நம் எல்லோர்க்கும் அவரவர் இஷ்ட தெய்வத்திடம் வேண்டுதல்களும் நேர்த்திக் கடன் களும் இருக்கும். எனக்கும் ஒரு வேண்டுதல் என் அப்பன் முருகனிடம் இருந்தது. அதை தகுந்த சமயத்தில் தக்க நபரை வைத்து நிறைவேற்றிக் கொண்டான்.அது எப்படியென்று பார்க்க வேண்டுமெனில் வாங்க 2009க்கு போகலாம். அப்போது தான் எனக்கு திருமண வரன் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள். முதன் முதலில் என் ஜாதகத்தை குடும்ப நண்பர் ஒருவரிடம் கொடுத்தார்கள். இரண்டு நாட்களில் ஜாதகம் பொருந்தவில்லை எனக் கூறி விட்டார்கள்.எனக்கு எல்லாமே என் பாட்டிதான் (அப்பாவின் அம்மா)என்னை வளர்த்ததிலிருந்து பள்ளியின் முதல் நாள் சேர்க்கையிலிருந்து முதல் இன்டர்வியூ வரை எனக்காகவே வாழ்ந்தார் .அவர் முகம் சரியில்லை. உற்சாகமின்றியே இருந்தார். வழக்கமாக அவர் இப்படி இருக்க மாட்டார். துருவி துருவி கேட்ட பின் என் ஜாதகப்படி எனக்கு குழந்தை பிறக்காது என்றிருந்ததால் வேண்டாம் என சொல்லி விட்டனராம். அந்த சோகம் என்னையும் தொற்றி விட்டது.
குழந்தையில்லாதவர்களை எப்படி நடத்துவார்களென்பதை என் குடும்பத்திலேயே பார்த்துள்ளேன்.நானும் கொஞ்சம் பருமனான உடல்வாகுடையவள்தான். போதாக் குறைக்கு பிட்னெஸ் ட்ரிங்க்களும் 30 நாட்களில் எடைக் குறைக்கலாம் முகாம்களும் அதிகமாக வரத் துவங்கிய வேளை அது. அவசரமாக சாலையைக் கடக்கும்போது, பேருந்தில் என்று எங்கு பார்த்தாலும் அந்த விளம்பர நோட்டிஸ்கள் வம்படியாக என் கைகளில் திணிக்கப்பட்டன. குண்டாக இருந்தால் குழந்தை பிறக்காது என வேறு கூறிச் சென்றனர். இதென்ன முருகா சோதனை. அப்படியொரு கஷ்டத்தை எனக்கு கொடுத்து விடாதே. எனக்கு நல்லபடியாக திருமணம் முடிந்து முதலில் நீயே வந்து பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.அப்படி பிறந்தால்………. என்று சென்னிமலை முருகனிடம் வேண்டிக் கொண்டேன். வேண்டுதலை பின்னாடி சொல்கிறேன். திருமணத்திற்கு முன்னரே சஷ்டி இருக்க ஆரம்பித்தேன்.என் அப்பா அறிவுறுத்தல்படி கிருத்திகையும் இருந்தேன்.அவருக்கும் இதே அனுபவம் போல. அவர் கிருத்திகை விரதமிருந்து தான் நான் பிறந்தேன்.
எப்படியோ அடுத்த 3 மாதங்களில் தைப்பூசத்திற்கு ஒரு வாரம் இருக்கையில் பல சிக்கல்களைத் தாண்டி திருமணமும் முடிந்தது. என் திருமணம் முடிந்தவுடன் மறு வீட்டிற்கு நானும் அவரும் சென்ற போது அப்பா தைப்பூசத்திற்கு பாத யாத்திரை கிளம்பத் தயாராக இருந்தார். அருகிலிருந்த கோவிலுக்கு அழைத்துசென்றார். அங்கு வேலுக்குதான் பூஜை, அலங்காரம் எல்லாம். வேலை வணங்கிவிட்டு வீடு வந்தோம். முருகனருளால் குழந்தையும் பிறந்தது. முதல் குழந்தை நீயாக உன் அம்சமாக ஆண் குழந்தையாக பிறக்க வேண்டும் என்று வேண்டினேன். ஆனால் பெண் குழந்தைதான் பிறந்தது. எனக்கு முருகனிடம் சிறு மனத்தாங்கல். ஆண் குழந்தையல்லவா கேட்டேனென்று. இரண்டாவதாக தான் ஆண் குழந்தை பிறந்தது. இந்த 2022 மே மாதம்தான் திடீரென்று நானும் இரு குழந்கைகளும் சென்னிமலை போனோம். வேண்டினபடி நடக்கவில்லையென்றாலும் ஆண் குழந்தைதான் பிறந்து விட்டதே. ‘’பரவாயில்லை வேண்டுதலை நிறைவேற்றிவிடலாம்’’ என்று நினைத்தேன்.
மலை அடிவாரத்தில் உள்ள பூக்கடையில் மாலைக்கான பணத்தை கொடுத்துவிட்டு என் மகனை விட்டு மாலையை கைகளில் வாங்க சொன்னேன்.அது வரை சொல் பேச்சு கேட்டவன் முரண்டு பிடிக்க ஆரம்பித்தான். இவனிடம் பஞ்சாயத்து முடிக்கு முன் என் பெண் மாலையை வாங்கி விட்டாள். வழியில் அவனிடம் சொல்லிக் கொண்டே வந்தேன். உன் கையால் மாலை போட வேண்டுமென்று தான் வேண்டிக் கொண்டேன்.அவன் வேண்டுதலை சரியாக நடத்தவில்லை என குற்றம் கூறியதற்காக இப்படி நடந்து விட்டது போல. மேலே அர்ச்சகரிடம் உன் கையால் கொடு என்று கூறிவிட்டேன்.அவனும் சரி என்றான். மாலையை மகனிடம் கொடுத்து விட்டு வரிசையில் நின்று அவன் அருகில் போனேன். நல்ல அடர் சிவப்பில் சட்டை. அதற்கு தோதாக அதே வண்ணத்தில் க்ரீடம். தும்பை பூ போல் வெள்ளை வேட்டி . என்ன அழகு! என்ன அழகு !
அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தேன்.முதலில் என்னை வழக்கமாக சோதிக்கும் குறும்பு பார்வை, பின் உன்னை கைவிட்டு விடுவேன் என்று நினைத்து விட்டாயா என்று தடுத்தாட்கொள்ளும் அருள் பார்வை. தன்னிலை மறந்தேன். மருதமலை மாமணியே பாடல்ல மேஜர் முருகன் டாலரை வெச்ச கண் வாங்காம பார்ப்பாரே அப்படி தான் பார்த்தேன். கேக்க நினைச்சது சொல்ல நினைச்சதுனு எல்லாம் மறந்துட்டேன்.
வெளில வந்து என் மகன் சொன்னான், அம்மா அவள் தான் மாலையை கொடுத்தாள் என்று. எனக்கு என்ன சொல்றதுனு தெரில. என்னாச்சு முருகானு? மனசுக்குள் கேள்வி. சரி ஏதாவது காரணம் இருக்கும் என்று நினைத்தாலும் என்ன காரணம் என்று தெரியாவிட்டால் மண்டை வெடித்துவிடும் போலிருந்தது.
நான் ஜோதிடம் கற்றுக் கொண்டிருந்த ஆரம்பக் காலமது.திடீரென்று மனதில் உதித்தது இதுதான்.நான் வேண்டியது என்னவென்றால், முதல் குழந்தை உன் அம்சமாக பிறக்க வேண்டும். அதன் கையால் உனக்கு மாலை சாத்த வேண்டுமென்று. ஆண் குழந்தைதான் முருகனின் அம்சமென்று அது வரை தவறான கோணத்தில் யோசித்துள்ளேன். முதலில் பிறந்த என் பெண் விருச்சிக லக்னம். அதன் அதிபதி செவ்வாயே அந்த முருகன்தான் என்று மலை இறங்கும்போது தான் மண்டையில் உதித்தது. 12 வருட குழப்பத்திற்கு விடை கிடைத்தது.
இந்த நிகழ்வை என் கணவரிடம் கூறிய போது, அவர் ஒரு முன்கதை வைத்திருந்தார். மறுவீட்டின் போது நாங்கள் முருகன் கோவிலுக்கு சென்றிருந்தோமே, அந்த வேலிடம் என் கணவரும் வேண்டிருந்தாராம். நல்லபடியாக குழந்தை பிறந்தால் வேலின் முன் இடுவதாக வேண்டினாராம். அதே வருடம் விருச்சிக மாதத்தில் (கார்த்திகை ) விருச்சிக இலக்னத்தில் மகள் பிறந்தாள்.இப்படி முருகனருளால் அவனின் ஆசியுடன் குழந்தையையும் தந்து, தனக்கான நேர்த்திக் கடனை அவனே உரிய நபரின் மூலம் நிறைவேற்றிக் கொண்டான். கருணைக் கடலே கந்தா போற்றி!