பீடிகை
மதுரையை விட்டு இந்த ஊருக்கு வாழ வந்து முப்பத்தேழு ஆண்டுகள் ஆகின்றன. ஒரு தலைமுறையைக் கடந்த வாழ்க்கை. என்னை எல்லா விதத்திலும் மிக நன்றாக வைத்திருக்கும் ஊர் இந்தச் சீலம் நிறைந்த சேலம் மாநகராகும். நவீன புராணங்கள் எழுதினால் நமது கலாசாரத்தையும் நமது சனாதன தர்மங்களையும் சீரழித்த பல என் மனதிற்கு ஒவ்வாத விஷயங்களை எழுத நேரும் என்பதால் நூற்று இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட செய்யுள் வடிவத்தின் உரைநடைதான் இதன் இப்போதைய வடிவம். இருப்பினும் இக்காலத்திற்கு ஏற்ப எளிதில் படிக்கும் விதமாக ஓரளவு கதை விடத் தெரியும் என்பதால் இந்த உரைநடை. மேலும் நவீன புராணங்களை மேலே மேலே அடுக்கிக் கொண்டே போனால் இந்த நகரத்திற்கு யுகம் தோறும் இருந்த வரலாறு இந்தக் காலத்தில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் போய்விடும் என்று ஓர் அச்சம் கூட இதனை எழுதுவதற்குக் காரணம். வாழ்ந்து சிறக்கும் ஊரின் பெருமையை என்னை விட வேறு யாரால் சொல்ல முடியும் என்ற அகந்தை கூட ஒரு காரணம்.
இது முழுக்க முழுக்க நமது புராணங்களை முன்னிறுத்திக் கூறப்படும் வரலாறு என்பதால் இதுவரையில் புராணங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கும் என்பது தெரியாதவர்களுக்குக் கூட இது ஒரு நல்ல வாய்ப்பு. கூடிய வரையில் எல்லோரும் படித்து உணரும் நடையில்தான் என்றாலும் நான் கூறும் செய்திகள் புராணங்கள் செறிவானவை.
விநாயகர் துதி
சேலத்திற்கும் விநாயகருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஊரின் நடு நாயகமாக வீற்றிருக்கும் ஸ்ரீராஜகணபதியின் பாத கமலங்களை வணங்கி இந்தப் புராணத்தை எழுத ஆரம்பிக்கிறேன். இந்த தலத்தில்தான் ஔவையார் பல அற்புத நிகழ்ச்சிகளை செய்திருக்கிறார். கஞ்சமலை சித்தர் தகடூர் அரசன் அதியமான் நெடுமான் அஞ்சிக்கு கொடுத்த நெல்லிக்கனியை ஔவைக்கு வழங்கிய இடம் சேலம். ஔவையார் மாதவி என்ற பெண்மணியின் இரண்டு பெண்களின் திருமணத்திற்கு சேர சோழ பாண்டியர்களை வரவழைத்த இடம் சேலம். காய்ந்து போன பனை மரத்தைப் பூத்துக் குலுங்க வைத்து பனம்பழம் பறித்த இடம் இந்தச் சேலம் நகரம். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் முந்திக் கொண்டு கயிலாயம் சென்று விட ஔவையார் விநாயகர் அகவல் பாடியதும் தனது துதிக்கையால் செந்தூக்காகத் தூக்கி கயிலாயத்தில் விநாயகப் பெருமான் வைத்த இடம் இந்தச் சேலம் நகராகும். அந்தப் புராணத்தை அந்த விநாயகரின் பாதங்களைத் தொழுது தொடங்குகிறேன்.
பாவநாசம் என்ற சிறப்பு பெயரினை உடைய சேலம் சுகவனேசுவரர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் சுகவனேசுவரர், ஸ்வர்ணாம்பிகை, வலம்புரி விநாயகர், சுப்ரமணிய சுவாமி ஆகியோரை வணங்கி இந்தப் புராணத்தைத் தொடங்குகிறேன்.
நான்கு யுகங்களிலும் திருத்தலமாக விளங்கிய பெருமை இந்த சேலம் மாநகருக்கு உள்ளது. கிருத யுகத்தில் இதற்குப் பாவநாச க்ஷேத்திரம் என்று பெயர். திரேதா யுகத்தில் இதற்குப் பட்டீச்சுரம் என்று பெயர்.துவாபர யுகத்தில் நாகீச்சுரப்பதி என்று பெயர். கலியுகத்தில் சுக பிரும்ம ரிஷி கிளி ரூபத்தில் வந்து பூஜித்ததால் சுகவனம் என்றும் சேலத்திற்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன.
திருக்கயிலாயத்தில் நந்தி தேவர் தவத்தில் சிறந்து விளங்கும் சனாத முனிவருக்கு உபதேசித்தது இந்த பாவநாச புராணம் என்னும் சேலத்துப் புராணம்.
இதில் உள்ள பிரிவுகள்.
1.திருக்கையிலாயச் சருக்கம்.
2.வீரபத்திரச் சருக்கம்
3.திருப்பாவநாசச் சருக்கம்
4.நதிச்சருக்கம்
5.சரவதிச் சருக்கம்
6.காமதேனுச் சருக்கம்
7.அநந்தச் சருக்கம்
8. நன்மை பொருந்திய மனு சரணச் சருக்கம்
9.கிளி பூசித்த சருக்கம்
10.சொல்லுகின்ற குட்டந் தீர்த்த சருக்கம்
11.பரிச்சித்துச் சருக்கம்
இந்தப் புராணத்தை பாக்களால் தொகுத்தவர் சேக்கிழாரின் மரபில் வந்த கூடற்கிழார் வம்சத்தில் உதித்தவராகிய அட்டாவதானி என்று போற்றப்பட்ட சொக்கலிங்கக் கவிராயர் என்பவராவார்.