பெரியாண்டவர்

பெரியாண்டவர் – கண்ணூர்பட்டி

This entry is part 1 of 3 in the series குலதெய்வங்கள்

எங்கள் குல தெய்வம், சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுச்சத்திரம் ஊரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கண்ணூர்பட்டி என்னும் கிராமத்தில் வீற்றிருக்கும் பெரியாண்டவர் தான். ஊரின் எல்லையில் ஏரிக்கரையில் கோவில் அமைந்துள்ளது .

செல்லும் வழி :

நாமக்கல் அல்லது சேலத்தில் இருந்து புதுசத்திரம் சென்று விட்டு அங்கிருந்து டாக்சி கிடைக்கும் அல்லது கொஞ்சம் பொறுமையாய் இருந்தால் அரசு பஸ் வரும். அதில் ஏறினால் அதிகபட்சம் இருபது நிமிடங்களில் கண்ணூர்பட்டியை அடையலாம்.

பூஜை முறை :

பெரியாண்டவர் என அழைத்தாலும் அம்பாள்தான். நின்ற திருமேனி அங்காளம்மன் எனவும் ,படுத்தத் திருமேனி பெரியாண்டவர் எனவும் சொல்வர் இங்கு அம்பாள் படுத்த திருமேனி. இந்தக் கோவிலில் கிராமத்து பூசாரிகளே. பரம்பரை பரம்பரையாய் கோவிலில் பூஜை செய்கின்றனர். கோவில் பூஜை தவிர்த்த மற்ற நேரங்களில் விவசாயம்தான் தொழில். கிராமத்தினுள் அமைந்துள்ளதாலும், குல தெய்வ பூஜை தவிர்த்து மற்ற நேரங்களில் அதிகம் யார்வும் வருவதில்லை என்பதாலும், வருமானத்திற்கு விவசாயத்தையே நம்பியுள்ளனர். குல தெய்வ பூஜைக்காக வருவோர் முன்பெல்லாம்(செல்போன் வருமுன்),பூஜைக்கு ஒரு வாரம் இரண்டு வாரம் முன்பே வந்து இந்த தேதியில் பூஜைக்கு வருகிறோம் என்று சொல்லி செல்வார்கள். அன்று எந்த பூசாரியின் முறையோ அவர் தயாராக இருப்பார்கள்.

பொங்கல் வைக்க தேவையான சாமான்கள், ஆளுயர மாலை , பின், அம்மனை சுற்றி வீற்றிருக்கும் சப்த கன்னியருக்கு பூ, பிரு, சுற்றுக் கோவிலில் வீற்றிருக்கும் வினாயகர்,முருகன் மற்றும் மதுரை வீரன் போன்ற தெய்வங்களுக்கு சிறு மாலையும் பூஜை பொருட்களில் இடம் பெறும். அம்மன் மண்ணால் செய்த சிலை என்பதால் அம்மனுக்கு அபிஷேகம் இல்லை. அம்மனின் முன்பிருக்கும் பலி பீடத்திற்குதான் அபிஷேகம் .

பொதுவாய் புடவை சார்த்துவது என்றால் எல்லா கோவில்களிலும் ஒரு புடவைதான் வாங்குவார்கள். எந்தப் புடவை வேண்டுமானாலும் வாங்குவார்கள். ஆனால் இங்கு இரண்டு புடவைகள் வாங்கவேண்டும். அதுவும் ஒன்பது கஜம் சுங்கடி புடவைகள் மட்டுமே வாங்க வேண்டும். இரண்டு புடவைகளையும் அம்பாளுக்கு சார்த்தி , ஒரு புடவையை , திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். நாம் வீட்டில் அணிந்துக் கொள்ளலாம்.

இப்பொழுது சில பூஜை முறைகள் மாறியுள்ளன முன்பு பூசாரிகள் மட்டுமே பூஜை செய்ய செய்ய இயலும். இப்பொழுது நாம் விரும்பினால் நாமே, அபிஷேகம்,பூஜைகள் செய்யலாம் பின்பு அவர்கள் பூஜைகளை செய்வார்கள். அடுத்தது புடவை அளிக்கும் முறை. இது இப்பொழுது புனருத்தாரணம் முடிந்த பின் இருக்கும் கருவறை

பெரியாண்டவர்

முன்பெல்லாம், பூஜை முடிந்தவுடன்,சம்பந்தப்பட்டவர்கள் கிராமத்தில் இருக்கும் ஒருவரின் வீட்டிற்கு சென்று விடுவார்கள் . பின்பு,வீட்டின் வாசலில் பலகை ஒன்றை வைத்து விடுவார்கள். கோவிலில் இருந்து பூசாரி புடவையுடன் வர அவரின் முன் ஒருவர், மணி ஒலித்துக் கொண்டே பெரியாண்டவர் வருகிறார் என்று சொல்லிக் கொண்டு வருவார். அப்பொழுது அவர்கள் எதிரே யாரும் வரமாட்டார்கள். அப்படி யாரவது வந்துவிட்டால், அன்றில் இருந்து கண்ணூர்பட்டி பெரியாண்டவர்தான் அவர்களுக்குக் குல தெய்வம்.

பெரியாண்டவர்
புனருத்தாரணம் முடிந்த பின் இன்றைய கோவில்

இப்பொழுது கோவில் வளாகத்தினுள் ஒரு அறை கட்டிவிட்டார்கள் . அங்கே இருந்துகொள்ளலாம். ஆனாலும் அந்த புடவை எடுத்து நாம் வைத்துக் கொள்ளும் சமயம், பெரியாண்டவரை குலதெய்வமாக வழிபடுவோர் மட்டுமே இருப்பர்கள்.

இங்கு பொங்கல் வைக்கும் சமயத்தில் , அதே ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கும் செய்ய வேண்டும். இங்கு உபயோகப்படுத்தப்படும் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு அந்தக் கோவிலுக்குத் தர வேண்டும் என்ற கணக்கு உள்ளது. பெரியாண்டவர் கோவிலில் பூஜைகள் முடிந்தபின், மாரியம்மன் கோவிலுக்கு வந்தால், நாம் வருவதற்குள் அபிஷேகம்,பூஜை போன்றவற்றை முடித்திருப்பார்கள். பின் நம் மனம் குளிர அம்மனை வழிபட்டு ஊர் திரும்பலாம் .

பல்வேறு ஊர்களில் பெரியாண்டவர் கோவில் உள்ளது. எனக்கு தெரிந்து சேலத்தை சுற்றியே நான்கு ஊர்களில் பெரியாண்டவர் கோவில் உள்ளது. ஒரு பெரியாண்டவர் கோவில் வழிபடுபவர்கள் மற்றொரு பெரியாண்டவர் கோவிலுக்கு செல்ல மாட்டார்கள்.

உங்கள் குலதெய்வம் பற்றியும் அந்த கோவில் பூஜை முறைகளை பற்றியும் எங்களுக்கு அனுப்பவும் editor@bhageerathi.co.in

Series Navigationஎங்கள் குலதெய்வம் – சாஸ்தா அபிராமேஸ்வரர் >>அழகர் கோவில் : An ecstatic visit >>

About Author

One Reply to “பெரியாண்டவர் – கண்ணூர்பட்டி”

  1. தங்களிடம் கண்ணூர்பட்டி பெரியாண்டவர் அக்ஷ்டோத்ரம் மற்றும் துதிகள இருந்தால் தயவுசெய்து தெரிய படுத்தவும். நன்றி

Comments are closed.