என்ன பேரு வைக்கலாம்? எப்படி அழைக்கலாம்?

“ஒன்று ஒருவருக்குச் சொந்தமானது; ஆனால், அதை அவர் உபயோகிப்பதை விட மற்றவர்கள்தான் அதிகம் உபயோகிப்பர்; அது என்ன? ” என்று கேட்டு, அது “அவரது பெயர்” என்று பதில் சொல்வது பிரசித்தி பெற்ற சுவாரசியமான கேள்வி -பதில்.’பெயர்’ என்பது ஒரு மனிதனின் வாழ்வில் மிக மிக முக்கிய அங்கம். அதே பெயர்கள் அடை மொழிகள் சேர்க்கப்பட்டு, சிதைக்கப்பட்டு, சில சமயம் பெயரே காணாமல் போய், ஒரு ஜடப் பொருளோ, ஒரு உயிரினமோ கூட ஒருவரைக் குறிக்கும் அளவு ஆகி விடுவதும் உண்டு. என் அனுபவத்தில், சிறுவயது முதலே இதுகுறித்து மிகவும் வியந்திருக்கிறேன்.

ஒரு முறை விடுமுறைக்கு கிராமத்தில் என் பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்த போது, என் தாத்தா அவரது நண்பரிடம் ‘நீ போற வழில ஏணி கோபாலனை பார்த்தா, நான் வர சொன்னேன்னு சொல்லு’ என கூறியபோது எனக்குள் குழப்பம் வந்தது. சற்று நேரம் கழித்து, ஆறடிக்கு மேல் உயரமாக ஒரு பெரியவர் வந்து, ‘தாத்தா இல்லியாம்மா?’ என்று கேட்டார். ‘அவர் கோவிலுக்கு போயிருக்கார் ‘ என்று கழுத்தை முழுதும் உயர்த்தி அவர் முகத்தைப் பார்த்து பதில் சொன்னேன். ‘சரிம்மா.அவர் வந்ததும் ஏணி வந்துட்டு போனேன்னு சொல்லு’ என்றதும் தலையே சுற்றியது! சரி. சரி….. இவர்தான் ஏணி கோபாலன்” என புரிந்து கொண்டேன். தாத்தாவாவது பரவாயில்லை; ‘ஏணி கோபாலன்’ என சொன்னார். இவர் “ஏணி” என்றே சொன்னது எனக்கு இன்றும் சிரிப்பை வரவழைக்கிறது!

தாத்தா திரும்பி வந்ததும், பாட்டி ‘என்ன இவ்ளோ நேரமாயிடுத்து?’ என கேட்டாள். அவர் , ‘ஏன் கேக்கற போ, வழில ஒட்டடைக் குச்சி புடிச்சுண்டுட்டான்’என்றாரே பார்க்கலாம்!

அன்றைய காலை அனுபவத்தில், அவரும் தெரியாத்தனமாக உயரமாக வளர்ந்து விட்ட ஒருவர் என்று புரிந்தாலும் ஒருவர் ஏன் ஏணி ?ஒருவர் ஏன் ஒட்டடக்குச்சி? என்று யோசித்தேன்.இரண்டு நாட்கள் கழித்து அந்த ‘ஒட்டடைக்குச்சி’யைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்த போது புரிந்தது! பாவம். அவர் ‘ஏணியை’யை விட ஒல்லியான உடல் வாகு !

இந்த பெயர் சூட்டும் நாயகர்களிடமிருந்து, சற்றே பூசினாற் போல் இருந்தாலும்
தப்பிக்க முடியாது. முடியவில்லை ‘தடிமுத்து’ தாத்தாவினால்!என்ன உயரம் இருக்க வேண்டும்? ஒருவர், என்னஉடல்வாகு இருக்க வேண்டும் என்பது அந்த கிராமத்துவாசிகளின் manual-ல் பார்த்தால்தான் தெரியும் -……ஆம். படைக்கும் பிரம்மன் சற்று நிறம் மட்டாக படைத்து விட்டதால் ஒருவர் ‘கறுப்பு தாத்தா? கிட்டத்தட்ட மேற்கத்திய நிறம் உள்ளவரும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர் ‘வெள்ளை எலி’!!

சரி, இந்தமாதிரி உவமைகளுடன்தான் பட்டப் பெயர்களா என்றால் அதுவும் இல்லை. சிறுகுழந்தையாக இருந்தபோது யார் வீட்டிற்கு வந்தாலும் ‘டான்ஸ் ஆடி காட்டவா?’ என கேட்டு ஆடிய அன்றைய குழந்தை – இன்றைய பாட்டியின் பெயர் — ‘ஆட்டம்’ ….ஆம்! வெறும் ‘ஆட்டம்’ மட்டுமே !

உறவு முறை சொல்லும்போது கூட,’இது ஆட்டத்தோட சம்பந்திதானே?’ என்று ஒருவர் பேசியதைக் கேட்டாரே பார்க்கலாம்!
அட….இதெல்லாம் போகட்டும் என்றால், ஒருவர் அனேகமாக எப்போதும் வைத்திருக்கும் பொருளே அவர் பெயரின் இடத்தை பிடித்து கொள்வதும் உண்டு. அப்படி ஒருநாள் என்பாட்டி ‘கிளி பாம்பேலேந்து வந்திருக்கா போல இருக்கு’ என சொன்னபோது ‘யாரு பாட்டி அது ? ‘ என்று கேட்டேன். அந்த “கடைசி ஆத்து மாமி’ என்றார். ஆரம்பித்தேன்

நான் என் ஆராய்ச்சியை .அந்த மாமியிடம் ‘உங்கள ஏன் எல்லாரும் கிளின்னு சொல்றா?’என்று கேட்டே விட்டேன். (இதற்கும் அந்த மாமிக்கு சரியான சப்பைமூக்குதான்) .

‘அது ஒண்ணும் இல்லம்மா . நான் கொழந்தையா இருந்த போது 10 வயது வரை ஒரு கிளிபொம்மைய எடுத்துண்டுதான் எங்கயுமே போவேனாம்!அதனால அப்படி பேர் வந்தது’ என்றார். கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஒரு பட்டப் பெயர் தொற்றிக் கொள்ள முடியுமா என்று அசந்தே போனேன்! ‘வெத்தலபெட்டி’, ‘விசிறி’, ‘பொடிடப்பா’ எல்லாம் இந்த தலைப்பின் கீழ்தான் வரும்!
அடிக்கடி வாழ்க்கையை சலித்து கொள்பவர் ‘அழுமூஞ்சி’ என்றால் , எப்போதும் குபீர் சிரிப்பு சிரிப்பவர், ‘ஹேப்பி’ ….வெறும் – ஹேப்பிதான்.. பெயரே காணாமல் போய்விட்டது!

இப்படியாக அந்த கிராமத்தில் உருவங்களும், குணாதிசயங்களும், கையில் வைத்திருக்கும் பொருள்கூட, அவரவர் பெற்றோர்கள் விழாஎடுத்து சூட்டிய பெயரையே விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது.
சரி.. சரி….லீவுக்கு ஊருக்கு வந்து , திண்ணையில் உட்கார்ந்து , கிடு கிடு என எழுதிக் கொண்டிருக்கும் என்னை எதிர்வீட்டு தாத்தா ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருக்கிறார். நாளை என் பாட்டியிடம்,’உங்க கிறுக்கி பேத்தி ஊருக்கு போயிட்டாளா’னு கேட்டாலும் கேட்பார்.
எனவே நான் எழுதுவதை முடித்துக் கொள்கிறேன்!!

About Author