புஷ்பலதாம்பிகை

உள்ளூர் கோவில்கள்

நம்மில் எத்தனையோ பேர்கள் ஒவ்வொரு ஆலயமாக தேடிச் சென்று தரிசனம் செய்து வருவார்கள். பேஸ்புக்கில் பார்த்தேன். வாட்ஸ் அப்பில் பார்த்தேன். தொலைக்காட்சியில் பார்த்தேன் என்று நிறைய கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். இது ஒருவகையில் மகிழ்ச்சியே. நவீன விஞ்ஞானத்தின் உபயோகங்களில் உருப்படியான ஒன்றாக இதை சொல்லலாம். வீட்டில் இருந்தவாறே நாம் செல்லும் இடத்தில் என்னென்ன கோவில்கள் இருக்கின்றன அந்த ஆலயங்களின் சிறப்புகள் என்ன? ஸ்தலவரலாறு என்ன? என்று இது போன்ற பல விஷயங்களை உட்கார்ந்த இடத்தில் இருந்து அறிந்து கொள்கிறோம்.

அப்படி செல்பவர்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம்

வெகுதொலைவில் இருக்கும் ஆலயங்களை சென்று தரிசிக்கும் நீங்கள் உங்கள் ஊர் ஆலயங்களை உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆலயங்களையும் வாரம் ஒருமுறையாவது சென்று தரிசனம் செய்து விட்டு வரலாம். நம் உறவினர்கள் என்னப்பா உள்ளூர்ல இருந்துகிட்டே என்னை பார்க்க வரமாட்டேங்கிறியே என்று சொல்வார்கள் அது போலத்தான் நம் ஊர் தெய்வங்களும். இவன் உள்ளூரில் இருந்து கொண்டே நம்மை பார்க்க வரமாட்டேங்கிறானே நாம் ஏன் இவனுக்கு நல்லது செய்யணும் என்று ஒரு கணம் நினைத்து விட்டால் போதும் உங்கள் வாழ்க்கை கேள்விக்குறிதான். தெய்வம் அவ்வாறு நினைக்காது என்பது வேற விஷயம்.

நான் சொல்ல வருவது தேடி தேடி நீங்கள் செல்லும் கோவிலுக்கு உங்களால் ஆன உபகாரம் என்ன என்பது தான்? கோவிலுக்கு சென்றோம் போட்டோ எடுத்தோம் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் போட்டோம் அவ்வளவு தான். அந்த கோவிலுக்கு நம்மால் எதாவது உபகாரம் செய்ய முடியுமா என்று நாம் யோசிப்பது கிடையாது. கோவிலுக்கு போனோம் கூட்டம் இல்லை அர்ச்சகர் தட்டில் 50 ரூபாய் போட்டோம் நல்ல தரிசனம் இவ்வளவு தான் நம் மனதில் ஓடும் விஷயம்.

அந்த அம்பாள் எப்படி இருக்காள்? மூலவ மூர்த்தி எப்படி இருக்கார்? பரிவார தேவதைகளின் சன்னதிகள் எப்படி இருக்கு? இதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படுவதில்லை. தக்ஷிணாமூர்த்தி ஏன் நின்ற கோலத்தில் இருக்கார் என்று கேள்வி கேட்டால் அப்படியா அது எந்த கோவில் என்று தான் நாம் கேட்போம். உடனே கூகுளில் போட்டு பார்ப்போம். ஏன் நின்ற கோலத்தில் தரிசனம் என்ற விவரம் கூட நாம் கூகுளில் போட்டு தெரிந்து கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு ஆளாகி இருக்கிறோம்.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான். புராதனமான ஆலயங்களுக்கு செல்லும் போது கை நிறைய இல்லை பை நிறைய பூக்கள், மாலைகள் வாங்கி கொண்டு செல்லுங்கள். எவ்வளவோ செலவு பண்ணுகிறீர்கள். அம்பாளுக்கு புஷ்பங்கள் போட்டு அழகு பாருங்கள். கோவிலுக்கு போனோம் அர்ச்சனை தட்டு வாங்கிட்டு போனோம் என்பது வேற விஷயம். அந்த மூலவ மூர்த்திகளுக்கு என்ன மலர் பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு அதை அதிகம் வாங்கிக் கொண்டு செல்லவும். இல்லைன்னா அரளியை தொடுத்து மாலையாக கொண்டு போய் அம்பாளுக்கு சாத்தவும். அம்பாள் எப்பவும் கல்யாண கோலத்தில் இருப்பவள். பூ அலங்காரம் செய்து அவளை சந்தோஷப்படுத்தி பாருங்கள்.

ஓமாம்புலியூர் என்ற ஊரில் இருக்கும் அம்பாளின் பெயர் புஷ்பலதாம்பிகை. நாங்கள் முதல் முறை சென்ற சமயம் அம்பாளின் கழுத்தில் பெயருக்கு கூட மாலை இல்லை. வெளியில் வந்தால் கதம்பம் என்ற பெயரில் மாலை கொடுத்தார்கள். அர்ச்சகரிடம் கேட்டால் யாராவது வாங்கி கொடுத்தால் தானே என்று சொன்னார். மறுமுறை செல்லும் போது கிட்டத்தட்ட 50 முழம் பூ வாங்கிக் கொண்டு சென்றேன். அதை பார்த்த அர்ச்சகரின் முகமும் மலர்ந்து அழகாக அலங்காரம் செய்தார். அலங்காரம் செய்த பின் அந்த அம்பிகையை தரிசிக்கும் போது எங்கள் கண்களில் கண்ணீர்.

அதே போல பரிவார தேவதைகளின் சன்னதிகளை பலரும் கவனிப்பதில்லை. அது ஏனென்று தெரியவில்லை. பல ஆலயங்களில் அப்படித்தான் இருக்கிறது. அது குறித்து பிறிதொரு நாள் சந்திப்போம் சிந்திப்போம்.

About Author