சஞ்சீவனி

சஞ்சீவனி – உயிர் தரும் மந்திரம்

இது பாண்டவ / கௌரவர்களின் காலத்திற்கு மிக முன்னால் நடைபெற்ற ஒரு சம்பவம் ஆகும். தேவர்களும் அசுரர்களும் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டே இருந்தனர். அப்போரில் அசுரர்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்றுக் கொண்டே வந்தனர். காரணம், அவர்களுடைய குரு சுக்ராச்சாரியாருக்கு இறந்த உயிர்களை மீட்டுத் தரும் சஞ்சீவனி மந்திரம் தெரிந்திருந்தது. அந்த மந்திரம் அறிந்தாலொழிய இப்போரில் வெற்றி பெறுவது என்பது இயலாது என்பதை அறிந்த தேவர்கள் பலத்த ஆலோசனைக்குப் பிறகு அவர்கள் குரு பிரகஸ்பதியின் மகன் கசன் என்பவனை சுக்ராச்சாரியாரிடம் அனுப்பி இம்மந்திரத்தை கற்று வரக் கூறினர்.

கசன், சுக்ராச்சாரியாரை அணுகி தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ள கேட்டுக் கொண்டான். பிரகஸ்பதியின் மேல் இருந்த மரியாதை மற்றும் கசனின் பணிவான நடவடிக்கையின் காரணமாய் அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டார் சுக்ராச்சாரியார். ஒரு சீடனாய் தன் கடமைகளை சுக்ராச்சாரியாரின் விருப்பத்திற்கேற்ப செய்து வந்தான். நாளடைவில் அவரது மகள் தேவயானிக்கும் மிக நெருக்கமாகிவிட்டான் கசன்.

வஞ்சக எண்ணம் கொண்ட அசுரர்கள் கசனின் நோக்கத்தை சந்தேகிக்க துவங்கினர். அதனால் சுக்ராச்சாரியார் அறியாமல் அவனை கொல்லவும் முடிவெடுத்தனர். ஒருநாள், அவனை கடத்தி சென்று கடலில் மூழ்கடித்து அவனது பிணத்தை சுக்ராச்சாரியார் முன் கொண்டுவந்து கிடத்தினர். அவர் கேட்டபொழுது எதோ ஒரு காரணம் சொல்லப்பட்டது. ஆனாலும் அவர்களது கேட்ட எண்ணத்தை அறிந்து கொண்ட சுக்ராச்சாரியார், சஞ்சீவனி மந்திரம் ஜெபித்து அவனை உயிர்ப்பித்தார்.

அடுத்த முறை அவனை கொன்று அவனது உடலை நாய்க்கு உணவாக இட்டனர் அசுரர்கள். இதை அறிந்த தேவயானி, சுக்ராச்சாரியாரிடம் முறையிட, மீண்டும் அவர் சஞ்சீவனி மந்திரம் ஜெபித்தார். இம்முறை நாயின் வயிற்றை கிழித்துக் கொண்டு வெளிவந்தான் கசன்.

மூன்றாம் முறை அசுரர் அவனை மரத்தில் கட்டி வைத்து உயிருடன் எரித்தனர். பின்பு அந்த சாம்பலை, மதுவில் கலந்து சுக்ராச்சாரியாருக்கு அளித்தனர். அதை குடித்தப்பின் தான், நடந்ததை உணர்ந்தார். இப்பொழுது அவருக்கு தேவர்களின் தந்திரமும் புரிந்தது.

சாம்பலாய் மதுவில் கலந்து அவரது வயிற்றில் இருந்த கசனுக்கு அவர் சஞ்சீவனி மந்திரத்தை போதித்தார்.பின் கீழே படுத்து அவர் அம்மந்திரத்தை ஜபிக்க , அவரது வயிற்றை கிழித்துக் கொண்டு உயிர் பெற்று வந்தான் கசன். அவனது குணத்திற்கு , அவனை உயிர் பெற்றவுடன் முதல் காரியமாய், அவனை உயிர்ப்பித்த குருவை சஞ்சீவனி மாத்திரம் ஜபித்து உயிர்பித்தான். பின்பு தேவர்களிடம் சென்று சேர்ந்தான்.

இதன் பின், சுக்ராச்சரியாரின் சாபத்தால் மது அருந்துபவர்கள் அவர் பட்ட கஷ்டம் போலவே அனுபவிப்பார்கள். சுக்ராச்சாரியாரின் உதிரத்தில் உயிர்பித்ததால், கசன் தேவயானிக்கு சகோதரன் முறை ஆகிவிட்டான். எனவே அவனை விடுத்து யயாதி என்ற மன்னனை மணமுடித்தாள் தேவயானி. இந்த யயாதியே பாண்டவர் / கௌவரவர்களுக்கு முன்னோடி ஆவான்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.