கதவுகள்

வீடு என்றால் கதவு தான் முதலில் நினைவுக்கு வரும். வீடு கட்டுவதில் வாசக்கால் வைப்பது என்பது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. வீட்டின் லக்ஷ்மீகரம் என்பதே அதன் கதவு எத்தனை அழகாக இருக்கிறது என்பதைப் பொறுத்து அமையும். வீட்டிற்குள் நுழைபவர்களை வசீகரிக்கும் வகையில் கதவுகளை தேர்வு செய்வது முக்கியம். கோவில்களில் உள்ள கதவுகள் அதன் பிரம்மாண்டத்தை எதிரொலிக்கும். கோட்டைகளின் கதவுகள் அந்த நாட்டின், ராஜாவின் பலத்தைப் பிரதிபலிக்கும்.

கதவுகளே இல்லாத வீடுகள் ஏதோ ஊரில் இருப்பதாகப் படித்ததாக ஞாபகம். வீட்டின் பாதுகாப்புக்கு கதவுகள் ரொம்பவும் முக்கியம். ஆனால் நான் இங்கே சொல்ல வந்தது முற்றிலும் வேறானது. கதவுகளை மூடுவதும் திறப்பதும் பற்றித் தான் சொல்ல வந்தேன்.

நான் வளர்ந்த சூழ்நிலையில் , திருச்சியில் சில வீடுகளில் காலையில் எழுந்ததும் வாசல் தெளித்துக் கோலம் போடுவதற்காக கதவைத் திறந்தால் இரவு படுக்கும் போது தான் கதவை மூடுவார்கள். அது கூட திருடனுக்குப் பயந்து மூடுவார்களா தெரியாது. பகல் முழுவதும் கதவு திறந்தே இருக்கும் வீடுகள் நிறைய உண்டு. ஓடி ஒளிந்து பிடித்து விளையாடும் போது யார் வீட்டில் வேண்டுமானாலும் ஒளிந்து கொள்ளலாம். சில சமயம் குரங்கு, நாய் என்று ஏதாவது வந்து விடக் கூடாது என்பதற்காக மூடி வைத்திருக்கலாம். தாழ்ப்பாள் போடாத கதவைத் திறந்து கொண்டு அந்தந்த வீட்டின் எந்தப் பகுதிக்கும் போக முடிந்தது உண்டு.

வீடுகளில் அலமாரிகள் கூட கதவு திறந்தே கிடப்பதைப் பார்த்ததுண்டு. யாராவது வாசலில் வந்து நின்றால் வா என்று சொல்வதோடு சரி. கதவுகள் தான் அநேகமாக திறந்தே கிடக்குமே! வயதானவர்கள் யாராவது வாசலில் காவல் மாதிரி உட்கார்ந்திருக்கலாம். அவ்வளவு தான்.

ஆனால் இன்று நிலமை நேர் எதிர். ஒரு வீட்டிற்கு ஒரு மரக்கதவு, இரும்பு க்ரில் கதவு, கொசு வலைப் போட்ட ஒரு கதவு, தாழ்ப்பாளில் ஒரு பூட்டு, கதவிலேயே பதித்த ஆட்டோமேடிக் லாக், கதவை முழுக்கத் திறக்காமல் யார் வந்திருக்கிறார்கள் என்று பார்க்க ஒரு வசதி, ஒரு செயின் ஒன்று என்று ஏக கெடுபிடி.

வீட்டுக்குள் நுழைந்தால் எங்கெங்கு காணினும் கதவுகள் தான். சுற்றிலும் அலமாரிகள், ஷோ கேஸ்கள் அதற்கான டிசைன் டிசைனாக , கலர் கலராக, கண்ணாடி , மரம், பிளாஸ்டிக் கதவுகள். மேலே அட்டிக் எனப்படும் அட்டாலி முழுவதும் கதவுகள் போட்டு மூடியிருக்கிறது. சமையலறை முழுவதும் மாடுலர் கிச்சன் என்ற விதத்தில் கலர் கலராய் கதவுகள். ரொம்ப நிறைய ஷோ கேஸ்களும், ஷெல்ஃப்களும் அதற்கான கதவுகளும் இருக்கும் அறைக்குள் நுழைந்தால் வரும் ஃபோபியாவிற்கு என்ன பெயர்? எனக்கு அது இருக்கிறது. ஒரு மாதிரி மயக்கமாக வருகிற மாதிரி ஆகி விடும்.

நான் போரூரில் வீடு கட்டும் போது வாசலில் இருந்து கொல்லைப் பக்கம் வரை காற்றோட்டம் இருக்குமாறு இரண்டு பக்கமும் கதவுகள் வைக்கச் சொன்னேன். தவிர சுற்றிலும் தோட்டம் அமைக்கும் எண்ணம் இருந்ததால் இரண்டு சைடிலும் வராண்டாவும் கதவும் வைக்கலாம் என்றேன். காண்ட்ராக்டர் கூடவே கூடாது என்று சொல்லி விட்டார். இத்தனை பக்கமும் கதவு இருந்தால் பாதுகாப்பு இருக்காது என்று சொல்லி விட்டார். அது எனக்கு ரொம்பவும் குறை தான். இங்கு குடி வந்த புதிதில் சேஃப்டிக்காக எல்லா ஜன்னல் கதவையும் மூடி வைக்கச் சொல்லி பலர் எச்சரித்தார்கள். கிரவுண்ட் ஃப்ளோர் என்பதால் திருட்டுப் பயம் இருக்கும் என்றார்கள். எனக்குச் சம்மதம் இல்லை. இரண்டு முறை திருடன் வந்து ஜன்னல் வழியாக குச்சி விட்டு பயமுறித்தியும் கூட நான் ஜன்னலை மூடாமல் தான் இருக்கிறேன்.

எல்லோரையும் போல ஒரு சமயம் எனக்கும் அட்டாலியை எல்லாம் மரம் அல்லது பிளாஸ்டிக் கதவுகள் போட்டு அழகு பண்ணணும்னு ஆசை வந்தது. ஆனால் ஒரு கணக்குப் போட்டுப் பார்த்த போது அட்டாலியில் சும்மா போட்டு வைக்கும் அநேகமாக உபயோகமில்லாத சாமான்களின் மொத்த மதிப்பும் சேர்த்தால் கதவுகள் போடும் செலவில் பத்தில் ஒரு பங்கு கூட இருக்காது. தவிர அந்த சாமான்களில் பல தேவையில்லாதவை. எனவே அந்த பிளான் கை விடப் பட்டது.

சமையல் அறையில் மாடுலர் கிச்சன் என்ற கான்செப்டில் கண்ணாடி கதவுகள், மரக்கதவுகள் எல்லாம் வைத்து, தட்டு, கரண்டி, கத்தி, ஸ்பூன்கள், பாத்திரங்கள், டப்பாக்கள் எல்லாம் வைக்கிறதுக்கு தனித்தனியாக பகுதிகள் வைத்து, எல்லாவற்றிற்கும் கதவுகள் வைத்து இன்னும் புகை போக்கி எல்லாம் வைத்து அமர்க்களமாக அலங்காரமாக செய்கிறார்கள். எனக்கு அதைப் பார்த்தாலே பயம். எதை எடுக்கணும்னாலும் ஒரு கதவைத் திறக்கணும், உடனே மூடணும், இல்லைன்னா அடுத்த கதவைத் திறக்க முடியாமல் போகலாம். அல்லது திறந்த கதவு தலையிலோ அல்லது வேறு எங்காவதோ இடிக்கும் அல்லது டேமேஜ் ஆகும். பாத்திரத்தையெல்லாம் காயவைத்து உள்ளே வைக்கா விட்டால் மூடின கதவுக்குள் தப்பான வாசனை வரும். மூலைகளில் சின்னச் சின்னதா பூச்சி சேரும். சில சாமான்கள் எங்கே வைத்தோம் என்று மறந்து போகும், அதற்காக எல்லா கதவையும் திறந்து மூட வேண்டி வரும். இதெல்லாம் வேலைக்கு ஆவறதில்லைன்னு தோணும்.

என் பையன்களுடன் பல நாடுகளில் இருந்த அனுபவம் உண்டு. ஒரு முறை பிலிப்பைன்ஸின் ஒரு பெட்ரோல் ரிஃபைனரியின் குவாட்ட்ர்ஸில் இருக்க நேர்ந்தது. சுற்றிலும் ரொம்ப அழகான நிறைய தென்னை மரங்களுடன் பெரிய இடம். அடிக்கடி மழையுடன் பச்சைப் பசேலென்று ஒரு தோப்பு மாதிரி இருக்கும். ஆனால் நிறைய பூச்சிகள் , நத்தைகள், அட்டைகள் என்று இருக்கும். எப்பவும் கதவுகளை மூடியே வைக்கணும் என்று கண்டிப்பாக சொல்லி வைத்தார்கள். ஒரு முறை வீட்டுக்கு சிலரை விருந்துக்கு அழைத்த போது கூட வாசல் கதவை சாத்தியே வைக்கணும் என்ற போது எனக்குக் கடுப்பாக வந்தது. சுற்றி இருக்கும் அழகை ரசிக்காமல் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் கதவைச் சாத்தி வைப்பது மகா கொடுமை.

இதெல்லாம் போக கார், பஸ், ட்ரெயின் ல எல்லாம் ஏர் கண்டிஷன் போட்டு ஜன்னல் கதவெல்லாம் சாத்தி வைக்கறது என்னைப் பொறுத்த வரை மகா கொடுமை. ட்ரெயின் ல போகும் போது ட்ராக் அருகில் கண்ணில் படும் மனிதர்கள், வீடுகள் எல்லாவற்றையும் பார்க்கும் போது ஒரு உற்சாகம் வருமே அப்போது ஒரு சிரிப்போ, கை அசைத்தலோ பயணத்தை எத்தனை சுவாரசியமாக்கும்! முகத்தில் படும் காற்றும் மழைத் துளியும் சொர்க்கத்தையே அருகில் கொண்டு வருமே. ஜன்னலை சாத்தி வைத்து ஒரு வண்டியில் போவது எத்தனை கொடுமை. நான் காரில் போகும் போது ஏஸியை ஆஃப் பண்ணி விட்டு ஜன்னல் கதவைத் திறந்து வைத்துக் கொள்ளச் சொல்வேன். மீறி சாற்றி வைத்தால் எனக்கு மூச்சுத் திணறுகிற மாதிரியும் வாந்தி வருகிற மாதிரியும் இருக்கும்.

மொத்தத்தில் கதவுகளை சாத்தியே வைக்கும் வீட்டில் இருக்கும் போது எனக்கு மனதில் ஒரு விதமான இறுக்கம் வந்து விடும். சோகமாக இருக்கும். சில வீடுகளில் புழுதி உள்ளே வராமல் இருக்க கதவை சாத்தியே வைப்பார்கள். அவர்கள் எதை இழக்கிறார்கள் என்று நினைத்து அனுதாபப் படுவேன்.

மற்றொரு கொடுமை இந்த ஏர்கண்டிஷன் போடுவதற்காக கதவு ஜன்னலையெல்லாம் சாத்தியே வைக்கிற வழக்கம் எத்தனை கொடுமையான கோடைக் காலமென்றெல்லாலும் ராத்திரி ஜன்னலையெல்லாம் திறந்து வைத்து மின்விசிறியை போட்டுக் கொண்டு தூங்குவது தான் எனக்குப் பிடிக்கும்.

நாங்கள் ஒரு அபார்ட்மெண்டில் குடியிருந்த போது பொது விஷயங்களுக்காக பணம் கலெக்ட் பண்ணவோ, கையெழுத்து வாங்கவோ மற்றவர்கள் வீட்டுக்குப் போக நேரும். சிலர் கதவை முழுக்கத் திறந்து வாவென்று சொல்லும் போது சந்தோஷமாக இருக்கும். சிலர் கதவை முழுக்கத் திறக்காமல் வேறு நேரத்தில் வாருங்கள் என்று சொல்லும் போது கோபமாக வரும்.

கதவுகள் ஒரு விதமான மொழியை உபயோகிப்பதாகத் தோன்றும். அது சிநேகம், விரோதம் இவை வளர்ப்பதில் அவற்றுக்குப் பெரும் பங்கு உண்டென்று எனக்கு நிச்சயமாகத் தோன்றும். ரகசியங்களைக் காப்பாற்றுவதில் அவற்றிற்கு பெரும் பங்கு உண்டு. உறவுகளை வளர்ப்பதிலும் சிதைப்பதிலும் அவற்றிற்கு பெரும்பங்கு உண்டு.

வீட்டுக் கதவைத் திறந்து வைக்க சௌகரியமில்லை என்றாலும் மனக் கதவையாவது திறந்து வையுங்கள், நிம்மதியாகத் தூங்கலாம்.

About Author