எங்கிருந்தோ வந்தான் ! – 1

என் மனதைப் பாதித்த சில உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் சற்று கற்பனையும் கலந்து எழுதிய ஒரு சிறுகதை. மூன்று அத்தியாயங்களில் அமைந்த குறுநாவல் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். இதோ.

அத்தியாயம்~1

வருடம்: 1992
இடம்: சென்னை திருவல்லிக்கேணி!!!

சிறிய முன்னறை, அதில் பாதியளவு ஒரு சமையலறை, இடது ஓரமாக ஒரு குளிப்பறை, வலது பக்கம் சமையலறையை ஒட்டினாற் போன்ற சிறிய ஒரு பூஜை அறை. இது போல் பத்து வீடுகள் கொண்ட ஒரு கீழ் மத்திய தரப் பிராமணக் குடும்பங்கள் வாழும் வீடுகளின் தொகுப்பு அது. கழிப்பறை என்பது அந்தப் பத்து குடித்தனங்களுக்கும் சேர்த்து மொத்தமே மூன்றுதான். வெளியே பின்புறக் காம்பவுண்டுச் சுவரை ஒட்டி இருந்தது. பொதுஜன பாஷையில் சொல்வதென்றால் ‘ஒண்டிக் குடித்தனம்’. வெள்ளை அடித்துப் பல வருடம் இருக்கும் போல. சுவர்களில் நிரந்தரமாக ஒரு சாம்பல் கலந்த கருமை வர்ணம் உறைந்து போயிருந்தது. சிரார்த்தம் முதலான காரியங்கள் நடத்தி வைக்கும் இடமாகவும், நாள் கிழமைகளுக்கு சமையல், பட்சணங்கள் செய்து தரும் குடும்பங்கள் வசிக்கும் இடமாகவும் இருந்ததால் மூக்கை நெருடும் ஹோமப் புகையும், எண்ணைப் புகையும் கலந்து அங்கே ஒரு தனிக் களையும் பிரத்யேகமான வாடையும் நிரந்தரமாகக் குடியிருந்தது.

அந்த ஒண்டிக் குடித்தனங்களின் ஓரமாக இருந்த வீட்டிலிருந்து சன்னமாக சிலரின் அழுகைக் குரலும் பேச்சொலியும் கேட்டது. வீட்டின் வெளியே நீளமான குறுகலான அந்த வராந்தாவில் சிறிய சேர்கள் போடப்பட்டு சிலர் அமர்ந்திருந்தார்கள். சிலர் கடைசி காரியங்களுக்கான ஏற்பாட்டில் இறங்கி இருந்தார்கள். வீட்டுக்குள் ஒரு மூலையில் சௌந்தரவல்லி தலைகுனிந்து ‌அமர்ந்திருந்தாள். ரங்கப்ரியன் தென் வடலாக கிடத்தப்பட்டுக் கிடக்க, தலைமாட்டில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சௌந்தரத்தின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. பிரமை பிடித்த மாதிரி உட்கார்ந்து இருந்தவளின் கால் மாட்டில் வைதேகி சுருண்டு படுத்துக் கிடந்தாள். அழுதழுது சோர்ந்து போய், அழக்கூடத் திராணி இல்லாமல் மயங்கிக் கிடந்தாள். பொங்கிச் சிவந்திருந்த இருவரின் கண்களில் இருந்தும் அனிச்சைச் செயல் போலக் கண்ணீர் ஒரு மெல்லிய கோடாகக் கசிந்து வழிந்து கொண்டிருந்தது.

ஒரு ஓரமாகப் போடப்பட்டிருந்த அந்தத் தேக்குமரத்தில் செய்த சாய்வு நாற்காலியில் சில மணி நேரங்கள் முன்பு ஆஜானுபாகுவாக அமர்ந்து “எங்கிருந்தோ வந்தான்” என்று பாடிக் கொண்டிருந்தார் ரங்கப்ரியன். சௌந்தரமும், வைதேகியும் அவர் காலடியில் அமர்ந்து ரசித்துக் கொண்டு இருந்தார்கள். அவருக்கு இயற்கையிலேயே நல்ல சரீரம் மட்டுமல்ல, நல்ல சாரீரமும் அமைந்திருந்தது. பார்ப்பதற்கு அந்தக் காலத்து எஸ்.வி.ரங்காராவ் சாயலில் இருப்பார். குணத்திலும் தங்கமான மனிதர். சௌந்தரமும் ஜாடிக்கேத்த மூடி போல அவரின் அழகுக்கும் குணத்திற்கும் இணையானவளாக அமைந்தாள். பெண் வைதேகியும் அற்புதமானவள். குணம், அழகு, வாய்ப்பாட்டு, நாட்டியம், ஓவியம் என்று எதிலும் குறைவில்லை. குடும்பத்தின் சூழலுக்கு ஏற்ப தனக்கென்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அப்பா அம்மா சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஒரு பெண்ணுக்கு, அதிலும் குறிப்பாக பிராமணப் பெண்ணுக்கு, என்று இந்தச் சமூகம் வரைந்து வைத்திருக்கும் வரையறைகள் அத்தனைக்கும் அட்சரம் பிசகாத உதாரணமாக இருந்தாள். ஒரு மனிதனுக்கு அவனைப் புரிந்து கொண்டு, குடும்பச் சூழ்நிலையை அனுசரித்து நடக்கும் மனைவியும், பிள்ளைகளும் அமைந்து விட்டால் அவன் ஏழ்மையில் உழலுங் குசேலனாக இருந்தாலுங் கூட வாழ்க்கை வசந்தமாகவே இருக்கும். நேர்மாறாக இருந்து விட்டால், அவன் குபேரனாக இருந்தாலும் குடும்பத்தில் குதூகலம், நிம்மதி என்பது கிஞ்சித்தும் இருக்காது. அந்த வகையில் ரங்கப்ரியன் கொடுத்து வைத்தவர் தான்.

ப்ரோகிதத் தொழிலில் வந்த வருமானம் வயிற்றுக்கும் வாய்க்குமே சரியாக இருந்தது. சௌந்தரமும் தன்னால் ஆன வகையில் சமையல் வேலைகள், பக்ஷணம் செய்து தருவது என்று குடும்பச் சக்கரம் சுழல கடையாணியாகத் தன்னால் ஆன பங்கை அளித்துக் கொண்டிருந்தாள். கல்யாண வயதாகியும், அழகும் திறமையும் இருந்தும் வைதேகிக்கு இன்னும் கல்யாணம் கூடி வரவில்லை. பணிரெண்டாம் வகுப்புக்கு மேல் படிக்க வைக்க குடும்பச் சூழல் இடந்தரவில்லை. அவளும் அம்மாவுக்கு அனுசரணையாக இருந்தாள். வருபவர்கள் பவுனையும், பவிஷையும் பார்த்த அளவுக்கு அவள் பண்பையும் பாந்தத்தையும் பார்க்கவில்லை.

இப்படித்தான் சற்று நேரம் முன்பு அவர் ஈசிச்சேரில் சாய்ந்து கொண்டிருக்க காலடியில் அமர்ந்திருந்த சௌந்தரத்திடம் திடிரென்று அந்தக் கேள்வியைக் கேட்டார்.

“ஏன்டி சௌந்தரம். போறதுக்கு வேளை வந்துடுத்துன்னா, எனக்கு மின்னாடி நீ போய்ச் சேர்ந்துடு. பொம்மனாட்டிகள் சுமங்கலியாப் போனாத்தான் சிறப்பு. நீ போன அடுத்த நாழி நானும் உன் பின்னாலயே வந்துடறேன்.”

“என்னன்னா நீங்க. நாளுங் கிழமையுமா இப்படி அச்சானியமா ஒரு வார்த்தை சொல்றேளே.”

“இதுல அச்சானியம் என்னடி இருக்கு. சாவுக்குப் பயந்தவன் தான் அதை அச்சானியமா நினைக்கணும். பிறப்பு மாதிரி, இறப்பும் ஒரு நிகழ்வு அவ்ளோதான். யாரு இருந்தாலும் போனாலும் இந்த லோகம் இயங்கிண்டேதான் இருக்கப் போறது.”

“நன்னாத்தான் சொன்னேள் போங்கோ. கல்யாண வயசுல பொண்ண வைச்சுண்டு அவளைக் கரையேத்தாமைக்கி பேசற பேச்சா இது.”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை. யாரும் யாரையும் கரையேத்த முடியாது அந்த பகவானைத் தவிர. நாம இல்லைன்னாலும் அவளைக் கரைசேர்க்க அந்த ரங்கன் இருக்கான். அவன் வருவான். எங்கிருந்தோ வருவான். என்றவாறே தான் வழக்கமாகப் பாடும் பாடலைப் பாட ஆரம்பித்துவிட்டார்.

வைதேகி எப்போதுமே அவர்கள் உரையாடலில் குறுக்கிட மாட்டாள். இன்றும் அப்படித்தான். இப்படி ஒரு தீவிரமான உரையாடல் நடந்தும் அவள் குறுக்கிடாமல் அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தாள்.

திடிரென்று பாடலை நிறுத்தியவர் கேட்டார். “ஏன்டி ஒரு வேளை நான் முன்னாடிப் போய்ட்டேன்னாக்க என்ன பண்ணுவே”

“இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு. இதே பேச்சா இருக்கு. தயவு செஞ்சு வேற ஏதானும் பேசுங்கோ. இல்லை பாட்டைத் தொடர்ந்து பாடுங்கோ.”

“அதிருக்கட்டும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.”

“என்னத்த சொல்றது. நல்ல பொம்மனாட்டின்னா தான் சுமங்கலியாப் போகனும்னுட்டு புருஷனைத் தவிக்க விடமாட்டா. புருஷன் இருக்கற வரை அவன் கூட இருந்து அவன் போனதுக்கப்புறம் கூடவே போகனும்னுதான் நெனைப்போ. நான் அந்த ரகந்தான். சுமங்கலியாப் போறேனோ இல்லியோ உங்க ரெண்டு பேரையும் தவிக்கவிட்டுட்டுப் போகமாட்டேன்.”

“உன்கிட்ட இருந்து இந்தப் பதில்தான் வரும்னு எதிர்பார்த்தேன். நானே கதின்னு இருக்கியே. நோக்குன்னு நான் பெருசா என்னத்தை செஞ்சுட்டேன். இவளும் ஒரு நாள் இல்லாட்டா ‌ஒருநாள் கல்யாணம் ஆகிப் புக்காத்துக்குப் போயுடுவோ. நமக்குன்னு ஒரு புள்ளை கூட இல்லை. நானும் போய்ட்டேன்னா உனக்குன்னு யாரு இருக்கான்னு யோசனை பண்ணும் போதெல்லாம் ரங்கன் ஞாபகந்தான் வரும். நானோ நீயோ சாஸ்வதம் இல்லை. அவன் மட்டுமே சாஸ்வதம் இந்த லோகத்துல. அவனை நன்னா புடிச்சுக்கோ. நான் போனாலும் அவன் துணையாய் வருவான். கோந்தே வைதேகி.‌‌ நோக்கும்‌ அதான். ஒரு வேளை நான் போய்ச் சேர்ந்துட்டா நீயே நேக்குக் கொள்ளி வைச்சுடறியா” என்றவர் பாட்டைத் தொடர்ந்தார்.

“எங்கிருந்தோ வந்தான். ரங்கன் எங்கிருந்தோ வந்தான் இடை சாதி நானென்றான். இங்கிவனை யான் பெறவே ‌என்ன தவம் செய்து விட்டேன். என்று பாடிக் கொண்டே வந்தவர் பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் கண்ணனால் பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது” என்ற வரி முடிகையில் அப்படியே சாய்ந்து விட்டார்.

இதோ இப்போது பெயரைத் தொலைத்துப் பிணம் என்ற நிலையில் படுக்க வைக்கப்பட்டுள்ளார்.

ரங்கப்ரியன் அழைத்த ரங்கனும் யாரும் எதிர்பாராத ஒரு அசாதாரண சூழலில் அங்கு வந்தான் ஆபத்பாந்தவனாக.

தொடரும்…

About Author

3 Replies to “எங்கிருந்தோ வந்தான் ! – 1”

  1. அருமையான மினி தொடர். ஆழ்ந்த கருத்துக்கள்….. மூன்று பாகமாய் பிரித்ததால் சஸ்பென்ஸ் சஸ்டெயின் செய்த விதம் அருமை…….. நெகிழ்வாக முடிவு.

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.