நூலின் பெயர் : தாமிரபரணிக்கரையிலே சில நாட்கள்
ஆசிரியர் : திருமதி. கீதா சாம்பசிவம்
தாமிரபரணியின் பெருமை
தமிழகத்தில் ஓடும் வற்றாத ஜீவ நதி ஒன்று உள்ளது என்றால் அது தாமிரபரணி மட்டுமே. அத்தகைய தாமிரபரணியின் சிறப்புகளை விவரிப்பதுதான் துவங்கியது இந்த நூல். அந்த நதியின் கரையில் அமைந்துள்ள ஆலயங்களை அறிந்து கொள்ளும் முன் அந்த நதியின் சிறப்புகளை அறிந்து கொள்வதுதானே முறை. அந்த வகையில் “தண் பொருநை ” என பெயர்ப்பெற்ற தாமிரபரணியின் சிறப்புகளை விவரிப்பதில் துவங்குகிறது இந்த நூல். தாமிரபரணியின் பல்வேறு சிறப்புகளையும் விவரித்து ராமாயணம் முதற்கொண்டு பல்வேறு சங்க நூல்களிலும் இருக்கும் தாமிரபரணி பற்றிய குறிப்புகளையும் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி போன்றே கொண்டாடப் பட வேண்டிய நதி. இன்னும் சொல்லப்போனால் அதை விட பலமடங்கு கொண்டாடப்படவேண்டும். பல்வேறு அரசியல் காரணங்களினால் நாம் காவிரிக்கு கொடுக்கும் கவனத்தை இதற்க்கு தருவதில்லை. இதில் எனக்கு ஒரே ஒரே சந்தேகம் மட்டுமே
“கபாடபுரம்” பொருநையின் கரையில் இருந்ததாக குறிப்பிடுகிறார். அது இன்னும் கீழே மிக தள்ளி குமரியின் அருகேதான் இருந்ததாக பல இடங்களில் படித்த நினைவு.
நவ திருப்பதிகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைத்துள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வைணவ கோவில்கள் நவ திருப்பதி என்றழைக்கப்படுகின்றன.
ஸ்ரீவைகுண்டம்
வரகுணமங்கை (நத்தம்)
திருக்கோளூர்
திருப்புளியங்குடி
ஆழ்வார்திருநகரி
தென்திருப்பேரை
பெருங்குளம்
இரட்டைத் திருப்பதி (தேவர்பிரான்)
இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்)
இந்த நவ திருப்பதி கோவில்களின் இருப்பிடம், அந்த கோவில்களின் ஸ்தல வரலாறு அது தொடர்பான சம்பவங்கள் என்று ஒரு மிக சிறந்த வழிகாட்டியாக எழுதப்பட்டுள்ளது இந்த நூல். நவ திருப்பதி கேள்வி பட்டிருந்தாலும், இதுவரை அது தொடர்பான ஸ்தல வரலாறோ கதைகளோ படித்ததில்லை நான். இதுவே முதல் முறை. அதிலும் குறிப்பாய் நம்மாழ்வார் ( ஆழ்வார் திருநகரி ) பற்றிய வரலாறு இப்பொழுதுதான் படிக்கிறேன்.
நமக்கு தெரிந்த இந்த மாதிரி விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது என்பது நமது கடமை. அந்த வகையில் தான் முன்பு தனது தளத்தில் எழுதியதை இப்பொழுது இ புக்காக வெளியிட்டிருக்கும் ஆசிரியரை பாராட்டுகிறேன். நாம் அனைவரும் செய்யவேண்டிய ஒரு செயல் இது. ஏனென்றால் இனி இந்த தலங்களை பற்றிய விஷயங்கள் புத்தகமாக வருமா என்பதும் புத்தகமாக வந்தால் அதை அடுத்த தலைமுறை படிக்குமா என்பதும் சந்தேகமே .
நவ கைலாசங்கள்
இந்த நவ கைலாசங்களைப் பற்றி நான் ஒன்றுமே அறிந்ததில்லை. அதை பற்றி படிப்பதும் இதுவே முதல் முறை. எனவே இவை அனைத்தும் எனக்கு முற்றிலும் புதிய தகவல்களே
பாபநாசம்
சேரன்மாதேவி
கோடகநல்லூர்
குன்னத்தூர்
முறப்பநாடு
ஸ்ரீவைகுண்டம்
தென் திருப்பேரை
ராஜபதி
சேந்தமங்கலம்
இவை மட்டுமல்லாது, அருகே அமைந்துள்ள, ஸ்ரீ வில்லிபுத்தூர், சங்கரன் கோவில் பற்றியும் எழுதப்பட்டுள்ளது இந்த நூலில். அதுவும் ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள காட்டழகர் கோவிலைப் பற்றியும் ஆதியில் இங்குதான் அழகர் ஆற்றில் இறங்கும் விழா நடந்திருக்கலாம் என்பதும் உண்மையில் வியப்பூட்டும் தகவல்கள். அதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றே தோன்றுகிறது. இதைப் பற்றி ஆய்வாளர்கள் கருத்து என்னவென்று தெரியவில்லை.
நூலை வாங்க
இந்த நூலை அமேசான் கிண்டிலின் மூலம் வாசிக்கலாம். “கிண்டில் அன்லிமிடெட்” திட்டத்தில் நீங்கள் உறுப்பினர் எனில் இலவசமாக படிக்கலாம்
இந்த நூலை வாங்க
ஆசிரியரை பற்றி
திருமதி. கீதா சாம்பசிவம், பிரபல தமிழ் ப்ளாகர்களில் ஒருவர். இன்றும் விடாமல் தனது தளத்தில் எழுதி வருபவர். இவர் எழுதிய பல தொடர்கள் பலருக்கும் உபயோகமானவை. இந்த நூலும் அது போன்ற ஒன்றே.