அகம் புறம்

‘அருணை ஆஸ்பத்ரியில் சேர்த்திருக்காங்களாம்’

அவந்திகாவிடமிருந்துஅப்படி ஒரு அலைபேசி செய்தி வந்ததும் அதிர்ந்துதான்  போனாள் அர்ச்சனா…

“அச்சோ.. ஏன்… என்னாச்சு?”

“அளவுக்கதிகமா தூக்க மாத்திரை சாப்ட்ருக்கார்”

“தூக்க மாத்திரையா.. அய்யோ எதுனா தற்கொலை முயற்சியா?”

“சே.. சே.. அதெல்லாம் இல்ல.. அருணாவது.. அந்த மாதிரிலாம் போகிறதாவது! மாத்திரை மூனு நாலு அதிகமாயிருக்கு அவ்வளவுதான்..”

அதானே.. அவந்திகா அருணை பற்றி அப்படி சொன்னது நூற்றுக்கு நாறு உண்மைதான்! தான் மட்டுமல்ல தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் எப்போதும் கலகலப்பாய் வைத்திருப்பவர் அருண். உடம்பு முழுதும் நகைச்சுவை உணர்வு! அவர்களது டீம் லீட்னுதான் பேரு.. கொஞ்சங்கூட ஈகோ, தகுதி.. பதவி.. இதெல்லாம் பார்க்க மாட்டார்.. அவருக்கா இப்படி……..

“ஹலோ…!”

“ஆங்.. இருக்கேன் சொல்லு..”

“என்னத்த சொல்றது… கார்த்தி, ஸ்டீபன், ரமேஷ், மாலினி எல்லாரும் அங்கதான்  இருக்காங்க! கார்த்திதான் எனக்கு போன் பண்ணி சொன்னான்.. நீ நேர வா.. அங்க பாக்கலாம்..”

ஹாஸ்பிடல் டீடெய்ல்ஸ் சொல்லிவிட்டு லைனை துண்டித்தாள் அவந்திகா! அவர்கள் அனைவரும் பிரபலமான ஒரு மைக்ரோஸாஃப்ட் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள்.

மருத்துவமனையில் அருண் பழைய நிலைக்கு வர மூன்றரை மணி நேரமானது! தன்னைச் சுற்றி தன்னிடம் பணிபுரிபவர்கள் நிற்பதைக் கண்டதும் லேசாக வெட்கமாகிவிட்டது அருணுக்கு! காரணம், தூக்க மாத்திரை விஷயம் தெரிந்திருக்கும்… அதற்கேற்றார் போல் நேரடியாய் விஷயத்திற்கு வந்தான் ஸ்டீபன்…

“என்ன சார் ஆச்சு! தூக்க மாத்திரை சாப்ட்டு தூங்க வேண்டிய அளவுக்கு உங்களுக்கு என்ன சார் பிரச்சனை.. உரிமையா நீங்க பழகறதுனால கேட்கிறோம்.. இஷ்டமில்லனா சொல்ல வேண்டாம்!”

“சே.. சே.. அப்படிலாம் இல்லப்பா..”

“அப்போ சொல்லுங்க..”

எதையோ யோசித்த அருண் கேட்டார்…

“ம்ம்ம்ம்… என்னை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்!?”

“என்ன தெரியும்னா.. நல்ல புத்திசாலி.. முழு அர்ப்பணிப்போட வேலை செய்கிறவர்.. டீம் லீட்ங்கற பந்தா இல்லை.. முக்கியமா செம ஜாலியான நபர்..”

“ஹஹ..ஹ.. அது ஒரு பக்கம்… இன்னொரு பக்கம் நான் திருமணமாகி மனைவியை இழந்தவன்.. என துவங்கியவர்.. 

ஏதோ யோசித்து.. 

அது பற்றி பேச வேண்டாமே ப்ளீஸ்..” சொல்லும் போதே அருணின் குரல் கம்மியது!

விக்கித்து நிமிர்ந்தனர் அனைவரும்! 

“சார் சத்தியமா உங்களை பார்த்தா அப்படி தெரியல சார்… எவ்வளவு வேதனைகளை மறந்து இத்தனை ஜாலியா… 

“ஆமாம் வேதனைதான்.. ஆனா அந்த வேதனையை நான் வேலை செய்ற இடத்தில் மறந்தேன்… மறந்தேன்ங்கறத விட அதை நினைக்கவே வழியில்லாம என்னை அமைச்சுக்கிட்டேன்.. உங்க எல்லாருடனும் க்ளோஸா பழகி, சிரிச்சு ஒரு வட்டத்தை போட்டுக்கிட்டேன்.. ப்ச்.. அதுக்கு பங்கம் வந்துருச்சு..”

“பங்கம் வந்துருச்சா.. என்ன சார் சொல்றீங்க… புரிகிற மாதிரி சொல்லுங்க சார்..”

“அதான்.. இப்ப மூனு நாலு மாசமா, வீட்லருந்தே வேலை பாருனு சொல்லி அந்த பணியிடச் சூழலைப் பறிச்சுக்கிட்டாங்களே! சொந்த வாழ்க்கையும் போச்சு.. அமைச்சுக்கிட்ட மனித நட்புகளுடன் உறவாடுவதும் போச்சு.. தனிமை வேற.. மனச்சுமை ஏற ஏற தூக்கம் வராம தவிச்சு… மாத்திரைக்கு பழக்கமாகி.. அதுவும் அதிகமாகி.. என்னை இங்க கொண்டுவந்து நிறுத்தியிருக்கு!”

“வீட்ல இருந்து வேலை செஞ்சா இப்படி ஆகும்னு சொல்ற மாதிரி இருக்கு! சாரி சார்.. நீங்க சொல்றது அபத்தமா இருக்கு!”

“அட என்னை..  விடுங்க.. ஆனா ஒன்னு உறுதி.. இந்த தற்காலிக செட்டப்பை நிரந்தரமாக்கப் போறதா பேசிக்கிறாங்க.. சில நிறுவனம் அதுக்கு ஸ்டெப்பும் எடுத்துட்டாங்க.. இடத்தை கூட அதிகம்னு விக்க தொடங்கிட்டாங்களாம்.. இதெல்லாம் எதுல கொண்டு போய் விடும் தெரியுமா!?”

“என்ன சார் குண்டை தூக்கி போடறீங்க… வீட்லருந்தபடியே வேலை பார்க்கிறது எவ்வளவு ஈஸி! இஷ்டப்படி ட்ரெஸு.. நினைச்சப்ப நினைச்ச தீனி.. இரண்டு  மணி நேரம் நாலு மணி நேரம்னு அனாவசியமா போக்குவரத்துல சிக்க வேண்டாம், அந்த  நேரம் மிச்சம்..  இந்த பாழா போன பொல்யூஷன்ல அவதிபட வேண்டாம்.. நச்சுனு வீட்லருந்தே வேல பாக்குறது வரம்னு நாங்க சந்தோஷப்பட்டுட்ருக்கோம்.. நீங்க என்னடானா..!” படபடவென தன் ஆதங்கத்தை கொட்டினான் ஸ்டீபன்.

கேட்டதும் விரக்தியாய் சிரித்தார் அருண்…

“நோ… சீக்கிரம் சலிப்பு வந்துடும்.. வீடாவே இருந்தாலும் ஒரே இடத்துல ஒரே மாதிரி வேலை… வெளியில் வருவது, நாலு பேர் கூட பழகுவது, சேர்ந்து சிரிப்பது, நல்லது கெட்டது என நாலு அனுபவங்கள் பெறுவது, பலவகை மொழி கலாச்சார மக்களிடையே பழகுவது.. இப்படி எதுவுமேயில்லாம  போரடிச்சு போயிடும்.. அந்த சலிப்பு மன அழுத்தத்ல கொண்டு போய் விடும்..

“அப்போ பலனே இல்லங்கறீங்களா?”

“பலனை விட பாதகம் அதிகம்ங்கறேன்..”

“எனனா சார்.. எவ்வளவு இடம் மிச்சம்.. மின்சாரம் மிச்சம்.. வேலை செய்றவங்களுக்காக எடுக்க வேண்டிய பொறுப்பு கம்மி.. முக்கியமா அவங்கவங்க வீடு இருக்கிற சின்ன நகரம்.. ஏன்.. கிராமத்துல கூட டெக்னாலஜி வளரும் வாய்ப்பு… சொல்லிகிட்டே போகலாம்.. புலம்பினாள் மாலினி!

“இதல்லாம் நல்லதுதான்.. இல்லேன்னு சொல்லல! ஆனா, வாழ்க்கையில் ஒரு பிடிப்பு போயிடும்.. வேலை செய்கிற இடத்துக்கு வெளியில் வரும் போதே இயந்திர வாழ்க்கைனு பழிக்கிறோம்.. அந்த சான்ஸும் போச்சுனா? நினைக்கவே பயமாருக்கு..! ஏற்கனவே இணையத்தால உறவுகள் சுருங்கிடுச்சு.. எப்பப் பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் செல்லுல மூழ்கி கிடக்கறாங்க.. ஏதோ வேலை செய்வதற்காகவாவது வெளில வராங்க.. அதுக்கும் வேட்டு வச்சா.. சுத்தம்.. மனிதம் என்றால் கிலோ என்ன விலைனு கேட்கும் சூழல் வரும்..”

தயங்கியபடி ரமேஷ் தொடங்கினான்…

“சார் நீங்க சொல்றது வாஸ்த்தவம் தான்.. அதே சமையத்ல ஒன்னு கவனிக்கனும்.. நாளுக்கு நாள் வேலையில்லா திண்டாட்டம் பெருகுது… இதுல, ‘நான் அப்படி வேலை செய்ய மாட்டேன் இப்படி சரிபட்டு வரமாட்டேன்னு சொன்னா நல்லாருக்குமா சார்.. ஒன்னுமில்ல.. சாப்பாடு விஷயத்தை எடுத்துக்கங்க.. கட்டுச் சோறு, கேன்டீன்னு எந்த தொல்லையும் இல்ல.. ‘சோறு முக்கியம் அமைச்சரே’…”

” சரிதான்.. ஆனா நீங்க எல்லாரும் பெரும்பாலும் உடல் சௌகர்யத்தை பாக்றீங்க… நான் மனசு பத்தி யோசிக்கிறேன்.. அதுமட்டுமில்ல வீட்டு சூழலில் கவனச் சிதறலுக்கு நிறைய வாய்ப்புண்டு! இவ்வளவு ஏன் கவனம் தப்பக் கூடாதுனுதான் பல ஆஃபீஸ்ல சின்ன சின்ன டப்பா மாதிரி தனித்தனி கேபின் வச்சுருக்காங்க.. இத்தனைக்கும் வேலைத் தவிர வேற செயல்கள் மிக மிக குறைவு! வீட்ல அப்படியா? சத்தம் வரும்.. டிவி ஓடும்.. குழந்தைகளை பார்க்கத் தோனும்.. எதுவும் இல்லாத தனி அறை அமைச்சுக்கிட்ட எத்தனை பேருக்கு அந்த வசதி இருக்கும்.. வசதி இருக்கிறவங்க கூட அப்படி எத்தனை நாள் உக்கார முடியும்.. யதார்த்தத்தை யோசிக்கனும்! நம்ம கலாசாரத்துக்கு, குடும்ப அமைப்பிற்கு சரி வருமானும் யோசிக்கனும்..”

ஏதோ புரிவது போல் அனைவரின் முகத்திலும் யோசனை!

“இப்பவே ஆயிரத்தெட்டு வியாதி! இன்னும் இடிச்ச புளி மாதிரி ஒரே இடத்தில் இருந்தா கேக்கவே வேண்டாம்… அதுவும் வேலைக்கு போகும் பெரும்பாலான  பெண்களுக்கு பணியிடம் என்பது ஒரு நல்ல ரிலீஃப். ஏகப்பட்ட தொல்லைகளுக்கு நடுவில் இங்க வருவது அவங்களுக்கு ஒரு ரிலாக்ஸ்! உலகம் போகும் வேகம் இனி அதிகமாக இணையத்தில் தான்  வேலைகள் வாய்க்கும்.. சிலர் நொந்து போய் ஒன்னு சொல்வாங்க கேட்ருப்பீங்க.. ‘சே என்ன வாழ்க்கை! வீடு.. வீடு விட்டா ஆஃபீஸ்.. ஆஃபீஸ் விட்டா வீடு’னு புலம்புவாங்க.. இதுக்கே சலிச்சுக்கறவங்க அந்த ‘ஆஃபீஸ்’ வாய்ப்பும் போய்ட்டா.. அப்புறம் ரோபோ மாதிரிதான்.. அட! பறவைகள் விலங்குகள் இவைகளுக்கே இட மாற்றம் தேவைப்படும் போது… நமக்கு முக்கியமில்லையா?”

” உண்மை தான் சார்.. ஒரு செயலை செய்ய முன்னெடுக்கும் போது நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும்.. எந்த அளவு மனிதர்களுக்கு நன்மை கொடுக்குது, பாதிக்குதுனு பார்க்கனும்… எதற்கெடுத்தாலும் அயல் நாட்டை நாம உதாரணமாய் காட்டுகிறோம்!  ஆனானப்பட்ட அந்த அயல்நாட்டில் கூட  பணியிடத்தில் வேலை செய்யும்  பழக்கத்தை மாற்றவில்லை!” கார்த்தி சொன்னவுடன் அனைவரும் தலையசைத்தனர்..

“சரி… இதுக்கு என்னதான் சார் தீர்வு!?”

அவந்திகா அவசர அவசரமாய் கேட்டாள்…

“தீர்வு..! நாம முடிவெடுக்க முடியாது! வேணா சஜஸ்ட் பண்ணலாம்.. நிறுவனங்கள் நிரந்தர முடிவெடுப்பதற்கு முன்னாடி, வேலை செய்றவங்ககிட்ட கருத்து, யோசனை கேட்கலாம்.. வாரத்துல ஷிப்ட் முறைல அலுவலகத்திற்கு  வர சொல்லலாம்.. இப்படி எத்தனையோ ‘லாம்’கள் இருக்கு! சத்தியமா நான் என்னைவச்சு பேசல.. இது ஒரு கோடுதான்.. இந்த சம்பவம் என்னை யோசிக்க வச்சது.. அதுதான் இத்தனையும்.. மன அழுத்தம் வருமுன் காப்போமே! எறியும் கல்லை எறிவோம்.. பின் அவன் விட்ட வழி!” என்று மேலே கையைக் காட்டினார்.

“ஆமாம் சார்.. ப்ளஸும் இருக்கு மைனஸும் இருக்கு.. கலந்து நல்ல முடிவு எடுப்பாங்கனு நம்புவோம்! ஒரு ரிக்வெஸ்ட்.. நீங்க இனிமே இந்த தூக்க மாத்திரை பழக்கத்தை விட்டுடுங்க சார்..” என்றாள் அர்ச்சனா! “

“நிச்சயமாக” 

நம்பிக்கைக்கும் கோரிக்கைக்கும் ஒரே வார்த்தையில், அருண் பதில் சொன்னார்.

*****************

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.