வலைத்தளமும் புராணங்களும்

வலைத்தளமும் புராணங்களும்

வலைத்தளமும் புராணங்களும் னு தலைப்பே வித்தியாசமா இருக்கேன்னு யோசிக்க வேண்டாம். முன்னாடியெல்லாம் புராணங்கள், இதிகாசங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் பிரவசன சக்கரவர்த்திகளான சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர், முக்கூர் லக்ஷ்மி நரஸிம்மாச்சாரியார் போன்ற பெரியவர்கள் இருந்தார்கள். அவர்கள் சொல்வதை நாம் மெய் மறந்து கேட்கலாம். அவர்கள் சொல்வதிலும் ஒரு ஆத்மார்த்தம் இருக்கும்.

ஆனா இப்போது வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகமாகி விட்டது. யார் உபன்யாஸகர், யார் சொற்பொழிவாளர் என்று பிரித்து பார்க்க முடியவில்லை. ஒரு உபன்யாஸகர் என்றால் அவருக்கு வேதம், இதிகாசம், சமஸ்கிருதம் மற்றும் இதர ஸ்லோகங்கள் அத்துப்படியாகி இருக்க வேண்டும். அப்போது தான் அவர் பலவற்றிலும் இருந்து ஆதாரங்கள் காட்டி பேச முடியும். யாராவது சந்தேகம் கேட்டால் மேற்கோளுடன் சந்தேகத்தை நிவர்த்தி பண்ணவும் முடியும்.

இப்போதைய காலகட்டத்தில் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. யார் வேண்டுமானாலும் Youtubeல் ஒரு சானல் ஆரம்பித்து தங்களுக்கு தோன்றியதை பேசலாம் என்ற நிலை வந்து விட்டது. இன்னும் ஒரு சிலர் தங்கள் Youtube channelல் மற்றவர்கள் கமெண்ட் போடும் ஆப்ஷனை மறுத்துள்ளார்கள். இவர்கள் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற மனோபாவம் தான் காரணம். (கேள்வி கேட்டால் பதில் சொல்லத்தெரியாது என்பதும் ஒரு காரணம்)

சாஸ்திரத்தில் என்ன கூறப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே சொல்வது தான் சாஸ்திரிகளின் வேலை. ஆத்து வாத்தியார்கள் என்பவரும் இதைத்தான் செய்யணும். ஆனா இப்போது சாஸ்திரங்களை தங்கள் இஷ்டத்துக்கு வளைப்பவர்கள் தான் சாஸ்திரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

சாஸ்திரத்தில் இப்படி சொல்லியிருக்கிறதே என்று நாம் கேட்டால் அதெல்லாம் அந்தக் காலம். இந்தக்காலத்திற்கு அப்படியெல்லாம் இருக்க முடியாது என்று சொல்பவர்கள் தான் இந்தக்கால சாஸ்திரிகள் என்று அழைக்கப்படும் வியாஸமகரிஷிகள். இவர்கள் வியாசருக்கே இதிகாச புராணங்களை கற்றுக் கொடுப்பவர்கள்.

ஒரு சொற்பொழிவாளர் ஒரு நல்ல விஷயத்தை பற்றி கூற வேண்டும் என்றால் அந்த விஷயத்தால் என்னென்ன பலன்கள் நமக்கு கிடைக்கும், அதை எதற்காக முன் காலத்தில் கடைபிடித்தார்கள், கடைபிடிக்கவில்லையென்றால் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் போன்றவற்றை கூற வேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு பேஸ்புக்கில் கிடைக்கும் அல்ப லைக்ஸ் மற்றும் கமெண்ட்டிற்காகவும், Youtubeல் தன்னுடைய சானலுக்கு இத்தனை பார்வையாளர்கள் பார்த்தார்கள் என்று பெருமைப்படுவதற்காகவும், தன்னுடைய சுய விளம்பரத்திற்காகவும் தனக்கு தோன்றியதையெல்லாம் சொல்ல ஆரம்பித்தால் அவர் சொற்பொழிவாளர் அல்ல. பல சொற்பொழிவாளர்கள் பணத்திற்காகத்தான் பகவானை பற்றியும் மகான்களை பற்றியும் பேசுகிறார்கள் என்பது வெட்டவெளிச்சம் என்று அந்த சொற்பொழிவாளர்களுடம் நெருங்கிப் பழகுபவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

ஏற்கனவே இப்போது பல மகான்களின் சுயசரிதைகள் மறைக்கப்பட்டு திரித்து எழுதப்பட்டு வருகிறது. இன்னும் இருபது அல்லது முப்பது வருடங்களில் பிரேமானந்தாவையும் நித்யானந்தாவையும் வேதவியாஸருக்கு சமமாக காட்டப்படும் காலம் வரும். காஞ்சி மஹாபெரியவரை உலகின் நம்பர் 1 நாட்டு மருத்துவர் போலவும், சித்த வைத்தியர் போலவும் காட்டும் நிகழ்ச்சிகளும் வரலாம். ஏற்கனவே காஞ்சி பெரியவர் ஹோட்டலில் சாப்பிட்டார் என்று சில அரைகுடங்கள் சில வாரங்களாக கூறிக் கொண்டு வருகிறார்கள். காஞ்சி பெரியவரை பற்றி தெரியவேண்டுமென்றால் தெய்வத்தின் குரலையும், பரணீதரன் அவர்கள் எழுதியிருக்கும் புத்தகங்களையும் படித்தாலே போதும்.

ஒரே ஒரு விஷயம் மட்டும் கடைசியாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஸ்லோக புத்தகங்கள் ஆகட்டும், புராணங்கள் ஆகட்டும் எதுவாக இருந்தாலும் கிட்டத்தட்ட 1960ம் ஆண்டுகளுக்கு முந்தைய பதிப்பாக இருந்தால் மட்டும் வாங்கி படித்து உங்களை நீங்கள் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். வலைத்தளம் ஆதிக்கம் வந்த பிறகு வெளியிடப்பட்டுள்ள புத்தகங்களை படித்து உங்கள் நம்பிக்கையை நீங்களே கெடுத்துக் கொள்ள வேண்டாம்.

About Author