வைகாசி மாத (ரிஷப மாத) ராசி பலன்கள் (14.05.2020 முதல் 14.06.2020 வரை)

ஜெய் ஸ்ரீமன் நாராயணா! ரிஷப மாத (வைகாசி மாத)  ராசி பலன்கள் (14.05.2020 முதல் 14.06.2020 வரை)

கிரஹ நிலைகள் 14.05.2020 அன்று சூரியன் ரிஷப ராசிக்கு 14.05.2020  மாலை 4.45 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். திருக்கணித (ராமன் அயனாம்ஸம்) பஞ்சாங்கப்படி பலன்கள் கணிக்கப்பட்டது

மேஷ ராசி ( அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம்)  

மேஷ ராசி

ராசியாதிபதி லாபத்தில் தன ஸ்தானத்தில், புதன், சுக்ரன்,  நிறைய நற்பலன்களை மாதம் முழுவதும் தருவார்கள், குரு பார்வையால் பலன் தருவார். சனி தொழில் சம்பந்தமான தீர்வுகளை செய்வார். பணப்புழக்கம் தாராளம் மாதம் முழுவதும் பண கஷ்டம் தெரியாது. சிலருக்கு வீடு வாக யோகம் உண்டாகும், தடைகள் விலகி சுப காரியங்கள் நடக்கும். அதே நேரம், ராகு 3ல் அமர்ந்து நல்லது செய்தாலும் 9ல் கேது உடல்ரீதியான தொல்லைகளை தரும், மேலும் 2ல் இருக்கும் சூரியன் பொருளாதார நெருக்கடி காரியங்களைல் தடை, பிறரை நம்பி ஏமாறுதல் போன்று தரும். கேதுவால் குடும்ப அங்கத்தினரின் குறிப்பாக பெற்றோர்களின் மருத்துவ செலவு அதிகரிக்கும். கவனம் தேவை. தொழிலாளர்களுக்கு ஏற்றமான மாதம் வருமானம் பெருகும், புதிய உத்தியோகத்துக்கு முயற்சிப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும்.  வெளி மாநிலம் போல வேலை கிடைக்க வாய்ப்பு. சொந்த தொழில் செய்பவர்களுக்கு ஓரளவு வருமானம் வரும், கலைத்துறை அரசியல் போன்று இருப்போருக்கு எதிலும் ஒரு கவனம் தேவை வருமானம் வந்தாலும் செலவும் கையை கடிக்கும். விவசாயி, இதர சொந்த தொழில் செய்வோருக்கு வருமானம் வந்து கொண்டிருக்கும் சிக்கனம் இருந்தால் நல்லதாக அமையும் இல்லாவிடில் அடுத்தமாதமும் துன்பம் தான். அனைத்து பிரிவினருக்கும் ஓரளவு நன்மை தருகிறது உடல் நலத்தில் அக்கறையும், பண விஷயத்தில் சிக்கணத்தையும் கடைபிடித்து வந்தால் பெரும் பிரச்சனைகள் இந்த மாதத்தில் இருக்காது.

சந்திராஷ்டமம் : அஸ்வினிக்கு – ஜூன் 5, பரணிக்கு -ஜூன் 6, கார்த்திகைக்கு – ஜூன் 7

வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : அம்பாளை வணங்க வேண்டும் அல்லது லக்ஷ்மியை வணங்க வேண்டும், கோயிலில் விளக்கேற்றுவது, அன்னதானம், சரீர ஒத்தாசைகள், பெரியோர் முதியோர்களை வணங்குதல், அவர்கள் சொல்படி கேட்டல், பிடித்த ஸ்லோகங்களை சொல்வது இவை நல்லது.

ரிஷப ராசி (கிருத்திகை 2,3,4, ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 பாதங்கள்)

உங்கள் ராசிநாதன் மாதமுழுவதும் வக்ரியாக ராசியில் இருந்து ஓரளவு நன்மை செய்கிறார், புதன் மாத பிற்பகுதில் 2ல் இருந்து நன்மை தருகிறார், குரு, சனி பகவான் 9ல் இருந்து பார்வையால் நல்ல பலன்களை தருகிறார்கள், ஓரளவு ஏற்றம் இருக்கும். 10ல் செவ்வாய் உத்யோகம் சொந்த தொழில் போன்றவற்றில் சிறு சிறு சங்கடம் இருக்கும். கேதுவும் 8ல் இருந்து 10ம் இடத்தையும் பார்ப்பதால் மன கிலேசங்கள் வருத்தங்கள் இருந்து கொண்டிருக்கும். அதே நேரம், சந்திரன் மற்றும் ராசியில் இருக்கும் சூரியன் ஓரளவு நன்மை செய்வதால் பண புழக்கம் தாராளம், குடும்பத்தில் குதூகலம் இருக்கும். 6க்குடையவரும் சுக்ரன் என்பதால் அவர் பெரிய அளவில் நன்மை தருவதில்லை, ஜீவனத்தில் கஷ்டம் வரலாம் சிக்கனம் தேவை ஆடம்பரம் உதவாது, அடுத்தவருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்க்கவும். 2ல் ராகு மன உளைச்சலையும் பண தேவையும் தரும். சூரியன் உடல் பிணி, பயண களைப்பு, உறவினர்களிடையே துன்பம் இவற்றை தரும். புதன் 25.5 முதல் 2ம் இடத்துக்கு வரும்போது ஓரளவு பண தேவைகள் பூர்த்தியாகும் உத்தியோகம் பார்ப்பவர்கள் அதிக பணிச்சுமைக்கு ஆளாக நேரிடும். அரசு வேலையில் இருப்போர் கவனமாய் இருக்க வேண்டும் பழிசொல்லுக்கு ஆளாக நேரிடும். சொந்த தொழில் செய்வோர் மற்றும் விவசாயம், நெசவு போன்ற தொழில் செய்வோர், முக்கியமாக ரியல் எஸ்டேட் நிலம் சம்பந்தப்பட்ட தொழில் செய்வோர் பணம் கொடுக்கல் வாங்கலிலும் உத்திரவாதம் அளிப்பதிலும் கவனமாக இருத்தல் வேண்டும். மற்ற கலைஞர்கள், அரசியல்வாதிகள், பெண்கள், மாணவர்கள் போன்றோர் எதிலும் கவனமாயும் சமயத்தில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்படும். பொதுவில் இந்த மாதம் வெகு சுமார் கவனமாக இருத்தல் அவசியம்.

சந்திராஷ்டமம்: கார்த்திகை – ஜூன் 7, ரோஹிணி – ஜூன் 8, மிருகசீரிடம் – ஜூன் 9

வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : திருச்செந்தூர் முருகன், அறுபடை வீடுகளுக்கு செல்லுதல், கந்தர் அனுபூதி, கவசம் படித்தல், முருகன் பெயரை சொல்லி அன்னதானம் வஸ்திர தானம் போன்றவற்றை செய்தல், அடுத்தவருக்கு வேண்டிய உதவியை செய்தல்.

மிதுன ராசி (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)

சார்வாரி வருஷ புத்தாண்டு பலன்

ராசிநாதன் 12ல் வரும் 25ம் தேதிவரை இருந்து அதன் பின் ராசியில் சஞ்சரிக்கிறார். கொஞ்சம் தொல்லைகள், மன குழப்பம், கௌரவ பாதிப்பு இருக்கும், பணத்தட்டுப்பாடும் இருக்கும், அதே நேரம் சந்திரனின் சஞ்சாரங்கள் அவ்வப்போது நன்மையை செய்யும் பெரும்பாலான கிரஹங்கள் நன்மை தரவில்லை. அதற்காக சோர்ந்துவிடவேண்டாம், கொஞ்சம் கவனமாயும், சிக்கணமாகவும் இருந்தால் போதும், உத்யோகம் சொந்த தொழில் எல்லாம் மந்தமாக போகும். இருக்கின்ற காசை சேமிக்க கற்றுக்கொண்டால் வரும் மாதங்களை சமாளிக்கலாம். உடல் ரீதியான படுத்தலும் மனைவி குழந்தைகள் பெற்றோர் என்று குடும்ப உறுப்பினர் வகையிலும் சில மருத்துவ செலவுகள் உண்டாகும். சுக்ரன் 12ல் இருந்து ஓரளவு சுப செலவுகளை தருவார். அவரால் ஆடம்பர பொருட்கள் விற்பவர்கள், எழுத்து துறையில் இருப்பவர்கள் பத்திரிகை துறை இவர்கள் ஓரளவு நல்ல நிலையில் இருப்பார்கள் மற்றவர்கள் கவனமாய் இருக்க வேண்டும். சனி அஷ்டமத்தில் இருப்பதால் வியாதி விபத்துகள் உறவுகள் வகையில் துயர செய்தி போன்றவை இருந்தாலும் ஜனன ஜாதகத்தில் சனி நன்றாக இருந்தால் பெரிய பாதிப்பு இல்லை. பலவிதமான கஷ்டங்கள் கிரஹங்கள் தருகிற மாதிரி இந்த மாத அமைப்பு இருந்தாலும் தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் பெரிய பாதிப்புகள் கிடையாது, பொதுவாக மிதுனராசிக்காரர்கள் அலட்டிக்கொள்வதில்லை ஜாலியாக எடுத்து கொண்டு போய்விடுவர். அப்படி இருந்து சிக்கணத்தையும் கடைபிடித்தால் பெரிய துன்பம் என்பது இந்த மாதம் இல்லை. சந்திரன் மகம், பூரம், உத்திரம்1லும், விசாகம் 4, அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம் இந்த நக்ஷத்திரங்களில் சஞ்சரிக்கும் காலம் மிக சிறப்பாக பலவிதமான லாபங்கள் மன மகிழ்ச்சி கேளிக்கைகளில் ஈடுபடுதல் போன்றவை இருக்கும். இருந்தாலும் இந்த மாதம் பொதுவில் சுமார்.

சந்திராஷ்டமம்: மிருகசீரிடம் – ஜூன் 9, திருவாதிரை – மே 14, ஜூன் 10, புனர்பூசம் – மே 15, ஜூன் 11

வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும்  : திருப்பதி பெருமாள் மாதிரி நின்ற திருக்கோல பெருமாளை கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள், கோயிலில் விளக்கேற்றுங்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் படியுங்கள். முடிந்த அளவு தான தருமங்கள், இயலாதோருக்கு உதவி செய்தல் போன்றவை நல்ல பலனை தரும்.

கடக ராசி (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் )

சார்வாரி வருஷ புத்தாண்டு பலன்

லாபத்தில் சூரியன் அதனால் இதுவரை இருந்துவந்த எதிர்ப்புகள் விலகி, எதிரிகள் பின்வாங்குவர். ஜீவன வகையில் எதிர்பாராத லாபம் உண்டாகும்,  முன்பு செய்த செயலுக்கு இந்த மாதம் நல்ல பலன் உண்டாகும், புதனும் சுக்ரனும் கூட நல்ல பலன்களை தருவர், வாகனம் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டாகும், எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும் அதேநேரம் 25ம் தேதிக்கு பின் 12ல் சஞ்சரிக்கும் புதன் தொல்லைகளை தருவார் கவனம் தேவை. சுக்ரனால் பிள்ளை எதிர்பார்த்தோருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும், கணவன் மனைவிக்குள் நெருக்கம் இருக்கும் குடும்பம் மகிழ்சியில் இருக்கும், குருபகவானும் 7ல் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பதால் எப்படி பட்ட துன்பத்தையும் எதிர்கொண்டு நன்மைகளை பெறுவீர்கள், கல்வி எழுத்து துறையில் இருப்போருக்கு நல்லகாலம், உத்தியோகஸ்தர்கள், சொந்த தொழில் செய்வோர் என அனைவருக்கும் நன்மை உண்டாகும், 6ல் இருக்கும் கேதுவும் 12ல் இருக்கும் ராகுவும் கூட அதிக நன்மையை தந்து மருத்துவ செலவுகளிய குறைத்து நல்லது செய்வர்.அதேநேரம் செவ்வாயும் சனியும் தொல்லைகள் தருவார்கள். ராசிக்கு 8ல் இருக்கும் செவ்வாய் இடறி விழுதல், தூக்கமின்மை, வாக்கு கொடுத்துவிட்டு அவமானம் அடைதல், பிறருக்கு கட்டுபடுதல் போன்றவற்றை செய்வார்.  சனி 7ல் இருந்து வாழ்க்கை துணைவரின் உடல் ஆரோக்கியம் பாதிக்க செய்வார், குடும்பத்தில் அமைதியை குறைப்பார், மனம் சஞ்சலம் அடையும் எதிலும் கவனமாகவும் நிதானமாகவும் நடந்து கொண்டால் பெரிய பாதிப்புகள் இருக்காது. உழைக்கும் வர்க்கம் உயர் அதிகாரிகளுடன் மோதல் போக்கை தவிர்ப்பதும், சக தொழிலாளிகளுடன் வார்த்தையை விடுதலும், அக்கம்பக்கத்தாருடன் மோதல் போக்கை தவிர்ப்பதும் நல்லது, சொந்த தொழில் செய்வோர் கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொள்ளுதல் நல்லது, புது முதலீடுகள் இந்த மாதம் வேண்டாம். விவசாயிகள் வழக்குகளில் சிக்காமலும், கால்நடைகளை கவனமாக பார்த்து கொள்ளூதலும் அவசியம். பொதுவில் இந்த மாதம் நன்மை அதிகம் இருப்பதால் பயம் வேண்டாம்.

சந்திராஷ்டமம் : புனர்பூசம் – மே 15, ஜூன் 11, பூசம் – மே 16, ஜூன் 12,  ஆயில்யம் – மே 17, ஜூன் 13

வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும்  : சனீஸ்வரனையும், பைரவரையும் வணங்குவது நலம் தரும். பைரவருக்கு விளக்கேற்றுவது நல்லபலனை தரும், அஷ்டமி நாளில் பைரவர் வழிபாடும், சனிக்கிழமைகளில் சனீஸ்வர வழிபாடும் முக்கியம்,  முடிந்த அளவு தான தர்மங்களை செய்யவும் ஏழைகளின் பசியை போக்குவது நல்ல பலனை தரும்.

சிம்ம ராசி (மகம் , பூரம், உத்திரம் 1ம் பாதம் )

ராசிநாதன் 10ல் சஞ்சரிக்கிறார். நோய் நொடி இருப்பின் அறவே நீங்கும், சுறுசுறுப்பு உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும், உத்தியோகத்தில் உயர்வு, சொந்த தொழில், வியாபாரம் நல்ல வளர்ச்சி என்று இருக்கும். புதிய வேலைக்கு வெளிநாட்டுக்கு முயற்சிப்பவர்கள் செய்யலாம் நிச்சயம் வெற்றி கிடைக்கும். அரசாங்க ஊழியர்களுக்கு நல்ல நிலை உண்டாகும். அரசாங்கத்துடைய தொடர்புடைய தொழில்கள் நல்ல வளர்ச்சியை அடையும். புதனும் 10,11ல் இருந்து கொண்டு மகிழ்ச்சியை ஏற்படுத்துவார், வாகன யோகம், புதியவீடுவாங்குதல், விவசாய பயிர்களில் பலிதம், முயற்சிகளில் வெற்றி என்று இருக்கும். ராகு 11ல் இருந்து சகல துறைகளிலும் முன்னேற்றத்தை தருவார், தொழில் வளர்ச்சி பெறும், பணப்புழக்கம் தாராளம். அனைத்து பிரிவினருக்கும் அதிக நன்மை உண்டாகும். அதே நேரம் மற்ற கிரஹங்கள் சாதகம் இல்லை, சுக்ரன் 10ல் இருந்து கொண்டு பணத்தை பாழாக்குவார், வீண் விரயம் உண்டாகும், குடும்பத்தில் ஒரு குழப்பமான சூழலை தரும். சுக்ரன் ஜீவனத்தில் ஓரளவு ஆதாயத்தை தருவார். 6ல் இருக்கும் குரு ஏதாவது துன்பத்தை தருவார், வழக்குகள் வரும். நண்பர் உறவினர் பகையாவர், கடன் வழக்கு அதிக பாதிப்பை தரும். இருந்தாலும் சனி பகவானும் 6ல் இருப்பதால் பெரிய நஷ்டங்கள் இருக்காது கடன் வழக்குகள் பூரணமாக தீர்ந்துவிடும். செவ்வாய் 7ல் சஞ்சரிப்பதால் வாழ்க்கை துணைவர் உடல் ஆரோக்கியம் பாதிக்கும். கண்களில் வியாதி உண்டாகும், கணவன் மனைவிக்குள் பிணக்கு உண்டாகும். ஜீவன வகையில் கலகமும் வீண் குழப்பமும் உண்டாகும். 5ல் இருக்கும் கேதுவால் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிப்படையும். கல்வி பாதிக்கும் பணத்தட்டுப்பாடு உண்டாகும். ஆனாலும் நன்மைகள் அதிகம் இருப்பதால் கவலை வேண்டாம் கவனமாகவும் நிதானமாகவும் செயல்படவும்.

சந்திராஷ்டமம் : மகம் – மே 18, ஜூன் 14, பூரம் – மே 19,  உத்திரம் – மே 20

வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயலகளும் : பரமேஸ்வரனை வணங்குங்கள், ஓம் நமசிவாய என்று சொல்லுங்கள், சிவன் கோயிலுக்கு சென்று அபிஷேகத்துக்கு பால் கொடுங்கள் விளக்கேற்றுங்கள், பறவை பசு போன்ற இனங்களுக்கு உணவிடுங்கள் அன்னதானம் செய்யுங்கள்.

கன்யா ராசி (உத்திரம் 2,3,4 , ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள்)

ராசிநாதன் புதன் 25.5.2020க்கு பின் தான் உத்தியோகத்தில் தொழிலில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறார், பொருளாதார முன்னேற்றம் இருக்கும், வேறு உத்தியோகம் அல்லது வேறு இடம் மாற்றம் உண்டாகும் சிலருக்கு. 9ல் இருக்கும் சூரியன் ஓரளவுதான் நன்மை செய்கிறார் பெற்றோர்கள் உடல் நிலையில் மருத்துவ செலவுகளை உண்டாக்குவார். சந்திரன் அவ்வப்போது நன்மைகளை தருகிறார். குருவின் பார்வையால் சிலருக்கு மழலை செல்வம் உண்டாகும், பொருளாதாரம் நன்றாக இருக்கும், சிலருக்கு குருவால் புதுவீடு குடிபோகும் யோகம் உண்டாகும், வியாதிகள் குணமடையும். சந்திரன் அனுஷம், கேட்டையில் சஞ்சரிக்கும் காலமும் கடகராசியில் ப்ரவேசிக்கும் காலமும் மிகுந்த நல்ல பலனை தருவார். சுக்ரன் தர்ம சிந்தனையை தூண்டுவார், கல்வியில் வளர்ச்சி உண்டாகும் சுப காரியங்களில் ஈடுபட செய்யும்.சனி பாவான் 5ல் இருந்து கொஞ்சம் குழப்பத்தை தந்தாலும் பார்வையால் நல்ல பலன் தருவார் பத்தில் இருக்கும் ராகு இருவித வருவாயை தருவார், பூமி, நிலம் போன்றவற்றின் மூலம் வருமானம் அதிகரிக்கும், வியாபாரிகளுக்கு நாள்பட்ட சரக்கு விற்பனை மூலம் ஆதாயம் உண்டு உழைப்பாளிகளுக்கு உயர்வு உண்டாகும். கேதுவால் தாயார் உடல் நிலை பாதிக்கலாம். 6ல் இருக்கும் செவ்வாய் வியாதிகளை பூரண குணமாக்குவார் வழக்குகளில் வெற்றியை தருவார், ஜீவன வகையில் முன்னேற்றம் இருக்கும் புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும், வருமானம் பெருகும், பொதுவில் இந்த மாதம் நல்ல பலன்கள் அதிகமாயும் கெடுபலன்கள் குறைவாகவும் இருக்கிறது. உங்கள் எண்ணங்களை நிறைவேற்றும் மாதமாக இது அமையும். வெற்றிகள் அதிகம். அதனால் பணத்தை சேமிக்க முயற்சி எடுங்கள் அது பின்னாளில் நல்லபனை தரும்.

சந்திராஷ்டமம் : உத்திரம் – மே 20, ஹஸ்தம் – மே 21,  சித்திரை – மே 22

வணங்க வேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : சாஸ்தாவை வணங்குங்கள், எல்லை தேவதைகளை வணங்குங்கள் கோயிலுக்கு சென்று நெய்தீபம் ஏற்றுங்கள், முடிந்த அளவு அன்னதானம் செய்யுங்கள், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி செய்யுங்கள், சரீர ஒத்தாசைகளை செய்யுங்கள்.

துலா ராசி (சித்திரை 3,4, ஸ்வாதி, விசாகம் 1,2,3 பாதங்கள்)

ராசிநாதன் சுக்ரன் 8ல் ஆட்சி, வாக்கில் கடுமை தோன்றும் நிதானம் தேவை, காரிய த்தடை ஏற்படும், 8ல் இருக்கும் சூரியன் மற்றும் புதன், குடல், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தருவார்கள், தொழிலில் உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும், மாணவர்கள் படிப்பில் மந்தம் ஆவார்கள், புதனால் அலைச்சல் இருக்கும் ஞாபக மறதி ஏற்படும், 5ல் இருக்கும் செவ்வாயும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் குறைவை ஏற்படுத்துவார் வீட்டில் திருட்டு களவு போகுதல் இருக்கும், மனதில் கெட்ட எண்ணங்கள் தோன்றும், கேவலமான காரியங்களை செய்ய தூண்டும். ஆனாலும் குருபகவானும் சனியும் தாங்கி பிடிக்கின்றனர் உங்களை, குருபகவான் ஓரளவு பார்வையால் தொழிலில் உத்தியோகத்தில் நல்ல நிலையை வைத்திருப்பார். கடன் தொல்லை போன்றவற்றை விலக்குவார். சனியின் 3ம் பத்தாம் பார்வை பொருளாதாரத்தில் ஒரு உயர்வை தரும்,  கேது 3ல் இருப்பதால் புகழ் பரவு நோய் நீங்கிவிடும், தன ஆதாயம் ஏற்படும்,  எதிரி தொல்லைகள் நீங்கிவிடும். 9ல் இருக்கும் ராகு குடும்பத்தில் பலவித சுப செலவுகளை கொடுப்பார் மனைவி மக்களுடன் ஒற்றுமையை தருவார். பொதுவாக இந்த மாத கிரஹ நிலைகள் சாதகம் எனில் திருமண வாய்ப்பை எதிர்பார்த்திருப்போருக்கு வரன் அமையும், உத்தியோகத்தில் முன்னேற்றமும், சொந்த தொழில் செய்வோர், விவசாயிகள் , கலைஞர்கள் அரசியல்வாதிகள் என அனைவருக்கும் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் தான் கொஞ்சம் அதிகம் சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். வாக்கு கொடுப்பதை தவிர்க்கவும். அனைவருமே அமைதியை கடைபிடித்து வீண் விவாதங்களை தவிர்த்தும், வருகின்ற பணத்தை சிக்கணமாக செலவு செய்து சேமித்து வந்தால் பெரிய துன்பங்கள் ஏதும் இருக்காது. இந்த மாதம் சுமாரான மாதம் பொறுமை அவசியம்.

சந்திராஷ்டமம் : சித்திரை – மே 22,  ஸ்வாதி – மே 23, விசாகம் – மே 24

வணங்க வேண்டிய தெய்வமும் நற்செயக்லளும் : லக்ஷ்மீ கடாக்ஷம் வேண்டும் அதனால் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று தாயார் சன்னதிமுன் அமர்ந்து தியானம் செய்யுங்கள் லக்ஷ்மீ ஸ்தோத்திரங்கள் சொல்லுங்கள், நெய் தீபம் ஏற்றுங்கள், முடிந்த அளவு அன்னதானம் செய்யுங்கள். ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி, சரீர ஒத்தாசைகள் செய்யவும்.

விருச்சிக ராசி (விசாகம் 4, அனுஷம், கேட்டை )

ராசிநாதன் செவ்வாய் சுகஸ்தானத்தில் கொஞ்சம் களைப்பு, உஷ்னம் இருந்தாலும்  7ம் இடத்தையும், 11ம் இடத்தையும் பார்ப்பதால் பூமி லாபம் பொருளாதாரம் மேம்படுதல் இருக்கும். செவ்வாய் பெரிய கெடுதலை செய்ய மாட்டார்.  7ல் சூரியன்,வெளியூர் பயணம் க்ஷேத்ராடனம், புனித யாத்திரைகள், உத்தியோக நிமித்தம், அல்லது தொழில் நிமித்தம் அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும், 25ம் தேதிக்கு பின் 8ல் புதன் தெய்வானுகூலம் உண்டாகும் குழந்தைகளின் கல்வியில் முன்ன்ற்றம், பிறருக்கு உபகாரம் செய்யும் எண்ணம் உண்டாகுதல், 7ல் சுக்ரன், வாழ்க்கை துணைவரின் உடல் நலம் நன்றாக இருத்தல், குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தோருக்கு குழந்தை உண்டாகுதல், எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம், குடும்பத்தில் சுப காரியம், குரு பகவான் 3ல் சனியுடன், அதனால் சில அசௌகர்யங்கள் ஜீவனத்தில் கஷ்டம் இடம் மாறி வாசம் செய்தல் போன்றவை இருந்தாலும் 5, 9 பார்வைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பண வரவு, மேலும் 3ல் சனி பகவான் ஆட்சியாக இருப்பதால் மனதில் நினைத்தது நடக்கும், வியாதிகள் விலகும், தொழில் வியாபாரம், உத்தியோகம் என அனைத்து துறையினருக்கும் நல்ல வகையில் முன்னேற்றம் இருக்கும், வழக்குகள் இருந்தால் அதில் வெற்றி உண்டாகும், பகைவர்கள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள், அதே நேரம் 2ல் கேதுவும் 8ல் ராகுவும் இருந்து கொண்டு உறவினர், நண்பர்களால் பெயர் கெடும்படி இருக்கும், அளவான வார்த்தைகளை யோசித்து விடுதல், நல்லது செய்வதாக நினைத்து தவறானவர்களுக்கு உதவுதல் போன்றவை கஷ்டத்தை கொடுக்கும். எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. இந்த மாதம் புதன், சனி பகவான் மிகுந்த நன்மையையும் சூரியன் சுக்ரன் ஓரளவு நன்மையையும் தருகிறார்கள், குருபகவான் பார்வையால் நன்மை செய்கிறார் மற்ற கிரஹங்கள் சாதகம் இல்லை முடிந்தவரை நிதானத்துடனும் வாக்கு கொடுக்காமலும் வீண் விவாதங்களை தவிர்த்தும், சிக்கனமாயும், அடுத்தவரை முழுவதுமாக நம்பிடாமலும் இருந்தால் கெடுபலன்களை தவிர்க்கலாம்.

சந்திராஷ்டமம் : விசாகம் 4 – மே 24, அனுஷம் – மே 25, கேட்டை – மே 26

வணங்க வேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : ப்ரதோஷத்தன்று நந்தி வழிபாடு முக்கியம், சிவாய நம: என்று எப்போதும் சிந்தித்து இருங்கள். சிவன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுங்கள், முடிந்த அளவு அன்னதானம் செய்யுங்கள். முடவர், உடல் ஊனமுற்றோருக்கு உதவி செய்யுங்கள்.

தனூர் ராசி (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் முடிய)

ராசிநாதன் குரு 2ல் சனிபகவானுடன் நீசபங்க ராஜயோகமாய், பொருளாதாரம் நல்ல முன்னேற்றம் அடையும், தொழில் துறையும், உத்தியோகமும் நல்ல நிலையில் இருக்கும், குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் உண்டாகும். சனியின் பார்வை 4ம் இடத்துக்கும் 11ம் இடத்துக்கும் இருப்பதால் ஜீவன வகையில் குறைவு இல்லாமல் இருக்கும். 6ல் இருக்கும் சூரியனும் தன்பங்குக்கு வியாதியை போக்கி மலைபோல் வரும் துயரங்களை பனி போல விலகிவிடும்படியாக நன்மையை செய்வார். சந்திரன் அவிட்டம் சதயம், பூரட்டாதி, ரோகிணி மிருகசீரிடம், சித்திரை, ஸ்வாதி, விசாகம், போன்ற நக்ஷத்திரங்களில் பயணிக்கும் போது அளப்பறிய நன்மையை செய்வார். 3ல் இருக்கும் செவ்வாய் பூமி லாபம், வாகன யோகம், ஆடை ஆபரண சேர்க்கையை தருவார், உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். சொந்த தொழில் செய்வோருக்கு வாடிக்கையாளர்கள் பெருகி லாபம் வரும்,  புதன் சஞ்சாரம் அவ்வளவு நன்மை தரவில்லை உறவினர்களால் தொல்லை வரும், சுபகாரியங்களில் தடை வரும். சுக்ரன் பெரிய நன்மை ஏதும் தரவில்லை எனினும் கெடுதலை செய்ய மாட்டார். கடன் கொடுத்து இருந்தீர்கள் என்றால் வசூலாவது கடினம், ராகு கேது சஞ்சாரமும் சரியில்லை, கேது எடுத்த காரியம் விழலுக்கு இறைத்த நீராகிவிடும், உடல் ஆரோக்கியம் பாதிக்க படும். ராகு 7ல் வாழ்க்கை துணைவரின் உடல் நிலை பாதிப்படையும் விரயம் குழப்பம் என்று இருக்கும். இருந்தாலும் குருபகவானும், சூரியனும் இந்த மாதம் அதிக நன்மை தருவதாலும் சந்திரன் கெடுதல் செய்யாமலும் சில நாள் அதிக நன்மையை செய்வதாலும் பெரும் கெடுதல் இல்லாமல் இந்த மாதம் கடந்துவிடும். சேமிப்பு பலன் தரும், என்றோ செய்த உதவி இன்று பலன் தரும். ஜாமீன் கையெழுத்து சாட்சி, பணம் கொடுக்க உத்திரவாதம் அளித்தல் போன்றாவற்றில் ஈடுபடும்போது மிகுந்த கவனத்துடனும் யோசித்தும் செய்ய வேண்டும். தற்போது செய்யும் தவறு இனி வரும் மாதங்களில் துன்பத்தை தரும். பொதுவாக இந்த மாதம் சுமாராக நல்ல பலன்களை கொண்டு ஓடும் நிதானமாக இருந்தால் கெடுபலன்கள் இல்லை.

சந்திராஷ்டமம் :  மூலம் – மே 27, பூராடம்  – மே 28, உத்திராடம் 1 – மே 29

வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : விநாயகர் வழிபாடு அவசியம். ராகு காலத்தில் பைரவருக்கு நெய் விளக்கேற்றி வழிபடுவதும் நன்மை தரும். எப்போதும் பிள்ளையாரை கெட்டியாக பிடித்து கொண்டால் தொல்லை விலகும். அன்னதானம் செய்யுங்கள். ஏழைக் குழந்தைகளை படிக்க வையுங்கள்.

மகர ராசி (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள் முடிய)

ஜெனன ராசியில் சனி ஆட்சியாக இருப்பதால் பெரிய கெடுதல்கள் ஏதும் இருக்காது. இடமாற்றம் தொழில் மாற்றம் இருக்கும், பொருளாதாரம் ஓரளவு இருக்கும், தேவையில்லாத வழக்குகளில் சிக்க நேரிடும். கவன குறைவு ஏற்படும், 5ல் சூரியன் உஷ்ணத்தை அதிக படுத்துவார். பெரியோர்களை பணிந்து போகவும் இல்லை என்றால் வீன் மனஸ்தாபம் உண்டு. சிறு தவறுகள் ஏற்படும், சந்திரன் பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி, மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3, விசாகம்4, அனுஷம், கேட்டை நக்ஷத்திரங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் மிகுந்த மகிழ்ச்சியும் பணப்புழக்கமும், நல்ல விஷயங்களும் நடக்கும், வெற்றிகள் உண்டாகும், 2ல் இருக்கும் செவ்வாய் துயரத்தை தரும், குடும்பத்தில் அமைதியை குறைக்கும். விட்டுக்கொடுத்து அனுசரித்து போவது நன்மை தரும்.  புதபகவான் 25ம் தேதிக்கு பின் மிதுனத்தில் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும், சகல காரியங்களிலும் வெற்றி உண்டாகும், குடும்பத்தில் சுபிக்ஷம், அனைத்திலும் நன்மை உண்டாகும். 12, 3க்குடைய குருபகவான் ஜென்ம ராசியில் சனியுடன், இருந்த இடத்தை விட்டு வேறிடம் செல்லுதல், கொஞ்சம் செயல் தடை, உறவினர் நண்பர்கள் விலகல் என்று இருந்தாலும் குரு பார்வை ஓரளவு நன்மை தருகிறது.  5ல் சுக்ரன் ஆட்சி, சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும், எழுத்தாற்றல் வாக்கு வண்மை போன்றவை உண்டாகும். ராகு 6ல்  நோய் அகலும், கடன் வழக்கு நீங்கிவிடும். 12ல் கேது சுப செலவுகள் உண்டாகும். பொதுவில் நன்மை அதிகம் இருக்கிறது இந்த மாதத்தில் அதனால் கவலை வேண்டாம் வெற்றிகள் உண்டாகும். பணப்புழக்கம் தாராளம் என்பதால் சேமிக்கும் வழக்கத்தை கொள்ளுங்கள். யாருடனும் மோதல் போக்கு வேண்டாம் சூரியன், செவ்வாய், குரு அவ்வளவு நன்மை இல்லை என்பதால் எதிலும் ஒரு கவனம் இருப்பது அவசியம். வீன் விவாதங்களை தவிர்த்து குடும்பத்தினருடன் வேலைசெய்யும் இடத்திலும் விட்டுக்கொடுத்து அனுசரித்து போவது நல்லது. பொதுவில் நன்மை தரும் மாதம்.

சந்திராஷ்டமம் : உத்திராடம் – மே 29, திருவோணம் – மே 30, அவிட்டம் – மே 31

வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : முருகப்பெருமானை வழிபடுவது, கந்த சஷ்டி கவசம் சொல்வது போன்றவையும் சூரிய வழிபாடும் நலம் தரும். செவ்வாய் கிழமைகளில் முருகன் கோவிலில் விளக்கேறுங்கள். அன்னதானம் செய்யுங்கள். ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி செய்யுங்கள். சரீரத்தினால் உதவி செய்யுங்கள்.

கும்ப ராசி (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய)

ஜெனன ராசியில் செவ்வாய் மாதம் முழுவதும் இருப்பதால் சிந்திக்கும் திறன் குறையும், அவசரப்படுதல், பொருள்விரயம், உஷ்ண சம்பந்தப்பட்ட நோய் தாக்குதல் என்று இருக்கும். ராசி நாதன் சனிபகவான் 12ல் சுப விரயம், மருத்துவ செலவும் இருக்கும் அதே நேரம் சனியின் பார்வை நல்ல பலனை தந்து பொருளாதாரத்தில் நிலையை கொண்டிருக்கும். குருபகவான் 12ல் இருந்தாலும் பார்வையால் நன்மை தருகிறார். தீர்த்த யாத்திரை, வாகனம், மனை, அல்லது கல்வி போன்ற இனங்களில் செலவு, அதுவும் சுப செலவுகளாக இருக்கும், மனதில் மகிழ்ச்சி ஏற்படும். சூரியன் 4ல் சஞ்சரித்து அவ்வளவு நன்மையை தரவில்லை, ஜீவன ஆதாயம் இருக்கும், பகைவர்கள் நீங்குவர், புதிய வழக்குகளில் சிக்கும் நிலை ஏற்படும் கவனம் தேவை, 5ல் செல்லும் புதன் இடமாற்றம் அயலூர் பயணம் போன்றவற்றை தரும், சந்திரன், அஸ்வினி, பரணி, கிருத்திகை 1, புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம், மூலம்,பூராடம், உத்திராடம் 1 ஆகிய நக்ஷத்திரகால்களில் பயணிக்கும் போது மகிழ்ச்சியையும் குடும்பத்தில் குதூகலத்தையும் நண்பர்கள் உற்றாரின் உதவிகளையும், நினைத்த காரியத்தில் வெற்றியையும் தருவார், ஆடல் பாடல் கேளிக்கைகள் என்று செல்லும் நிலையும் ஏற்படும் போதுமான பண வரவு உண்டாகும். சுக்ரன் 4ல் இருந்து கொண்டு நினைத்த காரியங்களில் வெற்றியை தருவார், பொருள் வரவு உண்டு. கணவன் மனைவிக்குள் நெருக்கம், நண்பர்கள் உறவினர்களுடன் விருந்துண்ணல் கேளிக்கைகளில் ஈடுபடுதல் போன்றவை இருக்கும். கேது 11ல் சகல துறையினருக்கும் நன்மை உண்டாகும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இருக்கும் உத்தியோகத்தில் உயர்ந்த நிலை இருக்கும். செய்தொழில் வியாபாரம் வளர்ச்சியடையும், மேல்மட்ட மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். 5ல் ராகு ஆன்மீகத்தில் ஈடுபட வைக்கும். பணத்துக்கு செலவு வைக்கும். பொதுவில் இந்த மாதம் நன்மை தரும் கிரஹங்கள் பலமாய் இருப்பதால் கெடுபலன்கள் சுமார் அதனால் வருவதை பயன்படுத்தி சேமிக்க பழகுங்கள் சிக்கணமாய் இருப்பது நல்லது.

சந்திராஷ்டமம் : அவிட்டம் – மே 31, சதயம் – ஜூன் 1, பூரட்டாதி 1,2,3 – ஜூன் 2

வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : சனீஸ்வரனுக்கு எள் விளக்கு ஏற்றுங்கள், இஷ்ட தெய்வம் குல தெய்வ வழிபாடு நன்மை தரும். அருகில் உள்ள கோயிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள், முடிந்தவரை அன்னதானம், வஸ்திரதானம், பறவைகள் விலங்குகளுக்கு உணவிடுதல், ஏழைக்குழந்தைகளை படிக்க வைத்தல், சரீரத்தினால் உதவி செய்தல் போன்றவை நல்ல பலனை தரும்.

மீன ராசி (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய )

ராசிநாதன் குரு பகவான் 11ல் இருக்கிறார் சூரியன் நக்ஷத்திரத்தில் இழந்த பதவியை திரும்ப பெறுதல், பணம் சேருதல், புதுவித ஆடை ஆபரண சேர்க்கை, எடுத்த காரியங்களில் வெற்றி, ஜீவன வகையில் கணிசமான ஆதாயம் என்று இருக்கும் சிலர் புதிய வீடு நிலம் வாங்குவர். வாகன யோகமும் உண்டாகும். கூடவே சனிபகவான் அடைந்த நஷ்டத்தை திரும்ப பெறுதல், கௌரவம் கூடுதல், உத்தியோகத்தில் பதவி உயரு, தொழிலில், வியாபாரத்தில் கனிசமான லாபம், பிணி, கடன் சத்ரு போன்ற பாதிப்புகள் நீங்குதல், 3ல் இருக்கும் சூரியனால் பணவரவு, நினைத்த செயல்களில் வெற்றி உண்டாகுதல், பகைவர்கள் அழிதல், 3ல் சுக்ரன் ஆட்சியாக இருப்பதால் உடல் ஆரோக்கியம் ஆடம்பர பொருள்களிய விற்பவர்களுக்கு நல்ல ஆதாயம், ஆடல் பாடல் கேளிக்கை விருந்து என்று இருக்கும். சந்திரன் கிருத்திகை 2,3,4, ரோஹிணி, மிருகசீரிடம் 1,2, மகம், பூரம், உத்திரம் 1,  உத்திராடம் 2,3,4 திருவோணம், அவிட்டம் 1,2ல் சஞ்சரிக்கும் காலங்களில் அதிக மகிழ்ச்சி நினைத்தது நிறைவேறல், பணவரவு, சுப விசேஷங்கள் நடத்தல் என்று நன்றாகவே இருக்கும். அதேநேரம் 12ல் இருக்கும் செவ்வாய் பலவித துன்பங்களை கொண்டுவரும். வீண் விரயங்கள் வரும், வழக்குகளில் சிக்க நேரிடும். எதிலும் கவனமாக இருக்க வேண்டும், 3ல் இருக்கும் புதனும் சிந்திக்கும் ஆற்றலை குறைக்கும் ஆனால் 4ம் இடத்துக்கு புதன் செல்லும்போது 25ம் தேதிமுதல் சுக விருத்தி, வாகன யோகம், பொருள் வரவு, உறவினர்களின் பாராட்டை பெறுதல், சுய கௌரவம் அதிகரித்தல் என இருக்கும். ராகு சில சிக்கலை தந்தாலும், பெரிய பாதிப்பை உண்டாக்காது. 10ல் இருக்கும் கேது இருவித வருவாயை அனுபவிக்கும் யோகத்தை தரும், பூமி நிலம் போன்றவற்றால் வருமானம் அதிகரிக்கும் விவசாயிகள் நல்ல பலன் பெறுவர், உழைப்பவர்கள், சொந்த தொழில் செய்பவர்கள் என்று எல்லோருக்கும் நல்ல வருமானம் இருக்கும். பொதுவில் இந்த மாதம் நல்லபலன்கள் மிக அதிகமாக இருக்கு கிரங்களில் செவ்வாய், ராகு தவிர மற்றவை சாதகமாக இருப்பதால் கஷ்டம் தெரியாது. சேமிக்க பழகி கொள்ளுங்கள் பின்னாளில் உதவும்.

சந்திராஷ்டமம்:  பூரட்டாதி 4 – ஜூன் 2, உத்திரட்டாதி – ஜூன் 3, ரேவதி – ஜூன் 4

வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : நல்ல நிலை இருப்பதால் அருகில் உள்ள கோவிலில் விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள் லக்ஷ்மியை வணங்குவது சிறந்தது. தாராளமாக அன்னதானம், வஸ்திர தானம் போன்று செய்யலாம். இயலாதோருக்கு சரீர ஒத்தாசைகளை செய்யுங்கள்.


குறிப்பு: இதுவரை சொல்லப்பட்ட பலன்கள் எல்லாம் பொதுவானவை. உங்கள் ஜனன ஜாதகம் நன்றாக இருந்தால் நல்லபலன்கள் அதிகமாகவும் கெடுபலன்கள் குறைவாகவும் இருக்கும். மேலும் தசாபுக்திகள் சாதகமாய் இருந்தாலும் நல்லதாகவே நடக்கும். உங்கள் ஜனன ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி பலனை சரிபார்த்து கொள்ளுங்கள்.

அன்புடன்

லக்ஷ்மி ந்ருஸிம்ஹாச்சாரி

ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்

D1, I Block, Alsa Green park, Near MIT Gate

Nehru Nagar, Chrompet, Chennai – 600 044

Email: mannargudirs1960@gmail.com

Phone: 044-22230808 / 8056207965

Skype ID: Ravisarangan

!!சர்வே ஜனா சுகினோ பவந்து!!

About Author