நாரதரின் அறிவுரையின் படி , திரௌபதி பாண்டவர்கள் ஒவ்வொருவருடனும் ஒரு வருடம் சுழற்சி முறையில் இருப்பாள் என்றும் இதை மீறுபவர்கள் ஒரு வருடம் தலைமறைவாய் இருக்க வேண்டுமென்ற விதிமுறைக்கு ஒத்துக்கொண்டனர். ஒரு நாள் , மாலைவேளையில் ஒரு பிராமணர் அர்ஜுனன் இடம் வந்து திருடப்பட்ட அவரது பசுக்களை மீட்டு தருமாறு கேட்டுக் கொண்டார்.
அப்பொழுது அர்ஜுனனின் ஆயுதங்கள் யுதிஷ்டரரின் வீட்டில் இருந்தன. அவர்களது சுழற்சி முறைப்படி, திரௌபதி அப்பொழுது யுதிஷ்டிரருடன் இருந்தாள். அதனால் அர்ஜுனன் தயங்கினான். இருந்தும், அந்த பிராமணர் திரும்ப திரும்ப வேண்டியதால் யுதிஷ்டரரின் வீட்டிற்கு சென்று ஆயுதங்களை எடுத்துக் கொண்டு திருடப்பட்ட பசுக்களை மீது தந்தான். அதன்பின், தர்மரிடம், ” அண்ணா ! நாம் ஏற்றுக்கொண்ட விதிமுறையை நான் மீறிவிட்டேன். எனவே , நான் நிபந்தனையை காப்பாற்ற, ஒரு வருடம் புனித யாத்திரை செல்கிறேன்” எனக் கூறினான்.
தர்மரோ, அந்த சூழ்நிலை இந்த விதிமீறலுக்கு இடம் அளித்தது. எனவே பார்த்தனின் தவறு இதில் எதுவும் இல்லை என கூறினார். ஆனாலும், தான் சொன்னதை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தான் அவன். அங்கிருந்து பாரதம் முழுக்க வலம் வரத் துவங்கினான். முதலில் கிழக்குக் கடற்கரையோரமாக தனது யாத்திரையைத் துவங்கி பாரதத்தின் தென்கோடி முனையை அடைந்தான். அங்கிருந்து மேற்குக் கடற்கரையோரம் பிரயாணித்து துவாரகையை அடைந்தான்.
அங்கு வந்தவுடன் சுபத்ரையின் நினைவு வந்தது. அழகான துணிச்சலான பெண் ஆன சுபத்திரையை சந்திக்க ஆவல் கொண்டான். உடல் முழுதும் சாம்பல் பூசிக்கொண்டு துறவியாய் அங்கிருந்த கோவில் ஒன்றில் தவம் செய்யத் துவங்கினான்.
விரைவில் நகரம் முழுவதும் புதிதாய் வந்துள்ள யதியை பற்றிய செய்தி பரவியது. ஸ்ரீ கிருஷ்ணருக்கு இந்த செய்தி வந்தவுடன் யதியின் அடையாளங்களைக் கொண்டு அது யாத்திரையில் இருக்கும் அர்ஜுனன் என புரிந்துக் கொண்டார். மேலும், சுபத்திரையின் கவனத்தை தன் பால் ஈர்க்கவே இதை செய்கிறான் எனவும் புரிந்து கொண்டார்.
அர்ஜுனனை நேரில் சந்தித்து அவனின் உண்மை நோக்கத்தை அறிந்து கொண்டார். சுபத்திரையை அர்ஜுனன் மேல் காதல் கொள்ள செய்யவேண்டும் என இருவரும் திட்டமிட்டனர். ஷத்ரியர்களிடையே பெண்ணின் விருப்பத்தை கொண்டு கல்யாணம் செய்து கொள்வது பழக்கத்தில் இருந்த ஒன்றாகும்.
துவாரகை வந்துள்ள யதியை பற்றிய நல்ல செய்திகளாக பலராமனின் காதுகளை எட்டுமாறு செய்தார் கிருஷ்ணர். இவர்களின் சதி ஆலோசனை பற்றி ஏதும் அறியாத பலராமனோ , யதியின் அறிவிலும் தேஜஸிலும் கவரப்பட்டு , சுபத்ராவின் தோட்டத்தில் தங்கவும், அவரது தேவைகளை கவனிக்கவும் சுபத்ராவை பணித்தான். இதற்கு கிருஷ்ணர் பலத்த எதிர்ப்பை தெரிவித்தார். இளம் வயதுடைய ஆணையும் பெண்ணையும் ஒன்றாக தங்க அனுமதிப்பது தவறு என அவர் சொல்ல, பலராமரோ கிருஷ்ணர் எதிர்பார்த்தவாறே அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
விரைவிலேயே , எது நடக்கவேண்டுமோ அது நடந்தது. வந்திருக்கும் யதி, அர்ஜுனன்தான் என்பதை சுபத்ரா அறிந்து கொண்டாள். அர்ஜுனன், சுபத்ரையின் கனவுக் காதலன். விரைவில் இருவரும் காதலிக்கத் துவங்க , நாடகம் அடுத்த கட்டத்தை அதாவது திருமணத்தை நோக்கி நகர்ந்தது.
இந்த விஷயத்தில் கிருஷ்ணர் உதவிக்கு வந்தார். பலராமரை அவர் குடும்பத்துடன் அருகில் இருந்த தீவில் நடைப்பெற்ற 15 நாள் பூஜைக்கு அழைத்து சென்றார். உடல்நலமின்மையை காரணம் காட்டி சுபத்ரா மட்டும் பின்தங்கினாள். அவர்கள் அங்கிருந்து சென்ற பன்னிரெண்டாம் நாள் நல்ல முகூர்த்த தினமாய் அமைந்தது. ஸ்ரீ கிருஷ்ணர் விட்டு சென்ற தேரில் சுபத்ரையுடன் அர்ஜுனன் அங்கிருந்து கிளம்பினான்.
யதி யாரென்றும் அதன் பின் நடந்தவையும் கேள்விப்பட்ட பலராமன் மிகுந்த கோபத்துக்கு உள்ளானார். ஆனால், ஸ்ரீ கிருஷ்ணரின் பேச்சை மீறி இருவரையும் ஒரே இடத்தில தங்க அனுமதித்தது பலராமன் அல்லவா ? இப்பொழுது அவர் யாரை குற்றம் சொல்ல இயலும் ?