அழியாத மனக்கோலங்கள் – 8

This entry is part 8 of 14 in the series அழியாத மனக்கோலங்கள்

காமராஜர் ஆட்சி காலம் அது. கிராமப்புறங்களிலிருந்து ஆட்சி அதிகாரம் பிறந்து பரவலாக்கப்பட வேண்டும் என்ற காந்திஜியின் கனவு தேசிய அளவில் புத்துயிர் பெற்று அதற்கான சட்ட வரைவுகள் தீர்மானிக்கப்பட்டன. மெட்ராஸ் பஞ்சாயத்து ஆக்ட் 1958 என்ற சட்ட வரைவை தமிழகத்தில் முதல்வராய் இருந்த காமராஜர் 1960-ம் ஜனவரி முதல் நாளன்று அமுலுக்குக் கொண்டு வந்தார்.. பஞ்சாயத்து யூனியன்கள் பிறந்தன.பள்ளி இறுதித் தேர்வில் தேறியிருந்தால் போதும் பஞ்சாயத்து யூனியனில் வேலை என்ற மிக வெளிப்படையான தேர்வு முறையை அவரது பொற்கால ஆட்சி காலத்தில் கண்ணாரக் கண்டவன் நான்.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நீண்ட க்யூ. நானும் ஒருவனாய் பள்ளி இறுதித் தேர்வை வெற்றிகரமாக முடித்த சான்று புத்தகத்தோடு வரிசையில் நின்றிருந்தேன். அந்நாட்களில் அந்தப் புத்தகத்தில் ஒன்பதாவது வகுப்பிலிருந்து மாணவரின் தேர்ச்சி விவரங்கள் குறிக்கப்பட்டிருக்கும். இப்பொழுது மாதிரி சான்றிதழாக இல்லாமல் கிட்டத்தட்ட இருபது பக்கங்களைக் கொண்ட புத்தகமாக இருந்தது.

நாலைந்து அலுவலர்கள் உட்கார்ந்து சான்றுகளைச் சரி பார்த்தார்கள். என் முறையும் வந்தது. எஸ்.எஸ்.எல்.சி. புத்தகத்தைத் தந்தேன். அதை வாங்கிப் பார்த்தவரின் முகத்தில் லேசான சலனம். புத்தகத்தை மீண்டும் புரட்டிப் பார்த்தார். முதல் பக்கத்தில் ஒட்டியிருந்த பெற்றோர் அளித்திருந்த வயதுச் சான்றிதழதோடு சரி பார்த்துக் கொண்டார். “தம்பீ.. உனக்கு 17 வயது தான் ஆகிறது. அரசு வேலைக்கு 18 வயதாகியிருக்க வேண்டும். அதனால் இன்னும் ஒரு வருடம் கழித்துத் தான் நீ அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும். நல்ல மதிப்பெண்கள் நீ எடுத்திருந்தும் உன்னைத் தேர்வு செய்ய முடியாமைக்கு வருந்துகிறேன்..” என்று சான்றிதழ்களை என்னிடம் திருப்பித் தந்தார். நானும் “சரி, சார்” என்று அவரிடம் சொல்லி விட்டு க்யூவிலிருந்து துண்டித்துக் கொண்டு வெளி வந்தேன்.

நான் வெளிவந்ததும் க்யூவின் பின் பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். விதவிதமான கேள்விகள்.

“எப்போ வேலைக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள்?..

“சேலத்திலேயாவா? இல்லை வெளியூரா?”

“இந்த இண்டர்வ்யூ வோட சரியா?”

“வேலை கிடைச்சிடுத்தா?” என்று கேட்டவருக்கு மட்டும் பதில் சொன்னேன்.

“இல்லை. எனக்கு வயசு பத்தாது.. அதனாலே வேலை கிடைக்கலே..”

“ஓ.. அப்படியா?.. என்ன வயசு இருக்கணுமாம்?”

“குறைந்த பட்சம் 18..”

நான் அதைச் சொன்னவுடன் அங்கிருந்த சில பேர் தங்களுக்கு பதினெட்டு வயசாயிடுச்சா என்று சரி பார்த்துக் கொண்டனர்.

“எனக்கு 18 ஆகலே.. இருந்தாலும் வந்தது வந்தாச்சு.. பார்த்துவிட்டுப் போகிறேன்..” என்றார் ஒருவர்.

— இப்படியாக அரசு வேலை என்று முதலில் வந்தது கைக்கு சிக்காமல் நழுவிப் போயிற்று.

தட்டச்சு லோயர் கிரேடில் தேர்ச்சிப் பெற்றதும், சுருக்கெழுத்துக்காக இன்ஸ்ட்டியூட் வகுப்புகளுக்குப் போகாமல் இரண்டாவது அக்கிரஹாரத்தில் இருந்த எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் இருந்தவரிடம் பயிற்சி வகுப்புகளுக்குப் போக ஆரம்பித்தேன். அந்த பயிற்சி வகுப்பில் பயின்ற சோமு என்பவர் பழக்கமானார். சோமு திருமணமானவர். மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிந்தார். அவருடன் மார்டன் தியேட்டர்ஸைச் சுற்றிப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. மார்டன் தியேட்டர்ஸ் வண்டியில் ஏற்காடு போனோம் இந்தத் தடவை லேடிஸ் ஸீட் என்ற இடத்திற்கு அழைத்துப் போய் அங்கு மந்திரி குமாரி திரைப்படத்திற்காக படப்பிடிப்பு நடந்த இடங்களைக் காண்பித்தார்.

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியைத் தழுவி எழுதப்பட்ட கதை மந்திரி குமாரி. கலைஞர் திரைக்கதை வசனம். பகலில் ராஜகுருவின் மகனாகவும் இரவில் ஊரறியாத கொள்ளைக்காரனாகவும் இருந்தவனை மந்திரி குமாரி மணக்க நேரிடுகிறது. நாளாவட்டத்தில் கணவனின் சுயரூபத்தை மந்திரி குமாரி அறிகிறாள். மந்திரிகுமாரியை கொலை செய்வதற்காக வஞ்சக எண்ணத்துடன் அவள் கணவன் அவளை மலையுச்சிக்குக் கூட்டிச் செல்கிறான். உச்சிக்கு சென்றதும் அவளைக் கீழே தள்ளி விடும் நோக்கத்துடன் ‘உன் இஷ்டமான தெய்வத்தை வேண்டிக்கொள்’ என்கிறான். அவன் கொலைத் திட்டத்தை அறிந்த மந்திரி குமாரி என் கணவனே என் இஷ்டமான தெய்வம் என்று சொல்லி அவனை மூன்று சுற்று சுற்றி வருகிறாள். மூன்றாவது சுற்று முடியும் தருவாயில் அவனுக்கு பின்புறம் வருகையில் அவனை அதல பாதாளத்திற்கு கீழே தள்ளி பழிதீர்த்துக் கொள்கிறாள். இந்தக் காட்சியை எப்படி அந்த லேடிசீட் பகுதியில் படமாக்கினார்கள் என்பதை சோமு எனக்கு நடித்துக் காட்டினார்.

எல்லீஸ் ஆர் டங்கனும், டி.ஆர். சுந்தரமும் சேர்ந்து இயக்கிய படம். கொள்ளைக்காரன் பாத்திரந்தில் எஸ்.ஏ.நடராஜனும், ராஜகுமாரியைக் காதலிக்கும் தளபதி பாத்திரத்தில் எம்.ஜி.ஆரும் நடித்திருந்தனர். ராஜகுருவாக எம்.என். நம்பியார் தன் தேர்ந்த நடிப்பை பிரமாதமாக வெளிப்படுத்தியிருந்த படம் இது. ‘கொலை எனக்குக் கலை’ என்று அட்டகாசமான சிரிப்புடன் எஸ்.ஏ. நடராஜன் கொடூர வில்லனாக வளைய வந்த படம். மந்திரி குமாரியை மலை உச்சிக்குக் கூட்டிப் போகும் காட்சியில், ‘வாராய், நீ, வாராய்..’ என்று ஒலித்த இரட்டை அர்த்தம் தொனிக்கும் பாடல் அந்தக் காலத்தில் எல்லோரையும் கவர்ந்த ஒன்று.

எதிர்த்த வீட்டில் சுருக்கெழுத்து பயிற்சி பெற போன காலத்தில் வாடகை நூல் நிலையம் தவிர்க்க முடியாத காரணாங்களால் மூடப்பட்டது. அதனால் அந்த சமயத்தில் எந்த வேலைக்கும் போகாமல் சுருக்கெழுத்து வகுப்புக்கு மட்டும் போய் வந்தேன்.

சுருக்கெழுத்துக்கு வகுப்பெடுத்தவர் ஏதோ ஒரு வங்கியில் வேலையிலிருந்தார். அந்த வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் தட்டச்சு வேலைக்காக தங்கள் கம்பெனிக்கு ஒருவர் தேவைப்படுவதாகத் தன்னிடம் முதல் நாள் சொன்னார் என்றும் ‘நீ அந்த வேலைக்குப் போகிறாயா?” என்று என்னிடம் கேட்டார்.

நான் சரியென்று தலையாட்டியதும் முகவரியொன்றை துண்டுக் காகிதத்தில் எழுதி கொடுத்தார். ‘பாரத் சாண்டல் ஆயில் டிஸ்டலரீஸ், சீல நாயக்கன்பட்டி, சேலம்’ என்று முகவரியில் எழுதியிருந்தார். ‘அங்கு போய் கிருஷ்ணமூர்த்தி என்பவரைப் பார்த்து என் பெயரைச் சொல்லி உன்னை அறிமுகப்படுத்திக் கொள்’ என்று சொல்லியிருந்தார்.

எங்கள் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட நான்கு மைல்கள் தேறும். சேலம் டவுனிலிருந்து குகை வழியாகப் போக வேண்டும். நாலும் நாலும் எட்டு. வேலை கிடைத்தால் தினம் 8 மைல்கள் சைக்கிள் சவாரி என்று தீர்மானித்துக் கொண்டேன்.

நான் போன பொழுது நல்லவேளை, கிருஷ்ண மூர்த்தி இருந்தார். ரொம்ப ஸ்மார்ட்டான இளைஞர். விஷயத்தைச் சொன்னேன். தட்டச்சு மிஷினைக் காட்டி, “நான் டிக்டேட் செய்வதை அடித்துத் தருவீர்களா?” என்று மிகுந்த மரியாதை கொடுத்துக் கேட்டார்.

தட்டச்சு மிஷினின் உறையைக் கழட்டி விட்டு, பக்கத்திலிருந்த காகிதச் சுருளிலிருந்து காகிதம் எடுத்து சிலிண்டரில் சொருகி விட்டு அவரைப் பார்த்தேன்.

“நான் படிக்கட்டுமா?” என்றார்.

“உம்..”

அவரின் ஆங்கில உச்சரிப்பு அழகாக இருந்தது. அவர் படிக்கப் படிக்க நான் தட்டச்சு செய்ய ஓரிடத்தில் தான் படிப்பதை நிறுத்தி விட்டு, “அதைக் கொடுங்கள்..” என்று என்னிடம் கேட்டு வாங்கி, வரிவரியாகப் படித்து….
நான் தட்டச்சு செய்திருந்தது அவருக்கு மிகவும் பிடித்துப் போனது.

“நாளையிலிருந்து வேலைக்கு வர முடியுமா?” என்று கேட்டார்.

“முடியும் சார்.”

“சம்பளம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார்.

எனது தயக்கத்தை உபயோகப்படுத்திக் கொண்டு, “நாற்பது ரூபாய் இப்போதைக்குத் தருகிறோம். கம்பெனி இப்பொழுது தான் ஆரம்பித்திருக்கிறது. அதிக வேலை கிடையாது. போகப் போகப் பார்க்கலாம்” என்றார்.

நான் சரியென்றேன்.

அடுத்த நாள் காலை பத்து மணிக்கு வரச் சொல்லியிருந்தார்.

Series Navigation<< அழியாத மனக்கோலங்கள் – 7அழியாத மனக்கோலங்கள் – 9 >>

About Author