தேவ் ப்ரயாக்

கங்கை உருவாகிறாள் – நதிகளின் சங்கமம் – 2

This entry is part 2 of 4 in the series கங்கை உருவாகிறாள்

ரகுநாத் ஜி மந்திர்

சங்கமதிற்கு அருகில் சில படிகள் ஏறினால் இருக்கும் ஒரு கோவில் ரகுநாத் ஜி மந்திர் என்று அழைக்கப்படும் கோவில். உள்ளூர் வாசிகள் இந்தக் கோவில் ராம் ஜி கோவில் என்றும் இராவணனை வதம் செய்த பிறகு அவருக்கு உண்டான பிரம்மஹத்தி தோஷத்தினை போக்கிக்கொள்ள இங்கே தவம் இருந்தார் என்றும், இங்கேயே கோவில் கொண்டார் என்றும் சொல்வதோடு, அவர் இராமபிரான் தான் என்று நிரூபிக்க அவரது சிலையின் கையில் ஒரு வில்லையும் அம்பையும் வேறு கொடுத்துவிட்டார்கள்.

ஆனால் நம் ஊர் கணக்கின் படி இந்தக் கோவில் விஷ்ணு பகவானின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று என்றும் இங்கே இருப்பவர் நீலமேகப் பெருமாள் என்றும் 108 திவ்ய தேசங்களில் இந்த இடம் 103-ஆவது என்றும் இந்த ஊரை திருக்கண்டம் என்றும் கடிநகர் என்றும் சொல்கிறார்கள். இரண்டில் எது உண்மை ஆக இருந்தாலும் நான் சொல்ல விரும்புவது ஒன்று தான் – அது இந்த இடம் மிகவும் அழகான ஒன்று என்பது தான். கீழே சங்கமம், கங்கை ஆரம்பிக்கும் இடம் (கங்கையின் தோற்றம் கங்கோத்ரி என்று சொன்னாலும் கங்கை நதி என்று பெயர் பெறுவது இந்த ஊரில் தான்) என்பதோடு மிகவும் அழகான இடம். கோவில் உள்ளேயும் வெளியேயும் அழகாக இருக்கிறது. 

நான் கோவிலுக்குச் சென்றிருந்த போது, தமிழகத்தின் சென்னை நகரிலிருந்து ஒரு குழுவாக வைஷ்ணவர்கள் வந்திருந்தார்கள். அவர்களை அழைத்து வந்த குருவும் கோவில் குறித்த தகவல்களை குழு உறுப்பினர் அனைவருக்கும் சொல்லிக்கொண்டு இருந்தார். பத்ரி எனப்படும் பத்ரிநாத் நோக்கி செல்லும் வழியில் இங்கேயும் சங்கமத்தில் குளித்து பெருமாளை சேவித்துவிட்டு புறப்படுவதாக சொன்னார்கள். அவர்களும் என்னிடமும் பேசிக்கொண்டு இருந்துவிட்டுச் சென்றார்கள். கோவில் வளாகத்தில் நரசிம்மருக்கும் ஒரு சன்னதி உள்ளது. தவிர ராமர் தவம் செய்த இடம் என ஒரு பாறை போன்ற அமைப்பினையும் வைத்து இருந்தார்கள். 

கோவிலுக்குச் செல்வதற்கு முன்னர் இருந்த ஒரு இனிப்பகத்தில் பால் கொண்டு செய்யப்பட்ட இனிப்பை அரை கிலோ வாங்கிக் கொண்டு சென்றதை நிவேதனம் செய்து கொடுத்தார் உள்ளூர் பண்டிட் ஜி. ராமர் தவம் செய்ததாக சொல்லப்பட்ட பாறை இருக்கும் இடத்தில் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்த பிறகு கடைத்தெரு வழியே மீண்டும் தங்குமிடம் நோக்கி நடந்து வந்தோம். 

இராமர் தவம் செய்த இடம் என்று சொன்னாலும் இராமர் குறித்த இன்னுமொரு இடமும் மாலை வேளையில் பார்க்கக் கிடைத்தது எனக்கு! மேலும் தகவல் குறிப்புகள் வரும் பத்திகளில் சொல்கிறேன். 

சங்கமத்தில் குளித்து, ரகுநாத் ஜி மந்திர் தரிசனம் முடித்து மீண்டும் அந்த செங்குத்தான சில படிகள் (50 இருக்கலாம்!) வழி இறங்கி கிராமத்துப் பாதை வழி தங்குமிடம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். முன்பு சாதாரண மண் சாலைகள் அனைத்தும் தற்போது Concrete சாலைகளாக மாறி இருக்கின்றன. நிறைய வீடுகள் திட்டம் இல்லாமல் கட்டியவை என்று தோன்றியது. பெரிதாக தேவைகள் இல்லாமல் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருக்கும் மக்கள்…… பார்க்கும் அனைத்து மக்களிடமும் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி நிலவுகிறது. 

நாங்கள் வரும் வழியில் ஒரு இரும்புப் பாலம் – அதில் இருக்கும் பதாகை – இந்தப் பாலம் 1895 ஆம் ஆண்டில் பழுது பார்க்கப்பட்டது என்று தகவல் சொல்கிறது. அப்படி என்றால் நிர்மாணிக்கப்பட்ட வருடம் இன்னும் பல ஆண்டுகள் முன்னராக இருக்கலாம். தற்போது பலமிழந்து இருப்பதால் இரு பக்கமும் சுவர் எழுப்பி அடைத்து வைத்து இருந்தார்கள். ஆனாலும் நடந்து செல்லும் மக்கள் பக்கத்தில் ஒரு வழி உண்டாக்கி பாலத்தின் வழி நடக்கிறார்கள். நாங்களும் நடந்தோம். 

கீழே பிரவாகமாக ஒடும் அலக்நந்தா நதி, நடக்கும்போது அதிரும் தொங்கு பாலம் என அந்த நடை ஒரு வித பய உணர்வுடன் ஒரு வித சிலிர்ப்பையும் அளித்தது. இத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதில் பயன்படுத்தி இருக்கும் இரும்புக் கம்பிகள் துரு இல்லாமல் காட்சி தருகிறது. அந்தக் காலத்தில் கிடைத்த பொருட்கள் தரமானதாக இருக்கிறது என்று பேசிக்கொண்டு வந்தோம். நீண்ட நடைக்குப் பிறகு தங்குமிடம் வந்து சேர தலியா கஞ்சியும் தேநீரும் கொண்டு வந்தார்கள் – காலை உணவு. நான் தங்கி இருப்பது மாணவர்களுக்கான ஒரு ஹாஸ்டல் பக்கம் என்பதால் இந்த ஏற்பாடு. மதிய உணவு இரண்டு ரொட்டியும் கொஞ்சம் தால் (ராஜ்மா) போதும் என்று சொல்லி இருந்தேன். அதிக காரம் இல்லாமல் வீட்டு உணவு போன்ற சுவை. 

முந்தைய நாள் இரவு உறக்கம் இல்லை என்பதால் மதியம் சற்று கண் அசர்ந்து உறங்கினேன். மாலை ஒரு அற்புத அனுபவம் கிடைத்தது. அது குறித்து தொடர்ந்து எழுதுகிறேன்.  அதற்கு முன்னர், இப்பகுதியில் இருக்கும் பேருந்து வசதிகள் குறித்து பார்க்கலாம். 

பேருந்து வசதிகள்

நம் ஊரில் வசிக்கும் மக்கள் எப்போதும் சொல்லும் ஒரு மிகப் பெரிய குறை – நம் அரசு பேருந்து வசதிகள் செய்து தருவதே இல்லை. இருக்கும் பேருந்துகள் நன்றாக இல்லை என எப்போதும் அரசைக் குற்றம் சாட்டுவது வழக்கம். அப்படியானவர்கள் ஒரு முறையாவது உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வர வேண்டும். இங்கே, குறிப்பாக மலை பிரதேசங்களில் அரசு பேருந்துகளை இயக்குவது இல்லை. 

இருப்பவை சிலவும் தனியார் வாகனங்கள். அவர்கள் வசதிகள் குறித்து கவலை கொள்வதில்லை. பத்ரிநாத் கேதா்நாத் கோவில்கள் திறந்து இருக்கும் நாட்களில் எல்லா பேருந்துகளும் ஹரித்வாரிலிருந்து பத்ரிநாத் வரை மட்டுமே இயக்குகிறார்கள். வழியில் இருக்கும் பல இடங்களுக்கு பயணிகளை ஏற்றிக் கொள்வதில்லை. காத்திருக்க வேண்டியிருக்கிறது. அப்படியே ஏற்றிக் கொண்டாலும் நின்று கொண்டு தான் பயணிக்க வெண்டு. கொஞ்சம் தூரம் அல்ல! இன்று காலை கூட நான்கு ஐந்து பேருந்துகள் விட்ட நிலையில் கிடைத்த பேருந்தில் ஏறி சுமார் 30 கிலோ மீட்டர் மலைப்பாதையில் நின்று கொண்டே பயணித்தேன். 

இந்த விஷயத்தில் ஹிமாச்சல் பிரதேச அரசு பரவாயில்லை – நிறைய பேருந்துகளை இயக்குகிறது. நம் ஊரில் கிடைக்கும் வசதிகள் குறித்த குறை சொல்வது தவறு என்பது இது போன்ற இடங்களுக்கு வந்தால் புரியும். பீஹார் மாநிலத்தில் பயணித்த போதும் இந்த உணர்வு வந்தது. வசதி இல்லாத போது யாரை குறை சொல்ல முடியும்……. ஆகவே நமக்கு கிடைத்த கிடைக்கும் வசதிகள் அதிகம் என்றே தோன்றுகிறது…. 

மாதா கங்கைக்கு முதல் ஆரத்தி

தேவ் பிரயாக் நகரிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மற்றுமொரு பிரயாக், அதாவது ருத்ர பிரயாக் வரை பயணித்து திரும்பினேன்.  அது குறித்து பார்ப்பதற்கு முன்னர், முதல் நாள் மாலை எனக்குக் கிடைத்த ஒரு அற்புத அனுபவம் குறித்து பார்க்கலாம். 

இதற்கு முன்னரும் எனது முகநூலிலும் எனது வலைப்பூவிலும் கங்கை நதிக்கு மாலை வேளையில் செய்யப்படும் ஆரத்தி குறித்து எழுதியது உண்டு. ஹரித்வார், வாரணாசி, ரிஷிகேஷ் என்று மூன்று இடங்களில் கங்கைக்கு ஆரத்தி எடுப்பதை நேரடியாக தரிசிக்கும் அனுபவம் இது வரை கிடைத்து இருக்கிறது. ஆனால் முந்தைய நாள் மாலை, என்னுடைய இந்த பிரயாகை பயணத்தில் கிடைத்த அனுபவம் முதல் மூன்றை விட சிறந்ததாக சொல்லலாம். ஏன் எனில், இந்த முறை நானே எனது கைகளால் அஞ்சு அடுக்கு கொண்ட பெரிய தீபத்தினால் கங்கை நதிக்கு ஆரத்தி எடுக்கும் பாக்கியம் கிட்டியது.  அதிலும் தேவ் பிரயாக் நகரில் அலக்நந்தா மற்றும் பாகீரதி ஆகிய இரண்டு நதிகளும் சங்கமித்து கங்கை என்று பெயர் பெற்ற இடத்தில் இருந்து அருகே இருக்கும் படித்துறையில் ஆரத்தி எடுக்க முடிந்தது. அந்த வகையில் கங்கை நதிக்கு எடுக்கப்படும் முதல் ஆரத்தி என்றும் சொல்லலாம்.

மாலை நேரம் வாருங்கள் கங்கை ஆரத்தி பார்த்து வருவோம் என்று இங்கே இருக்கும் நபர் அழைக்க நானும் நடந்து சென்றேன். கூடவே இரண்டு பெரியவர்கள் வந்தார்கள். நான்கு பேருமாக ராம்குண்ட் எனும் படித்துறைக்கு சென்ற போது ஆரத்திக்கான ஏற்பாடுகள் செய்து தயாராக இருந்தார்கள். என்னை உட்கார வைத்து, சங்கல்பம் செய்து பூஜைகள் முடித்து கங்கைக்கு ஆரத்தி எடுக்க வைத்தார்கள்….. மனதுக்கு மிகவும் இதமான சூழலாக அமைந்தது அந்த நிகழ்வு. ஆரத்தி எடுத்த பின்னர் அங்கே படித்துறையில் அரை மணி நேரத்திற்கு மேல் அமர்ந்து கங்கை நதியின் ஒட்டத்தினைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தேன். மனதுக்குள் அப்படி ஒரு அமைதி…… அப்படியே  அங்கேயே அமர்ந்து கொண்டு இருக்கலாம் என்று தோன்றியது……. நிதர்சனம், மணக் கண் முன்னே தெரிய அங்கிருந்து அனைவருடனும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தேன். அது ஒரு நீண்ட நடைப் பயணமாக அமைந்தது. 

ராம் சரண் பாதுகா

இதற்கு முந்தைய பத்திகளில் ரகுநாத் ஜி மந்திர் குறித்து எழுதும் போது, அந்த கோவில் வளாகத்தில் தான் ராமர் தவம் செய்தார் எனவும் அவர் அமர்ந்து தவம் செய்த கல் போன்ற அமைப்பு அக்கோவிலில் இருப்பதையும் சொல்லி இருந்தேன். ஆனால் இதே ஊரில் இன்னும் ஒரு இடத்தில் இராமர் இங்கே வந்தபோது அவரது சரண்பாதுகா  பதிந்த பாறை இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். அந்த இடம் இதற்கு முன்னர் பார்த்த ராம் குண்ட் படித்துறைக்கு அருகே இருக்கிறது. 

மாலை கங்கைக்கு ஆரத்தி காண்பித்து முடித்த பின்னர் இங்கே ஹிந்தியில் பாலூ என்று அழைக்கப்படும் மணல் வழி இறங்கி பெரிய பெரிய கூழாங்கற்கள் மீது கவனமாக கால் வைத்துச் சென்றால் ராமர் கால் தடம் தெரியும் பாறை இருக்கிறது. ஒரு பெரிய பாறையில் பெரிய கால் தடம் ஒன்று தெரிகிறது. அந்த தடம் இராமபிரான் உடையது என்பது நம்பிக்கை. அதைச் சொல்லும் பதாகை ஒன்றும் வைத்து இருந்தார்கள்.

மணலில் தடம் வைத்தால், அப்போதைக்கு தெரிந்தாலும் தண்ணீர் வந்தவுடன் மறைந்து விடும். ஆனால் ஒரு பெரிய கற்பாறையில் கால் வைத்தால் நிச்சயம் தடம் பதியாது அல்லவா? ஆனால் ஒரு கால் தடம் அந்தப் பாறையில் நன்றாகவே தெரிகிறது. நிச்சயம் கற்பாறையில் இருக்கும் கால் தடம் அதிசயமான விஷயம் என்பதில் சந்தேகமில்லை. ஏதோ ஒரு விதத்தில் ஆண்டவன் தனது இருப்பை உணர்த்திக் கொண்டே இருக்கிறான் என்று தோன்றியது…..

அந்த கால் பாதத்தினைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்கிறார்கள். நானும் அப்படியே செய்தேன். பல விஷயங்களுக்கு நம்பிக்கை மட்டுமே மூல ஆதாரம் என்று சொல்லலாம் இல்லையா? ஶ்ரீராமபிரானின் சரண் பாதுகாவை ஸ்பரிசித்து உணர்ந்தது போல ஒரு உணர்வு வந்தது. 

இந்தப் பயணத்தில் பல இடங்களுக்கு நடந்து சென்று தான் பார்க்க வேண்டி இருந்தது. இது போன்ற மலைப் பகுதிகளில் ஆட்டோ, ரிக்ஷா, பேட்டரி ரிக்ஷா போன்றவை இயங்குவதில்லை. ஜீப் போன்ற வாகனங்கள் தான் அதிகம் இயங்குகின்றன. அதில் பத்து பன்னிரெண்டு பேரை பொதிமாடு போல அடைத்து வைத்து அழைத்துச் செல்கிறார்கள். இல்லை என்றால் நீங்கள் ஒரு வாகனத்தை தனியாக அமர்த்திக் கொள்ள வேண்டியிருக்கும். அப்படியே வாகனம் வைத்துக் கொண்டாலும் குறிப்பிட்ட அளவு தான் அதில் பயணிக்க முடியும். பிறகு நடக்க வேண்டியிருக்கும் – அதுவும் சம அளவில் இல்லா படிகள் வழி ஏறி, இறங்கி செல்ல வேண்டியிருக்கும். உள்ளூர் வாசிகள் பலரும் இரு சக்கர வாகனம் வைத்து சமாளிக்கிறார்கள். சுற்றுலா வரும் நபர்கள் ஹரித்வார் அல்லது ரிஷிகேஷ் வரை இரயில்/பேருந்து மூலம்  வந்து இரு சக்கர வாகனத்தினை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

இந்தப் பயணத்தில் நான் அப்படி நிறைய நடந்தேன். அது மட்டுமல்லாமல் அப்படியே உள்ளூர் நண்பர்களுடன் பேசிக்கொண்டு நடந்ததும் நடந்தது. இங்கே மலைகளில் இருக்கும் சிறு சிறு கிராமங்கள் வரை நடந்து சென்றோம். சாலை வரை வந்தாலும் மலைக்கு மேல் இருக்கும் வீட்டிற்கு ஒவ்வொரு முறையும் நடக்க வேண்டும் – நடப்பது என்று சொல்வதை விட மலையேற்றம் செய்ய வேண்டும் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். அதுவும் மூட்டை முடிச்சுகள் சுமந்தபடி நடப்பது சுலபமல்ல. இங்கே இருப்பவர்கள் வாழ்க்கை மிகவும் கடினமானது என்பதை நாங்கள் நடந்து சென்றபோது உணர்ந்து கொள்ள முடிந்தது. 

இங்கே இருக்கும் பிரச்சனைகள் சுலபமாக தீரக்கூடியவை அல்ல. சரியான போக்குவரத்து வசதி, மருத்துவமனை வசதி என்று பல பிரச்சனைகள் இருக்கின்றன. ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் உள்ளூரில் இருக்கும் மருத்துவரிடம் காண்பித்து மருந்துகள் பெறலாம் என்றாலும் தீவிர சிகிச்சை தேவை என்றால் இங்கே இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அதுவும் மலைப்பாதை என்பதால் குறைந்தது இரண்டு மூன்று மணி நேரம் ஆகும் என்பதால் அப்படி அழைத்துச் செல்லப்படும் நோயாளியின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. 

இப்படி நிறைய விஷயங்கள் குறித்து பேசிக்கொண்டே பேசிக்கொண்டு நடந்தோம். அன்றைய தினம் நான் நடந்த மொத்த தூரம் 14 கிலோ மீட்டர்! 

எனது தேவ் பிரயாக் பயணத்தில் முதலில் திட்டமிட்டது தேவ் பிரயாக் மட்டுமே. ஆனால் முதல் நாள் மாலை தங்குமிடம் திரும்பியதும் சற்று யோசித்த பிறகு இன்னும் இரண்டு நாட்கள் விடுமுறை இருப்பதால் ஒரு நாள் தில்லி நோக்கிய பயணத்திற்கு ஒதுக்கினாலும் மேலும் ஒரு நாள் இருப்பதால் இன்னும் ஒரு இடத்திற்கு பயணம் செய்யலாம் என்று தோன்றியது. 

சில வருடங்களாக பஞ்ச் பிரயாக் என அறியப்படும் தேவ் பிரயாக், ருத்ர பிரயாக், கர்ண பிரயாக், சோன் பிரயாக் மற்றும் நந்த் பிரயாக் ஆகிய ஐந்து இடங்களுக்கும் சென்று வர திட்டம் இருந்தது. ஆனால் மொத்தமாக இந்த ஐந்து இடங்களுக்கும் பயணிக்க, நின்று நிதானித்து எல்லா இடங்களையும் பார்க்க, குறைந்தது ஒரு வாரம் தேவை. ஒரே சமயத்தில் ஒரு வாரம் விடுமுறை கிடைப்பது அரிதாக இருந்ததால் பயணம் திட்ட அளவில் மட்டுமே இருந்தது. இந்தப் பயணத்தில் நேரம் கிடைக்க, தேவ் பிரயாக் நகரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ருத்ர பிரயாக் வரை சென்று தேவ் பிரயாக் திரும்பலாம் என்று முடிவு எடுத்தேன்.

முதல் நாள் இரவு இரண்டு சப்பாத்தி, தால் என லைட் ஆக உணவு எடுத்துக் கொண்டபின் நன்கு உறங்கினேன். நீண்ட தூரம் நடந்த களைப்பில் நல்ல உறக்கம். காலை ஐந்து மணிக்கு விழிப்பு வந்துவிட அன்றைய தினத்தின் பயணத்திற்காக தயார் ஆனேன். சரியாக ஏழு மணிக்கு நண்பர் அவரது பணியாளரை இரு சக்கர வாகனத்தில் பேருந்து நிலையம் வரை கொண்டு வந்து விடச் சொல்லி விட்டார். நான் தங்கிய இடத்தில் இருந்து பேருந்து நிற்கும் இடம் மூன்று கிலோமீட்டர் என்றாலும் மலைப்பாதை என்பதால் நடப்பது கடினம். இரு சக்கர வாகனத்தில் வந்தாலும் சாலை இருந்த நிலையில் முதுகு ஒரு வழியாகிவிட்டது.

அந்த ஊரில் இருந்து புறப்படும் பேருந்துகள் இல்லை. ஹரித்வார் அல்லது ரிஷிகேஷ் நகரிலிருந்து வரும் பேருந்துகள் தான். அப்படி வந்த பேருந்துகள் எதிலும் உட்கார இடம் இல்லை. நின்றபடி 60 கிலோமீட்டர் பயணிக்க எனக்கு விருப்பமில்லை. நான்கு ஐந்து பேருந்துகளை விட்ட பிறகு, ஒரு பேருந்து வர, அதிலும் இடம் இல்லை. அங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஶ்ரீநகர் என்ற இடத்தில் அமர இடம் கிடைக்கும் என்று சொன்னதால் அந்த சிறு பேருந்தில் நின்றபடி பயணிக்க முடிவு எடுத்தேன்.

என் உயரத்திற்கு அந்த பேருந்தில் நின்று பயணிப்பது மிகவும் கடினமான தான் இருந்தது. என்றாலும் பயணம் சிறப்பாகவே அமைந்தது. 

தொடரும்..

Series Navigation<< கங்கை உருவாகிறாள் – நதிகளின் சங்கமம் – 1கங்கை உருவாகிறாள் – நதிகளின் சங்கமம் – 3 >>

About Author