சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் – 3

This entry is part 3 of 3 in the series சிவ தாண்டவம்

“ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே

அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே

ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடாதாரே உருகுவித்தால் ஆரொருவர் உருகாதாரே பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே பணிவித்தால் ஆரொருவர் பணியாதாரே காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே

காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே!”- அப்பர்.

தான் மட்டும் ஆடாமல் நம்மையெல்லாம் ஆட்டுவிக்கிறானே அது தில்லையிலிருந்து தானே.
அதனால் தானோ தில்லை நடராஜனுக்கு இவ்வளவு சிறப்பு! பின்னே!

படைத்து காத்து அருளி மறைத்து அழிக்கும் பஞ்ச கிருத்தியங்களைத் தன் நடனத்தின் மூலம் ஓய்வின்றிச் செய்து கொண்டிருப்பதால் தான் நடராஜனின் ஆடல் தனித்துவமானது.

அவனன்றி ஓரணுவும் அசையாது.
அவன் நடத்தும் நாடகத்தில் நாமெல்லாம் பாத்திரங்கள்.
சூத்ரதாரி அவனே.
அதனால் தான் “ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே” என்றார் அப்பர்.

“ஸகல கிருத்யங்களுக்கும் காரணமான முழுமுதற் கடவுள் சிவம் தான்;ஸகல கிருத்யங்களும் அடங்கிப் போன சாந்தமும் அது தான் “- தெய்வத்தின் குரல்.

புவியின் இயக்கமான அந்த நாட்டியத்தைத் தில்லையில் ஆடிக்கொண்டே இருக்கிறான்.

“நள்ளிருளினட்டம் பயின்றாடு நாதனே தில்லையுட் கூத்தனே ….” என மாணிக்கவாசகர் வர்ணிக்கவில்லையா?

உலகமே உறங்கும் போதும் ,உறக்கம் என்பதும் ஒரு இயக்கம் தானே.அதான் இயங்கவைத்து நள்ளிருளிலும் சிவன் ஆடிக்கொண்டிருக்கிறான்.

அதனால் தான் தில்லை நடனத்துக்கு ஆகாயம் அளவு சிறப்பு.

நாட்டியம் என்பதே ஒரு அழகியல் கலை.

மனதைக் கொள்ளைகொள்ளும் ஒயிலான அபிநயங்களும் நவரசம் சொட்டும் முக பாவனைகளும்,சீரான கதியில் பாதவேலைகளும் சேர்ந்து சாதாரண மானிடப் பிறவிகள் நாம் ஆடுவதே அவ்வளவு அழகென்றால் ஆடல் அரசன் ஆடுவது எவ்வளவு அழகாக இருக்கும்.

“வெகு நாகரீகமாகவே கனகசபையில் ஆனந்த நடனம் ஆடினார்”

‘ஸ்டைல்’ என்கிறோமே அப்படி மிடுக்காக,எழிலாக, விறுவிறுப்பாக சிவன் ஆடுவதைத் தான் வெகு நாகரீகமாகவே என்கிறார் போலும் கவி.

இப்படியொரு ஆனந்தத் தாண்டவத்தைக் காண யாருக்குத் தான் ஆசையில்லை!

அதைக்காணும் பேறு பெற்று பரவசமடைந்த இருவர் பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனிவரும்.

கயிலையில் ஈசனைத் தரிசித்த இருவரும் ஈசனின் திருநடனம் காணும் பேராவலைத் தெரிவித்தனர்.
அந்த நன்னாளுக்காகத் தவமிருந்தனர்.

அவர்கள் ஆவலைப் பூர்த்தி செய்தான் தில்லையில்.

‘தை மாசத்தில் குரு பூசத்தில் பகல் நேரத்தில் தாம் தகிட தகஜம் தகநம் தரிகும் …….’ என்று பேரொளியாய் பேரெழிலாய் ஆனந்த நடனமாடியதால் தான் தில்லைக்குச் சிறப்பு.

சிலம்பின் ஒலி கலீர் கலீரென இசைக்க
சிகையை அலங்கரிக்கும் மதி
பளீர் பளீரென ஒளிவீச அணிகலன்களும் ஜடாமுடியும் சுழன்றாட கைகளையும் கால்களையும் அசைத்து, சிவகாமியுடன் இசைந்து திருச்சிற்றம்பலம் தனிலே புன்னகையோடு தனது இடது பாதத்தைத் தூக்கி ஆடுகிறான் நடராஜன். வலது காலால் முயலகன் எனும் அசுரனை மிதித்து ,தனது தூக்கிய திருவடி நோக்கி இடக்கையைச் சுட்டி,வலக்கையால் அபயமருள்கிறான்.

இந்த நடராஜ தத்துவம் உணர்த்துவது யாதெனில் மும்மலங்களான ஆணவம்,கன்மம்,மாயையை,துர்குணங்களை அடக்கி ஈசனின் பாதாரவிந்தங்கில் சரணாகதியடைந்த பக்தனுக்கு இமைப்பொழுதும் நீங்காமல் அருள்கிறான் நடராஜன் தில்லை வெளியிலிருந்து!

தில்லைவெளியில் மட்டுமா ஆடுவான். அடியார்களான பக்தர்களின் உள்ளமே கூட அவனாடும் அரங்கு தான் என்பதைத் திருமூலர் அழகாக விவரிக்கிறார் பாருங்கள்
“…..
ஞானம் கடந்து
நடம்செய்யும் நம்பிக்கு அங்கு ஆனந்தக்கூத்தாட ஆடரங்கு
ஆனதே”!

ஐந்து வகைத் தொழில்களையும் கூட ஐந்துவகை கூத்தின் மூலம் செய்வதாகவும் திருமந்திரம் கூறும்.

“ஆன நடம் ஐந்து அகள சகளத்தார்
ஆட நடம் ஆடி ஐந்து கருமத்துஆக
ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே
தேன்மொழி பாகன் திருநடம் ஆடுமே”

மதுரமான மொழியுடைய சிவகாமிக்குத் தனது வாம பாகத்தை அளித்த எம்பெருமான் உருவமற்றவன் தான்.
ஜோதி வடிவானவன் தான்.
ஆனாலும் நமக்காகவே தான் ஒரு உருவம் வரித்துக்கொண்டு ஆடல் புரிகிறான்.
ஒன்றா இரண்டா….ஐந்து கூத்துகள் என்கிறார் திருமூலர்.எல்லாமே தில்லையில்.

அதனாலே தான்

“பார்க்க முக்தி தரும் தில்லை” என்பதாக சிதம்பரத்தில் நடராஜனின் ஆடலைக் காண்போர் முக்தியடைவது திண்ணம்.

ஆகவே தான் தில்லையை வாழ்நாளில் ஒருமுறையேனும் தரிசனம் செய்யவேணுமே ,’அதைக் கண்ட பேர்க்கு ஜனன மரணப்பிடி விலகுதாம்’ என உருகுகிறார் நந்தனார். இதே தில்லையில் அவரை ஆட்கொண்டார் அம்மையப்பன்.

நாமும் காண்போம் இன்றும் என்றும் நடேசன் ஆடும் திருநடனக்காட்சியை நம் மனம் எனும் மேடையில்!

Series Navigation<< சிவ தாண்டவம் – 2

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.