உபவாஸம்

தெய்வங்களின் உபவாஸம்

வைகுண்ட ஏகாதசிக்கு உபவாஸம், சிவராத்திரிக்கு உபவாஸம், கண் விழித்திருந்து உட்கார்ந்து காலையில் தரிசனம் முடிச்சிட்டு வீட்டுக்கு போய் நித்ய கடமைகளை முடிச்சிட்டு, உபவாசம் இருந்ததுக்கும் சேர்த்து சாப்பிட்டு கை கால்களை நீட்டிக் கொண்டு நன்றாக தூங்கி விடுவோம். வேற என்ன வேண்டும் நமக்கு. நாம போய்ட்டு வந்த கோவிலை பற்றியோ அங்க வேலை பார்க்கிறவங்களை பற்றியோ நமக்கு என்ன கவலை. எவன் சாப்பிட்டால் என்ன சாப்பிடாவிட்டால் நமக்கென்ன? இப்படித்தான் நாம் இருக்கிறோம்.

பெரிய பெரிய நகரங்களில் இருக்கும் பெரிய பெரிய கோவில்களை விட்டுவிடுவோம். நகரங்களை தள்ளி இருக்கும் கிராமத்தில் இருக்கும் கோவில்களை பற்றி நாம் கொஞ்சமாவது கவலைப்படுகிறோமா என்று தெரியவில்லை. வார்த்தைக்கு வார்த்தை ஏகாதசி உபவாசம், சஷ்டி உபவாசம், க்ருத்திகை உபவாசம் அப்படின்னு பேசறோம். ஆனா பாதி  கிராமத்தில் இருக்கும் பெருமாளும், சிவனும் ஏன் இதர கிராம தேவதைகளே கூட நித்ய உபவாசம் தான்.

இதற்கு காரணம் யாருன்னு பார்த்தா நாம தான். என்னடா இவன் இப்படி  சொல்றானேன்னு நினைக்க வேண்டாம். உண்மையை உண்மையா பாருங்க. கிராமத்து தேவதைகளுக்கு நித்யப்படி பூஜை உண்டான்னு தெரியலை. எதாவது விழா என்றால் ஊரே அமளி துமளியாய் இருக்கும். திரைப்படங்களில் பார்ப்பது போல் ஜனங்களின் கூட்டம் உற்றார் உறவினர்களின் கூட்டம் திரண்டு இருக்கும்.  ஊரை சுற்றி கடைகள் முளைத்திருக்கும். அந்த இரண்டு நாட்கள் மட்டும் திருவிழா கூட்டம் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். இன்னும் பலருக்கு அந்த கோவில் அங்க இருக்கும் விஷயமே அப்போது தான் தெரிய வரும்.

கிராம தேவதையை விட்டுட்டு பெருமாள், சிவன் ஆலயங்களுக்கு வருவோம். (பெருமாள் கோவிலில் தளிகைன்னு சொல்வாங்க சிவன் ஆலயத்தில் நைவேத்யம்னு சொல்வாங்க). அந்த தளிகை, நைவேத்யம் தினமும் நடக்கிறதா என்றால் பதில் இல்லையென்று தான் வரும். நித்யப்படி அபிஷேகத்துக்கு கூட வழியில்லாமல் எத்தனையோ ஆலயங்கள் இருக்கிறது. ஒருவேளை விளக்கெரியக் கூட எண்ணெய் இல்லாமல் இருக்கிறது. பல கோவில்களில் பூஜை பண்றதுக்கு கூட அர்ச்சகர் இல்லை. ஸ்வாமி மேல் பரிதாபப்பட்டு ஒரு சிலர் தனக்கு தெரிந்த மாதிரி அபிஷேகம் பண்ணிட்டு போறதை பல இடங்களில் பார்க்கலாம்.

நாம வேலை தேடி பட்டணம் வந்து பட்டணத்தில் செட்டில் ஆகிட்டோம். ஊரில் கிராமத்தில் நம்முடைய அம்மா அப்பா தனியாகத்தானே இருக்கிறார்கள். அவர்கள் சாப்பிட்டால் என்ன சாப்பிடாவிட்டால் என்ன என்று நம்மால் இருக்க முடியுமா? அதை போலத்தானே நம்ம ஊர் தெய்வங்களும் என்ற நினைப்பு வந்து விட்டால் போதும் தெய்வம் நம்மைத் தேடி வர ஆரம்பிக்கும்.

இதற்கு என்ன தான் வழி?

உங்க ஊர் ஆலயங்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு நீங்கள் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையினை அனுப்பலாம். நீங்க எத்தனையோ காபி ஒரு நாளைக்கு குடிக்கிறீங்க. உங்க ஊர் தெய்வத்திற்காக ஒரே ஒரு காபியை தியாகம் செய்தால் போதும். அந்த காபிக்கு உண்டான தொகையை தனியாக சேர்த்து வைத்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் உங்க ஊர் கோவில் அர்ச்சகருக்கு அனுப்பி அவருக்கு உதவலாமே. உங்களால் பணமாக கொடுக்க சிரமமாக இருக்கிறதா கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்களை மஞ்சள்தூள், சந்தனம், குங்குமம், விபூதி, பன்னீர்பாட்டில்கள் போன்றவைகளை வாங்கி அனுப்பலாம். இப்போது ஆன்லைன் வசதி வந்துவிட்டதால் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே ஆர்டர் பண்ணி உங்க ஊரில் டெலிவரி பண்ண ஏற்பாடு பண்ணலாம். உங்களால் தனியாக பண்ண முடியவில்லையா உங்க ஊர் ஆட்கள் சிலரை சேர்த்துட்டு இந்த காரியத்தை பண்ணுங்க.

கோவில்கள் பூஜை நடக்காமல் மூடிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இது மாதிரி விஷயங்கள். இதில் நடைமுறை சிக்கல்கள் சில வரத்தான் செய்யும். நாம் ஸ்வாமிக்கு செய்கிறோம் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தாலே போதும் சூரியனை கண்ட பனித்துளி போல சிக்கல்கள் விலகிவிடும். தன்னுடைய கஷ்டத்திலும் ஸ்வாமியை விடக்கூடாது என்று எத்தனையோ அர்ச்சகர்கள் எதையும் பொருட்படுத்தாது கிராமத்தில் இருக்கும் கோவில்களுக்கு தினமும் பூஜை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு நம்மால ஆனதை பண்ணலாம்.

சொல்லணும்னு தோணிற்று

About Author