ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி – முந்தைய பதிவுகளைப் படிக்க
திருவெம்பாவை ஆறாம் நாள்
மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்தெம்மைத் தலையளித்தாட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோருக்குன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம்கோனைப் பாடேலோர் எம்பாவாய்
மானே நீ நென்னலை நாளை வந்துங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே = அழகிய மான் போன்ற பெண்ணே! நாளைக்கு நானே வந்து உங்களை எல்லாம் எழுப்புவேன் என்று கூறி இருந்தாயே? அப்படிச் சொன்னதை மறந்தாயோ? எங்கே போயிற்று அந்த வார்த்தைகள்? உனக்கு நாணமாய் இல்லையா?
போனதிசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ= அவ்வார்த்தைகள் எந்தத் திசையில் சென்றன பெண்ணே, இன்னமுமா உனக்குப் பொழுது புலரவில்லை??
வானே நிலனே பிறவே அறிவரியான்= இந்த வானும் சரி, நிலமும் சரி, பிற எவ்வுலகங்களும் சரி, இறைவனைச் சரிவர அறிந்தவரில்லை. எவர் அறிவார் அவன் பெருமையை?? இது உணர்வால் மட்டுமே இயலும் ஒன்று.
தானே வந்தெம்மைத் தலையளித்தாட்கொண்டருளும்= ஆனாலும் அந்தப் பரமன் தானே வலிய வந்து அவனிடம் பக்தி செலுத்தும் நம்மிடம் அன்பு பூண்டு நம்மை ஆட்கொண்டருளுகிறான்.
வான்வார் கழல்பாடி வந்தோருக்குன் வாய் திறவாய்=அப்படிப்பட்ட ஈசனின் வீரக் கழல் அணிந்த திருவடிகளைப் பணிந்து பாடித் துதித்து இங்கே வந்துள்ள எங்களுக்கு நீ வாயைத் திறந்து உன் பதிலையாவது கூறுவாய்.
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்= ஆ, ஆ, நீ இவ்வளவு கல்நெஞ்சுக்காரியாய் இருக்கிறாயே? பரமன் பெயரை நாங்கள் சொன்னதைக் கேட்டதுமே நீ வாயையும் திறக்காததோடு உன் ஊனும் கூட உருகவில்லையே?? இது என்ன அதிசயம்? இத்தகைய நிலை உனக்கு ஒருத்திக்குத் தான் இருக்கும். அடிபெண்ணே,
ஏனோர்க்கும் தம்கோனைப் பாடேலோர் எம்பாவாய்= ஈசன் எங்களுக்கு மட்டுமல்ல, உனக்கும், உன்னைச் சேர்ந்தவர்களுக்கும், மற்றும் இவ்வுலகத்து மாந்தர் அனைவருக்கும் தலைவன் ஆவான். அவன் புகழைப் பாட இனியாவது நீ வருவாயாக.