வந்தார்கள், தோற்றார்கள் – 1

  • வந்தார்கள், தோற்றார்கள் – 1

யாரிடமிருந்து ஆரம்பிப்பது, மூவருமே பராக்ரமசாலிகள். சட்டென்று தெளிவு. இவர்களுக்கெல்லாம் ஒரு மையப்புள்ளி, மகதம்!

பாடலிபுத்திரம் அப்பேரரசின் தலைநகரம். நந்த வம்சத்தின் வழித்தோன்றலான தனநந்தனின் ஆட்சி. அச்சமயத்தில் இங்கிலாந்து,ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பல நாடுகள் தோன்றியிருக்கவேயில்லை. ரோமானியப் பேரரசின் அஸ்திவாரம் கூட இடப்படாத காலம். பாரதமோ நாகரீகத்தின் உச்சியில்.

அப்போது (சுமார் 2500 வருடங்களுக்கு முன்) பாரதத்தின் வடமேற்கு எல்லை பாரசீக (பெர்சியா, ஈரான்), ஹிந்துகுஷ் மற்றும் ஹிமாலயம் வரையிலும், மற்ற மூன்று திசைகளில் கடலாலும் சூழப்பட்டிருந்தது. சிந்து நதி தீரத்தில் வேத முழக்கம். பாரதத்தை கணராஜ்ஜியங்கள் என்று அழைக்கப்பெற்ற பல குடியரசுகளும், முடியரசுகளும் சனாதன தர்மத்தை கடைபிடித்து ஆட்சி செய்து கொண்டிருந்தன. வடபாரதத்தில், தக்ஷசீலத்தை அம்புஜ் என்கிற அம்பியும், பௌரவத்தை பூரு வம்சத்தை சேர்ந்த புருஷோத்தமனும், மகதத்தை தனநந்தனும் ஆண்டு கொண்டிருந்தபோதுதான்

தக்ஷசீலம், பாரத தேசத்தின் தொன்மையான கல்விக் கேந்திரம். உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகம். இங்குதான் வெவ்வேறு தேசத்தின் இளவரசர்களும் ஏனைய மாணவர்களும் அரசியல், விஞ்ஞானம், ஆட்சி முறை, சட்டம், போர்க்கலை, வேதம், வேதாந்த தத்துவங்கள் போன்ற பல கலைகளை கற்று வந்தனர். அலெக்சாண்டர் என்கிற புயல் கிரேக்கத்தை ஒருங்கிணைத்து, பாரசீகத்தையும் வென்று வெற்றிக் களிப்புடன் பாரதத்தை நோக்கி மய்யம் கொண்டிருந்த சமயம் மிகச் சிறந்த அறிவாளியும், திறமைசாலியும், தாய் நாட்டு பற்றுக்கொண்டவனும், அரசியல் ஞானியும், தைரியசாலியுமான சாணக்கியன், சந்திர குப்தனையும் வேறு சில இளவல்களையும் ராஜ்ஜிய பரிபாலன கலைகளில் பயிற்று வித்துக் கொண்டிருந்தான்.

//இந்த ஜோடிதான் இன்று வரை ஒவ்வொரு பாரதீயனும் பெருமை கொள்ளும் அரும்பெரும் சாகசங்களை நிகழ்த்தியது//.

சந்திர குப்தன் முறை தவறிப் பிறந்தவன்தான்.

//ஆனால் ஒருவனை அவன் பிறந்த இனத்தையோ, சமூகத்தையோ, குடும்பத்தையோ வைத்து எடை போட்டு விடக்கூடாது. பிறப்பின் அடிப்படையில் சிறுமைகளை மதிப்பிடுவது தவறு. பண்பில், வீரத்தில், அறிவில், செயலில் தான் ஒருவனின் பெருமைகள் அடங்கியுள்ளது. இதற்கு வேத வியாசர், கர்ணன், வாலமீகி, விதுரன் போன்றவர்களே சிறந்த உதாரணங்கள்//

தனநந்தனுக்கு பயம். தன் ஆசை நாயகியான நாடோடிப் பெண் மூலம் பிறந்த சந்திர குப்தன் ஆட்சியை கைப்பற்றி விடுவானோ என்று. எனவே, அவனை நாடு கடத்தினான்.

விஷ்ணு குப்தன் என்ற பெயர் கொண்ட கெளடில்யன் எனும் சாணக்கியனை தன் அரச அவையில் வெளிப்படையாக அவமானப் படுத்தினான் தனநந்தன். அவனை வீழ்த்தி, நந்தர்களை அழித்து மகதத்தை உன்னத நிலைக்கு உயர்த்தும் வரை தன் குடுமியை முடிந்து கொள்வதில்லை என்று சபதம் மேற்கொண்டான் அந்த ணன்.

இவர்கள் இருவரும்தான் மகதத்தின் எழுச்சிக்கும் கிரேக்கத்தின் பின்னடைவுக்கும் வித்திட்டனர்.

பலவீனமான தனநந்தன் சக்கரவர்த்தியாக இருந்தும் பாரதத்தின் எல்லைகளை காக்கக் தவறினான். அலெக்சாண்டரைக் கண்டு நடுநடுங்கினான். சாணக்கியனுக்கு புரிந்தது பலமான பேரரசு ஒன்றுதான் எதிரிகளை எதிர்கொள்ள வல்லது என்று. சந்திர குப்தனோடு சேர்ந்து பல தேசங்கள் சென்று பெரும் படை திரட்டினான். மகதத்தின் மீது படையெடுத்து தனநந்தனை ஓடஓட விரட்டிக் கொன்று அந்த சாம்ராஜ்யத்தை தன் குடையின் கீழ் கொண்டு வந்தான்.

சந்திர குப்தன் அரியணை ஏறிய நான்கு வருடத்திற்குள் ஆறு லக்ஷம் காலாட்படையினர், 30,000 குதிரைப்படைகள், 2000 போர் யானைகள், 4000 தேர்ப்படைகள் கொண்ட மாபெரும் சைன்யத்தை அவனும், சாணக்கியனுமாக அமைத்தனர். பல சிற்றரசுகள் மகதத்தோடு இணைக்கப்பட்டன.

சந்திர குப்த சாணக்கிய பொற்காலம் துவங்கியது.

அடுத்து… அலெக்சாண்டர்.

About Author