- மனிதர்கள் – 1
மனிதர்கள் – அறிமுகம்
நாம் வாழ்வில் தினமும் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம். ஆனால் அனைவரையும் நாம் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறோமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். சில மனிதர்கள் மட்டும் பல காலம் நம் நினைவில் இருப்பார்கள். அவர்கள் நமக்கு சொந்தமாக நண்பர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த தொடரில் நான் கடந்து வந்த என்னை பாதித்த என் நினைவில் நீண்ட நாள் இருக்கும் சிலரை பற்றி பார்ப்போம்
சரோஜா பாட்டி
இவர்கள் எனக்கு எந்த வகையிலும் உறவல்ல. எனக்கு அறிமுகமான பொழுது இவருக்கு வயது 70 இவர் கணவருக்கு 75. வாக்கரின் உதவியுடன் வீட்டிற்குள் நடமாடுவார்கள். நின்று சமைக்க இயலாது. முதுகில் ஏதோ பிரச்சினை. இவர் கணவர் இராணுவத்தில் அக்கௌண்டஸில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்.
2019 ஜூன் மாதம் தான் எங்களிடம் உணவு வாங்கத் துவங்கினார்கள். மூன்று வேளையும் வாங்கிக் கொள்வார்கள். மற்ற எந்த வாடிக்கையாளரிடமும் இல்லாத ஒரு பந்தம் ஒன்று உருவானது. வேறு எந்த வாடிக்கையாளருக்கும் நான் ஒத்துக் கொள்ளாத ( இதுவரை) விஷயம் பாக்கெட் பிரித்து பாத்திரத்தில் மாற்றி வைத்துவிட்டு வருவது. இவர்கள் கேட்டவுடன் நான் ஒத்துக் கொண்டேன். அது ஏன் என இன்று வரை எனக்குப் புரியவில்லை. அதற்கு பிறகு பலர் கேட்டும் முடியாது என்றே சொல்லியிருக்கிறேன். வேறெந்த வாடிக்கையாளரிடமும் அதிகம் பேசாத நான் இவர்களிடம் தினமும் ஒரு 15 நிமிடமாவது பேசுவேன்.
8 மாதங்கள் எங்களிடம் உணவு வாங்கியிருப்பார்கள். 2020 ஜனவரி மாதம் கடைசி. மதியம் உணவு கொடுத்துவிட்டு வந்தேன். அன்று இரவு கொடுக்க போன பொழுது அந்த பாட்டி இல்லை. மதியம் படுக்கையில் இருந்து தவறி விழுந்தவர் கண் முழிக்கவேயில்லை.
இருந்தவரை என் மனைவிக்கு நேரடியாய் போன் செய்து என்ன வேண்டுமோ ( சில நாள் வடை / போண்டா போன்று)ஆர்டர் செய்து கொள்வார். அதேபோல அவரது இரண்டு மருமகளுக்கும் போன் செய்து எங்களின் அன்றைய மெனு எங்களை பற்றிய விவரம் அப்டேட் ஆகிவிடும்.
இது கூட ஒரு வாடிக்கையாருடனான ஓர் உறவு என்று சொல்லலாம். அவரது மரணத்துக்குப் பின் அவரது கணவரை மகன்கள் அழைத்து சென்று விட்டனர். ஆனால், ஒரு மகன் தில்லியிலும் மற்றொரு மகன் ஹைதர்பாத்திலும் இருக்க அவருடைய வருஷாப்தீக காரியங்களை ஏன் சென்னையில் நடத்த வேண்டும்? அதற்கும் நாங்களே ஏன் சமைத்து தர வேண்டும்?
எங்களுக்கும் அவர்களுக்கும் வாடிக்கையாளர் என்ற உறவை தாண்டிய பந்தம் ஒன்றுள்ளதோ முன் ஜென்ம தொடர்பில் ஏதோ செய்ய விட்டுப்போன விஷயங்கள் இந்த ஜென்மத்தில் வேறு விதத்தில் நடந்தேறியதோ??
– மனிதர்கள் தொடர்ந்து வருவார்கள்