பட்ஜெட் பார்வை

GST அமலான பின் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு, வரி விதிப்பு அல்லது சலுகை குறித்த முக்கியத்துவம் குறைந்து விட்டது. ஆனால் அரசின் எதிர்கால திட்டமிடல், கடந்த கால பயணம், தடைகள், புதிய வாய்ப்புகள் குறித்த பார்வை இதில் கிடைக்கும்.

2022 பட்ஜெட்டில் உள்ள முக்கிய துளிகள்

1.NPS எனும் ஓய்வூதியத் திட்டத்தில் பங்கெடுக்கும் அரசு ஊழியர்களுக்கு வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவக் காப்பீடு எடுக்கும் பெற்றோர் / பாதுகாவலர்கு வரிச் சலுகை கிடைக்கும்.

2. இரயில்வே ஒதுக்கீடு ரூ.1.47 இலட்சம் கோடி. சென்ற ஆண்டை விட ரூ.20 ஆயிரம் கோடி அதிகம்

பிராயணிகள் வருமானம் சென்ற ஆண்டை விட உயர்ந்துள்ளது. இலக்கு ரூ.10000 கோடி. இப்போது ரூ.44000 கோடியாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. சென்ற நிதி ஆண்டில் (2020-21) கோவிட் ஊரடங்கால் அது ரூ.15400 கோடி மட்டுமே இருந்தது. 2022-23 இலக்கு ரூ.58500 கோடி.

சரக்கு போக்குவரத்து வருமானம் 2020-21இல் ரூ.1.17 இலட்சம் கோடி. 2021-22 இலக்கு ரூ.1.37 இலட்சம் கோடி. மாற்றி அமைக்கப்பட்ட இலக்கு ரூ.1.45 இலட்சம் கோடி. வரும் நிதியாண்டு இலக்கு ரூ.1.65 இலட்சம் கோடி.

பிரத்யேக சரக்கு இரயில் தடங்கள் டிசம்பர் 2022க்குள் முழு செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. அதற்கான ஒதுக்கீடு ரூ.15700 கோடி. அதன் பின் இரயில்வே சரக்கு வருவாய் புதிய உச்சத்தை தொடும். அதற்கு அடுத்த நிதியாண்டு வரை காத்திருக்க வேண்டும்.

புதிய இரயில்வே தடங்கள் – ரூ.25000 கோடி, தண்டவாளங்கள் – ரூ.7900 கோடி, இரட்டை இரயில் பாதைகள் அமைக்க ரூ.12000 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அகல ரயில் பாதைகள் அனைத்தும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மின்மயம் ஆகி விடும்.

இன்ஜின், சரக்கு பெட்டிகள், பிராயணிகள் கோச்சுகள் உற்பத்தி இலக்கு அதிகரிக்கப்படுகிறது.

3. இராணுவம் ரூ. 5.25 இலட்சம் கோடி மொத்த ஒதுக்கீடு.

இதில் மூலதன முதலீடு ரூ.1.52 இலட்சம் கோடி. (2021-22 இல் ரூ.1.35 இலட்சம் கோடி).

இராணுவ பொருள்கள் கொள்முதலில் 64% இப்போது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் நிறுவனங்களில் இருந்து வாங்கப்படுகின்றன. அந்த இலக்கு 68% ஆக உயர்த்தப்படுகிறது.

இறக்குமதி தேவையை குறைத்து உள்நாட்டில் வேலைவாய்ப்பை இது அதிகரிக்க உதவுகிறது.

4. மானியங்கள்: உணவு மானியம் ரூ.2.06 இலட்சம் கோடி. கோவிட் காரணமாக சென்ற ஆண்டு இது ரூ.2.86 இலட்சம் கோடி வரை இருக்கும் என்பது மதிப்பீடு. உர மானியம் ரூ.1.05 இலட்சம் கோடி. சென்ற ஆண்டு ரூ.1.40 இலட்சம் கோடி. பெட்ரோலிய பொருள்கள் மானியமும் குறைக்கப்பட்டுள்ளது.

5. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும் நேரடி உதவித்தொகை : ரூ.68000 கோடி. (ரூ.67500 கோடி). நூறு நாள் வேலைத் திட்ட ஒதுக்கீடு ரூ.73000 கோடி (25% குறைக்கப்பட்டுள்ளது).

ஆனால் கிராமச் சாலைகள் அமைக்க ரூ.19000 கோடி (ரூ.14000 கோடி) அதிகரிக்கப்பட்டுள்ளது. வீடுதோறும் குடிநீர் இணைப்பு (ஜல் ஜீவன்) வழங்க ரூ.60000 கோடி ஒதுக்கீடு. வீடில்லாத மக்களக்கு 80 இலட்சம் வீடுகள் கட்டித்தர ரூ.48000 கோடி ஒதுக்கீடு. பசுமை வீடுகள் மானியம் ரூ.20000 கோடி ஒதுக்கீடு.

இந்த மொத்த ஒதுக்கீடு சுமார் ரூ.2.88 இலட்சம் கோடி கிராமம் மற்றும் சிறு நகரங்களில் உள்ளவர்களுக்கு பெரிய பலன் தரும்.

6. சாலைகள், இரயில் தடங்கள், துறைமுகம், நீர்வழிப் போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ், விமான நிலையம், பெருநகர போக்குவரத்து உள்கட்டமைப்புக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு, வர்த்தக ஏற்றம் நடைபெறும்.
கவர்ச்சித் திட்டங்கள் இல்லாமல் நடைபெறும் இது போன்ற வளர்ச்சித் திட்டங்கள் நீண்ட கால பயன் தருபவை.


7. மூலதன பொருள்கள் இறக்குமதி சலுகைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசின் உத்தரவாத கடன் திட்டம் ECLGS,  உற்பத்தியை ஊக்குவிக்கும் PLI திட்டங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது தொழில் துறையினரிடம் வரவேற்பை பெற்றுள்ளது. சிறப்பு வரி (Surchage) குறைந்துள்ளது அவர்களுக்கு மேலும் உற்சாகம் அளிக்கும்.

8. பங்கு வர்த்தக நீண்ட கால ஆதாய வரியில் கூடுதல் வரி வரம்பு 15% ஆக நிர்ணயிக்கப்பட உள்ளது. கிரிப்டோ கரன்சி போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை ஆதாயம் மீது 30% வரி விதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே STT எனும் பங்கு பரிவர்த்தனை வரி வருவாய் இவ்வாண்டு ரூ.20000 கோடி ( எதிர்பார்த்தது ரூ.12000 கோடி) கிடைத்துள்ளதால் இது மீண்டும் புதிய இலங்கை அடையும் என்று சொல்லலாம்.

9. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி, அதில் மின் பகிர்மான இணைப்பில் சேரும் போது PLI சலுகை, அரசு உத்தரவாதம் தரும் பசுமை பத்திரங்கள் (Sovereign Green Bonds) சுற்றுச் சூழல் மாசைக் குறைக்க உதவும். அத்துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்கும்.

10. நலிந்த பொதுத்துறை வங்கிகள், காப்பீடு நிறுவனங்களுக்கு ஆதரவு நிதி எனும் அறிவிப்பு இல்லை என்பது நல்ல விஷயம். இலவச தடுப்பூசி நிதி ஒதுக்கீடும் இவ்வாண்டு இல்லை.


கடந்த இரு நாட்களாக பங்குச்சந்தை ஏற்றம், தொழில்துறையினர் வரவேற்பு ஆகியவற்றின் மூலம் பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் பட்ஜெட் மீது பெரிய எதிர்மறை எண்ணம் அல்லது விமர்சனம் இல்லை என்பதை உணர முடிகிறது.

அரசின் பொதுத்துறை பங்கு விலக்கல் இலக்கும் குறைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டுக்கு வெளியே ஐந்து மாநிலத் தேர்தலுக்குப் பின் பல சீர்திருத்தங்கள் தொடரும் என்பது என் எண்ணம். பார்க்கலாம்.

About Author

4 Replies to “பட்ஜெட் பார்வை”

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.