“சரி கந்தா, உடம்பை பார்த்துக்க. டாக்டர் கொடுத்த மருந்தை எல்லாம் சரியா போட்டுக்க. நீ ஒண்ணு செய். ஒரு பத்து நாள் வீட்டுக்குப்போய் ரெஸ்ட்டிலே இரு. உடம்பு முழுசா குணமாயிடட்டும். அப்புறமா கடையை பார்த்துக்க வேலைக்கு வா….”
வேணு சொல்லி முடிப்பதற்குள் கந்தன் மறுமுனையில்
“சின்னையா….ஒடம்புக்கெல்லாம் ஒரு கேடுமில்ல.நா நல்லாத்தான் இருக்கேன். வயசாயிடுச்சில்ல. அதான் அப்பப்ப ஒடம்பு மக்கர் பண்ணுது. நீ கவல படாதே. நா கடை வாசலிலேயே இருந்து பாத்துக்குறேன். நீ உன் வேலையைக் கவனி. நா அப்ப வெச்சுடட்டுமா…?’
வேணுவால் அந்த பழைய மாடல் செல்போனை கந்தன் கண்ணை இடுக்கிப்பார்த்துக்கொண்டே தன் சட்டையால் ஒரு துடை துடைத்தெடுத்து சட்டை பாக்கெட்டில் அதி ஜாக்கிரதையாக வைப்பதைக் கற்பனையில் காண முடிந்தது. ஒரு பெருமூச்சுடன் கைப்பேசி தொடர்பைத் துண்டித்தான்.
காத்துக்கொண்டிருந்தார்போல் ரேணு பிலு பிலுவென்று பிடித்துக்கொண்டாள்.
“ஏ க்யா ஹை.ஐசே க்யோங் கர்தி ஹை.வேணு, நாம இனிமே இந்த மும்பாய் தான்னுன்னு ஏறக்குறைய முடிவு செஞ்சுட்டோம். அப்படியே செளத்துக்கு போகணும்ன்னு வந்தாலும் சென்னை தான் சரியா வரும். என் அப்பா அம்மா அங்கேதான் இருக்கா. திருச்சியிலே யார் இருக்கா? உங்க அப்பா அம்மா இருந்த காலத்தோடு அந்த இடத்தோட கனெக்க்ஷன் போயாச்சு. அங்கே எதுக்கு இந்த கடை? தெரியுமா, இப்போ ப்ராபர்டி விலையெல்லாம் எகிறி இருக்காம். நல்ல விலைக்குத் தள்ளி விட்டுட்டு வர பணத்துலே இங்கேயே இல்லை சென்னையிலோ ஒரு ப்ராபர்டி வாங்கி போடலாம். சமஜ் ஹை.”
வேணுவிற்கு இனி பேச்சு போகப்போகும் விதம் பற்றி நன்கு தெரியும். அடுத்து அவன் திருச்சிக்கு அவ்வப்போது போகும் போது ஆகும் வீண் செலவில் தொடங்கி, கந்தனுக்கு மாதா மாதம் அனுப்பும் பணம், பூட்டி வைப்பதால் நாசமாகும் அந்தக்கடை, அதை சரி செய்ய அவ்வப்போது ஆகும் செலவு…..இப்படி தொடர்ச்சியாக அவள் நச்சரிப்பு தொடங்கிச்சென்று முடியாமல் கேள்விக்குறியில் தொக்கி நிற்கும்.
ஒரு விதத்தில் இந்த பிரச்சனை ஆரம்பமுமில்லாத ஒரு முடிவும் இல்லாத பிரச்சனைதான்.இதன் தொடக்கம்…..
நீங்கள் திருச்சி சென்றிருக்கிறீர்களா? அங்கே சின்னக்கடை வீதி? அந்தச் சின்னக்கடை வீதியைக் கடந்து வந்தால் வரும் அந்தச்சின்ன ஆண்டாள் வீதி? அதே தான் பாயி கடை திருப்பத்தைத் தாண்டிய உடன் அந்தத்தெரு தொடங்கும். இப்போது பாபு ரோட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வலது பக்கம் இருக்கும் யாரோ ஒரு முஸ்லிம் பெரியவரைப் புதைத்து வைத்த அந்த சின்ன கல்லரை.எப்பொழுதும் ஜிகினா வைத்துத் தைக்கப்பட்ட பச்சை நிறத்தில் வேலைப்பாட்டுடன் பள பளக்கும் பட்டுத்துணி போர்த்தப்பட்டு மூலையில் ஊதுபத்தியின் லேசான புகையுடன். எதிர்புறம் அபத்தமாக சில கட்டிடங்கள் தள்ளி ஒரு சின்ன அம்மன் கோவில். வேணு சில வருடங்கள் விட்டு அங்கே செல்லும் போதெல்லாம் அங்கே ஒரு பிள்ளையார் அல்லது அனுமார் அல்லது நவகிரகங்கள் என்று ஏதோ ஒன்று புதிதாக முளைத்தபடி இருக்கும். இவற்றைத்தாண்டி குறுக்கே ஓடும் பன்றிகளையும் தாண்டி, கட்டி வைத்திருக்கும் குதிரை வண்டியின் இழுப்புக்குத்திரைகள் மானாவாரியாக சிதறித்தெளித்திருக்கும் சாணத்தின் மணத்தையும் தாண்டி, அவை அசை போட்டுக்கொண்டிருக்கும் புல்லின் பச்சை வாசனையையும் தாண்டி சில கட்டிடங்கள் விட்டு மூடிக்கிடக்கும் அந்த சாயம் போன வெளிர் நீலக் கதவை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். இன்னும் தெளிவாக அதன் வாசலில் படுத்துக்கிடக்கும் ஒரு முதியவரையும் பார்த்திருக்கக்கூடும். சில நேரம் ராயாசமாக வாசல் படியில் படுத்தபடி ஒரு காலை கதவில் தொங்கிக்கொண்டிருக்கும் பூட்டில் உயரே தூக்கி வைத்து மறு காலை இரண்டு பத்து எண் வெள்ளை பட்டை செருப்புக்குப் பக்கம் தரைகளில் ஊன்றி வைத்தபடி, படுத்த நிலையில் மடித்தகால் முட்டிக்காலில் அழகாக மடித்து வைக்கப்பட்ட அன்றைய தினசரியைப் படித்தபடி இருந்திருப்பார். இல்லை கைகளை மடித்து தலைக்குத் தலையணையாக வைத்தபடி லேசாக வாயைத்திறந்தபடி உறங்கிக்கொண்டிருந்திருப்பார். அல்லது பக்கம் பிரித்து வைத்த பிரிஞ்சி குறுமா சாதத்தை ஒரு வாய் காக்கைக்கு, ஒரு வாய் பக்கம் வாலை ஆட்டியபடி நிற்கும் கறுப்பு மணிக்கு, ஒரு வாய் தனக்கு என்று சமமாகப் பிரித்து அளித்துக்கொண்டிருப்பார்.
சர்வ நிச்சயமாக அது கந்தந்தான்.இவரை நீங்கள் ஒரு முறைக்கு மேல் பல முறை சென்றாலும் இப்படி ஏதோ ஒரு கோணத்தில் கடை வாசலில் பார்த்திருக்கக்கூடும். அதே போல் அந்தப் பூட்டிய கதவுகள் என்றும் பூட்டிய நிலையிலேயே இருப்பதையும் பார்த்திருக்கக்கூடும். என்ன, சில வருடங்கள் சென்ற பிறகு அங்கே சென்றால் அந்த முதியவர் இன்னும் சற்றே வயதானவராக, அந்தக்கதவு இன்னும் சற்றே அதிகமாக தோலிழந்து, கறுப்பு மணி வயதாகி வலுவிழந்து, காக்கைகள் நன்றாகப் பெருத்து பெரியதாகி என்ற அற்ப மாற்றங்கள்.மட்டுமே இருக்கக்கூடும். அந்தக்கடை, அதன் வாசலில் கந்தன் என்று பல வருடங்களாகக் கதை தொடர்கிறது.பக்கத்தில் இருக்கும் மளிகைக்கடைக்கு வந்து போகிறவர்கள் பலர் முதலில் ஆச்சரியப்பட்டு பின் பழகிப்போய் கந்தனை ஒரு புன்னகையோடு கடந்து சென்று விடுவார்கள். சிலர் காரணம் தேடி விசாரித்துத்தான் சென்றார்கள். ஆனால் அவரவர் வேலை அவசரத்தில் கந்தன் என்றும் நிலைத்து அவர்கள் மனதில் கேள்விக்குறியாக நின்றதில்லை.மறந்து பின் கடந்து சென்று விடுவார்கள்.
ஆனால் இதோ இன்று திகைத்து நிற்கும் உங்களுக்கு மிகச்சுலபமாகக் கந்தனின் கதையும் அவன் அங்கே கடை வாசலில் எப்போதும் அமர்ந்தும் படுத்துக்கொண்டும் இருக்கும் காரணம் தெரியப்போகிறது.காரணம் தெரிந்த இல்லை அதன் காரணகர்த்தாவான வேணுவே அதை உங்களுக்குக் கூறப்போகிறான்.
வேணுவின் வயது அப்போது 24. காதலில் விழக்கூடிய மிக அபாயகரமான வயது. வேணுவும் விழுந்தான்.
“ரேணு…..நான்….நான்…..”
ரேணுவின் முகத்தில் ஒரு அபார புன்னகை.
“அரே….போலோ….க்யா நான்….நான்….மத்லப்….செண்டன்ஸ் பூரா கரோ…..”
ரேணு முப்பாய் காரி. வேணுவோடு பழகத்தொடங்கியதிலிருந்து ஆசையாகத் தமிழில் பேசப் பழகிக்கொண்டிருக்கிறாள். ஆனாலும் இடை இடையே அவளுக்கு ஹிந்தி கலப்பு வந்துவிடுகிறது.
“இல்லை ரேணு…..நான் என்ன சொல்ல வரேன்னா……”
வேணு அவளை மிகவும் விரும்பினான். ஆனால் இன்னும் வேலை எதுவும் கிடைக்கவில்லை. சாப்பாட்டுக்கச்சேரியே அப்பா கணக்கில் தான் நடக்கிறது. இதில் எந்த தைரியத்தில் அவன் காதல் கல்யாணம் பற்றிப் பேசுவது? ஆனால் ரேணுவுக்கு அவள் வீட்டில் வரன் பார்க்கத்தொடங்கி விட்டார்கள் என்பது தெரியும். இனியும் காத்திருந்தால்…..விஷயம் கை மீறிப் போய்விடக்கூடும். அந்த பயத்தில் தன் நிலையைப் பற்றிய தயக்கம் பின் சென்றது. தைரியத்தைக் கூட்டி மனதை அவளுக்குச் சொல்ல முற்பட்டான்.
ஆனால்……
அவனால் முடியவில்லை.
ரேணுவின் முகத்தில் அவன் தயக்கம் ஒரு சந்தோஷ புன்சிரிப்பைக் கொண்டுவந்தது.
“என்ன வேணு…..ஐ லவ் யூ……அதானே”
வேணு அவசர படபடப்பில் இல்லை என்று தலை ஆட்டினான்.
“என்ன இல்லையா….?” சற்றே திடுக்கிட்டு ஆச்சரியம் கூட்டினாள்.
வேணு அவசரமாக இதற்கும் இல்லை என்று தலையை ஆட்டினான்.
“இல்லை ரேணு…..காதல்தான்.ஆனால் அதற்கும்.மேல. எனக்கு உன்னைக் கல்யாணம் உடனே செஞ்சுக்கணும்.”
ரேணு எல்லாவற்றையும் யோசித்து மிக நிதானமாக முடிவெடுப்பவள்.
“வேணு…..நா உன்னை விட மூன்று வயசு பெரியவள். உங்க வீட்டில் சம்மதிப்பாங்களா?”
அவசரமாக மாட்டார்கள் என்று வேணு தலை அசைத்தான்.
“எங்க வீட்டிலேயும் சம்மதிக்க மாட்டாங்க.சாதி…..?” மேலே சொல்லாமல் நிறுத்தினாள்.
“ரேணு, என் வீட்டில் ஜாதி பிரச்சனை இருக்காது. ஆனால் வயசு அதிகம் தான் ப்ராப்ளம். அம்மா நெஞ்சை புடிச்சுகிட்டு உட்கார்ந்துடுவாங்க….”
வேணு குரலில் இருந்த நடுக்கம் ரேணுவிற்கு எரிச்சலை உண்டுபண்ணியது.
“பின்ன…எந்த டாஷ் ஷுக்கு கல்யாணம்.பத்தி பேசற?”
வேணு அவசரமாக குறுக்கிட்டான்.
“ஆனா…..எனக்கு நீதான். உனக்கு சரின்னா…..நாம எதாவது வழி இருக்கான்னு யோசிக்கலாம்”
அன்று தொடங்கி இருவரும் இதைப்பற்றி யோசிக்கத்தொடங்கினார்கள். பேசிக்கொள்ளவும் தொடங்கினார்கள்.கடைசியில் அவர்கள் எடுத்த முடிவு….
ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்வது. அந்த ஓட்டமும் மும்பாய்க்கு சென்றுதான் நிற்க வேண்டும்.
சரிதான் அதற்குப்பணம். வேணு கைகளில் சுத்தமாகப் பணம் ஏதுவும் இல்லை. யாரிடமும் கடனும் கேட்க முடியாது. உடனே அப்பா காதுகளுக்கு விஷயம் போய்விடும். ரயில் டிக்கெட், மாலை ஒரு புதுப்புடவை அவனுக்கு ஒரு வேஷ்டி இவற்றை வாங்கத்தேவையான பணம் நிச்சயமாகத்தேவை.இதை அடுத்து வரப்போகும் தேவைகளைப்பற்றி அவனுக்கு யோசித்துப் பார்க்கும் தைரியம் இல்லை.
இப்போது இந்த உடனடி பணத்தேவைக்கு…..?
வேணுவின் மனதில் உடனடியாக வந்து நின்றது அப்பாவின் மளிகைக்கடை காசு பெட்டி. மத்தியானம் சாப்பிடுவதற்கு வீட்டுக்குப் போய் விடுவார். அப்போது கந்தனை கடையைப்பார்த்துக்கொள்ளச் சொல்வார். வீட்டில் சாப்பிட்டு ஒரு சின்ன தூக்கம். பின் எழுந்து சூடாக ஒரு லோட்டா காபித்தண்ணீர். எல்லாம் முடிந்து ஆர அமர வந்து சேருவதற்கு மாலை நான்கு மணி ஆகிவிடும். அப்போது காசு பெட்டியில் கை வைத்துவிடலாம்.
ஆனால் இந்த கந்தனை எப்படிச் சமாளிப்பது? மோர் லாயல் தேன் தி கிங் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதைப்போல் தான் இந்த கந்தனும். அநியாய நேர்மை. அப்பா சும்மா லேசில் யாரையும் நம்ப மாட்டார். அவரே கந்தனுக்கு நல்ல சர்டிபிகேட் கொடுத்து வைத்துக்கொண்டிருக்கிறார் என்றால் அவன் மேல் எந்த வித குற்றமும் சொல்ல முடியாது. வேணுவைக் குழந்தையாக இருக்கும் போதே தூக்கி வளர்த்தவன் இந்தக்கந்தன். பல நேரம் அவனுக்கு வீட்டில் அவன் மனைவி செய்து அனுப்பி இருக்கும் உணவைப் பல கவளம் அம்மாவிற்குத்தெரியாமல் வேணு தின்று தீர்த்திருக்கிறான். வேணுவின் மீது கந்தனுக்குத் தனி பாசம். வளர்ந்த பின் அவனை சின்னய்யா என்று யாரும் சொல்லாமல் தானாகவே மரியாதையுடன் அழைக்கப்பழகிக்கொண்டவன். அப்பாவிடம் காட்டும் விசுவாசத்திற்கு ஒரு மாற்று கூட குறையாமல் வேணுவிற்கும் காட்டுவான்.
வேணு கடைக்குள் சென்று கல்லாப்பெட்டியின் அருகில் அமர்ந்து கொண்டான்.
“என்ன சின்னய்யா இந்நேரத்தில் கடைப் பக்கம்? அப்பா வூட்டுக்கு இல்ல போயிருக்காரு”
“தெரியும். கந்தா நீ அந்த தெருக் கோடி கடைக்குப்போய் நான் ஒரு சீட்டிலே பொருள் ஒண்ணை எழுதித்தாரேன். வாங்கியாந்துடு.”
கந்தன் கைகளில் மரியாதையோடு சீட்டை வாங்கிக்கொண்டு ஓரமாகக் கழட்டி வைத்திருந்து காலணியில் வலுக்கட்டாயமாகக் கால்களை நுழைத்து பின் கிளம்பினான்.
அவன் தலை மறைந்ததும் வேணு அவசரமாக கல்லா பெட்டியைத்திறந்து கொஞ்சம் பணத்தை எடுத்து இடுப்பு பெல்டில் மறைத்து வைத்துக்கொண்டான்.
“இந்தாங்க சின்னய்யா, பொருள் சரியா இருக்குதான்னு பாருங்க”
பதட்டத்தோடு அந்தப்பொட்டலத்தை கைகளில் வாங்கிக்கொண்டு வேணு அவசரமாகக் கிளம்பினான்.
“ஆங்….எல்லாம் சரியாத்தான் இருக்கும்” குழப்பத்தோடு பார்த்த கந்தனை பார்க்காமல் அவசரமாகக் கிளம்பினான்.
அதற்குப்பின் நடந்ததெல்லாம் அவனுக்குக் கடிதம் மூலம் அவன் நண்பன் எழுதியது தான். அவன் ரேணுவோடு ரயிலில் ஏறியதை அப்பாவிடம் அவர் நண்பர் ஒருவர் பார்த்துவிட்டுச் சொல்லிவிட, அப்பா அன்றிலிருந்து கடைக்குச்செல்வதைத் தவிர்க்கத்தொடங்கினார். கந்தனை நம்பி கடை பொறுப்பைக் கொடுத்தவர் ஒரு மாதத்திற்குப் பின் கணக்கு பார்த்தபோது பணம் கணிசமாகக் குறைந்திருப்பதைப் பார்த்தார்.அவருக்கு அவர் மகன் மேல் ஒரு துளி சந்தேகம் தோன்றவில்லை. தன் வளர்ப்பில் அத்தனை நம்பிக்கை. காதலில் விழுந்து அதன் காரணமாக வீட்டை விட்டு ஓடுவது இயற்கையின் விளையாடல்.ஆனால் திருட்டு….. அதை நிச்சயமாக அவர் மகன் செய்திருக்க மாட்டான். அப்படி என்றால்…….
கந்தன் வேலையில் இருந்து அனுப்பப்பட்டான்
“நன்றி கெட்ட பய…..இனி என் மொகத்துலே முழிக்காதே”
கந்தன் தலையைக்குனிந்து கொண்டு செருப்பை கைகளில் அள்ளிக்கொண்டு ஒன்றும் பேசாமல் கிளம்பினான்.
வேணுவைப் பார்க்க மறுத்து அப்பா அவனையும் ஒதுக்கி வைத்தார்.ஆனால் அவனைப்பிரிந்த ஏக்கம் அவரை மெதுவாகத் திங்கத்தொடங்கியது.
ஆறு மாதத்தில் அவர் இறந்தார். காரியம் செய்து வைக்க வேணு தேவைப்பட்டான். ஒரு விதத்தில் அது அவனுக்கான மன்னிப்பாகத்தான் தெரிந்தது. ஆனாலும் அம்மா அந்த வீட்டை விட்டு வர மறுத்தாள்.
“இல்லடா…..நா தனியா காலம் தள்ளிடுவேன். மும்பாயெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. கடைசி வரை அப்பா உன்னை மன்னிக்கலை. ம்ஹூம்.என்ன செய்ய, காரியம் பண்ண நீ தேவையா இருந்தது.”
வேணுவிற்கு அம்மாவின் கோபம் இன்னும் அடங்கவில்லை என்பது புரிந்தது. அவன் திருச்சிக்குச் செல்வதை நிறுத்தினான்.ஆனால் “அம்மா நிலை சீரியஸ் உடனே கிளம்பவும்” நண்பன் அனுப்பிய மெசேஜ் அவனை மறுபடியும் பிறந்த மண்ணிற்கு அழைத்து வந்தது.
அம்மா உடல் மெலிந்து நிறம் கறுத்து கட்டிலில் சருகாகப் படுத்துக்கிடந்தாள்.
“அம்மா, என்னம்மா பண்ணுது? தனியா இருக்க வேண்டாம்ன்னு சொன்னா கேட்டியா. என்னையும் பார்க்க வர முடியாம பேசிட்ட…..”
அம்மா மிகச்சிரமப்பட்டுப் பேசினாள்.
“கந்தன்…..கந்தன்……அவனை பார்த்தியா……”
வேணு கந்தனை என்றோ மறந்திருந்தான். அம்மா அவனை நினைவுபடுத்தியதும் அவன் பணத்தைத் திருடி எடுத்துச்சென்ற நாள் சட்டென்று நினைவிற்கு வந்தது.
“அய்யோ….எவ்வளவு பெரிய தப்பை செஞ்சிட்டு அதை மறந்து சௌக்கியமா இருந்திருக்கேன்…..” அவனுக்கு அவமானமாக இருந்தது.
“பாவம்டா கந்தன்.அவனுக்கு வேலையை விட்டு நிறுத்தினதிலே கோபமில்லை. ஆனால் திருடன்னு அப்பா அவனுக்குப் பட்டம் கட்டி துரத்தினார் பாரு…..அவனால் அதை தாங்க முடியலை. அப்படியே கூனி குறுகி அன்னைக்கு நின்னான் பாரு, அந்த மொகம் இன்னும் என் கனவிலே கூட வந்து போறது. “
வேணு பதில் சொல்லத்தெரியாமல் தலையை மட்டும் ஆட்டினான்.
“ஆனா ஒண்ணு, அவன் கடைசி வரை உண்மையைச் சொல்லலை. காட்டிக்கொடுக்கவும் இல்லை. அப்பாவால் தாங்கிண்டு இருந்திருக்க முடியாது.அவன் தெய்வம்டா…..”
வேணு அதிர்ந்து நின்றான்.
‘அம்மாவிற்கு உண்மை தெரியுமா?’
அம்மா மெதுவாகத் திரும்பிப் படுத்தாள்.
“முடிஞ்சா கந்தனுக்கு ஏதாவது செய்”
இது தான் அவள் கடைசி ஆசை என்பது அடுத்த நாள் காலையில் வேணுவிற்குத்தெரிந்தது.
“சின்னய்யா…..அப்பா போன இடத்துக்கு அம்மாவும்.போய் சேர்ந்துட்டாங்க. நீங்க எப்படிய்யா இருக்கீங்க…?”
அம்மா சாவிற்கு வந்திருந்த கந்தன் முகம் பழைய நாட்களை வேணுவிற்கு நினைவு படுத்தியது.
“நீ எப்படி இருக்கே கந்தா?”
“இருக்கேன் சின்னய்யா”
வேணு யோசித்தான். இவனுக்கு என்ன செய்வது? எதைச் செய்தால் செய்த தவற்றுக்குப் பாவமன்னிப்பாக இருக்கும்?
சட்டென்று வேணுவிற்கு ஒரு யோசனை வந்தது.கந்தனுக்குப் பணம் கொடுத்தால் அது சரியல்ல.வெறும் பணம் மட்டும் அவனுக்கு ஆறுதல் அளிக்காது. அவன் மனதை மிகவும் காயப்படுத்தி இருக்கக்கூடிய அந்த ஒரு சொல்
“நன்றி கெட்ட பய….”
அவசரமாக வேணு தன் எண்ணத்தைக் கந்தனிடம் கூறினான்.
“கந்தா, அப்பா போனதுக்குப் பின்னால் மூடப்பட்ட கடை. அதைத் திறக்க எனக்கு ஒரு எண்ணம். ஆனா இப்போ மும்பாயிலே இருக்கேன். நா இங்கே வர வரைக்கும் அதைப் பொறுப்பா பாத்துக்க ஆள் தேவை. உன்னைவிட்டால் இதுக்கு யார் கிடைப்பாங்க சொல்லு.நீ பாத்துக்கிறியா? ”
ஒரு பளிச் மின்னல் கந்தனின் பார்வையில்.தோன்றி நிலைத்தது.
“நானா….கடையையா….சின்னய்யா….அது வந்து….”
“அட, பேசாதே கந்தா. உன்னை விட்டா நல்ல ஆள் வேற யார் இருக்க முடியும். பொறுப்பா, நேர்மையா…..கொஞ்ச நாள் பூட்டியே இருக்கட்டும். நீ அதை ஜாக்கிரதையா பார்த்துக்கோ. இந்த சாவி. உள்ளேயே இருந்துக்க. இனிமே நா திரும்பி வர வரை அந்தக் கடை உன் பொறுப்பு”
“சின்னய்யா….கடைக்கு பொருள்?”
“அது கொஞ்சம் கொஞ்சமா வாங்கிப்போடலாம். இது முக்கியமான தெரு. கடை சொந்தக்காரங்க பக்கத்திலே இல்லேன்னு தெரிஞ்சா போதும், அடாவடி செய்ய யாராச்சும் கிளம்பிடுவாங்க. அதுக்காகத்தான் உன்னைக் காவலுக்கு கேக்குறேன்”
கந்தன் சந்தோஷமாகச் சிரித்தான்.
சில நேரங்களில் சிலரில் மனிதம்.
லதா ரகுநாதன்
பின்நவீனத்துவம், அது இது என்றெல்லாம் சிரமப்படாமல், வாசிப்பவர்களுக்கு வரிக்கு வரி புரிய வேண்டும் என்ற அடிப்படை நியதியைப் பின்பற்றியமைக்கு வாழ்த்துகள். படத்துக்கு எழுதப்பட்ட கதை என்பதைத் தவிர்த்துப் பார்த்தாலும் மனதை தீண்டுகிறது.
அழகான மனதைத் தொடும் விதமான கதை. நல்ல இயல்பான எழுத்து நடை. வாழ்த்துக்கள் சகோதரி 👍💐