மதுர பக்தி

மதுர பக்தி

மனித குலம் துவக்கம் கண்டது முதல் இன்று வரை மனிதன் ஒரு சமூகமாகவே வாழ்ந்து வருகிறான்.பல்லாயிரம் ஆண்டுகளாக தன்னைச் செம்மைப்படுத்திக்கொண்ட மனித சமுதாயம் கலை, கலாச்சாரம் வழியாக தனது மேன்மையான நாகரீகத்தை வெளிப்படுத்தி வந்தது.அந்தந்த காலகட்டத்தில் சமுதாயத்தில் பொதுவாக அமைந்திருந்த எண்ணங்கள், கருத்தாற்றல்கள், தனித்திறமைகள், குணங்கள், சீரான பண்புகள் மற்றும் உறவுமுறைகள் இவற்றின் தொகுப்பே பண்பாடு எனலாம்.இந்நிலைகளில் கலைகள் என்பன பண்பாட்டின் முக்கியக் கூறுகள் என்றால் மிகையில்லை.

கட்டடம், சிற்பம், ஓவியம், இசை, நடனம் முதலிய கலைகள் மனிதனின் அன்றாட வாழ்வுடன் தொடர்புடையதாக உள்ளன.கற்பனையை, எழிலுணர்வை, இன்பத்தை அள்ளித் தந்து ரஸ உத்பத்தி பெருக வைப்பதே கலைகளின் நோக்கம்.இது, ஒவ்வொரு நாட்டின் இயற்கை, பழக்கவழக்கம், மனோபாவம், சமய சிந்தனை போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு பரிணாமங்கள் பெற்றுத் திகழ்கிறது.

அவ்வகையில், பாரத தேசத்தின் நுண்கலைகள் ஹிந்து சமயத்தைச் சார்ந்ததாகவே, பக்தி மார்க்கத்தின் கூறாகவே வளர்ச்சியடைந்தது.இறைவனை வழிபடும் மார்க்கமாகவே இசையும் நடனமும் இருந்துள்ளது.’நாதோபாசனா’ என்கிறோம் இதைத்தான்.நம் மனதில் உள்ள அழகும் தெய்வீகத்தன்மையும் தான் கலையாக வெளிப்படுகிறது.எனவே தான் கலையையும் மதத்தையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய்க் காண்கிறோம்.இசையும், தமிழும் கடவுள் பற்று உடையதாக, பக்தியுடன் இயைந்ததாகவே இருந்து வருகிறது.

சைவமும் வைணவமும் தழைத்தோங்கிய காலத்தில் பாடலாலும் ஆடலாலும் இறைவழிபாடு நடந்தது.இன்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வருடந்தோறும் அரங்கேறும் அரையர் சேவை இசை நடன வடிவமே.”நாரணர்க்கு ஞானத் தமிழ் புரிந்து நான்” என பூதத்தாழ்வார் நாராயணனுக்கு தமிழால் பக்தி செய்வதைக் காணலாம்.

பக்தி ஒன்றல்ல இரண்டல்ல ஒன்பது வகை என்றல்லவா விளக்கம் தருகின்றன இதிகாசங்கள்.ஆம்! இறைவனை என்னென்ன பாவத்தில் வழிபட நினைக்கிறோமோ அத்தனைக்கும் நமது சமயத்தில் இடமுண்டு. அவனைத் தோழனாக, எஜமானனாக, நினைப்பது போலவே நாயகனாகவும் வரித்துக் கொண்டாடலாம். அதுவல்லவோ மதுர பக்தி.

பக்தியில் ஒரு உன்னதமான நிலை.ஜீவாத்மாவாகிய நாமும் பரமாத்மாவாகிய ஆண்டவனும் ஒன்றே என்ற ஐக்கிய உணர்வைக் காட்டும் அத்வைத சித்தாந்தம் மதுர பக்தி.அதுதான் ராதை கண்ணனிடத்தில் கொண்ட பக்தி, காதலாக வெளிப்படும்.நமது காலத்தில் பெரியாழ்வார், ஆண்டாள், மாணிக்கவாசகர் போன்றோர் மதுர பக்திக் காவியங்கள் புனைந்தனர்.

இறைவனால் ஆட்கொள்ளப்படக் காத்திருக்கும் நாயகியாய் தங்களை பாவித்து ஏங்கும் விதமாய் கவிதைகள் இயற்றினர்.ஆண்டாளின் நாச்சியார் திருமொழி, மாணிக்கவாசகரின் திருவாசகம், திருக்கோவை, பெரியாழ்வார் பாசுரங்கள் எல்லாம் வெளிப்படுத்துவது மதுர பக்தியின் நாயகன் நாயகி பாவமே.

‘கைத்தலம் பற்ற கனாக் கண்டேன் தோழி’ என ஆண்டாளும் ‘எம்கொங்கை நின்னன்பர் அல்லார் தோள் சேரற்க’ என மணிவாசகரும் உருகுவது தான் உச்சபட்ச மதுர பக்தி!இறைவன் மீதுள்ள தங்கள் காதலை , தெய்வீக அன்பை தோழியிடத்தில் கூறும் விதமாக நமக்குப் புரிய வைக்கின்றனர்.இந்த மதுர பக்தி இயக்கமும், பக்தி இசையும் பல எல்லைகளைத் தாண்டி பாரத தேசம் முழுதும் வியாபித்திருந்தது.மீராபாய் இயற்றிய சங்கீர்த்தனங்களும் பஜனைகள் ஒவ்வொன்றுமே கண்ணனைக் காணாது ஏங்கும் ஜீவனின் தாபம் தான் வார்த்தைப் பிரவாகமாக வழிகிறது.அது போலத்தானே கண்ணன்- ராதை காதல் ராஸலீலையாக மலர்ந்தது ஜெயதேவர் அஷ்டபதியில்.

பின்வந்த பல கவிஞர்களும் மதுரபக்திக் கவிதைகள் இயற்றினர்.அருவ வழிபாடு மற்றும் ஜோதி வழிபாடு ஒன்றையே உபதேசித்து வந்த வள்ளலார் கூட “கண்ணனையன் என்னுயிரில் கலந்து நின்ற கணவன் கணக்கறிவான் பிணக்கறியான் கருணை நடராஜன்”,’உளமறிந்தும் விடுவேனோ உரையாய் என் தோழி’
என அகப்பொருட் செய்யுள்கள் இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

“அவர் நானோ நான் அவரோ அறிந்திலன்” என ஜீவாத்மா பரமாத்மா ஒன்றாவதை மதுர பக்திக் கவிதையாக வடித்தார்.’ வருவார் அழைத்து வாடி’ ‘எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம்’ என விதவிதமாய் ஈசனை ரசிக்கிறார் வள்ளலார்.

இந்த வரிசையில் நமது மகாகவி பாரதியைக் குறிப்பிடாமல் இருக்கமுடியுமோ?

‘கண்ணன் என் காதலன்’ தலைப்பில் எத்தனை ரஸமான காதல் கவிதைகள் இயற்றியுள்ளார்.அதில் குறிப்பாக ‘ஆசை முகம் மறந்து போச்சே’ என பாரதி தவிக்கும் தவிப்பு பரம்பொருளை அடையாமல் அல்லாடும் ஆன்மாவின் குரலல்லவா? இன்னும் ஓர் படி மேலே சென்று தன்னைக் காதலனாகவும் கண்ணனை நாயகியாகவும் கற்பனை செய்தது தான் மதுர பக்தியின் மகுடம்! ‘வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நானுனக்கு’ என்ற காதல் வர்ணனைகளாகட்டும் ‘சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ’ என்ற அழகியல் வர்ணனைகளாகட்டும் பாரதியின் கட்டுக்கடங்காத கற்பனை வளத்தையே காட்டுகிறது.

ஈரேழு உலகுக்கும் ஒரே நாயகனான நாராயணனையே நாயகியாய் மாற்றித் தனது அன்புச் சிறையில் வைத்த பாரதியின் கவிதைகளை விடவா மதுர பக்திக்குச் சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியும்! இன்னும் பலப்பல கவிதைகள், பலவித கற்பனைகள், பல்வேறு மொழிகள் என மதுர பக்தியின் சாரத்தை நமக்குக் கொடையாகத் தந்தருளிய கவிஞர்கள் ஏராளம். ரசித்து மகிழ்வோம்.

About Author

One Reply to “மதுர பக்தி”

  1. மிக அருமை. மதுரம் என்றால் தேன் தேனினும் இனியதாக பகவத் பக்தி இருந்திருக்கு இருக்கிறது இன்னும் இருக்கும் தங்களை போன்ற கலைஞர்களால் பாராட்டுக்கள்.

Comments are closed.