இடும்பவனம் & இடும்பி

ஒருமுறை கௌரவர்களின் சதியில் இருந்து தப்பி, யார் கண்ணுக்கும் படாமல் வெகு தூரம் சென்றனர். பீமன் தனது ஒரு தோளில் அன்னை குந்தியை சுமந்து சென்றான். மற்றொரு தோளில் தனது சகோதரர்களில் ஒருவனை மாற்றி மாற்றி சுமந்து சென்றான். நீண்ட தூரம் சென்ற பிறகு ஒரு அடர்ந்த வனத்தை அடைந்தனர். அருகிலேயே நீர் நிறைந்த தாமரை குளம் ஒன்றும் இருந்ததால் அங்கே ஓய்வெடுக்க முடிவு செய்தனர். நீண்ட தூரம் அனைவரையும் சுமந்து வந்ததால் களைத்திருந்த பீமன், குளத்தில் களைப்பு தீர நீராடி வந்த பொழுது, அவனது தாயும் சகோதரர்களும் களைப்பில் உறங்கி இருந்தனர். அவர்களை எழுப்பி குளத்தில் இருந்து நீரை தாமரை இலைகளில் கொண்டு வந்து தந்து பருக செய்தவன் மீண்டும் அவர்களை தூங்க சொல்லி அவர்களுக்கு காவலாக அமர்ந்து கொண்டான்.

அந்த வனமானது கொடிய ராக்ஷஷனான இடும்பனுக்கு சொந்தமான இடும்பவனம் ஆகும். இடும்பனுக்கு நர மாமிசம் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். எப்பொழுதெல்லாம் அந்த வனத்தில் மனிதர்கள் நுழைகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர்களை அடித்து சாப்பிடுவது அவனுக்கு பிடித்த ஒன்றாகும். இப்பொழுதும் பாண்டவர்கள் நுழைந்தவுடன் மனித வாசனை அவனுக்கு வந்தது. உடனே தனது தங்கையான இடும்பியிடம் ” தங்கையே ! எனக்கு உணவின் வாசனை அடிக்கிறது. கண்டிப்பாய் இந்த காட்டில் மனிதர்கள் நுழைந்திருக்க வேண்டும். நீ உடனடியாக சென்று அவர்களை பிடித்து வா ! இன்று விருந்தை நாம் மகிழ்வுடன் உண்போம் !” எனக் கூறினான்.

அங்கிருந்து வந்த இடும்பி பாண்டவர்களை பார்த்தாள் . பார்த்தவுடன் அவர்களின் கருணை ததும்பும் முகம் அவளை ஈர்த்தது. அவர்களுக்கு காவலாய் அமர்ந்திருந்த நன்கு பலம் பொருந்திய ஓநாய் போன்ற உடலைக் கொண்டிருந்த பீமனையும் பார்த்தாள். அவனைப் பார்த்தவுடன் அவன் பால் ஈர்க்கப்பட்ட இடும்பி, அவர்களை உணவாக அவள் அண்ணனிடம் கொண்டு செல்லும் எண்ணத்தை மறந்தாள். பீமன் தன்னை பார்க்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அழகிய பெண் வடிவத்தை எடுத்து அவன் அருகே சென்றாள் . பீமனும் அவளைப் பார்த்தவுடன் அவள் மேல் காதல் கொண்டான்.

அவளை பார்த்து ” அழகிய பெண்ணே ! நீ யார் ” என வினவினான்.

அவள் திரும்ப அவனிடம் ” முதலில் நீங்கள் யார் என நான் அறிந்து கொள்ளலாமா ? அங்கே மலர் போல் உறங்கும் அழகிய பெண்மணி யார் ? யாரிந்த இளம் வாலிபர்கள் ?” என கேட்டாள்.

” நான் பீமன் , அரசன் பாண்டுவின் மகன். அங்கே இருப்பவர்கள் என் சகோதரர்கள் . என் மூத்த சகோதரனும் என் இளைய சகோதரர்களும். அது என் அம்மா . நீ தேவதையா ?” என பதில் உரைத்தான் பீமன்.

அதற்கு இடும்பி ” என் பெயர் இடும்பி, இந்த காட்டை ஆளும் இடும்பனின் சகோதரி. அவன் உன்னை கண்டால் உன்னை தின்றுவிடுவான். உன்னை என்னால் இழக்க இயலாது. உங்கள் அனைவரையும் நான் காப்பாற்ற விரும்புகிறேன். உங்கள் எல்லோரையும் அந்த மலை சிகரத்துக்கு தூக்கி சென்றுவிட்டால் உங்களை அவனால் கண்டுபிடிக்க இயலாது ” என காதல் வேகத்தில் கூறினாள்.

” என்னைப் பற்றி அவ்வளவு தாழ்வாக எண்ணாதே பெண்ணே ! உன் அண்ணன் வரட்டும் அவனை நான் கொள்கிறேன் ” என்று பெருமிதத்துடன் கூறினான்.

விரைவில் பசியினால் பொறுமை இழந்த இடும்பனின் கர்ஜனை கேட்டது. அதைக் கேட்டவுடன் இடும்பி நடுக்கத்துடன் குந்தி அருகே சென்று அமர்ந்து கொண்டாள். மரத்தின் பின்னிருந்து வந்த இடும்பன், தன் தங்கை அழகிய உருவம் எடுத்து மனிதர்களுடன் அமர்ந்திருப்பதை பார்த்தவுடன் கோபம் கொண்டான்.

பீமன் அவனை சண்டைக்கு அழைத்தான். உடனே இருவருக்கும் இடையே மிக கடுமையான சண்டை துவங்கியது. அந்த சப்தத்தில், உறங்கி கொண்டிருந்த குந்தியும் மற்ற சகோதரர்களும் விழித்துக் கொண்டனர். தன்னருகே அமர்ந்திருந்த இடும்பியிடம் அவளை பற்றி கேட்டு வியப்படைந்தாள் குந்தி. யுதிஷ்டிரன் பீமனிடம் ” சண்டையை வளர்த்துக் கொண்டே செல்லாதே ! இரவு கவிழ்ந்தவுடன் ராக்ஷர்களின் பலம் அதிகமாகி விடும் ” எனக் கூறினான்.

உடனே பீமன், இடும்பனை தன்னுடைய பலம் வாய்ந்த கைகளால் உருத்தெரியாமல் நசுக்கி எறிந்தான். அதன் பின், பாண்டவர்களும், குந்தியும் தங்கள் பயணத்தை தொடர முடிவு செய்து அங்கிருந்து கிளம்பினார்கள். வேறு வழித் தெரியாத இடும்பியும் அவர்களை பின் தொடர்ந்தாள் . இதைக் கண்ட குந்தி ” மகளே ! நீ என் எங்களைப் பின் தொடர்கிறாய் ” என வினவினாள்.

இடும்பி நாணத்துடன் பீமனை பார்த்து பின் ” நீங்கள் அவருடைய அம்மா ..” என கூற, குந்தி பீமனை அவன் மனதில் இருப்பதை சொல்ல சொன்னாள் . மிக பெரிய உருவம் கொண்ட பீமன், வெட்கத்துடன் தரையை பார்த்தும் தன் புன்னகையை மறைக்கவும் முயன்றான்.

விரைவில் ஒரு அழகிய இடத்தை அடைந்தனர் அவர்கள். அங்கே இடும்பி அவர்கள் தங்க ஒரு குடிசை நிர்மாணித்தாள் .

அதன் பின், பீமன் இடும்பியை மணந்து அங்கே மகிழ்வாக வாழ்ந்தனர். மகன் பிறந்தவுடன் அவனுக்கு ” கடோத்கஜன்” என பெயரிட்டு அவனை தாயுடன் விட்டுவிட்டு தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

About Author