நம்ம ஆளுங்க கோவிலுக்கு போயிட்டு வருவதை இப்ப ரொம்ப ஈஸியாகவும் நடைபயிற்சி மேற்கொள்ளும் இடமாகவும் மாற்றி விட்டார்கள். பல ஊர்ல பெரிய கோவில்களில் பிரகாரத்தை சுற்றி இவங்க நடந்து வர்றதை பார்த்தா கோவிலுக்கு ஸ்வாமி தரிசனம் பண்ண வந்த மாதிரியே இருக்கமாட்டாங்க. பேசிகிட்டே நடக்கிறதுக்கு மட்டும் தான் இவங்களுக்கு பிரகாரம் தேவை. ஏன்னா நிறைய விளையாட்டு மைதானங்களில் நடக்கிறதுக்கு இடமும் இல்லை. கூட்டமும் ஜாஸ்தி. கோவிலுக்கு போய் ஒரு மணி நேரம் சுத்திட்டு வந்தா புண்ணியத்துக்கு புண்ணியம் ஆச்சுன்னு வாக்குஸ்தானத்தில் பத்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும் அந்த புண்ணியவான்களின் இல்லத்தரசிகள் சொல்லியிருக்க கூடும்.
சரி அது அவங்க சௌகர்யம். நாம விஷயத்துக்கு வருவோம். எல்லா பெரிய பெரிய சிவன் கோவில்களிலும் பார்த்தா அறுபத்து மூன்று நாயன்மார்கள் அப்படின்னு கற்சிலையோ விக்கிரகங்களோ வைச்சிருப்பாங்க. அந்த அறுபத்து மூன்று நாயன்மார்களின் பேர்களும் சத்தியமா 95% பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நமக்கு தெரிஞ்சதெல்லாம் அப்பர், சுந்தரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் அம்புட்டு தான். இன்னும் சிலருக்கு கண்ணப்பநாயனார் மாதிரி சில பெயர்கள் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கு. சிவத்தொண்டினை முழு மூச்சாக கொண்டு சிவனுக்கு கைங்கர்யம் செய்பவர்களுக்கு இந்த அறுபத்து மூன்று நாயன்மார்களின் பெயரகளும், அவர்களின் அவதார நட்சத்திரங்களும் கண்டிப்பாக தெரிந்திருக்கும்.
நாம சிவன் கோவிலுக்கு போனா என்ன பண்றோம்? யோசிச்சு பாருங்க. முன்னாடி இருக்கிற பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவோம். சுக்லாம்ப்ரதரம் சொல்லிட்டு நந்தியை கிராஸ் பண்ணிட்டு முருகனை பார்த்து ஒரு நமஸ்காரம் பண்ணிட்டு அப்படியே உள்ளே போய் சிவனை பார்த்துட்டு பக்கத்தில் இருக்கிற அம்பாளுக்கு ஒரு நமஸ்காரத்தை பண்ணிட்டு மனசுக்குள் காயத்ரியை சொல்லிட்டு வெளியே வந்து சண்டிகேஸ்வரர் முன்னாடி ஒரு சொடக்கு போட்டுட்டு அப்புறம் துர்க்கையையும் பைரவரையும் எதோ கடமைக்கு நமஸ்காரம் பண்ணிட்டு வந்துடுவோம். அவ்வளவு தான் நமக்கு தெரிஞ்சது.
சரி இதுல இந்த நாயன்மார்களை யாராவது நினைச்சு பார்க்கிறோமா என்றால் இல்லைன்னு தான் பதில் வரும். நமக்கு இருக்கிற நேரத்தில் கோயிலுக்கு போறதே பெரிய விஷயம் இதில் இவர்களை பற்றி நாம என்ன நினைக்கிறது. நமக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. இப்படித்தான் பலபேரின் மைண்ட் வாய்ஸ் இருக்கு.
நாயன்மார்களின் சிவ பக்திக்கு எத்தனையோ கதைகள் இருக்கிறது. உண்மையில் நடந்த சம்பவங்கள் இருக்கிறது. சாட்சிகளும் இருக்கிறது. ஒவ்வொருவரின் பக்திக்கும் மெச்சி அந்த சர்வேஸ்வரனே நேரில் வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு நாயன்மார்களின் பக்தியை பரிசோதித்து பார்க்கிறார். ஒவ்வொரு நாயன்மார்களும் தங்கள் குடும்பத்தை விட சிவபக்தியில் திளைத்து மூழ்கி இருந்தார்கள். இந்த நாயன்மார்கள் பட்ட கஷ்டத்தில் ஒரு சதவீதமாவது நாம் பட்டிருப்போமா என்றால் இல்லை என்ற பதில் தான் வரும். ஆண்டவன் கண்ணில் ரத்தம் வருகிறதே என்ற வருத்தத்தில் தன்னுடைய கண்ணையே கொடுத்த கண்ணப்பநாயனார், தன் ஒரே புதல்வனை பிள்ளைக்கறியாகப் படைத்த சிறுத்தொண்ட நாயனார் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
நாயன்மார்களில் வெகு சிலரே சமயநூல்களில் புலமை பெற்றவர்கள். மற்றவர்களெல்லாம் மிகச்சிறந்த பக்தர்கள் மட்டுமே! பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் மூலம் நமக்கு இறைவன் உணர்த்துகின்ற பாடம்.
இனி சிவன் கோவிலுக்கு சென்றால் இரண்டு நிமிடம் இந்த நாயன்மார்களையும் வணங்கி விட்டு வருவோம். இறைவனுக்கு தன்னை வணங்குபவர்களை விட தன்னுடைய அடியவர்களை வணங்குபவர்களை மிகவும் பிடிக்குமாம். அதனால் தான் அவனை பக்தவாத்ஸல்யன் என்று கூறுகிறோம்.
திருச்சிற்றம்பலம்.