தேவ் ப்ரயாக்

கங்கை உருவாகிறாள் – நதிகளின் சங்கமம் – 1

This entry is part 1 of 4 in the series கங்கை உருவாகிறாள்

அன்பின் நண்பர்களுக்கு, நண்பர் கார்த்திக் அவர்களின் பாகீரதி தளம் மூலம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  சமீபத்தில் (மே மாதத்தின் தொடக்கத்தில்) சென்று வந்த பயணம் குறித்து முகநூல் பக்கத்தில் எழுதி இருந்தாலும், பாகீரதி தளத்திலும் நண்பர் கார்த்திக் எழுதும்படி கேட்டுக்கொள்ளவே, இதோ உங்களுடன் எனது பயண அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வந்து விட்டேன்.  எங்கே பயணம்?  அங்கே என்ன சிறப்பு, பார்த்த இடங்கள் என்ன போன்ற தகவல்களை முடிந்த வரை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.  வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம்.  

மே மாதத்தின் முதல் வாரத்தில் வெள்ளி (புத்த பூர்ணிமா), சனி, ஞாயிறு மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு விடுமுறை…..  வீட்டில் இருந்து என்ன செய்வது? விடுமுறை நாட்களில் பெரிதாக வேலை எதுவும் இல்லாமல் வீட்டில் இருப்பது மிகவும் கடினமான விஷயம் என்பதால் எங்கேயாவது செல்ல முடிவு எடுத்திருந்தேன்.  முடிவு எடுத்தவுடன் உடமைகளை எடுத்துக் கொண்டு, மே மாதம் நான்காம் தேதி அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய பின்னர் பயணம் துவங்கி விட்டேன். தனியே தன்னந்தனியே என முணுமுணுத்தபடி Solo Travel தான்….. போகும் இடம் முடிவு செய்து வைத்தாலும் முன்பதிவு எதுவும் செய்யவில்லை. கிடைத்த பஸ்ஸில் செல்ல முடிவு எடுத்து தலைநகரின் காஷ்மீரி கேட் பகுதியில் உள்ள ISBT (Inter State Bus Terminal) வந்து ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். 

தலைநகர் தில்லியில் நான்கு-ஐந்து இடங்களில் ISBT எனும் மாநிலங்களுக்கு இடையே செல்லும் பேருந்துகள் புறப்படும்/வந்து சேரும் பேருந்து நிலையங்கள் உள்ளன. அவற்றில் காஷ்மீரி கேட் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் தான் முதலானதும் பிரதானமானதும். இங்கே இருந்து வட மாநிலங்களில் உள்ள பல இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

பொதுவாகவே இங்கே இயங்கும் பேருந்துகள் அழுக்கானவை. சுத்தம் குறித்த கவலைகள் இங்கே இருக்கும் பெரும்பாலான மனிதர்களுக்கு இல்லை என்பதால் நம் மக்களுக்கு இப்படியான பேருந்துகளில் பயணிப்பது கொஞ்சம் கடினம் தான். நான் இந்த பகுதியில் பல வருடங்களாக இருப்பதால் எனக்குப் பழகி விட்டது. அப்படி அதிகம் பராமரிக்கப்படாத ஒரு பேருந்தில் எனது பயணம் தொடங்கியது. 

தில்லியில் புறப்பட்ட பேருந்து வழியில் எங்கும் நிற்காமல் மோதி நகர் வரை வந்துவிட்டது. அதன் பிறகு Traffic Jam காரணமாக ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது… வண்டியில் இருந்த விளக்குகள் அணைத்து விட்ட நிலையில் ஒரு சிலர் தூங்காமல் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் பயணித்தனர். ஒரு பெண்மணி தில்லியில் புறப்பட்டதிலிருந்தே அலைபேசி வழி வீடியோ கால் பேசிக் கொண்டே இருந்தார். 

குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருக்க, ஜன்னலோர இருக்கை மிகவும் சுகமாக இருந்தது எனக்கு. பக்கத்து இருக்கை காலியாக இருந்ததால் நான் சுகமாக பயணித்தேன். இந்தப் பேருந்தில் குறைந்தது ஐந்தரை மணி நேரத்திற்கு பயணம். அதன் பிறகு கொஞ்சம் ஓய்வு. பிறகு மீண்டும் பேருந்துப் பயணம்…….. எங்கே இந்தப் பயணம்?  சொல்கிறேன்…… 

சுமார் இரண்டரை மணி நேரம் தொடர்ந்து பயணித்த பிறகு நள்ளிரவு 01.15 மணிக்கு பேருந்தினை வழியில் சாலை ஓர உணவகம் (Himalayan Dhaba, Muzzafarnagar) ஒன்றில் நிறுத்தினார் வண்டி ஓட்டுநர். அவருக்கும் சற்று ஓய்வு தேவை தானே. நிறுத்திய இடத்தில் இருந்த கழிவறை வழக்கமான துர்நாற்றத்தை வீசும் ஒன்றாகவே இருந்தது. நம் ஊர் போல இங்கே காசு கேட்பதில்லை என்பதைத் தவிர பெரிய வித்தியாசம் இல்லை. 

நான் பொதுவாக இந்த மாதிரி சாலை ஓர உணவகம் – குறிப்பாக நெடுஞ்சாலை உணவகங்களில் வாகனம் நிறுத்தும்போது எதுவும் உண்பதில்லை. வேறு வழியில்லாமல் உண்ண வேண்டியிருந்தால் கூட மிகக் குறைவான அளவில் சாப்பிடுவதே வழக்கம். அங்கே கிடைக்கும் உணவின் தரம் அப்படி! பார்க்கவே பயமாக இருக்கும். அலங்காரம் எல்லாம் நன்றாக இருந்தாலும் சாப்பிடத் தோன்றாது. 

இந்த உணவகத்தில் கூட BEL Poori பார்க்க அழகாக இருந்தது என்றாலும் திறந்து இருந்ததால் அந்த இடத்தின் புழுதி முழுவதும் அதன் மேல் படிந்து விடுவதை பார்க்க முடிந்தது. வாடிலால் என்ற பெயரில் விற்கப்பட்ட குச்சி  ஐஸ் கவர் இல்லாமல் இருந்தது. இப்படி நிறைய விஷயங்கள் அங்கே பார்க்கக் கிடைத்தது. இரண்டரை மணி நேரமாக உட்கார்ந்து வந்த அலுப்பு போக சிறிது நேரம் கீழே நின்று நடப்பவை அனைத்தையும் பார்த்துக் கொண்டே பொழுது போக்கினேன். 

வேறு ஒரு பேருந்தில் வந்த ஒரு பெண்மணிக்கு பிறந்த நாள் போலும். அந்த இடத்திலேயே கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். மகிழ்ச்சி என்றும் நிலைத்து இருக்கட்டும் என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். பேருந்து புறப்பட மீண்டும் ஏறி அமர்ந்து கொண்டு நிகழ்வுகளை தட்டச்சு செய்து சேமித்துக் கொண்டேன். 

எங்கே பயணம்?

அது சரி, இந்தப் பயணம் குறித்த இவ்வளவு எழுதி விட்டேன் என்றாலும் இதுவரை எங்கே பயணம் என்று சொல்லவே இல்லை என்று நீங்கள் கேட்பதற்கு முன்னர் சொல்லி விடுகிறேன். மூன்று நாட்கள் விடுமுறையில் நான் பயணிப்பது தேவ் பிரயாக் நோக்கி. தேவ் பிரயாக் – பாகீரதி மற்றும் அலக்நந்தா நதிகள் சங்கமித்து கங்கையாக பெயர் பெற்று மேலும் தொடர்ந்து பயணிப்பது இந்த தேவ் பிரயாக் நகரில் தான். 

எங்கே இருக்கிறது தேவ் பிரயாக்? ஹரித்வார் இலிருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. முதல் நாள் இரவு தில்லியில் இருந்து புறப்பட்ட நான், அடுத்த நாள் அதிகாலை நேரத்தில் ஹரித்வார் வந்து சேர்ந்து விட்டேன். ஹரித்வாரில் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்ட பிறகு தேவ் பிரயாக் செல்ல ஒரு பேருந்தில் அமர்ந்து கொண்டேன். 

கப்பாட் எனும் கோவில் கர்ப்பக்கிரகம்

வருடத்தில் பாதிக்கு மேல், அதாவது குளிர் காலத்தில் (தீபாவளிக்கு அடுத்த நாள் பத்ரிநாத் கோயில் மூடப்பட்டு அடுத்த ஆண்டில் ஏப்ரல் மாதத்தின் கடைசியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் கோவில் மீண்டும் திறக்கப்படுவது வழக்கம். இங்கே அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தில் இப்படி கோவில் திறப்பதை கப்பாட் திறந்து விட்டார்கள் என்று சொல்வார்கள். சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த வருடம் கோவில் மீண்டும் தரிசனத்திற்காக திறந்தார்கள் என்பதால் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் செல்லும் பயணிகள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறார்கள். 

ஹரித்வார் நகரிலிருந்து பத்ரிநாத் கோயில் வரை செல்ல சாலை வசதி உண்டு. தொலைவு சற்றேறக்குறைய 320 கிலோ மீட்டர். ஹரித்வார் நகரின் பேருந்து நிலையத்தின் வாயிலுக்கு வெளியே பேருந்துகள் கிடைக்கும். இந்த பேருந்துகள் அனைத்துமே தனியார் வாகனங்கள் தான். TGMOC LTD (Tehri Garhwal Motors Owners Corporation Limited என்கிற கூட்டமைப்பு தான் இந்த பேருந்துகளை இயக்குகிறது. காலை வேளையில் முடிந்தவரை பத்ரிநாத் வரை செல்லும் பயணிகளை மட்டுமே பேருந்தில் ஏற்றிக் கொள்கிறார்கள். தேவ் பிரயாக்   போக வேண்டும் என்று கேட்டால் நின்று கொண்டு பயணிக்க சொல்கிறார்கள்! மலைப்பாதையில் 90 கிலோமீட்டர் நின்று கொண்டு பேருந்தில் பயணிப்பது சுலபம் அல்ல என்பதால் கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருந்தது. 

அதனால் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு 06.00 மணிக்கு ஹரித்வார் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்து ஒரு பேருந்து ஓட்டுநரின் அனுமதி பெற்று அவரது வாகனத்தில் அமர்ந்து கொண்டேன். சரியாக 06.15 மணிக்கு வாகனம் புறப்பட்டது. 

தேவ் பிரயாக் நோக்கி பயணம்….

காலை சரியாக 06.15 மணிக்கு பேருந்து புறப்பட்டாலும் ஹரித்வார் நகரை விட்டு அகலவே கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆனது. நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணி நடப்பதால் தாமதம். ஆனால் அந்த இடத்தைத் தாண்டியபிறகு வாகன ஓட்டி மிகச் சிறப்பாக வாகனத்தை இயக்கினார். மலைப்பாதையில் வாகனம் ஓட்டுவது சுலபம் அல்ல. அதிலும் எப்போது வேண்டுமானாலும் பாறைகள் விழலாம் என்று இருக்கும்போது வாகனம் ஓட்டுவது மிகவும் சிரமமாக இருக்கும். எங்கள் பயணத்தில் சாலையில் விழுந்து கிடந்த பாறைகளை பார்க்க முடிந்தது. 

ஒரு புறம் மலை, மற்றொரு பக்கம் சாலையின் கீழே பெருக்கெடுத்து ஒடும் கங்கை நதி, ஜன்னல் வழி வீசும் சில்லென்ற காற்று, என பயணம் மிகவும் ரம்மியமாக இருந்தது. மனதுக்குள் இளையராஜாவின் இசை/பாடல் ஓட, பயணத்தை மிகவும் ரசித்துக் கொண்டிருந்தேன். பேருந்தில் பெரும்பாலும் உள்ளூர் வாசிகள் தான். அவர்களது பாஷையான பஹாடி பாஷையில் பேசிக்கொண்டே வந்தார்கள். ஒன்றிரண்டு வார்த்தைகள் ஹிந்தி போல இருந்தாலும் அவர்கள் பேசுவதை புரிந்து கொள்வது கடினம்.

வழியில் வரும் சிற்றூர்களில் கடைகளில் உள்ளூரில் விளையும் தானிய வகைகளை விற்பனைக்கு வைத்து இருந்தார்கள். கூடவே பழச் சாறும் குப்பிகளில் விற்பனைக்கு வைத்து இருந்தார்கள். எலுமிச்சை சோடாவுக்கு உப்புடன் பச்சையாக எதையோ அரைத்து சேர்க்கவே என்ன என்று கேட்க மலை உப்பு என்றார். சரியாக ஒன்பது மணிக்கு தீன் தாரா என்ற இடத்தில் உள்ள சௌகான் உணவகத்தில் வண்டியை நிறுத்தினார் வண்டியோட்டி. அங்கே காலை உணவு இரண்டு ஆலு பராட்டா, ராஜ்மா சப்ஜி, மூலி ராய்த்தா மற்றும் ஊறுகாய் உடன் கொடுத்தார்கள். விலை ரூபாய் 60 மட்டும். சுவை நன்றாகவே இருந்தது. 

காலை உணவுக்குப்பின் பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் நான் இறங்க வேண்டிய தேவ் பிரயாக் வந்தாலும் மறந்து போய் வண்டியை ஒட்டிக் கொண்டு இருந்தார். நல்ல வேளையாக நான் எழுந்து நின்று விட்டதால் கதவைத் தட்ட, வண்டியை நிறுத்தினார். 

பேருந்தில் வந்து கொண்டிருந்த போதே இந்த ஊரில் இருக்கும் நபர் எனக்கு அழைப்பு விடுக்க ஆரம்பித்து விட்டார். நான் இங்கே தங்குவதற்கு அலுவலக நண்பர் மூலம் மத்திய அரசின் ஒரு தங்குமிடத்திற்கு ஏற்பாடு செய்திருந்தேன். வந்து இறங்கியதும் வந்து சேர்ந்த விஷயத்தை அவரிடம் சொல்ல, எனக்காக காத்திருக்கும் நபரிடம் சொல்ல உடனே அவரும் என்னை அவரது இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு தங்குமிடம் சேர்த்தார். தங்குமிடம் அமைந்திருப்பது ஒரு மலை மீது! 

புத்துணர்வு தந்த சங்கமம் குளியல்……

இந்தப் பக்கமும் மலை அந்தப் பக்கமும் மலை, நடுவே நதி! அற்புதமான சூழலில் அமைந்து உள்ளது இந்தத் தங்குமிடம். அங்கே வந்ததும் என் உடைமைகளை வைத்து விட்டு கொஞ்சம் fresh ஆன பிறகு இங்கே இருக்கும் நபருடன் சேர்ந்து அலக்நந்தா மற்றும் பாகீரதி நதிகள் சங்கமம் ஆகும் இடத்திற்குச் சென்றோம். சிறிது நேரம் நதிகள் சங்கமிக்கும் அழகைக் கண்ணாரக் கண்டு களித்தேன். பிறகு சங்கமம் பகுதியில் திவ்யமான குளியல். முதல் நாள் இரவுப் பயணத்தின் அத்தனை களைப்பும் சங்கமத்தில் ஒரு முறை தலை நனைத்ததும் காணாமல் போயிற்று. மூன்று முழுக்கு போட்டு, சில நிமிடங்கள் குளித்த பின்னும் நதியிலிருந்து எழுந்திருக்க மனதே இல்லை.

இத்தனைக்கும் இரண்டு நதிகளில் பாய்ந்து ஓடி வரும் நீர் பனி உருகி வருவதால் மிகவும் குளிர்ந்து இருந்தது. தண்ணீருக்குள் இறங்கும் வரை தான் குளிர் எல்லாம். இறங்கி நனைந்த பிறகு குளிராவது ஒன்றாவது! தண்ணீரில் இருந்து வெளியே வர மனம் வரவே இல்லை. நதியை பார்த்ததும் ஒரு முதிய பெண்மணிக்கு என்னவோ ஆகிவிட்டது! கைகளை முறுக்கிக் கொண்டு சாமி வந்தார்போல ஆடவும் சப்தம் செய்யவும் ஆரம்பித்து விட்டார். அவருடன் வந்த பெண்மணி, தண்ணீருக்குள் நின்றிருந்த என்னிடம் பெண்மணியை பிடித்துக் கொள்ளும்படி சொல்ல எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. சில நிமிடங்களில் அவர் தன் நிலைக்கு வர எல்லோருக்கும் நிம்மதி. 

இரண்டு நதிகளின் நீரும் வேறு வேறு வண்ணம். சங்கமிக்கும் போது ஒரே நிறமாக மாறும். படத்தில் மண் நிறத்தில் இருப்பது அலக்னந்தா…… மற்றது பாகீரதி. என்ன ஒரு அற்புதமான வண்ணம் பாருங்கள்! அதில் நிறைய பெரிய பெரிய மீன்கள் வேறு இருக்கிறது! இரண்டு நதிகளும் சேர்ந்த பிறகு கங்கை என்று அழைக்கப்படுகிறது. இந்த சங்கமத்தை உள்ளூர் வாசிகள் Saas Bahu Milan என்கிறார்கள். அதாவது மாமியாரும் மருமகளும் சேர்வது! மாமியார் அலக்னந்தா; மருமகள் பாகீரதி….. கூடவே இன்னும் ஒரு விஷயமும் சொல்கிறார்கள்…… மருமகள் தான் அதிகம் சப்தம் உண்டாக்குகிறாளாம்!😊

மொத்தத்தில் ஒரு திவ்யமான, மனதுக்கு உகந்த குளியலாக அமைந்தது இந்த தேவ் பிரயாகை சங்கமக் குளியல்…… 

தொடரும் …

Series Navigationகங்கை உருவாகிறாள் – நதிகளின் சங்கமம் – 2 >>

About Author

4 Replies to “கங்கை உருவாகிறாள் – நதிகளின் சங்கமம் – 1”

  1. பிரயாகை படத்தைக் காணோமே? இரண்டு வேறு வேறு வண்ணங்களில் இரண்டு நதிகளும் மனதைக் கொள்ளை கொள்ளும். பார்க்க ஆவலாக இருந்தேன்.
    பத்ரிநாத் திற்கு இரண்டு முறை போயிருந்தாலும் போகத் தவறிய இடம் இந்த தேவப் பிரயாகை.

  2. வெங்கட்ஜி மிகவும் ரசித்து வாசித்தேன். அதுவும் தங்குமிடம் சுற்றி மலை ஆஹா….வாசித்ததும் நானும் அந்தப் பெண் மணி போல் “இப்போதே போகணும்” என்று ஆட வேண்டும் போல் தோன்றுகிறது. தனியே தன்னந்தனியே!!! எனக்கும் பிடிக்கும் ஆனால் …

    அருமையான பயணம் மற்றும் உங்கள் அனுபவங்கள். படங்களைக்காணவில்லையே. இரு நதிகளும் வெவ்வேறு வண்ணங்களில்…பார்க்க ஆவல்

    கீதா

Comments are closed.