- அழியாத மனக்கோலங்கள் – 1
- அழியாத மனக்கோலங்கள் – 2
- அழியாத மனக்கோலங்கள் – 3
- அழியாத மனக்கோலங்கள் – 4
- அழியாத மனக்கோலங்கள் – 5
- அழியாத மனக்கோலங்கள் – 6
- அழியாத மனக்கோலங்கள் – 7
- அழியாத மனக்கோலங்கள் – 8
- அழியாத மனக்கோலங்கள் – 9
- அழியாத மனக்கோலங்கள் – 10
- அழியாத மனக்கோலங்கள் – 11
- அழியாத மனக்கோலங்கள் – 12
- அழியாத மனக்கோலங்கள் – 13
- அழியாத மனக்கோலங்கள் – 14
காலையில் ஒன்பது மணி சுமாருக்கு மதிய உணவு டிபன் பாக்ஸோடு கிளம்பினேன் என்றால் மாலை ஆறு மணியளவில் வீடு திரும்பி விடுவேன். தினம் நாலைந்து கடிதங்கள் தட்டச்சு செய்ய வேண்டும். வேலை அவ்வளவு தான். கிருஷ்ணமூர்த்தி சாரைத் தவிர கந்தசாமி, கோதண்ட ராமன் என்று மற்றும் இருவர். மூன்று பேரும் உறவினர்கள் தான். ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர்கள். யாரானும் இருவர் எப்போதும் இருப்பார்கள். இல்லை, கண்டிப்பாக ஒருத்தர். பெரும்பாலும் தெலுங்கில் தான் ஒருத்தருக்கொருத்தர் பேசிக் கொள்வார்கள்.
அலுவலகத்திற்கு வெளியே விக்கெட் கேட் பொருத்திய பெரிய கேட். செக்யூரிட்டி. உள்ளே வந்தோம் என்றால் இடது பக்கம் அலுவலக அறை. பத்துக்கு இருபது தேறும். அதை தாண்டி உள்ளடங்கி Factory இருந்தது. சந்தன எண்ணை தயாரிப்பகம். ஒரே ஒரு தடவை கிருஷ்ணமூர்த்தி சார் என்னை உள்பக்கம் அழைத்துப் போய் தயாரிப்பைக் காட்டியிருக்கிறார்.
எனக்கு உள்பக்கம் வேலையில்லை என்பதினால் லஷ்மண ரேகா இழுத்த மாதிரி வெளிப்பக்க அலுவலகத்தோடு சரி. அந்த அறையிலேயே வாஷ் பேசின், ரெஸ்ட் ரூம் எல்லாம் இருந்தது. மூன்று முதலாளிகளில் யாராவது அந்த அறையில் இருந்து கொண்டே இருப்பார்கள். வேலையில்லா விட்டாலும் எதையாவது கொடுத்து தட்டச்சு செய்யச் சொல்வார்கள். இப்பொழுது கூட அது மறக்காமல் நினைவிலிருக்கிறது;
அது என்னவோ தெரியவில்லை சம்பளப் பணத்தை ஒரு ரூபாய் நோட்டாகத் தான் தருவார்கள். அத்தனையும் அழுக்கு நோட்டாகத் தான் இருக்கும். ஒண்ணோடு ஒண்ணு ஒட்டிக் கொண்டு மடிந்தும் புரண்டும்.. எண்ணிப் பார்த்து சரியாயிருக்கிறது என்று திருப்தி ஏற்படுவதற்குள் ஒருவழியாகி விடும். அவர்கள் கணக்கு வைத்திருந்த வங்கியில் வித்ட்ரா பண்ணும் பொழுது அப்படித் தான் அழுக்கு நோட்டாக அவர்களுக்குத் தருவார்கள் போலும் என்று நினைத்துக் கொள்வேன். ஒரு தடவை கூட ‘நல்லா நோட்டாத் தான் தாருங்களேன்” என்று இவர்கள் கேட்க மாட்டார்கள் போலிருக்கு..
சந்தன எண்ணைக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து ஐந்து மாதங்கள் கூட ஆகியிருக்காது.. ஒரு நாள், கிருஷ்ண மூர்த்தி சார் என்னிடம், “அடுத்த மாதத்திலிருந்து அதிக வேலை இருக்காது. அதனால் நீங்கள் வரவேண்டி இருக்காது என்று நினைக்கிறேன்..” என்றார்.
அவர் சொன்னதற்கு அடுத்த நாள் சித்தூரிலிருந்து ஒரு பையன் வந்திருந்தான். உறவினர் பையன் என்று கிருஷ்ணமூர்த்தி அவனை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவனுக்கும் தட்டச்சு தெரியும் என்று கூடுதல் தகவலையும் என்னிடம் சொல்லி வைத்தார். நானும் ஒண்ணும் ஒண்ணும் இரண்டு என்று கணக்கு போட்டு வைத்துக் கொண்டேன். என் கணக்கு தப்பாகவில்லை.
சரியாக அந்த மாதக் கடைசி நாளோடு கணக்கை முடித்து என் சம்பளப் பணத்தை வழக்கம் போல ஒரு ரூபாய் அ. நோட்டுகளாகவே கொடுத்து ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டிய பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள்.
நானும் விடைபெற்றேன். வழக்கம் போல செக்யூரிட்டியின் சோதனைக்குப் பிறகு வெளி வந்தேன். இனிமேல் தினந்தோறும் இந்தப் பக்கம் வர வேண்டிய வேலை இருக்காது என்பதை நினைக்கையில் ஒருவிதத்தில் சந்தோஷமாகத் தான் இருந்தது.
அடுத்த வேலைக்கு ரகுவும் என்னோடு சேர்ந்து கொண்டான். எங்கள் இருவருக்குமே மனசுக்கு மிகவும் பிடித்தமான வேலை. நடமாடும் வாடகை லைப்ரரி. வார, மாத இதழ்களை வீட்டுக்கு வீடு சப்ளை பண்ணுகிற வேலை. வாடகை நூல் நிலைய உறுப்பினர்கள் இரண்டு நாட்களில் படித்து முடித்து வாங்கிக் கொள்ளும் புத்தகங்க்வளைத் திருப்பி விட வேண்டும். கலைமகள் வாடகை நூல் நிலையம் என்று பெயரையும் தேர்வு செய்து விட்டோம். அந்தப் பெயரில் ஒரு ரப்பர் ஸ்டாம்பும் தயாராயிற்று.
எங்கள் லிஸ்ட்டில் அந்நாட்களில் வெளிவந்த கிட்டத்தட்ட அத்தனை பருவ இதழ்களூம் இருந்தன. ஆரம்பத்தில் அதிக அலைச்சல் வேண்டாம் என்று எங்கள் தெருவிற்கு அருகாமையில் இருந்த ஏரியாக்களை மட்டும் தேர்தெடுத்தோம். மேட்டுத் தெரு, மரவனேரிப் பகுதி, மூன்றாவது அக்ரஹாரம், கிச்சிப் பாளையம் என்று சின்ன வட்டத்திற்கே இருபது வீடுகள் தேறி விட்டன. இருபது வீடுகளை இரண்டு பகுதிகளாகப் பிரித்ததில் வாங்கிய புத்தகங்களையும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்க முடிந்தது. ஒரு பகுதிக்கு ஆனந்த விகடன் என்றால் இன்னொரு பகுதிக்கு குமுதம் இப்படி. திங்கள், புதன், வெள்ளி ஒரு பகுதி என்றால் செவ்வாய், வியாழன், சனி இன்னொரு பகுதி. ஞாயிறு எங்கள் நடமாடும் நூலகத்திற்கு விடுமுறை.
பத்திரிகை வந்த முதல் நாளே படித்து விட வேண்டும் என்று சிலருக்கு எதிர்பார்ப்பு இருந்தது. போன வாரம் வாசித்து விட்ட தொடரின் அடுத்தப் பகுதியை தெரிந்து கொள்வதில் அப்படி ஒரு ஆர்வம் அவர்களை ஆட்டிப் படைத்ததை அனுபவ பூர்வமாகவே உணர்ந்தோம். மூன்றாவது
அக்கிரஹாரத்தில் ஒரு மாமி.. “நீ படிச்சிருப்பேன்னு தெரியும். அப்புறம் அந்த மஹேந்திர பல்லவர் எங்கே தான் போய்த் தொலைச்சார்?.. பல்லவப் படை பாசறைக்கு வந்து சேர்ந்தாரா?.. இந்த வாரத்தில் அதைப் பற்றி எதுனாச்சும் போட்டிருக்காங்களா?..” ன்னு இந்த மாதிரி அப்பப்போ அடுத்த வாரத்தில் தொடரப் போகிறதைத் தெரிஞ்சிக்கற ஆர்வத்தில் கேட்பார். (இது எந்தத் தொடர்கதைன்னு யாரானும் யூகித்துப் பாருங்கள்..)
பொதுவாக தொடர்கதைகள் வெளிவரும் வார இதழ்கள் அப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. அதனால் வார இதழ்களை மட்டும் இரண்டு பிரதிகள் வாங்கி, அது பின்பு மூன்றாகி.. இப்படியான நிர்பந்தங்களுக்குத் தள்ளப்பட்டோம். பக்கத்து வீடு, அடுத்த வீடு, எதிர்த்த வீடு என்று ஆரம்பத்தில் இருபது இருந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒரே மாதத்தில் ஐம்பதாக எகிறியதும் விழி பிதுங்கிப் போயிற்று. பெரும்பாலும் வீட்டரசிகள் தாம் எங்கள் நூல் நிலைய உறுப்பினர்கள். ஆண்கள் வார, மாத இதழ்களைப் படிக்கவே மாட்டார்களோ என்ற பெருத்த சந்தேகம் எங்களுக்கு ஏற்படுகிற அளவுக்கு பெண்களின் வாசிப்பு ஆர்வம் எங்களை பிரமிக்க வைத்தது. தொடர்கதைகள் என்ற ஏரியாவை அத்தனை பேரும் குத்தகைக்கு எடுத்திருந்தார்கள் என்றே சொல்லலாம்.
வார, மாத இதழ்களை வைத்து மட்டும் சமாளிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட பொழுது பிரேமா பிரசுர துப்பறியும் நாவல்களை பருவ இதழ்களோடு சேர்த்துக் கொண்டோம். சிரஞ்சீவி, மேதாவி, சந்திர மோகன், அரு.ராமநாதன் எல்லோருமே எங்களுக்கும் நெருக்கமாக ஆனார்கள்.
“எப்படிப் பார்த்தாலும் நாலு வீட்டுக்கு புத்தகம் கொடுக்க முடியாம இடிக்கும் போலிருக்கு.. ஒண்ணு செய்யலாம்.. நேத்திக்கு வாங்கினோமே சிரஞ்சீவி, மேதாவி புது நாவல்கள்? — அதை நாளைக்கு சர்க்குலேஷனுக்கு விட்டுடலாமாடா?” — ரகுராமன் கேட்பான். தினமும் சாயந்தரம் எங்கள் சந்திப்பு இருக்கும்.”ரெண்டைப் படிச்சிட்டேன். அதை மட்டும் தர்றேன். எடுத்துக்கோ.. இன்னும் ரெண்டிலே இருபது பக்கம் போல பாக்கியிருக்கு. சிலதை இன்னும் தொடவே இல்லை.. ஒழிஞ்ச நேரத்திலே முடிச்சிடறேன். சனி, ஞாயிறு வர்றது.. திங்கட்கிழமை சர்க்குலேஷனுக்கு வைச்சிக்கலாமே?”
தனக்கு மிஞ்சித் தான் தான தருமம் எல்லாம் என்பார்கள். இந்த இதழ்கள், புத்தகங்கள் விஷயத்தில் நாங்க புரட்டிப் பார்த்த பிறகு தான் எதுவும் நூல் நிலைய வாசகர்களுக்குப் போகும் என்பதை தவிர்க்க முடியாத நியதியாக நாங்க ரெண்டு பேருமே கொண்டிருந்தோம்.
கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக எங்க இரண்டு பேரையும் இந்த நடமாடும் நூல் நிலையம் மிகவும் பாதிச்சிருந்தது. கத்தை கத்தையாக நிறைய தொடர்கதைகள், முக்கியமான விஷயங்கள் என்று சேர்த்து வைத்திருந்தோம். பைண்ட் பண்ணியும் பண்ணாமலும்.. சொல்லப் போனால் அதுக்குத் தான் இந்த வேலையே இறைவன் கொடுத்த வரமாக நடந்த மாதிரி நினைக்கிறேன்.