- காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் – 1
- காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் – 2 – ராமேஸ்வரம் !
- காசி யாத்திரை மகாத்மியங்கள் & அனுபவங்கள் 3
மண்டபத்தில் பைரவ, கபி தீர்த்தங்கள். தங்கச்சி மடத்தில் ருணவிமோசன, வில்லுறுணி, சீதா குண்டம், மங்கள தீர்த்தங்கள். அருகில் ஏகாந்த ராமர் கோவில். உள்ளே அமிருதவாபி கிணறு. இங்கெல்லாம் யாரும் அதிகம் போவதில்லை. ராமேஸ்வரம் சென்றடைய அவசரம். அது சரி, நாம் ‘தங்கச்சி மட’த்தை பற்றித் தானே பேசிக் கொண்டிருந்தோம். அந்த கதையை பார்ப்போம்.
ராமநாத புரத்தை ஆண்ட சேதுபதிகள் ராமேஸ்வரம் வரும் யாத்ரீகர்களின் சௌகர்யத்தை முன்னிட்டு தர்ம சத்திரம் கட்டி இருக்கிறார்கள். எனினும், அதன் பொறுப்பில் இருந்தவர்கள் பல காரணங்களை உத்தேசித்து குறைந்த அளவு கட்டணம் வசூலித்திருக்கிறார்கள். விஷயம் ராஜாக்களின் காதுகளை எட்டிற்று. மேற்பார்வை செய்து கொண்டிருந்தவர்களின் மனைவிகளை (சகோதரிகள்) கூப்பிட்டு இது மாதிரி குற்றங்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்று கேட்டிருக்கிறார். அவர்கள் ‘கைகளை வெட்டி விட வேண்டியது தான்’ என்று சொல்லி இருக்கிறார்கள். ‘அவர்கள் உங்கள் கணவன் மார்களாக இருந்தால்?’ ‘அப்போதும் அதே தீர்ப்புதான்’. இதைக் கேட்டதும் சேதுபதிகள் சிலிர்த்துப் போனார்கள். தீர்ப்பு அளித்தவர்கள் அவர்களது பெண்கள் !! தண்டனை அடைந்தவர்கள் மாப்பிள்ளைகள் !! என்னே அவர்களது தர்ம ஞாயங்கள் !! சகோதரிகளின் நினைவை போற்றும் விதமாகவே அக்காள், தங்கச்சி மடங்கள் (சற்று மாறுபட்ட கதையை சமீபத்தில் படித்தேன்).
இடத்தின் பெயரை மடம் என்று சொல்லும் பொது இன்னொன்று நினைவுக்கு வருகிறது. பேட்டை, பாளையம், வலசு என்று முடியும் ஊர்களின் பெயர் போலவே மதுரையை கடந்த பின் பல கிராமங்களின் நாம கரணங்கள் ‘ஏந்தல்’ என்றே முடிகிறது.
மண்டபத்தில் இருந்தே வலப்புறத்தில் இந்திய பெருங்கடல் தெரிய ஆரம்பித்து விடுகிறது. பாம்பனை கடந்து செல்ல அறுபது ரூபாய் நுழைவுக் கட்டணம். ராமேஸ்வரத்தை நெருங்கியவுடன் பல பதாகைகள். லாட்ஜ் ப்ரோக்கர்கள். நேர் எதிரில் தெரிவது மேற்கு கோபுரம். மாட வீதிகளில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வழி காட்டிகளை பின் பற்றினால் அரை கிலோமீட்டர் தூரத்தில் வாகனங்களை நிறுத்தும் இடத்தை அடையலாம். அங்கிருந்து சந்துபொந்துகள் வழியாக (காசிக்கு ப்ராக்டிஸ்) லக்கேஜுகளை உருட்டிக் கொண்டு போக வேண்டியது தான். மாட வீதிகளில் ஏகப்பட்ட சத்திரங்கள். நாங்கள் தங்கியது சிருங்கேரி மட விடுதியில். மிகப் பெரிய அறைகள். வடக்குப் பக்கம் ரூம் என்றால் நல்ல காற்று. கோவில் தரிசனம். காலை நாலரை மணிக்கே நமக்கு பள்ளி எழுச்சி. பாடல்களுக்கு இடையே அறிவிப்புகள். இதையெல்லாம் விட அடுத்த கட்டடத்தில் காலை ஐந்து மணிக்கே காபி. ஆறரைக்கு இட்லி, பொங்கல், சாம்பார், வடை, மறுபடி காபி. ஆஹா, வேறு என்ன வேண்டும்?
அடுத்த நாள் ஸ்கெட்யூலை (அட்டவணை) போய் சேர்ந்ததுமே கேட்டுத் தெரிந்து கொண்டோம். தீர்த்த சங்கல்பம், தனுஷ்கோடி (அ) அக்னி தீர்த்தத்தில் குளியல். பிரயாகை திரிவேணி சங்கமத்தில் கரைக்க வேணி மாதவர் (மண்) எடுத்துக் கொள்ளுதல் (சேது, பிந்து மாதவர்களைப் பற்றி பாகம் 1ல் எழுதி இருக்கிறேன்).கோவில் வளாகத்தில் இருபத்தி இரண்டு தீர்த்தங்களில் தலை, உடல் நனைத்தல் (பின்னே, அரை வாளி தண்ணிரில் முழுவதுமாகவா குளிக்க முடியும்?). அறைக்கு வந்து உடை மாற்றி, கொண்டு வந்த மண்ணை சிவலிங்கமாக பிடித்து பூஜை (ஸ்ரீசீதையைப்போல்) பின் தீர்த்த ஸ்ராத்தம் செய்தல், போஜனம். மதியத்திற்கு மேல் ராமேஸ்வரம் வலம். நாளை வருவோமா?
ட்விட்டரில் எங்களை பின் தொடர