​வீரபத்திரச் சருக்கம் முதல் பகுதி

This entry is part 3 of 4 in the series சேலத்துப் புராணம்

​வீரபத்திரச் சருக்கம்

​நீண்ட சடைமுடியியில், இளஞ்சந்திரனையும் கங்கையினையும் அணிந்தவரும், மானையும் மழுவையும் கரங்களில் ஏந்தியவரும், நெற்றிக்கண்ணை உடையவரும், தேவர்களின் மணிமுடிகள் தனது பாதங்களில் பட்டுக் கொண்டிருப்பவரும் , கொன்றை மாலையை முடியில் அணிந்தவரும், அரவத்தை இடுப்பினில் அணிந்தவருமான சிவபெருமான் கயிலாயத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்க தேவர்களும், ரிஷிகளும், சிவனடியார்களும் நான் முந்தி நீ முந்தி என்று அவரை தரிசிக்க நெரிசலை உண்டு பண்ண நந்திதேவர் அவர்களை நெறிப்படுத்த முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்.

‘அதோ பிரம்மா தேவன்’

‘அதோ மகா விஷ்ணு”

“அதோ இந்திரன்”

அடியார்கள் தங்கள் எதிரில் கண்ட தேவர்களின் பெயர்களைக் கூறிக் கொண்டிருக்கும்போது ஒரு அடியார் “ அதோ தக்ஷ பிரஜாபதி” என்றதும் மொத்த கூட்டமும் தக்ஷன் பக்கம் திரும்பியது. சிவ பூஜையில் கரடி இல்லை காண்டாமிருகம் அல்லவா வந்திருக்கிறது? என்று பலரும் முணுமுணுத்தனர்.

உள்ளே நுழைந்த மகா விஷ்ணுவைப் பார்த்து “வாருங்கள் நாராயணரே! “ என்று அந்த சந்திரசேகரர் இன்முகம் காட்டி வரவேற்றார்.

“ஓ பிரம்ம தேவரோ?”என்று அவரது திருமுடி அசைந்ததும் தளும்பிய கங்கையில் படகு போல இளம்பிறை சந்திரன் தடுமாறினான்.

கூடியிருந்த அடியவர்கள், முனிவர்கள் மீது தனது கடைக்கண் பார்வையின் வழியே அன்பைச் சொரிய அந்தத் திருக்கூட்டமே மேனி சிலிர்த்து நின்றது.

“கஜேந்திரனுக்கு ஓடோடிச் சென்று அருள் புரிந்த மகா விஷ்ணுவே! ஈரேழு பதினான்கு லோகங்களிலும் உள்ள சகல ஜீவராசிகளையும் ர்கஷித்து வருகிறீர்கள் அல்லவா?”என்றதும் துருவனில் தொடங்கி பிரகலாதன், அகலிகை, திரௌபதி, வழியாக இராமானுஜர் வரையில் ஒரு நீண்ட பட்டியலை மகாவிஷ்ணு சமர்ப்பித்தார்.

தேவர்கள் அனைவரும் சிவபெருமானின் அருட்பார்வை பட்டு அவர் என்னைப் பார்த்து தலையசைத்தார் அவர் என்னைப் பார்த்து சிரித்தார், அவர் என்னைப் பார்த்து வா என்பதன் அடையாளமாக கண்களால் ஜாடை செய்தார் என்று புளகாங்கிதம் அடைந்து தத்தம் வசிப்பிடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

“ஹூம்” ஒரு பெரிய ஹூங்காரம் தக்ஷநிடமிருந்து எழுந்தது.

“. அருளாளனாம்; கருணானாகரனாம். இவனா? சுடுகாட்டில் திரிபவன்; சாம்பலை உடல் எங்கும் பூசி கழுத்தில் எலும்புத் துண்டுகளை மலையாகக் கோர்த்து அணிபவன்; என்னிடம் கேட்டால் பட்டுப் பீதாம்பரம் எடுத்து தர மாட்டேனா? அதை விட்டு இடுப்பில் வெறும் புலித்தோலை ஆடையாக உடுத்திய கிறுக்கன்; அதுதான் ஒழியட்டும் என்றால் இடுப்பில் விஷப்பாம்பை அரைஞாணாகக் கட்டிக் கொண்டு என் மானத்தை வாங்குபவன். இவனையும் ஒரு ஆள் என்று மதித்துத் துதிப்பவர்களை என்னவென்று சொல்வது?”என்று முழங்கி அவரை ஏகமாகப் பழித்து விட்டு தனது தக்ஷ சபைக்குச் சென்றான்.

“மகனே நில்! நீ இவ்வாறு நம்மை எல்லாம் காப்பவரும், இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் படைத்தவருமான பரமசிவனை நீ இவ்வாறு பழிப்பது தகாது”என்று பிரம்மதேவர் தனது மகனான தக்ஷ பிரஜாபதிக்கு அறிவுரை கூறினார்.

“அவருக்கு வெண்சாமரம் வீசுவதால் தந்தையே உமக்கு ஏதாவது பலன் கிடைக்கலாம். எனக்கு அந்தச் சுடலையாண்டியின் அனுக்கிரகம் தேவையில்லை. நான் சிவனை விட பெரியவன் என்று காட்டுவேன்”என்று கூறி விட்டு சென்ற தக்ஷன் ஒரு பெரிய யாகத்திற்கு ஏற்பாடு செய்தான்.

தனது மந்திரிசபையைக் கூட்டி “ போதுமான நிதிக்கு சங்கநிதி பதுமநிதி இரண்டையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். போதாத குறைக்கு கற்பகத் தரு வேலையின்றி சும்மாத்தான் இருக்கிறது. அதனிடம் என்னவெல்லாம் பெற முடியுமோ அத்தனையையும் பெறுங்கள். பாற்கடல் கடைந்தபோது வாசுகியின் விஷத்துக்கும், ஆலகால விஷத்துக்கும் அஞ்சிதானே நாமும் கைவலிக்க கடைந்திருக்கிறோம்?”

“ஆலகால விஷத்தை நமக்காக பெற்றுக் கொண்ட அந்த நீலகண்டரை எதிர்த்து யாகம் செய்வது நல்லதில்லை”, என்று ஒரு மந்திரி முறையிட்டார். எல்லா மந்திரிசபையிலும் நாலு கும்பகர்ணன் இருந்தால் ஒரு விபீஷணன் இருப்பது வழக்கம்தானே?

“என் மகள் விஷம் குடித்தவனின் தொண்டையைப் பிடித்ததால் அந்தப் பித்தன் உயிர் பிழைத்தான். என் மகள் செய்த பெரிய பிழை அவன் கண்டத்தில் கை வைத்து அழுத்தியதுதான்” மகள் விதவையானாலும் மாப்பிள்ளை சாக வேண்டும் என்ற “நல்ல”புத்தியுடைய மாமனார் அவன். என்ன செய்ய? தான் என்ற அகந்தை கண்களை மறைக்கும்போது செய்யும் செய்கையின் தராதரம் புத்திக்கு உறைப்பதில்லை.

“யாகசாலையின் மண்டபங்களின் தூண்கள் எல்லாம் மாணிக்கக் கற்களால் இழைக்கப்பட்டிருக்க வேண்டும். விதானத்தின் மீது தங்கத் தகடு பதித்து வெண்ணிற முத்துக்களை பதியுங்கள். வஜ்ராயுதம் போல யாக ஸ்தம்பம் இருக்க வேண்டும். கிளம்புங்கள்”என்று அவர்களை விரட்டினான்.

தேவருலகம் முழுவதும் தக்ஷன் நடத்தவிருக்கும் யாகத்தைப் பற்றிய பேச்சாகவே இருந்தது. அனைத்து தேவர்களுக்கும் அழைப்பு சென்றது. நான்மறைகள் கூறும் யாகவேள்வியின் ஹவிர்பாகத்துக்கு உரியவனான சிவபெருமானுக்கும் அவன் பத்தினி பார்வதி தேவிக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை. 

யாகசாலை திருமால், பிரம்மதேவன், தேவேந்திரன் மற்றும் தேவர்கள், இயக்கர்கள், கந்தர்வர்கள், கிண்ணர்கள், நாகர்கள், பன்னிரு சூரியர்கள், ஜடாமுடி தரித்த முனிவர்கள் , யோகியர் ஆகியோரால் நிரம்பி வழிந்தது. எவருக்கும் சிவபெருமானை அழைக்காத தக்ஷனின் அடாவடிச் செயல் குறித்து பேசுவதற்குத் துணிவில்லை.

அப்போது அந்தக் கூட்டத்தில் ஓர் எதிர்ப்பு குரல் எழுந்தது. தேவர்களாலும் கூட மேன்மையானவர் என்றும் , இந்திரனுக்காகத் தனது முதுகெலும்பின் மூலம் வச்சிராயுதம் செய்து கொடுத்தவருமான ததீசி முனிவரின் குரலே அது.

‘தக்ஷா! தேனில் திளைத்துத் தங்கள் சிறகுகள் ஒடியப்பெற்ற வண்டுகள் மிதக்கும் கொன்றை மாலையை அணிந்த அந்த பரமசிவன் இல்லாத இந்த யாகசாலை சுடுகாட்டுக்குச் சமம்.” என்றார்.

“யார் அந்தப் பரமசிவன்? புலித்தோலை அணிந்து பாம்பை இடுப்பில் அணிந்தவனா? உடல் எங்கும் வெண்பொடி பூசி வெறியாட்டம் ஆடுபவன் இந்த உலகத்தில் மேன்மையானவனா? ததீசி முனிவரே உமக்குப் பித்து தலைக்கு ஏறிவிட்டதா?”என்று தக்ஷன் அவரை அந்தச் சபையில் அவமானப் படுத்தினான்.

“முற்பிறவியில் செய்த பாவத்தால் இந்தப் பிறவியில் ஒருவனுக்குத் தீங்கு நேரும். இது உலக நியதி. தீவினைப்பயனால் இப்பிறவியில் தவறு செய்பவர்களுக்கு அனைத்தும் உணர்ந்தவர்கள் புத்திமதி கூறுவார்கள். ஆனால் ஒருவனது தீவினைப் பயன் காரணமாக அந்தப் புத்திமதிகள் அவன் காதில் ஏறாததோடு புத்திமதி சொன்னவர்களைக் கல்லடி போல கடுஞ்சொற்களால் குற்றம் கூறுவான்”

“தேவருலகம் முழுவதும் என் அழைப்பை ஏற்றுக் கொண்டு இங்கு வந்திருக்கும்போது நீர் ஒருவர் மட்டும் எதிர்ப்பதால் பயன் ஏதுமில்லை”என்று அவரை இகழ்ந்து பேசினான்.

அதனைக் கேட்டு உடல் எல்லாம் நடுக்கமுற ததீசி ‘நீ எக்கேடும் கேட்டு ஒழி’ என்று சபித்து விட்டு அங்கிருந்து அகன்றார்

Series Navigation<< ​சேலத்துப் புராணம் – ​கயிலாயச் சருக்கம்​வீரபத்திரச் சருக்கம்( இரண்டாம் பகுதி) >>

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.