கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆன கன்னட படம் “Seetharam Benoy: Case No.18”. விஜய் ராகவேந்திராவின் 50வது படம் இது. படம் முதல் பாதி முழுவதும் நடத்தை வேகத்தில் நகர்கிறது. ஆனால் ஒரு விஷயம் பாராட்டலாம். படம் முழுவதும் கதிக்கு சம்பந்தமாகவே நகர்கிறது. சம்பந்தம் இல்லாமல் அரசை விமர்சிப்பது அல்லது இந்து மத நம்பிக்கைகளை கேலி செய்வது போன்ற எந்த வித விஷயங்களும் செய்யாமல் படத்தை எடுத்துள்ளனர். அதற்காக பாராட்டலாம். படத்தைப் பொறுத்தவரை மற்றொரு விஷயம் என்னவென்றால் ஒரே நேரத்தில் டிவியிலும் தியேட்டரிலும் வெளியிட்டனர். இதுவும் பாராட்ட வேண்டிய ஒரு புது முயற்சி ஆகும்.
கதை
ஹவேரியில் இருந்து கிராமத்துக்கு பணி மாறுதலில் செல்லும் காவல் துறை அதிகாரி சீதாராம் பினாய். அவர் செல்லும் கிராமங்களிலும் சுற்று வட்டாரங்களிலும் நடக்கும் தொடர் கொள்ளையை தடுத்து அவர்களை கைது செய்வதுதான் முதல் கேஸாக வருகிறது. இவர் பணியில் சேரும் அன்றே இவரது வீட்டிலும் கொள்ளையடிக்கப்படுகிறது. இதை யார் செய்கிறார்கள், எப்படி தொடர் கொள்ளையை திட்டமிடுகிறார்கள் என்று கண்டறிவதிலேயே முதல் பாதி முடிகிறது. மிக மிக மெதுவாக செல்கிறது கதை . பணி மாறுதலில் இவர் வருவதற்கு முன் ஹவேரி ஸ்டேஷனில் ஒரு கேஸ் கண்டுபிடிக்கமுடியாமல் இருக்கிறது. அதுதான் கேஸ் எண் 18. அதற்கும் இங்கு நடக்கும் கொள்ளைக்கும் என்ன சம்பந்தம் ? சீதாராமின் மனைவி கொலை செய்யப்பட்டவுடன் கதையின் போக்கு மாறுகிறது. கதையும் கொஞ்சம் வேகம் எடுக்கிறது.
ஒரு க்ரைம் த்ரில்லர் படத்திற்கு உரிய வேகம் திரைக்கதையில் இல்லை. பல இடங்களில் பார்ப்பதற்கு சலிப்பை உண்டாக்கும் காட்சி அமைப்புகள். அதே போல் கொள்ளையர்களாய் வருபவர்களின் நடிப்பும் தூக்கத்தை வரவழைக்கிறது. முதல் பாதிக்கு இரண்டாம் பாதி பரவாயில்லை. சீதாராமின் மனைவியின் இறப்பிற்கும் Case No.18க்கும் என்ன சம்பந்தம். Case No.18 என்பது ஒரு சீரியல் கில்லர் வழக்கு. தொடர்ந்து காவல் துறை அதிகாரிகளின் மனைவிகள் மட்டும் கொல்லப்படுகிறார்கள். ஒருவருக்கொருவர் சம்பந்தம் இல்லாத காவல் அதிகாரிகளின் மனைவிகள் ஏன் கிட்டத்தட்ட ஒரே மாதிரி கொல்லப்படுகிறார்கள் ? அதற்கும் தொடர்கொள்ளைக்கும் என்ன சம்பந்தம் ? இதைத்தான் சீதாராம் பினாய் தனது மனைவியின் இறப்பிற்கு பிறகு கண்டறிகிறார்.
பொறுமை இருப்பின் ஒரு முறை பார்க்கக்கூடிய படம். முதல் பாதி ஆங்காங்கே பார்த்து ஓட்டி விட்டாலும், கதையில் பெரிதாக எதுவும் தவற விடமாட்டீர்கள். Seetharam Benoy: Case No.18 அமேசான் ப்ரைமில் இருக்கிறது.