவோர் அயல்நாட்டில் வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். அதே நேரம் வேலை பளு, சக தொழிலாளியால் மன விரோதம் 02.06.2021 – 09.02.22 வரையிலான காலத்தில் பத்துக்குடைய சுக்ரன் சஞ்சாரம் சரியில்லை வேலையில் கவன குறைவு அதனால் பாதிப்புகள் என்று இருக்கும். கொஞ்சம் அனுசரித்து போவது நிதானித்து செயல்படுவது என்று இருந்தால் பெரிய பாதிப்புகள் இல்லை. கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்வது நல்லது.

சொந்த தொழில் (வியாபாரம், கலை, விவசாயம், அரசியல்) : நாள்பட்ட சரக்குகள் விற்று நல்ல லாபம் உண்டாகும். வங்கி கடன் புதிய தொழில் தொடங்குதல், தொழில் விரிவாக்கம் அதனால் புகழ் அந்தஸ்து என்று நன்றாகவே இருக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு பெறுவர். தொழிலாளர்கள் உங்கள் மனம் அறிந்து நடப்பர், போட்டிகளை ஜெயித்து லாபத்தை பார்ப்பீர்கள். இருந்தாலும் 10க்குடைய சுக்ரன் மற்றும் 6ல் மறைந்த குரு அவ்வளவு நன்மை தரவில்லை எதிலும் ஒரு கவனத்துடன் இருப்பது, புதிய முயற்சிகளை நிதானத்துடன் செயல்படுவது தக்க ஆலோசனை பெறுவது நம்பிக்கைக்கு உறியவர்களிடம் மட்டும் யோசனைகளை சொல்வது, கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொள்வது என்று இருந்தால் பெரிய தொல்லைகள் இல்லை. இருந்தாலும் முன் யோசனை உள்ளவர் நீங்கள் என்பதால் தப்பித்துவிடுவீர்கள் அதிக சிரமம் இருக்காது.

மாணவர்கள் : படிப்பில் கவனம் இருந்தாலும் பணம் செலவு செய்வதில் கவனமும், ஆசிரியர் பெற்றோர் அறிவுரை ஏற்ப செயல்படுதலும், நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கையும், கல்லூரிகளை தேர்ந்தெடுப்பதில் தக்க ஆலோசனை பெறுவதும் நன்மை தரும். போட்டி பந்தயங்கள் வெற்றியை தந்தாலும், படிப்பில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படும். புதன் சஞ்சாரம் புதனின் நக்ஷத்திரத்தில் பயணிக்கும் கேது மன உளைச்சலை தரும். தியானப்பயிற்சி, இறைவணக்கம் நன்மை தரும்.

கன்னி : (உத்திரம் 2,3,4, ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள் முடிய): 45/100

3ல் வரும் கேது பலத்த நன்மை தரும், 9ல் ராகு கொஞ்சம் சிரமத்தை தரும். பொதுவில் இந்த பெயர்ச்சி குரு, சனியின் சஞ்சாரங்களும், அவ்வளவு நன்மை செய்யவில்லை என்றாலும், கேது ராசிநாதன் புதன், சூரியன், செவ்வாய், சந்திரன், சுக்ரன் என அதிசீக்கிர கிரஹங்களால் அவ்வப்போது நல்லது நடந்து கொண்டிருக்கும். பெயர் புகழ் பரவும், நோய் நீங்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பொருள் வரவு தாராளம் அதே நேரம் செலவுகளும் அதிகரிக்கும். வரவு செலவு சரியாக இருக்கும். கேது முதல் 8 மாதம் புதனின் நக்ஷத்திரத்தில் சஞ்சரிப்பதால் அதிக நன்மை உண்டாகும் இதை பயன்படுத்தி கொள்ளுங்கள். எதையும் யோசித்து செய்வது, அவசரப்படாதிருத்தல் போன்றவை இந்த பெயர்ச்சியில் கெடுதல்கள் வருவதை குறைக்கும்.

குடும்பம் பொருளாதாரம் : 2க்குடைய சுக்ரன்  ராசியில் ராகு இருப்பதாலும் கேது அதை பார்ப்பதாலும் தன வருவாய் அதிகரிக்கும். எதிர்பாரா இனங்களில் வருமானம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி, திருமண வைபவங்கள், கேளிக்கைகள் என்று இருக்கும். 7க்குடைய குரு 6ல் மறைவது பொருளாதாரத்தை முடக்கும். சிக்கணம் மிக முக்கியம் பார்த்து செலவு செய்வது, உறவினர், நண்பர்கள் மட்டும் அல்லாது, குடும்பத்தில் உள்ளவர்களாலும் எதிர்பாரா செலவும் அதனால் மனஸ்தாபங்களும் வரும். செலவுகள் அதிகரிக்கும்.

உடல் ஆரோக்கியம் : வயறு, குடல், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் வைத்திய செலவு உண்டாகும். 7க்குடைய குரு 6ல் மறைந்து வாழ்க்கை துணைவரின் வைத்திய செலவை அதிகரிக்கும். குழந்தைகளாலும் பெற்றோராலும் மருத்துவ செலவு உண்டாகும். பணம் அதிகம் விரயம் ஆகும் அதனால் மன சஞ்சலம் உண்டாகும். தியானப்பயிற்சி, சரியான ஆகார கட்டுப்பாடு, இறை நினைவு போன்றவை ஓரளவு வியாதிகளை கட்டுப்படுத்தும்.

உத்தியோகஸ்தர்கள் (அனைத்து பிரிவினரும்) : வேலை பளு அதிகரிக்கும். கேது புதனின் நக்ஷத்திர கால்களில் சஞ்சரிக்கும் 23.09.2020 – 02.06.2021 வரையில் ஓரளவு நன்றாகவே இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு வேலை மாற்றம் பணப்புழக்கம் தாராளமாகுதல் என்று நன்றாக இருக்கும். அதன்பின் 09.02.2022 வரை மன அழுத்தம், வழக்குகள், தேவையற்ற பிரச்சனைகள், வீண் விவாதங்களால் அவஸ்தை நெருங்கிய நண்பர்கள் அல்லது மேலதிகாரிகளால் தொல்லை என்று இருக்கும். இந்த காலங்களில் பொறுமையும் யோசித்து செயல்படுவதும், நம்பிக்கையானவர்களிடம் தக்க ஆலோசனை பெறுவதும் நன்மை தரும். பொதுவில் ரொம்பகவனமாக இருக்கவேண்டிய பெயர்ச்சி, பணம் வருவாய் இருந்தாலும் செலவும் கட்டுக்கடங்கமல் இருக்கும்.

சொந்த தொழில் (வியாபாரம், விவசாயம், கலை, அரசியல் அனைத்து தொழிலும்) : இந்த பெயர்ச்சி நன்மை தரவில்லை கவனம் தேவை பொதுவாக 3ல் கேது நன்மை தரும் என சொல்லப்பட்டாலும் சனி சம்பந்தம் பெறுவதால் பெரிய நன்மைகள் கிடைக்காது. போட்டிகள் அதிகம் இருக்கும். எவருடனும் விவாதம் செய்வது கூடாது. அரசாங்கத்துடன் பகை கூடாது. கணக்கு வழக்குகளை சரிவர வைத்து கொள்ள வேண்டும். புதிய முயற்சிகளை நல்ல நேரம் ஜனன ஜாதக நிலையை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி அதன்படி செயல்பட்டு ஆரம்பிக்க வேண்டும். முதல் 8மாதம் ஜூன் 2021 வரை பெரிய பாதிப்பு இருக்காது. சுதாரித்து கொண்டால் அடுத்துவரும் காலங்களை பெரிய பிரச்சனை இல்லாமல் கடந்துவிடலாம். கேதுவின் சனி, குரு நக்ஷத்திர கால்களில் சஞ்சரிக்கும் காலம் வெகு சுமார்.

மாணவர்கள் : படிப்பில் அதிக அக்கறை கொள்ள வேண்டிய காலம் ராசிநாதன் புதன் நன்றாக இருந்தாலும் முதல் 8மாதம் ஜூன் 2021 வரை புதன் நக்ஷத்திரத்தில் சஞ்சரிக்கும் கேது நன்மை தரும் படிப்பில் வெற்றியும் நல்ல மதிப்பெண், விரும்பிய பாடம் கல்லூரி என்று கிடைக்கும் அதன் பின் 12.04.2022 வரை கொஞ்சம் சிரமம் நிதானித்து செயல்பட வேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள் அறிவுரைப்படி நடப்பது நன்மை தரும். இறைத்யானம் நன்மை தரும்.

துலாம்: (சித்திரை 3,4, ஸ்வாதி, விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய) : 55/100

2ல் கேது, 8ல் ராகு இது நல்லதல்ல என்பது பொது. ஆனால் ஜனன ஜாதகத்தில் ராகு கேது பலம் பொறுத்து நன்மை தீமை அளவு இருக்கும். கேது தாய் தந்தையர் குடும்ப உறுப்பினர்கள் மூலம் கஷ்டம் உண்டாக்குவார் வீடு பிரச்சனை வரும். 8 ராகு அபகீர்த்தி ஏற்படும் பொருள் விரயம், நண்பர்களால் சதி என்றெல்லாம் பாடம் உண்டு . ஆனால் இந்த பெயர்ச்சியில் உங்களுக்கு நன்மை அதிகம் எப்படி என்றால். ராகு உங்கள் ராசிக்கு 7ம் வீட்டுக்குடைய செவ்வாயின் நக்ஷத்திரக்காலில் 4மாதம் + பத்துக்குடைய சந்திரனின் நக்ஷத்திரக்காலில் 8மாதம் சஞ்சரிக்கிறார். கேது 9,12க்குடைய புதன் நக்ஷத்திர காலில் 8மாதம் சஞ்சாரம், மேலும் அடுத்த 8மாதம் உங்களின் உச்சாதிபதி சனியின் நக்ஷத்திரகால் என்று நன்மை தரும் விதத்தில் சஞ்சரிப்பதால் பயம் வேண்டாம்.

குடும்பம் & பொருளாதாரம் : 2க்குடைய செவ்வாய் 2ல் இருக்கும் கேதுவை பார்க்க பெயர்ச்சி ஆரம்பம் ஜனன ஜாதகம் நன்றாக இருந்தால் பெரியபாதிப்பு இல்லை கேது புதனின் நக்ஷத்திர காலில் இருப்பதால் பாக்கியங்கள் தடையில்லாமல் கிடைக்கும். தன விரயம் இருந்தாலும் அது சுப செலவாக இருக்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். சனி 4ல் இருந்து ஆட்சியாக சுகத்தை கொடுப்பார். பத்தாம்பார்வையாக ராசியை பார்ப்பதால் துன்பங்கள் விலகும் குடும்ப ஒற்றுமை இருக்கும் பணப்புழக்கம் தாராளம். கொஞ்சம் சிக்கனமாக இருப்பது நலம்.

உடல் ஆரோக்கியம் : கொஞ்சம் மன அழுத்தம் இருக்கும் ஆனாலும் பெரிய வியாதிகள் மருத்துவ செலவுகள் இருக்காது. 6க்குடையவர் 4ல் இருப்பதால் நீச்சம் பெறுவதாலும் கொஞ்சம் சங்கடங்கள், வாயு தொந்தரவு, சளி போன்றவை இருக்கும். மனைவி குழந்தைகள் பெற்றோர்கள் வழியிலும் பெரிய மருத்துவ செலவு கிடையாது மனோ தைரியம் அதிகம் அதனால் எதையும் சமாளித்து விடுவீர்கள். புதன் நன்மை தருகிறது, சூரியனும் நோயை அகற்றும் வகையில் பலத்தை தரும்.

உத்தியோகஸ்தர்கள் (அனைத்து பிரிவினரும்) : 10க்குடைய சந்திரனின் நக்ஷத்திரக்காலில் ராகு சஞ்சரிக்கும் 27.01.2021 முதல் 05.10.2021 வரை மிக பிரமாதமாக இருக்கும் பதவி உயர்வு சம்பள உயர்வு நல்ல வேலை விரும்பிய இடமாற்றம், கடன் கிடைத்தல் மகிழ்ச்சி வேலையில் ஆர்வம் என்று இருக்கும். மற்ற காலங்களில் வேலை பளு அதிகரிக்கும் பணம் விரயம், தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்குதல், கவன குறைவு, என்று சில தொல்லை இருக்கும் அதே நேரம் ராசிநாதன் +சூரியன்+புதன் சஞ்சாரங்கள் அவ்வப்போது சில நன்மைகள் தருவதால் சந்தோஷம் உண்டாகும். 09.02.22 முதல் நன்மைகள் அதிகம் நடக்கும். வேலையில் மாற்றம் முன்னேற்றம் என்று இருக்கும். பொதுவில் பெரிய பிரச்சனைகள் இருக்காது கொஞ்சம் கவனம் தேவை

சொந்த தொழில் (வியாபாரம், விவசாயம், கலை, அரசியல், அனைத்து தொழில்கள்) : இந்த பெயர்ச்சி நிச்சயம் உங்களுக்கு நன்மை தருகிறது. செவ்வாய் பலம் அதன் நக்ஷ்திர காலில் ராகு 27.01.2021 வரை தொழில் முன்னேற்றத்தை தரும். 2ல் புதன் நக்ஷத்திரகாலில் இருக்கும் கேது அடுத்த 8மாதங்கள் வரை நன்மைகளை செய்யும் பின் 05.10.2021 வரை தொழில் விஸ்தாரணத்தால் புகழ் பணவரவு, பெயர் செல்வாக்கு உண்டாகுதல் வங்கி அனுகூலம் அரசு அனுகூலம் பின் 09.02.22க்கு மேல் இன்னும் தொழில் வளர்ச்சி அடைதல் எதிரிகளை வெல்லுதல் என்று பொதுவாக இந்த பெயர்ச்சியில் பல கிரஹங்கள் அனுகூலம் அதனால் பெரிய கஷ்டங்கள் என்று ஏதும் இருக்காது. கணக்கு வழக்கில் கவனமாய் இருத்தல் பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை என்று இருந்தால் போதும்.

மாணவர்கள் : புதன் மற்றும் கேது உங்களுக்கு கல்வியை நன்றாக தரும் படிப்பில் ஆர்வம் மிகும் நினைத்த கல்லூரி விரும்பிய பாடம், சிலருக்கு அயல்நாட்டு படிப்பு கைகூடும். போட்டி பந்தயங்களில் வெற்றிகிடைக்கும் ஆசிரியர் பெற்றோர் பாராட்டை பெறுவர். நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் மட்டும் கவனமாய் இருக்கவும். பொதுவில் நன்மை அதிகம் படிப்பில் தொல்லை வராது. உடல் நலத்தில் அக்கறை தேவை.

விருச்சிகம் : (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) : 50/100

உங்கள் ராசிநாதன் மேஷத்தில் வக்ரியாக இருக்க செவ்வாயின் நக்ஷத்திர காலில் ராகு சஞ்சரிக்க ஆரம்பிக்கிறது. 7ல் ராகு வாழ்க்கை துணைவர் உடல் நல பாதிப்பு, அனைத்திலும் விரயம், குடும்பத்தில் அமைதி குறைவு, அதே போல் ராசியில் கேது உடல் ஆரோக்கிய பாதிப்பு முயற்சிகள் தடை என்றெல்லாம் பொதுவான ஒரு பாடம். ஆனால் உங்கள் ராசிநாதனை போல ராகுவும் லாபாதிபதியான புதனை போல கேதுவும் செயல் படுவதாலும் அடுத்த 18 மாதங்களில் ராகு சந்திரன் சூரியன் நக்ஷத்திர காலிலும் கேது சனி குரு என்றும் சஞ்சரிப்பது அவர்களை போல பலனை தரும். குரு 2ல் நன்மை அதிகம் சனி 3ல் நன்மை தரும். மற்ற புதன், செவ்வாய்,சூரியன், சுக்ரன், சந்திரன் எல்லாமும் நன்மை தரும். ராகு கேது பாதிப்பை தராது என்பது உறுதி.

குடும்பம் & பொருளாதாரம் : 2ல் குரு அக்டோபர் வரை, பின் 2க்குடையவர் 3ல் சஞ்சாரம் அப்பொழுது 9ம் இடத்தை பார்ப்பதால் வருமானம் பெருகும் பாக்கியங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். அதே நேரம் உறவுகளால் தொல்லை வரும் காரணம் சுக்ரன் 7க்குடையவர் அவரின் அடுத்த 18 மாத சஞ்சாரம் சரியில்லை முயற்சிகளில் தடை, திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் இழுத்தல், கணவன் மனைவிக்குள் கருத்துவேறுபாடு இருந்து கொண்டிருக்கும். மேலும் பொருளாதாரம் நன்றாக இருந்தாலும் வேறுவழியில் பணம் விரயம் ஆகும். சந்திரனின் நக்ஷத்திரக்காலில் ராகு சஞ்சரிக்கும் போது 27.01.2021 – 05.10.2021 வரையில் கவனம் தேவை குடும்பத்தில் சஞ்சலம் இருக்கும்.

உடல் ஆரோக்கியம் : பொதுவாக ராகு கேதுவால் மன சஞ்சலங்கள் இருந்தாலும் பெரிய பாதிப்பு இல்லை ஆனால் சுக்ரன் & சந்திரன் சிலவியாதிகளை கொடுக்கும் வாழ்க்கை துணைவரின் உடல் நலமும் பாதிக்கப்படும். பெற்றோர்கள் வைத்திய செலவும் அதிகரிக்கும். தகுந்த மருத்துவ சிகிச்சை, தியானப்பயிற்சி உணவு கட்டுப்பாடு போன்றவை பெரும் அளவு மருத்துவ செலவை குறைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் (அனைத்து பிரிவினரும்) : 10ம் இட அதிபதி சூரியனின் சஞ்சாரம் ஓரளவு நன்மை செய்தாலும் 2,6ம் இட அதிபர்களும் லாபாதிபதி புதனும் பெரிய நன்மை செய்யவில்லை. வேலை பளு அதிகரிக்கும். 23.09.2020 – 02.06.2021 வரையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் விரும்பிய இடமாற்றம் பதவி உயர்வு, வருமானம் பெருகுதல் என்று இருக்கும் அதன் பின் 09.02.22 வரை கொஞ்சம் சிரமம், வழக்குகளில் சிக்குதல், வேலை இழப்பு அல்லது வேலையில் முன்னேற்றம் இல்லாமல் இருத்தல், கடன் தொல்லையால் அவஸ்தை படுதல் வீண் விவாதத்தால் மன உளைச்சல் என்று இருக்கும். கவனமாக இருக்க வேண்டும். 09.02.22க்கு பின் நல்ல நிலை உண்டாகும். பொருளாதார ஏற்றம் இருக்கும்.

சொந்த தொழில் (வியாபாரம், விவசாயம்,கலை, அரசியல் அனைத்து தொழில்களும்) : இந்த பெயர்ச்சி கெடுதலை செய்யாது இருந்தாலும் முன்னேற்றம் மெதுவாக இருக்கும். சில சமயம் மந்தமாக தொழில் செல்லும் பணத்தட்டுப்பாடு இருக்காது எனினும் செலவுகள் அதிகரிக்கும். வியாபார நிமித்தமாக பிரயாண அலைச்சல் இருக்கும். 02.06.2021 வரை நல்ல நிலை ஓரளவு வருமானம் பெருகும் பின் 09.02.22 வரை கவனம் தேவை நிதானமாக செயல்படுவது நல்லது. நஷ்டம் ஏற்படாது எனினும் பணம் முடங்கிவிடும். அரசாங்க சம்பந்தப்பட்டவர்கள் கணக்கு வழக்கை சரியாக வைத்துக்கொள்வது நல்லது. அரசு வங்கிகள் தவிர வெளி நபரிடம் கடன் வாங்க வேண்டாம். பரவாயில்லை என்று சொல்லும் பெயர்ச்சி.

மாணவர்கள் : படிப்பில் அதிக அக்கறை கொண்டு செயல்படவேண்டும் புதன் ஓரளவுதான் நன்மை செய்கிறது. 5க்குடைய குரு நீசம் பெறுவதால் படிப்பில் தடைகள் வரலாம். பெற்றோர் ஆசிரியர் ஆலோசனைப்படி நடப்பது நலம் தரும். மனதை கட்டுப்படுத்தி தியானப்பயிற்சிகளில் ஈடுபடுவது சிரமங்களை குறைக்கும். போட்டி பந்தயங்களில் ஓரளவு வெற்றி கிடைக்கும்.

தனூர் :(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் முடிய): 55/100

ஏதோ சுமார் என்றவகையில் இதுவரை இருந்துவந்த நீங்கள் இனி உற்ச்சாகம் பெறுவீர்கள் ராகு உங்கள் ராசிக்கு 6லும் கேது 12லும் வருவது பலவித நன்மை தரும். நோய் அகலும், கடன் தீரும், எதிரிகள் தொல்லை நீங்கும், சுப செலவுகள் உண்டாகும். மேலும் ராசிநாதன் குரு 2ல் அக்டோபர் முதல், 5க்குடைய செவ்வாய் ஆட்சி, மற்ற கிரஹங்கள் சஞ்சாரமும் நல்லபடியாக இருக்கு. குடும்ப ஸ்தானாதிபதி சனி ஆட்சி. குடும்பத்தில் மகிழ்ச்சி பொருளாதார நிலை உயருதல் என்று இந்த பெயர்ச்சி முழுவதும் நன்றாகவே இருக்கும். பெரிய கஷ்டங்கள் வராது. 02.06.2021 முதல் 09.02.22 வரையில் கொஞ்சம் கவனம் தேவை புதன், சுக்ரன், சூரியன் மற்றும் கேதுவின் சனி நக்ஷத்திர காலில் சஞ்சாரம் இவை நன்மை செய்யவில்லை. பொறுமை நிதானம் இருந்தால் வெற்றி பெறலாம்.

குடும்பம் & பொருளாதாரம் : குருவும் சனியும் 2ல் சஞ்சாரம் கேதுவின் பார்வையும் பெறுவது 7க்குடைய புதன் சஞ்சாரம் என்று மகிழ்ச்சியான நிலை இருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் கேளிக்கைகள் விருந்து என்று 02.06.2021 வரை நன்றாக இருக்கும் அதன்பின் 09.02.22 வரை கொஞ்சம் மன சஞ்சலம், குழப்பம் சச்சரவுகள் என்று இருக்கும் விட்டுக்கொடுத்து போவது நல்லது. கணவன் மனைவி பிணக்கு அல்லது பிள்ளைகளால் கஷ்டம் என்று இருக்கும் பொருளாதார நிலையும் மந்தமாக இருக்கும். 09.02.2022க்கு பின் நல்ல நிலமை பொருளாதார சீரடைவு, மகிழ்ச்சி என்று இருக்கும்.

உடல் ஆரோக்கியம் : 6க்குடைய சுக்ரன் சஞ்சாரம் நன்றாக இல்லை அதனால் அவ்வப்போது உஷ்ணம் குடல் பிரச்சனைகள் கண் தலை போன்ற பாதிப்புகள் இருக்கும். 7க்குடைய புதன் நக்ஷத்திரத்தில் கேது சஞ்சரிக்கும் வரை வாழ்க்கை துணைவர் உடல் நலமும் பாதிக்கும் சனி கேது சம்பந்தப்படுவதால் பெற்றோர் உடல் நலத்திலும் அக்கறை கொள்ளவேண்டும். 09.02.22க்கு பின் நல்ல நிலை.

உத்தியோகஸ்தர்கள் (அனைத்து பிரிவினரும்): மூன்று கால கட்டங்களாக உங்கள் உத்தியோக நிலை இருக்கும். இப்பொழுது முதல் 02.06.2021 வரை உத்தியோகம் நன்றாக இருக்கும் பதவி உயர்வு, பணவரவு, நல்ல வேலை என்று இருக்கும் கோரிக்கைகள் நிறைவேறும். அரசு ஊழியர்கள் விரும்பிய இடமாற்றம் பெறுவர். சொத்து சேரும் வீடு வாகன யோகங்கள் நன்றாக இருக்கும். 02.06.2021 – 09.02.2022 வரையில் மற்ற கிரஹ சஞ்சாரங்கள் நன்றாக இல்லை  அதனால் வேலையில் சிரமங்கள், பளு, மன அழுத்தம், உடன் வேலைசெய்வோரால் சங்கடம், வேண்டாத இடமாற்றம், வழக்குகள், கெட்ட பெயர் சிலருக்கு வேலை இழப்பு என்று இருக்கலாம். நிதானமும் பொறுமையும் வார்த்தைகளை விடுவதில் கவனமும் தேவை. அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம். 09.02.22க்கு பின் நல்ல நிலை மீண்டும் மகிழ்ச்சி உத்தியோகத்தில் முன்னேற்றம் என்று இருக்கும்.

சொந்த தொழில் (வியாபாரம், விவசாயம், கலை, அரசியல் அனைத்து தொழிலும்) : இந்த பெயர்ச்சி ஆரம்பம் நன்றாக இருக்கிறது. தொழிலில் நல்ல வளர்ச்சி பொருளாதாரம் ஏற்றம் நல்ல லாபம், தொழில் விஸ்தாரணம், கடன் கிடைத்தல், பெயர் புகழ் என்று இருக்கும். 02.06.2021 – 09.02.22 வரை கொஞ்சம் கவனம் தேவை புதிய முயற்சிகளை தகுந்த ஆலோசனையுடன் செய்யவும். கொடுக்கல்வாங்கலில், பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை எவரையும் சட்டென்று நம்பிவிட வேண்டாம். தொழிலில் ஏற்ற இறக்கம் இருக்கும் 09.02.22 முதல் நல்ல நிலை உற்ச்சாகம் புதிய தொழில் தொடங்குதல் லாபம் என்று இருக்கும்.

மாணவர்கள் : படிப்பில் உற்ச்சாகம் உண்டாகும் அடுத்த 8மாதம் கேது புதனின் நக்ஷத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், புதன் லாபத்தில் இருப்பதாலும், மற்ற கிரஹ சஞ்சாரங்களும் 5க்குடையவர் பார்வை இவைகள் விரும்பிய பாடம், கல்லூரி கிடைத்தல் நல்ல மதிப்பெண்கள் பெறுதல், ஆசிரியர் பெற்றோர் பாராட்டை பெறுதல் போட்டி பந்தயங்களில் வெற்றி என்று இருக்கும். 02.06.2021 – 09.02.2022 வரையில் கொஞ்சம் மந்த நிலை அல்லது படிப்பில் கவனம் சிதறுதல் போன்றவை இருக்கும் தகுந்த ஆலோசனை இறைத்யானம் இவை இதை போக்கும். பின் நல்ல நிலை உண்டாகும்.

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள் முடிய):  75/100

உங்கள் ராசிக்கு ராகு 5ல் வருவது நல்லதல்ல அதே நேரம் கேது 11ல் சஞ்சரிப்பது நல்ல பலனை தரும். பொருளாதார முன்னேற்றம் இருக்கும். பெரியோர் ஆசீர்வாதங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். ராகு நீசம் பெறுவதால் ராகுவால் கெடுதல் விளையாது. மேலும் செவ்வாய் சுகஸ்தானத்தில் ஆட்சி அதன் நக்ஷத்திர காலில் ராகு இது நிம்மதியை நிறைய தரும். மேலும் ராசிநாதன் ஆட்சி, குருவும் ராசியில் நீசம் ஆனால் பார்வையால் நன்மை, கெடுதல்கள் அகலும். 7க்குடைய சந்திரனின் நக்ஷத்திரக்காலில் ராகு பயணிக்கும்போது அளப்பறிய நன்மை உண்டாகும். சகல துறையினருக்கும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மற்ற கிரஹங்களில் சுக்ரன் சூரியன், செவ்வாய் சஞ்சாரங்கள் அதிக நன்மை தருகின்றன.

குடும்பம் & பொருளாதாரம் : கேதுவும் குருவும் நல்ல நிலையை உண்டாக்குகின்றனர். சுக்ரன் சஞ்சாரம் இல்லத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி திருமணம் போன்ற சுப நிகழ்வுகள், சிலருக்கு குழந்தை பாக்கியம் என்று இருக்கும் பணப்புழக்கம் தாராளம், லாபாதிபதி செவ்வாய் 4ல் பொருளாதாரம் நன்றாக இருக்கும் கடன் தொல்லை நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை குடும்ப தேவைகள் பூர்த்தியாகுதல், புதிய வீடு வாகன யோகங்கள் என்று நன்றாகவே இருக்கும். ராகு 27.01.2022 முதல் 05.10.2021 வரையில் நல்ல நிலை இருக்கும். அதன் பின் பெரிய பாதிப்புகள் இருக்காது அதனால் கவலைப்பட வேண்டாம்.

உடல் ஆரோக்கியம் : 6க்குடைய புதனின் நக்ஷத்திரத்தில் கேது 02.06.2021 வரை வியாதிகளை தராது. ஆனால் புதன் வாயு தொந்தரவு செரிமான கோளாறுகள் என்று சிறு வைத்திய செலவை வைக்கும். 7க்குடைய சந்திரனின் சஞ்சாரம் நன்றாக இருந்தாலும் அவ்வப்போது வாழ்க்கை துணைவரின் உடல் ஆரோக்கியத்திலும் 9க்குடைய புதன் சஞ்சாரம் பெற்றோர் மூலமும் வைத்திய செலவை சிறு அளவில் வைக்கும். தியான பயிற்சி உடல்பயிற்ச்சி ஆகார கட்டுப்பாடு போன்றவை இதை குறைக்கும். 02.06.2021க்கு பின் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் (அனைத்து பிரிவினருக்கும்): எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு வெளிநாட்டு வேலை, புதிய உத்தியோகம் என்று கிடைத்து மகிழ்ச்சி அதிகம் ஆகும். மேலும் 27.01.2021 – 05.10.2021 வரையிலான கால கட்டங்கள் மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக இருக்கும் உயர்ந்த பதவி, பொருளாதார தேவைகள் பூர்த்தியாகுதல் அலுவலகத்தில் வைத்த கோரிக்கைகள் நிறைவேறுதல், பெண் ஊழியர்களுக்கு விரும்பிய வகையில் வேலையில் முன்னேற்றம் நல்ல பெயர் என்று இருக்கும். பொதுவாக இந்த பெயர்ச்சி முழுவதுமே உத்தியோகத்தில் பெரிய அளவில் பிரச்சனை இருக்காது. தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் இது மேலும் சந்தோஷத்தை தரும்.

சொந்த தொழில்(அனைத்து தொழில் செய்வோருக்கும்) : புதிதாக தொழில் தொடங்க நினைப்போர் தங்கள் முயற்சி நிறைவேறும். சொந்த தொழில் செய்வோர் அனைவருக்கும் பணம், செல்வம் செல்வாக்கு இவை உயரும். சமூக அந்தஸ்து உண்டாகும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவங்கள் நல்ல வளர்ச்சி பெறும். கலை தொழில், அரசியல் விவசாயம் என்று அனைவருக்கும் நன்மைகளே அதிகம் நடக்கும் அதிலும் 27.01.2021 – 05.10.2021ல் பெரிய நன்மைகள் இருக்கும் எதிர்ப்புகள் குறையும். விற்பனை அதிகம் இருக்கும். மேலும் புதிய வாய்ப்புகளால் பண வரவு தாராளமாக இருக்கும் வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். பொதுவில் இந்த பெயர்ச்சியில் அனைத்து கிரஹங்களும் அதிக சாதகத்தை தருவதால் வெற்றிகள் அதிகம்.

மாணவர்கள் : படிப்பில் உற்ச்சாகம் ஏற்படும். விரும்பிய பாடம், கல்லூரி கிடைக்கும், மருத்துவம், ரசாயணம், ஓட்டல் மேனேஜ்மெண்ட் தாவர இயல் ஆராய்ச்சி படிப்புகள் விவசாய படிப்பு இந்த மாணவர்களுக்கு முன்னேற்றம் நன்றாக இருக்கும் மதிப்பெண்கள் நன்றாக கிடைக்கும் படிப்பில் சிறந்து விளங்குவர் தடைகள் ஏதும் இருக்காது. போட்டி பந்தயங்களிலும் வெற்றி உண்டாகும். ஆசிரியர் பெற்றோர் பாராட்டை பெறுவர். இருந்தாலும் உடல் நலத்தில் அக்கறை கொள்வது குறிப்பாக ஆகார கட்டுப்படு அவசியம் வயறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். கவனம் தேவை.

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய):  40/100

ராசிக்கு 4ல் ராகுவும் 10ல் கேதுவும் வருகிறார்கள். சுகஸ்தானத்தில் ராகு நன்மை தராது ஆனால் நீசம் அடைவதால் பெரிய பாதிப்பு இருக்காது. கேதுவும் இடமாற்றம் உத்தியோக தொழில் மாற்றம் என்று தரும். ஆனால் மற்ற கிரஹங்களும் ராசியாதிபதி சனியும் ஓரளவு நன்மை தருவதால் பிரச்சனைகள் தீரும். பொருளாதாரம் ஓரளவு இருக்கும். 2க்குடையவர் விரயத்தில் அக்டோபர் முதல் அதனால் பணப்பிரச்சனைகள் அல்லது சுப செலவுகள் கருதி செலவுகள் என்று இருக்கும். வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் இருந்து கொண்டே இருக்கும் சந்திரன் நக்ஷத்திரக்கால்களில் கிரஹங்கள் பயணிக்கும் போதெல்லாம் மருத்துவ செலவுகள் இருந்து கொண்டிருக்கும். ஜீவன வகையிலும் அதிக பாதிப்பு இருக்கும் காரணம் 10க்குடைய செவ்வாய் நன்மை தரும் நிலையில் சஞ்சாரம் செய்யவில்லை. தனிப்பட்ட ஜாதக வலிவை பொறுத்து இது மாறும்.

குடும்பம் & பொருளாதாரம் : மனதில் ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கும் தூக்கம் கஷ்டமாய் இருக்கும். குடும்ப உறவுகளால் பிரச்சனைகள் மனஸ்தாபங்கள் இருந்து கொண்டிருக்கும். பணத்தேவைக்கு ஏற்ப கிடைக்காது. சுமாரான நிலை 10ல் கேது ஓரளவு ஜீவனத்தை தரும் இருந்தாலும் பொருளாதார சிக்கல்கள் இருந்து கொண்டிருக்கும். சிக்கனம் இந்த நேரத்தில் முக்கியம். மேலும் 27.01.2021 – 05.10.2021 வரையில் அதிக கவனம் தேவை செலவுகள் அதிகரிக்கும் வருமானம் போதாது. குடும்பத்தில் பிரிவும் இருக்கலாம்.

உடல் ஆரோக்கியம் : பொதுவாக ராகு சுகஸ்தானத்தில் சஞ்சரிப்பது நன்மை தராது அதே நேரம் 27.01.2021 வரை செவ்வாய் நக்ஷத்திரத்தில் சஞ்சரிப்பதால் வெறும் மன குழப்பத்தை பயத்தை கொடுத்து கொண்டிருக்கும் தூக்கம் வராது. பின்05.10.2021 வரை உடல் பாதிப்புகள் நெஞ்சு, இருதயம், ரத்த அழுத்தம், சளி தொந்தரவு என்ற வகையில் இருக்கும். அதிக வைத்திய செலவை கொடுக்கும். அதே போல வாழ்க்கை துணை மற்ற குடும்ப அங்கத்தினர் மூலமும் வைத்திய செலவு வைக்கும். இறைத்யானம்,ஆகார கட்டுப்பாடு, உடல் பயிற்சி இவை ஓரளவு நன்மை தரும்.

உத்தியோகஸ்தர்கள் (அனைத்து பிரிவினரும்): பொதுவாக வேலையில் அதிக பாதிப்புகள் இருக்காது இந்த பெயர்ச்சி முழுவதும். கேது நன்மை செய்வதால் ஆனால் உத்தியோக உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதில் இழுபறி இருக்கும். வேறு சில பிரச்சனைகளால் பாதிப்பு வேலையில் ஒரு அசிரத்தை புதிய வேலை கிடைப்பதில் தாமதம், அல்லது விரும்பிய இடமாற்றம் கிடைக்காது என்று ஒரு வெறுப்பான நிலையே இருக்கும். மற்ற கிரஹங்கள் சாதகம் இல்லை. தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். அதுவும் ஓரளவே. இந்த பெயர்ச்சியில் பொறுமை நிதானம் அதிக கவனம் கடுமையான உழைப்பு இவை இருந்தால் ஓரளவு வெற்றி பெறலாம்.

சொந்த தொழில் (வியாபாரம், விவசாயம், கலை, அரசியல், அனைத்து தொழிலும்): ஓரளவுக்கு லாபம் இருக்கும் ஆனால் போட்டிகளை சமாளிக்க போராட வேண்டி இருக்கும். வருமான இழப்பு இருக்கும். தொழில் விஸ்தரிப்பை தகுந்த ஆலோசனை பெற்று ஜனன ஜாதகத்தை பொறுத்து முயற்சிக்கவும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருத்தல் அரசு சம்பந்த பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்துதல், கொடுக்கல் வாங்கல் பணம், சாட்சி கையெழுத்து போன்ற விஷயங்களில் கவனமாய் இருத்தல், தனிநபர் போன்றோரிடம் கடன் வாங்காமல் இருத்தல் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுதல் போன்றவை நன்மை தரும். பொதுவில் கவனமாக இருக்க வேண்டிய பெயற்ச்சி

மாணவர்கள் : படிப்பில் அதிக அக்கறையுடன் செயல்படவேண்டும். புதன் சஞ்சாரம் நன்றாக இருந்தாலும் சுக்ரன், குரு போன்ற கிரஹங்கள் புதனுக்கு பகையாக அவ்வப்போது செயல்படுவதால் படிப்பில் தடை அல்லது ஞாபகமறதி போன்றவற்றால் அவதி, அல்லது 7க்குடைய சூரியனின் சஞ்சாரத்தால் நண்பர்கள் மூலம் பிரச்சனை இருக்கலாம். போட்டி பந்தயங்கள் இவற்றில் கடின முயற்சிக்கு பின் வெற்றி என்று இருக்கும். பெற்றோர் ஆசிரியர் ஆலோசனைப்படி நடப்பது சிறந்தது.

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி): 85/100

உங்கள் ராசிநாதன் 10ல் ஆட்சி, லாபாதிபதி 11ல் ஆட்சி, 2க்குடைய குடும்பஸ்தானாதிபதி 2ல் ஆட்சி இந்த நிலையில் ராகு 3ல், கேது 9ல் பெயர்ச்சி நடக்கிறது. பொதுவாக ராகு/கேது ராசிக்கு 3,6,10,11ல் இருந்தால் அதிக நன்மையை செய்வதாக நூல்கள் கூறுகின்றன. அதை நிரூபிக்கும் வகையில் இந்த பெயர்ச்சி அமைய போகிறது. காரணம் குரு, சனி, செவ்வாய் புதன் சுக்ரன் சூரியன் என்று அனைத்து கிரஹங்களும் பெரும்பாலான சஞ்சாரங்கள் நன்மையை செய்கின்றன. மகிழ்ச்சி அதிகரிக்கும். கேது 9ல் கெடுதல் செய்யாது என்பது உறுதி. கேது உச்சம் புதன்,சனி,குரு நக்ஷத்திரக்காலில் சஞ்சரிக்கும்போது அந்த அதிபதிகளின் பலனை தரும்

குடும்பம் & பொருளாதாரம் : மகிழ்ச்சி அதிகரிக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும். திக்கெட்டிலும் புகழ் பரவும். மனம் பலம் அடையும், பணவரவு அதிகரித்து இல்லத்தேவைகள் பூர்த்தியாகும். நினைத்தது நிறைவேறும். பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும். பெரும்பாலும் கஷ்டம் இல்லாத நிலை இருக்கும் கணவன் மனைவி ஒற்றுமை பிள்ளைகளால் சந்தோஷம் பெற்றோர் உறவினர்களால் நன்மை என்று நன்றாகவே இருக்கும்.

உடல் ஆரோக்கியம் : 6க்குடைய சூரியனின் சஞ்சாரம் பலமாக இருப்பதால் பெரிய பாதிப்புகள் நிச்சயம் இருக்காது. மேலும் மகிழ்ச்சி அதிகம் இருப்பதால் மனோபலம் கூடி வியாதிகளை இல்லாமல் செய்திடும். 3ல் ராகு நோய்களை நீக்கிவிடும். வாழ்க்கை துணைவர் பெற்றோர்கள் குடும்ப அங்கத்தினர்களின் உடல் ஆரோக்கியமும் மேம்படும். வைத்திய செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பெரிய பிரச்சனைகள் இருக்காது.

உத்தியோகஸ்தர்கள் (அனைத்து பிரிவினரும்): பத்துக்குடையவரும் உங்கள் ராசியதிபதியே அவர் அக்டோபரில் லாபத்தில் சஞ்சரித்து ராகுவை பார்ப்பதால் பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் என்றெல்லாம் நடக்கும். மேலும் 6க்குடைய சூரியனும் வருமானத்தை அதிகரிக்க செய்கிறார். வேலை தேடிக்கொண்டிருப்போருக்கு இந்த மாதத்தில் நல்ல வேலை கிடைத்திடும். வெளிநாட்டு உத்தியோக வாய்ப்பும் உண்டு. மேலும் வேலையில் நல்ல பெயர் புகழ், எல்லோருடனும் அனுகூலமான நிலை என்று அடுத்த 18 மாதங்களும் இருக்கும். ராகு செவ்வாய்,சந்திரன், சூரியன் நக்ஷத்திர காலில் சஞ்சரிப்பதால் குடும்பஸ்தானாதிபதி செவ்வாய், பூர்வ புண்யஸ்தானாதிபதி சந்திரன், வருமான ஸ்தானாதிபதி சூரியன் இவர்கள் தருவதை போல ராகு லாபத்தை தரும்.

சொந்த தொழில்(வியாபாரம், விவசாயம்,கலை,அரசியல், அனைத்து தொழிலும்) : அருமையான பெயர்ச்சி வரும் வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறுவீர்கள். எல்லாம் நல்லதாக நடக்கும். வருமானம் பெருகும். பெயர் புகழ் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள், வங்கி கடன், அரசாங்க உதவி, மேல்மட்ட மனிதர்களின் ஆசீர்வாதம் என்று எல்லாம் உண்டாகும். புதிய தொழில் விஸ்தாரணம் வெற்றியை தரும். கஷ்டங்கள் குறையும். எதிரிகள் மறைவர். சினிமா, டிவி, மீடியா, ஃபோட்டோ தொழில் செய்வோருக்கு இன்னும் அதிக லாபம் ஏற்படும். பெயர்ச்சி முழுவதும் நன்மையே கஷ்டங்கள் என்பது தனிப்பட்ட ஜாதகம் சுமாராக இருந்தால் மட்டுமே.

மாணவர்கள் : நல்ல நிலை படிப்பில் நல்ல மதிப்பெண்கள், போட்டி பந்தயங்களில் வெற்றி புதன் சஞ்சாரமும் புதன் நக்ஷத்திரக்காலில் இருக்கும் கேதுவின் சஞ்சாரமும் மிகுந்த நன்மை செய்வதால் நல்ல கல்லூரி விரும்பிய பாடம், கணிதம், எஞ்சினியரிங்க் ஆர்க்கிடெக்ட் , ஆசிரியர் படிப்பு, தத்துவம், கலை போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்கள் வெற்றியை பெறுவர். எல்லோருடைய பாராட்டையும் பெறுவர். மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

உங்கள்அன்பன்

லக்ஷ்மீந்ருஸிம்ஹன் (ரவிசாரங்கன்)

ஜோதிடர்

ஸ்ரீசார்வபௌமஜோதிடநிலயம்

044-22230808 / 8056207965 (வாட்ஸப்)

mannargudirs1960@gmail.com

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.