பிரதி பிம்பங்கள்!

நான், ஒரு வாரமாக இந்த வழியாகக் காலையில் காரில் போகும்போதும் வரும்போதும் கவனித்து வருகிறேன் அந்த மனிதரை. தொளதொளப்பான ஒரு வெள்ளைப் பேண்டும், இளம் நீல வண்ண முழுக்கைச் சட்டையுமாக; சில சமயங்களில் கடை வீதியில் நடந்து கொண்டும், சில சமயங்களில் கடைவீதியின் தொடக்கத்தில் இருந்த காட்சி மண்டபத்தில் இருந்து எதிராக இருக்கும் காசி விஸ்வநாதர் கோவில் கோபுரத்தை அமைதியாகப் பார்த்துக் கொண்டும், சில சமயங்களில் “ஷண்முகம் பாத்திரக் கடல்” கடை வாசலில் இருக்கும் கற்திண்டில் பழைய செய்தித்தாள் ஒன்றைப் பாயாக்கி அதில் ஒரு காலை நீட்டி மற்றொரு காலைக் கடையின் பெரிய தாள்ப்பாளின் மேல் வைத்துத் தாங்கியவாரு மல்லாந்து படுத்த வண்ணம் அன்றைய தினசரி ஏதாவது ஒன்றை மௌனமாக வாசித்துக் கொண்டிருப்பார். சில சமயம் அந்த வீதியின் திருப்பத்தில் இருந்த கோவில் குளக்கரை ஓரம் கண்மூடி அமர்ந்திருப்பார். இப்படியாக ஏதோ ஒரு விதத்தில் தினமும் என் கண்ணில் படாமல் போனதில்லை அவர். மற்றபடி அவரைப் பற்றிய வேறெந்த விவரமும் தெரியாது.

நான் வழக்கமாக ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழி அதுதான். என் மனதுக்கு மிகவும் நெருக்கமான கடை வீதி அது. சிறு வயதில் அப்பாவின் கைவிரல் பிடித்துக் கொண்டு அந்தக் கடைவீதியில் நடந்து கொண்டு இருபக்கத்துக் கடைகளையும், எதிரே தெரியும் ஒன்பது நிலை ராஜ கோபுரத்தையும் வேடிக்கை பார்த்தவாரே நடப்பதென்பது சொர்க்க வீதிகளில் நடப்பது போன்ற அலாதியான ஒரு உணர்வைத் தரும். அதற்கடுத்த சம்பிரதாயமாக இன்றளவிலும் கடைப்பிடிக்கும் ஒரு பழக்கம் முக்குக் கடை என்று அழைக்கப்படும் “பாலமுரளி கஃபே”ல் ரோட்டில் நின்றவாறே வாங்கி அருந்தும் இஞ்சி டீ யும் அந்த மொறு மொறு மெதுவடையுந்தான். இப்போதெல்லாம் காலை ப்ரேக்ஃபாஸ்டே அதுதான் என்றாகிவிட்டது. என் காரைப் பார்த்ததுமே ரெடியாகச் சுடச்சுட இரண்டு வடையும் தேங்காய்ச் சட்ணியும் எடுத்து வைத்து விடுவார் சுந்து அண்ணா. ஐம்பது வருடங்களுக்கும் மேலாக அந்த இடத்தில் இருக்கும் கடை. எண்ணெயே குடிக்காமல் மொறுமொறுப்பாக அத்தனைச் சுவையோடு தரும் அந்த மெது வடையைப் போல் நான் வேறெங்கும் சாப்பிட்டதில்லை. இன்றும் வழக்கம் போல் காரை ஓரமாக நிறுத்தி விட்டு வடை சாப்பிட இறங்கினேன். அந்த மனிதரை முதல் முறையாகப் பார்த்ததில் இருந்தே மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு. அதை என்னவென்று சொல்லத் தெரியவியில்லை. இன்றும் அவர் வழக்கமான இடத்தில் கண்ணில் படவில்லை என்றதும் பார்வையால் தேடினேன். நான் தேடுவதை உணர்ந்து கொண்ட சுந்து அண்ணா “என்ன டாக்டர் சங்கரலிங்கத்தைத் தேடறீங்களா” என்றார் வடையை எண்ணெய்ச் சட்டியில் போட்டவாறே.

மனிதர் சரியான ஆள்தான். அடுத்தவர்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும், செயல்களையும் அவர்கள் சொல்லாமலேயே நுட்பமாக அறிந்து கொள்வதென்பது பெரிய விஷயம். இவர் மட்டும் மருத்துவம் படிக்கச் சென்றிருந்தால் இன்று மிகவும் பேரும் புகழும் வாய்ந்த சைக்யாட்ரிஸ்ட் ஆகியிருப்பார் என்று நினைத்துக் கொண்டேன். மனிதர் அதையும் படித்து விட்டாரோ என்னமோ.

“நானும் சின்ன வயசுல டாக்டர் ஆகனும்கற கனவோட இருந்தேன். என் விதி குடும்பச் சூழ்நிலை என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கு. பரவாயில்லை; பொய் சொல்லி ஏமாத்தரது, திருடரது, அடுத்தவங்க குடியக் கெடுக்கறது, கொள்ளையடிக்கிறதுன்னு இல்லாம நாலு பேர் வயிறு நிறைய வைக்கிற இந்தத் தொழில் எல்லா விதத்திலும் உசந்ததுதான்னு ஏத்துக்கிட்டேன். இதோ நான் எந்த விதத்திலும் குறைவில்லாம நல்லாத்தான் இருக்கேன். அது சரி நீங்க சங்கரலிங்கத்தைத் தேடினா நான் பாட்டுக்கு ஏதேதோ சொல்லிக்கிட்டு இருக்கேன். அந்தச் சங்கரலிங்கம் வேடச்சந்தூர் ஜமீன்தார் . பணம் பவிஷு, ஆள் அம்பாரி, சொத்து சுகம்னு எல்லா விதத்திலும் உசந்த நிலைல இருந்த ஆளு தான். ஆனால் புள்ளை குட்டிகள் கிடையாது. அவர் வீட்டம்மாவும் பதினைஞ்சு வருஷம் முன்னாடி போய்ச் சேர்ந்துடுச்சு. இருந்த சொந்த பந்தங்களும் வயசான காலத்துல சொத்து பத்து எல்லாத்தையும் பிடுங்கிக் கிட்டு அவரை விரட்டி விட்டுட்டாங்க. எங்கெங்கோ சுத்திக்கிட்டுத் திரிஞ்ச மனுஷன் இந்த ஒரு வாரமா இந்தப் பக்கம் சுத்திக்கிட்டு இருக்கார். யார் கிட்டயும் எதுவும் பேச மாட்டார். நான்தான் மூனு வேளையும் சாப்பாடு தருவேன். கடைலேர்ந்து ஒரு தினசரி மட்டும் படிக்க எடுத்துட்டுப் போவார். வாங்கிச் சாப்பிட்டுவிட்டு நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமக் கடைல தேய்க்க வைச்சிருக்கற பாத்திரங்களை எல்லாம் எடுத்துப் போட்டு அதோ அந்தக் குழாயடியில வைச்சு தேய்ச்சு தந்துட்டுப் போவார். அவர் இங்க வந்ததுக்கப்புறம் பேசின முதலும் கடைசியுமான ஒரே வார்த்தை “உழைக்காம ஓசில சாப்பிடக் கூடாது. நீ என் உழைப்பை ஏத்துக்கலைன்னா நான் இங்க சாப்பிட மாட்டேன்”கறது மட்டுந்தான்.”

“பாவம் நேத்து ராத்திரி மனுஷன் நம்ம கோவில் குளத்துப் படிக்கட்டுல போய் நின்னுக்கிட்டு இருந்திருக்காரு. திரும்ப மேல ஏறி வரும்போது கால் பிசகி விழுந்து மண்டைல அடிபட்டுக் குளத்துக்குள்ள விழுந்து தவிச்சிட்டு இருந்திருக்காரு. ஆனா அவருக்கு ஆயுஸு கெட்டி போல. நல்ல வேளை அந்த வழியாக வந்த யாரோ புண்ணியவான் பார்த்துச் சத்தம் போட சுத்துப்பட்டு ஜனங்க ஓடிப்போய் அவரைக் காப்பாத்தி நம்ம தர்மாஸ்பத்திரிலதான் சேர்த்து இருக்காங்க. காலைல நான் போய் பார்த்துட்டு வந்தேன். ஆள் முழிச்சிக்கிட்டாரு. இன்னும் ரெண்டு மூனு நாளாவது ஆஸ்பத்திரில இருக்க வேண்டி வரும்னு நர்ஸ் சரஸ்வதி சொல்லிச்சு.”

அதற்கு மேல் அங்கு நிற்க விரும்பாமல் வேக வேகமாக வடையை விழுங்கி, டீயையும் எந்திர கதியில் குடித்துப் பணத்தைத் தந்துவிட்டு காரில் ஏறி ஆஸ்பத்திரியை நோக்கிச் செலுத்தினேன். போகப் போகவே ஏதோ இனம் புரியாத ஒரு உணர்வு. யாரோ முன் பின் அறிமுகம் இல்லாத ஒரு பெரியவருக்காக என் மனம் கிடந்து தவிக்கும் தவிப்பும் அந்த விவரிக்க இயலாத உணர்வும் ஒரு டாக்டராய் எனக்கே புதியதாகப் புதிராக இருந்தது. இருபது வருடங்களாகத் தொடர்பே இல்லாமல் போன நான் பிறந்து வளர்ந்த ஊருக்கு, அதுவும் நான் பிறந்த ஆஸ்பத்திரிக்கே தலைமை மருத்துவராகத் திரும்பி வருவேன் என்று நான் நினைத்துப் பார்த்ததேயில்லை. வந்து ஆறு மாதத்தில் இப்படி ஒரு அனுபவம். ஆஸ்பத்திரியில் நுழைந்ததும் எதிர்பட்ட நர்ஸ்களும், மருத்துவப் பணியாளர்களும் வணக்கம் சொன்னதைக் கூட கடமைக்குத் தலையசைத்து ஏற்றுக் கொண்டு அந்தப் பெரியவரைக் காண விரைந்தேன். ட்யூட்டி டாக்டரும் நர்ஸும் அந்த நேரத்தில் என்னை வார்டுக்குள் எதிர் பாராதவர்களாக விக்கித்துப் போய் நின்றார்கள்.

“வணக்கம் டாக்டர். என்ன இன்னிக்கு வந்ததும் வராததுமா நேரடியா இந்த வார்டுக்கு ரவுண்ட் வந்துட்டீங்களே. எனிதிங் ஸ்பெஷல்”

“நோ. நத்திங். இப்போ இந்தப் பெரியவர் சங்கரலிங்கம் எப்படி இருக்கார். நீங்க தானே நேத்திக்கு ராத்திரி ட்ரீட்மென்ட் குடுத்தீங்க. வாட் இஸ் யுவர் அப்ஸர்வேஷன்” என்றேன்.

“ஓ. இவர் உங்களுக்குத் தெரிஞ்சவரா” என்ற கேள்விக்கு ஆம் என்று தலையாட்டி வைத்தேன்.

“நல்ல வேளை. பெரிசா எதுவும் அடிபடலை. படிக்கட்டு நுணில தலை மோதினதால பின் மண்டைல நாலைந்து தையல் போடற அளவு காயம். குளத்துல முங்கி நிறையத் தண்ணி குடிச்சிட்டதால லேசா காய்ச்சலும் ப்ரீத்திங் ட்ரபுளும் இருக்கு. ஆளும் கொஞ்சம் வீக்கா எனர்ஜி இல்லாமல் இருக்கார். மத்தபடி பயப்பட எதுவும் இல்லை. ஒரு வாரம் அப்ஸர்வேஷன்ல வச்சிருந்து ட்ரீட்மென்ட் தந்தா நல்லாத் தேறிடுவார்”.

“தேங்யூ ஸோமச்” என்றவாரே அப்ஸர்வேஷன் சார்ட்டை எடுத்து சரி பார்த்து விட்டு அவர் கண் விழித்ததும் எனக்குத் தகவல் தருமாறு சொல்லி விட்டு மற்ற பேஷண்டுகளைக் கவனிக்கச் சென்று விட்டேன்.

இரண்டு நாட்களில் அந்தச் சங்கரலிங்கம் என்னுடன் நன்றாகப் பழகி விட்டார். எனக்கும் ஏதோ அவர் பல நாட்கள் பழகிய நெருங்கிய உறவு போல் ஒரு நெருக்கம் உண்டானது. யாரிடமும் அதிகம் பேசாத மனிதர் என்னிடம் மனம் விட்டுப் பேசினார். அவர் பூரண குணமானதும் என்னுடன் வர வேண்டும். என் வீட்டில் தங்கிக் கொள்ள வேண்டும் என்று ஒரு வழியாகச் சம்மதிக்க வைத்திருந்தேன். அன்று அவர் டிஸ்சார்ஜ் பண்ணும் முன்பு போய்ப் பார்த்தேன். இந்த ஒரு வாரத்தில் ஆள் சற்று தேரியிருந்தார். முகத்தில் ஒரு தெளிவும் வந்திருந்தது.

“ஐயா. இன்னிக்கு என் பிறந்த நாள். ஆசிர்வாதம் பண்ணுங்க. நீங்க இன்னிக்கு டிஸ்சார்ஜ் ஆயிடுவீங்க. ரெடியா இருங்க. என்னோட ட்யூட்டி டைம் முடிஞ்சதும் நான் வந்து கூட்டிட்டுப் போறேன். என்றவாரே அவர் காலில் விழுந்தேன்.

“நீ நல்லா இருப்ப தம்பி. சீறும் சிறப்புமா நல்லா இருப்ப” என்று வாழ்த்தியவர் யோசனையில் ஆழ்ந்தார்.

“என்னங்கையா யோசனை” என்றதும்

“ஒன்றுமில்லை தம்பி. இன்னிக்கு மே 1ஆம் தேதி உன் பிறந்த நாள் மட்டும் இல்லை. என் அப்பாவோட இறந்த நாளும் கூட. முப்பத்தஞ்சு வருஷம் முன்னாடி இதே நாள் இதே ஆஸ்பத்திரில தான் கவனிக்க யாரும் இல்லாமல் அனாதையா இறந்து போனார். அம்மா என் சின்ன வயசுலயே போயிட்ட பின்னாடி வேற கல்யாணம் கூட பண்ணிக்காம ஒத்தைப் பிள்ளையான என்னைத் தாய்க்குத் தாயா இருந்து பாசத்தோட வளர்த்த மனுஷரைக் கடைசி காலத்தில் கொஞ்சம் புத்தி சுவாதீனம் இல்லாமல் போனப்ப நிராதரவா ஏர்வாடில கொண்டு போய் விட்டுட்டு வந்துட்டேன். அப்புரம் திரும்பிக் கூடப் போய்ப் பார்க்கலை நானும் என் பொண்டாட்டியும். கொஞ்ச நாள் கழிச்சு எப்படியோ அங்கிருந்து தப்பிச்சு வந்து இங்கியே சுத்திக்கிட்டு இருந்திருக்கார். அது எங்களுக்குத் தெரியாது. வீட்டுக்குத் திரும்ப வராத வரைக்கும் தேவலைன்னு இருந்துட்டோம். ஆனால் அவர் இறக்கும் தருவாயில் புத்தி தெளிஞ்சு தான் யாருன்னு சொல்லிட்டு இருக்கார். அன்னிக்கு எதேச்சையாக எங்க ஜோஸியர் சொன்ன பரிகாரம் ஒன்னுக்காக ஆஸ்பத்திரி நோயாளிகளுக்கு புதுத் துணியும் சாப்பாடும் வாங்கிக் கொடுக்க வந்திருந்தோம். அப்போதான் அப்பா அத்தனை நாள் இங்கே இருந்து இறந்து போன விஷயம் தெரிய வந்தது. இப்போ அந்த ஞாபகம் வந்துடுச்சு. காலம்கறது கண்ணாடி மாதிரி. நாம எதைக் காட்டறோமோ அதைத்தான் பிரதிபலிக்கும். என் அப்பாவுக்கு நான் செஞ்சது எனக்கே பிரதிபலிச்சுது பார்த்தியா. ஆனாலும் எங்கியோ கொஞ்சம் புண்ணியம் பண்ணி இருக்கேன். அதான் கடைசி காலத்துல நான் பெறாத புள்ளையா நீ வந்து கிடைச்சிருக்க.” என்றவர் பெட்டின் அருகில் இருந்த சிறிய டேபிள் மேல் கண்ணில் அன்றைய தினசரி படவும் அதை எடுத்தார். உள்ளே இருந்து ஒரு பெரிய பக்கம் தனியாகக் கீழே விழுந்தது.

எடுத்துப் பார்த்தவர் எந்த உணர்ச்சியும் இல்லாமல் என்னிடம் அந்தத் தனிப் பக்கத்தைக் காட்டினார்.

ஒரு முரட்டு வெளிநாட்டு நாயின் புகைப்படம் அச்சிடப்பட்டு. இந்த நாயைக் காணவில்லை. இதைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று பெரிதாக விளம்பரம் ஒன்று வெளியாகி இருந்தது. கீழே தகவல் தெரிவிக்க வேண்டிய முகவரி என்று ரங்கராஜ் பாண்டியன் வேடசந்தூர் ஜமீன் என்று இரண்டு மொபைல் எண்களும் அச்சாகி இருந்தது.

“இந்த ரங்கராஜ் வேற யாரும் இல்ல. என் ஒன்னு விட்ட தங்கச்சி பையன் தான். அந்த நாலு கால் நாயைத் தேடக்கூட ஆள் இருக்கு. இந்த ரெண்டு கால் நாய் காணாமல் போய் இத்தனை நாளாச்சேன்னு தேட ஒரு ஜீவன் கூட இல்லை. அதுக்காவது பத்தாயிரம் ரூபாய் மதிப்பு. எனக்கு அது கூட இல்லாமப் போயிடுச்சு பார்த்தியா” என்றார்.

“போகட்டும் விடுங்க. உங்களுக்குப் பையனா நான் கிடைச்சுட்டேனே. இனிமேல் நான் உங்களை அப்பான்னுதான் கூப்பிடப் போறேன். நீங்க ரெடியாகிக் கிளம்புங்க. நான் மத்த வார்டுக்கு ரவுண்ட்ஸ் போய்ட்டு வந்துடறேன்’ என்ற வாரே நகர்ந்தவன் மனதுக்குள்ளேயே முனுமுனுத்துக் கொண்டேன்.

“என்ன மன்னிச்சிடுங்கைய்யா. நானும் என்னைப் பெத்தவங்களை, எம் பொண்டாட்டி எவ்வளவோ தடுத்துங் கூடக் கேட்காமல், அவங்க மேல இருந்த சின்ன மனஸ்தாபத்தால வயசான காலத்துல ஆர்ஃபனேஜ்ல சேர்த்துட்டு; அவங்க போனதுக்கப்புறம் நாங்க பெத்த பிள்ளையையும் விஷக் காய்ச்சலுக்கு பலி கொடுத்ததுக்கப்புறமா தான் நான் செஞ்ச தப்பை உணர்ந்தேன். அதுக்குப் பரிகாரமாத்தான் இப்போ உங்களை என் அப்பாவா தத்தெடுத்துக் கூட்டிக்கிட்டு போறது கூட என் மனைவி சொல்லித்தான். என் மனைவி அவ மாமனாருக்குத் தந்த மரியாதையையும் மதிப்பையும் உங்களுக்கும் தருவா. நானும் நீங்க சொன்ன கண்ணாடிப் பிரதி பிம்பம் தான் ஐயா. பாவத்தைக் காட்டினேன். அதுவே திரும்ப எங்க வாழ்க்கைலயும் பிரதிபலிச்சிச்சி. இனிமேயாவது உங்க கிட்ட பாசத்தைக் காட்டறது மூலமாக புண்ணியமா அது எதிரொளிச்சு எங்க வாழ்க்கை துலங்கும்னு நம்பறேன்.” என்றவன் கண்ணின் ஓரம் துளிர்ந்த நீரை யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டேன்

அதே நேரம் மொபைல் ஃபோன் அடிக்க எடுத்துப் பார்த்தேன். என் மனைவி வைஷ்ணவி. அவளும் டாக்டர் தான். டவுனில் ஒரு பெரிய தனியார் ஆஸ்பத்திரியில் கார்டியாலஜிஸ்ட் ஆக இருக்கிறாள்.

“என்னங்க ஒரு குட் நியூஸ். அந்தப் பெரியவர் நம்ம வீட்டுக்கு வர நல்ல நேரம் உங்களுக்கு ஒரு குட் நியூஸ். எனக்கு நாள் தள்ளிப் போயிருக்கு. இப்பத்தான் இங்க கைனகாலஜிஸ்ட் நர்மதா கிட்ட கண்ஃபார்ம் பண்ணிக்கிட்டேன். நாற்பது நாள் ஆகியிருக்குங்க.” என்றாள்.

ஆம். காலம் என்பது கண்ணாடி. அது நாம் செய்யும் வினைகளையே பிரதி பிம்பமாக நம் வாழ்வில் எதிரொளிக்கிறது. நல் வினை என்றால் நல்லவைகளாக. பாவம் என்றால் தீவினையாக.

முற்றும்…

✍சாஸ்தா ராஜகோபால்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.