“கெட்டி மேளம்”… “கெட்டிமேளம்”… என்பதைத் தொடர்ந்து, திருமணம் முடிந்து, நாதஸ்வர வித்வான் “ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே” வாசிக்கும் போதே, “பந்தி போட்டாச்சோ?” என்ற கேள்வி பிறந்தது. “மேடம் இலை போட்டாச்சு – சாப்பிட போங்கோ” என்ற உபசரிப்பு தொடர்ந்தது. சாப்பாட்டை சிலாகித்து பேசி வாயில் பீடா அடக்கி, மண்டப வாயில் வந்ததும், முகூர்த்தப் பை வாங்க கைகள் நீண்டன.
திருமண தம்பதியர் பெயர்கள் ஒரு பக்கமும், “நன்றி” என கூப்பிய கைகள் மறுபக்கமும் போட்ட பைகளில், வெள்ளை நிறத்தில் ரோஜா நிற பார்டர் போட்ட பையைத் தரும் வரை பராக்கு பார்ப்பது போல் பாவனை செய்து கம்பீரமாக வெளியில் வந்தேன்.
வீட்டிற்கு வந்ததும் தேங்காயும், பட்சணமும் சமையலறைக்குச் சென்றன. பையை உதறி ,நீவி, அழகாக மடித்து அலமாரியில் வைத்தேன். மறுநாள் என் தோழி, குடும்பத்துடன் வந்து அளவளாவி விட்டு கிளம்பும் சமயம், அவர்களுக்குத் தந்த தாம்பூலத்தை வைக்க, “ஒரு பை கொடுங்களேன்’ என்றாள். அப்போது என் மகள் அந்த புது பையை எடுத்து வரும் போது, அவர்களுக்குத் தெரியாமல் , கண்சாடை காட்டி, ஒரு நடன மணி போல் அபிநயம் செய்து வேறொரு பழைய பையை அவர்களுக்குத் தர படாத பட்டேன்.
ஒரு வாரம் சென்றது. என் மகளை கல்லூரியில் சேர்க்க, அவளுடைய சான்றிதழ்கள் கொண்ட ஃபைலை “அந்த” புதுபையில் போட்டு வீறு நடை போட்டேன்.
மறு வாரம் வந்தது. அந்த பை, அலமாரியிலிருந்து சமையலறையில் ஆணியில் தொங்கியது. ஞாயிற்றுக் கிழமை – காலை காபியை நிதானமாக குடித்த பின்பு, காய்கறி வாங்க கிளம்பினேன். ஒரு சிறு தயக்கத்திற்குப் பின் ஆணியில் தொங்கிய முகூர்த்தப்பை என் கைக்கு வந்தது. (நான் பிளாஸ்டிக் கேரி பேக் உபயோகிப்பதற்கு எதிரி என தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்). கடையில், தக்காளி, கீரை, இத்யாதிகள் வாங்கி வீடு வந்ததும், அழுகிய தக்காளி ஒன்று புது பையில் கைவரிசையைக் காட்டியிருந்தது. உடனே அதை நனைத்து உலர்த்த வராண்டா கொடியில் போட்டு க்ளிப் மாட்டினேன்.
அடுத்த வாரம். இரவு படுக்கச் செல்லும் முன் பால் பை மாட்டச் சென்றேன். அடடா… உபயோகத்தில் இருந்த பையின் காது அறுந்து ‘ஙே’ என்றிருந்தது. வேறு பை எதுவும் கண்ணில் படவில்லை .உள்ளே சென்று தேட சோம்பல் !கொடியில் தொங்கியது “அந்த” பை! எடுத்தன கைகள்! பின் காம்பவுண்டு கதவில் கொக்கியில் தொங்கியது பை!
தொடர்ந்து பத்து நாட்கள், நான்கு பால் பாக்கெட்டுகளை உள்ளடக்கி, பை காலையில் பரிதாபமாகத் தொங்கும். பாலை எடுத்த பின், சுருட்டி வராண்டா கிரில் இடுக்கில் செருகப் படும். இரவு மாட்டப்படும். அந்த பைக்குத்தான் எத்தனை சோதனை! ஒழுகிய பால் கவர் ஒரு நாள்; கிரில்லின் துரு மறுநாள்! ‘நிவார்’ புயலில் சிக்கி பறந்து சென்று தோட்டத்து மண்ணில் விழுந்தது ஒரு நாள்! நான் அதை அவ்வளவு எளிதில் விடுவேனா? எடுத்து, கசக்கி மீண்டும் ‘ பால்பை’ உருவெடுத்தது !
வந்தது சோதனை கொத்ஸு வடிவில்!மார்கழி மாதம் முதல் நாள்,பக்கத்து வீட்டு சிறுமி “அம்மா பொங்கல் கொத்ஸு பண்ணினா. இந்தாங்கோ” என பாத்திரத்தை நீட்ட, கொத்ஸு தளும்பி அவள் பாவாடையை அபிஷேகம் செய்தது. “அச்சச்சோ… பரவாயில்லை மாமி” என்றபடியே எடுத்தாள் என் ஆசை பையை ! துடைத்தாள் சரிந்த கொத்ஸுவை!
பை என்னைப் பார்த்து மெளனமாக அழ,
‘எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்’
என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் யார் வீட்டிலோ தொலைக் காட்சி பெட்டியில் அலறியது!
மேகலா நாராயணன்