தஞ்சாவூரும் பாதாம் கீரும்

நேற்று எதற்கோ அடையார் பேக்கரி சென்றபோது மானேஜர், என்னைப் பள்ளிக்காலத்திலிருந்து அறிந்த அவரின் தகப்பனாரின் பிள்ளை, ”வாங்க! ஜப்பானீஸ்தானே?” என்று வரவேற்ரார்.

“ ம்ஹும்! அது பசங்க ஊருக்கு வரும்போதுதான்!”

மறுத்து விட்டு என் ஆர்டரைக்கொடுத்தேன். இந்த ஜப்பானீஸ் கேக், அதும் அடையார் பேக்கரியின் ஜப்பானீஸ் கேக் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.

காம்பஸ் வைத்து வரைந்தாற்போல வட்ட வடிவத்தில் கிட்டத்தட்ட 250 ஜி எஸ் எம் திக்கான பிஸ்கெட்டை இருபுறமும் வைத்து இடையில் கடல் நுரை போன்ற வெள்ளையில் கொழு மொழு கிரீமை நிரப்பி, அப்படியே ஒரு ப்ரெஸ்ஸில் அழுத்திக்கிட்டித்து அந்த வட்ட வடிவ சொர்க்க பிஸ்கெட்டின் மேல் பிரவுன் கலர் கிரீம் புள்ளி வைத்து தரப்படும் அபார வஸ்து. கிண்டி ரோடில், அதான் இன்றைய சர்தார் படேல் ரோடு, பஸ் ஸ்டாண்டு அப்போதெல்லாம் சௌகரியமாய் அடையார் பேக்கரிக்கு எதிரிலேயே இருந்தது. பனகல் பார்க்கில் காய்கறி வாங்கி தூக்கிவரும்போது இங்கே இறங்கின உடனேயே அம்மாவிடம் லஞ்ச பேரம் பேசுவேன்.

“ஜப்பானீஸ் வாங்கித்தா! இல்லேன்ன சைக்கிள் ரிக்‌ஷாவில்தான் வருவேன்!”

”ஏன் தொரைக்கு சாதா வால்நட் கேக் ஆகாதோ? அதென்ன ஜப்பானீஸ்?”

அந்த வெள்ளை கிரீம்தான் என் ஆதர்ஸ குறிக்கோள்!

ம்ஹும்!

இப்போதெல்லாம் டாக்டர் நரசிம்மன் உபயத்தில் பையன்கள் ஊருக்கு வந்தால்தான் அதை வாங்குகிறேன்! என் லிபிட் புரொஃபைலைப் பார்த்தவுடனேயே நரசிம்மன் கேட்டுவிடுவார், “என்ன ஜப்பானீஸ் கேக்கா?”

நேற்றைய விஷயம் அதுவல்ல.

அடையார் பேக்கரி மானேஜரின் தூண்டுதலுக்கு இடம் கொடுக்காமல் மறுத்து விட்டேன். அவர் விடவில்லை.

“சார்! பிரமாதமா பாதாம் கீர் வந்திருக்கு! ஒண்ணு சாப்பிடுங்க!”

அய்யயோ! என்னது பாதாம் கீரா? ”ரெண்டாயிரத்துப்பதினஞ்சு ஃபிப்ரவரி 25ஆம் தேதிலேர்ந்து பாதாம் கீரே தொடறதில்லை நானு!”

ராம்கோ மோட்டார்ஸைக்கடந்து ஓடி வந்து விட்டேன்.

புழுதி, சாணி நாத்தம், கொஞ்சம் பசும்புல் வாசனையோடு காது கிழியும் ந்யுமாடிக் ஹாரன் சப்தம் கேட்டவுடன் தஞ்சாவூர் வந்துவிட்டதை உணர்ந்தோம். மணி ஒன்பதை நெருங்கிவிட பசி கிள்ளியது.

ஆப்பம், அதிரசம் முதலிய தின்பண்டங்கள் விற்ற கடைகளில் மக்கள் ஈ மொய்ப்பது போல் மொய்த்து, அப்பண்டங்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். வாழைப் பழங்களும் வேறு பலவிதக் கனிகளும் மலை மலையாகக் குவிந்து கிடந்தன. பூக் கடைகளைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. முல்லையும் மல்லிகையும் திருஆத்தியும் செண்பகமும் புஷ்பக் குன்றுகளைப் போல் காட்சி தந்தன. அந்த மலர்க் குன்றுகளைச் சுற்றிப் பெண்மணிகள் வண்டுகளைப் போல் ரீங்காரம் செய்து கொண்டு மொய்த்தார்கள்.”

இப்படியெல்லாம் எழுத நான் என்ன கல்கியா அல்லது இது சுந்தர சோழர் காலமா?

“ஆரிய பவன் ஓகேதானே” என்று டிரைவர் பழைய பஸ் ஸ்டாண்டுக்கருகில் கொண்டு நிறுத்தினார். இறங்கி உள்ளே நுழையும்போதுதான் கவனித்தேன்.

“வாங்க வாங்க! படு உற்சாகத்துடன் ஏதோ என்னுடைய பூர்வ ஜென்மதொடர்பு கொண்டவரின் பரவசத்துடன் வரவேற்றார் ஆசாமி.

“அட! இவர் கூட நீங்க எழுதற உங்க ஸ்கூல கதையில வர்ர உங்க கிளாஸ்மேட்டா?” என்று லதா கிண்டலடித்ததைப்பொருட்படுத்தாமல் அவரின் வரவேற்பில் திளைத்தேன்.

ஆசாமியின் வதனமே சந்திர பிம்பத்தை பார்த்து நானே கொஞ்சம் அசந்துதான் விட்டேன். இத்தனை சிரிப்பும் உத்சாகமும் இந்தக்காலத்தில் காணக்கிடைக்காதவை. கொஞ்சம் கூட செயற்கைத்தன்மை இல்லாத ப்ரசன்னவதனமும் கள்ளங்கபடமில்லாத சிரிப்பும் வரவேற்பும். அவர் ஆரிய பவன் வாசல் வாட்ச்மேன். வரும் யாத்ரீகர்களை அத்தனை சந்தோஷமாக அழைப்பு விடுத்து உள்ளே அனுப்புகிறார். வெளியேறும்போது அதே சிரிப்புடன் கை நீட்டும்போது நமக்கும் தயகமில்லாமல் கொடுக்க முடிகிறது.

உள்ளே சர்வர் குழப்படித்தார்.

நான் கேட்ட ஆணியண், ஆம் ஆணியந்தான், ஊத்தப்பத்தை என் மகனுக்கும் அவன் கேட்ட பொடி தோசையை லதாவுக்கும் லதா கேட்ட சப்பாத்தியை அடுத்த டேபிளுக்கும் வைத்துவிட்டு, ”ம். அடுத்தது சொல்லுங்க” என்று ஆணையிட்டார்!

“பாதாம் கீர் சாப்பிடறீங்களா, அருமையான ஐட்டம் சார்! தரேன்!”

கொஞ்சம் லேசான புளிப்புடன், திப்பிரி திப்பிரியாக நூல் வாயில் நிரடும் அந்த திரவத்தைக்குடித்து என் முகம் போன போக்கை இங்கே எழுதினால் என் மரியாதைக்கு ஹானி உண்டாகும். பில்லில் பிசாத்து ஆங்கிலத்தில் Badam gher என்று எழுதி இருவத்தைந்து ரூபாய் சார்ஜ் பண்ணியிருந்த அதே ஐட்டம், ஹோட்டல் வாசலில் சைக்கிள் வண்டியில் பத்து ரூவாய்க்கு விற்றுக்கொண்டிருந்தான்!

படவா!

அந்த துர்ச்சம்பவம் நிகழ்ந்த நாளிலிருந்து பாதாம் கீர் என்றால் கையில் இருப்பதை தொபக்கென்று போட்டுவிட்டு ஸ்தலத்திலிருந்து விலகுவதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறேன்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.