தப்புமோ ? தப்புத் தாளம் !

சுதாகர் வீட்டினுள் நுழையும் போது வீடே திமிலோகப் பட்டுக் கொண்டிருந்தது.

நித்யாவின் குரல் ஆக்ரோஷமாகவும் அப்பாவின் குரல் பயந்து வேதனை தொனிக்கவும் காதுகளில் தீ யென சுட கொஞ்சம் நின்று நிதானித்து. உள்ளே போகலாமா! வேண்டாமா! யோசித்து முடிப்பதற்குள் அவனைப் பார்த்து விட்ட அவன் சக தர்மினி.

” என்ன அங்கேயே நின்னுட்டீங்க!.

உள்ள வந்து இந்த அநியாயத்துக்கு ஒரு பதிலைச் சொல்லுங்க. ஐய்யய்ய யோ! என்னால இனிமே ஒரு நிமிஷம் தாக்குப் பிடிக்க முடியாதுங்க “

உள்ளே பரிதாபமாய் நின்று கொண்டிருந்தார் அவனது தந்தை பரமசிவம். அவர் நின்றிருந்த கோலம் அவன் வயிற்றைப் பிசைந்தது.

எப்படி இருந்த அப்பா!. இன்னிக்கு இப்படித் தலையைக் குனிஞ்சு கூசிப் போய் நிற்கிறார்.

” என்னாச்சுப்பா!? “

கண்களில் கவலையும் கண்ணீரும் மின்ன. ” சுதாகரா எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா நித்யா வச்சிருந்த பதினஞ்சாயிரம் காணோமாம்ப்பா!. என்கிட்ட கேட்டா நான் என்னப்பா பண்ணுவேன்!? “

சுதாகருக்குக் கோபம் வந்தது.

” என்ன நித்யா இது? எங்கப்பாவை சந்தேகப் பட்டுக் கேள்வி கேட்டுட்டு இருக்கியா? உனக்கே இது ஓவராத் தெரியல? “

” நான் எங்கேங்க அவரை சந்தேகப் பட்டேன்? அவர்தாங்க வீட்ல இருக்கார். வீட்ல வச்சுருந்த பணம் காணோம்னா அவர் கிட்ட தானேக் கேட்க முடியும்? “

” அவருக்கு எதுக்குமா உன்னோட பணம்? நீ நடந்துக்கறது சரியில்லை “

” அவ்ளோ ரோஷம் உங்களுக்கும் உங்க அப்பாவுக்கும் இருந்தா.. “

என்று நிறுத்திய நித்யாவைக் கேள்விக்குறியுடன் பார்த்தான்.

மனசு நிறைய பயத்துடன் பார்த்தார் பரமசிவம்.

” என்ன சொல்லு!? “. நிறைய கோபத்துடனும் வேதனையுடனும் கேட்டான் சுதாகர்.

” கொஞ்ச நாளைக்கு உங்கப்பா உங்க தங்கச்சி வீட்ல இருக்கட்டும்.இந்த மன உளைச்சல் என்னை விட்டுப் போற வரைக்குமாவது “

ஏற்கனவே தன் பெண் வீட்டுக்குச் சென்று விடலாமா!. இப்போது பெண் வீட்டுக்குப் போகிறேன் என்று சொன்னால் எங்கே இங்கே எடுத்த பணத்தை பெண்ணிடம் கொண்டு போய்க் கொடுக்கவா என்ற கேள்வி வந்து விட்டால் என்ன செய்வது என்ற தயக்கத்தில் இருந்தவர் இப்போது மருமகளே பெண் வீட்டுக்கு அனுப்பி விடுவதாகச் சொன்னதும் அவமானத்தினூடே கொஞ்சம் ஆசுவாசமடைந்தார் பரமசிவம்.

” அப்பாவை அனுப்புறதுக்குன்னே பணத்தைக் காணோம்னு சொல்றியா நித்தி!? “

மிகுந்த வேதனையுடன் இயலாமையாய்க் கேட்டவனிடம்.

” சத்தியம் பண்ணச் சொல்றீங்களா? “கடுப்படித்தாள்.

” என்னை இப்பத் தனியா விடுங்க. உடனே கிளம்புங்க ரெண்டு பேரும் “

நிர்தாட்சண்யமாய்த் துரத்தி விடுபவளை ஆத்திரத்துடனும் கையாலாகாத்தனத்துடனும் வெற்றுப் பார்வை பார்த்துத் தந்தைக்கு அவரின் துணிமணிகள் எடுத்து வைத்துக் கொள்ள ஒத்தாசை செய்து அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் ” சாரிப்பா ” என்றான்.

மகனின் தர்மசங்கடம் உணர்ந்த தந்தை அந்த சாரியை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல்
தனக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அவமானத்தை ஜீரணிக்கவும் முடியாமல் தனது நிலையை விடத் தன் மகனின் வயோதிக நாட்களைக் கற்பனை செய்து கண்களில் நீர் கசிய அவனுடன் எந்த வார்த்தைகளும் பேசாமல் புறப்பட்டுச் சென்றார்.

” அப்பா இங்க நடந்த எதையும் தங்கச்சி கிட்ட சொல்ல வேணாம் “

‘ சொல்லக் கூடிய விஷயமாப்பா இது? ‘ என்று சொல்ல நினைத்தவர் ஏதும் பேசாமல் வெறுமனே தலையை அசைத்தார்.

திடுமென்று அண்ணனும் அண்ணனுடன் அப்பாவும் வந்து நின்றதும் ஏதோ விஷயம் என்று ஊகித்துக் கொண்ட தங்கை.

எதுவும் கேட்காமல் ‘ வாங்கப்பா வாண்ணா!. என்ன சாப்பிடறீங்க!?”

என்று வெகு சகஜமாய் அவர்களை வரவேற்று அவர்களை ஆசுவாசப் படுத்தினாள்.

எதுவும் சொல்லாமலே ஏதோ வென்று ஊகித்துத் தன் தந்தையை சாந்தப்படுத்தி சமாதானப் படுத்தும் தன் தங்கையைப் பெருமிதமாய்ப் பார்த்து ஆறுதலடைந்தான் சுதாகர்.

மாப்பிள்ளை வரும்வரை இருந்து பார்த்து விட்டு தங்கை தந்தை மாப்பிள்ளை அனைவரிடமும் விடை பெற்று வீட்டுக்கு வந்த சுதாகர்.

வீட்டில் தன் மாமனார் கலங்கிய முகத்துடன் அமர்ந்திருப்பதைக் கண்டு. ” வாங்க மாமா! எப்படி இருக்கீங்க? ” என்றதும் ” மாப்பிள்ளை நான் கொஞ்ச நாள் இங்க தங்கலாமா!? “

பரிதாபமாய்க் கேட்டவரை ஏனோ தன் தந்தையின் நினைவு வர ஓடிச் சென்று அவர் கைகளைப் பிடித்து.

” கொஞ்ச நாள் என்ன மாமா? நீங்க எங்களோடயே தங்கினா எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் மாமா “

அவனின் இந்த வரவேற்பைப் பார்த்த மாமா நெகிழ்ந்து போய் அவனைப் பார்க்க.

அவன் தந்தையைத் தான் நடத்திய விதத்தையும் தன் தந்தையிடம் அவன் நடந்து கொள்ளும் விதத்தையும் பார்த்து வெட்கமும் வேதனையும் அடைந்தாள் நித்யா.

” ஒண்ணுமில்ல மாப்பிள்ளை என் மருமகளுக்கு எதனாலயோ என்னைப் பிடிக்கல. ஏன் இங்கயே என் உயிரை வாங்கிட்டு இருக்கீங்க?கொஞ்சம் பொண்ணு வீட்லயும் போய் இருக்கலா மில்லையான்னு என்னை இங்க அனுப்பி வச்சுட்டா. என் பிள்ளையால அவளை எதுத்து எதுவும் செய்ய முடியல. பொண்ணு வீட்ல எப்படி தங்கறதுன்னு சங்கடப் பட்டுகிட்டே இங்க வந்தேன்.

உங்களோட பாசம். என்னைப் பார்த்தவுடனே நீங்க காமிக்கிற இந்த நேசம். என்னோட பாக்யம் தான் மாப்பிள்ளை “.

குரல் நெகிழ அவர் பேசும்போது அவர் வடிவில் தன் தந்தையைப் பார்த்த சுதாகர்.

” என்ன மாமா எங்களோட நீங்க இருக்கறதுக்கு நாங்க தான் மாமா கொடுத்து வச்சிருக்கணும் “

” சரி மாப்பிள்ளை உங்க அப்பா எங்க காணோம்!? “

” அவர் பொண்ணைப் பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு அங்க போய் இப்பதான் விட்டுட்டு வர்றேன் மாமா “

” நாளைக்கே போய் மாமாவை அழைச்சிட்டு வந்துடுங்க ” என்ற நித்யாவின் குரலில் புதிதாய் உணர்ந்த பாசம் அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது.

குறள் 443:
“அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்”

பெரியவர்களைப் போற்றித் தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல் பெறத்தக்க அரிய பேறுகள் அனைத்திலும் அருமையானதாகும்

                =புதினம் 12=

   " காதல்.. காதல்..காதல்.. "

அன்றைய தினம் முரளியின் கை வண்ணத்தால் அழகுற மெருகேறிய அந்த ஜவுளிக்கடை மெழுகு பொம்மை அவ் வழியே போவோர் வருவோரை ஒரு நிமிடம் நின்று கவனித்து ரசிக்க வைத்தது.

ஜவுளிக்கடை முதலாளி சரவணன் ஆச்சர்யத்துடன் முரளியைக் கூப்பிட்டு ” என்னப்பா இன்னிக்கு நம்ம கடை பொம்மை உயிரோட நின்னு எல்லாரையும் நின்னு பார்க்க வைக்குது. என்ன விசேஷம்!? “

” அது ஒன்னும் இல்லேங்க முதலாளி நேத்து நம்ம கடைக்கு ஒரு கஸ்டமர் வந்து கொஞ்சம் ஐடியா கொடுத்துட்டுப் போனாங்க. அந்த ஐடியா வச்சு அந்தப் புடவையைக் கட்டி விட்டேன். அது என்னவோ இன்னிக்கு ரொம்ப சூப்பரா அமைஞ்சிடுச்சு “

“என்ன பண்ணி என்ன? சம்பளம் மாத்ரம் ஏத்திக் கொடுக்கப் போறீங்களா!? ” மனதுள் சொல்வதாக நினைத்து வாய் விட்டே சொல்லிய முரளியைக் கொஞ்சம் கூர்ந்து பார்த்த சரவணன்.

” கூப்பிட்டு வச்சு நாலு நல்ல வார்த்தை பாராட்டலாம்னு நினைச்சா உடனே அதுக்கும் காசு கேக்கறியே! உன்கிட்ட பேசவே கூடாதுப்பா. அது சரி யாரு அந்த கஸ்டமர்? உனக்கு ஐடியா கொடுத்தது? “

” பேரு அட்ரஸ்லாம் கேட்டு வச்சிக்கலங்க. அவங்க வந்தா உங்க கிட்ட அனுப்பறேன். நீங்க நைஸா கேட்டு எனக்கும் சொல்லுங்க “

சிரிக்காமல் சொன்ன முரளியைப் பார்த்து சிரிப்பு வந்தது சரவணனுக்கு.

” சரி சரி நான் கேட்டு சொல்றேன். நீ முதல்ல போயி அந்த நாலாவது ராக்குல இருக்கற புடவைக் கெல்லாம் ரேட் ஸ்டிக்கர் புதுசு மாத்து. எல்லாத்துலயும் 200 ரூபாய் ஏத்திப் போடு. நியூ இயர் பொங்கல் டிஸ்கவுண்ட் ஒவ்வொன்னுக்கும் 150 ரூபாய்னு போடு. அப்புறம் அந்த கஸ்டமர் வந்தா என்னக் கூப்பிடு “

” எந்தக் கஸ்டமர் முதலாளி? “

” அதான்ப்பா உனக்கு கைட் பண்ணினாங்கன்னு சொன்னியே.
அப்படி என்னதான் ஐடியா சொன்னாங்கன்னு சொல்லவே இல்லையே! “

” அதுவா முதலாளி அது கொஞ்சம் பெரிய விஷயமாச்சே! ஒரு பொங்கல் வடை ஆர்டர் பண்ணுங்க. சாப்பிட்டுக்கிட்டே பேசலாம் “

” பொங்கல் வடை மாத்ரம்
போதுமா!? “

” ஏன் கூடவே ஒரு நாலு இட்லியும் சொல்லிடுங்க “

” அப்புறம்! “

” அப்புறம் என்ன!? சூடா காபி தான் “

ம்ம்ம். இந்தப் புடவை ரகசியம் தெரிஞ்சுக்க என்னென்னல்லாம் செலவு பண்ண வேண்டியிருக்கு!.

சரவணன் அந்த ரகசியம் தெரிஞ்சு பிசினஸ் எப்படி இம்ப்ரூவ் பண்ணலாம்னு யோசிக்க.

முரளி டெய்லி இந்த மாதிரி பொங்கல் இட்லி வடை காபி கிடைக்க இன்னும் என்னல்லாம் பண்ணலாம்னு யோசிக்க.

ஆர்டர் செய்து வந்த டிபனை நிதானமாய்ச் சாப்பிட்ட முரளி கை கழுவி. காபி குடிக்கும் வரை பொறுமை யில்லாமல் பொறுமையா யிருந்த சரவணன்.

” இப்ப சொல்லுப்பா “

” அது வந்து முதலாளி. நாம எத செஞ்சாலும் அதக் காதலோட செய்யணுமாம்.

காதல்ங்கறது நம்பளைக் கடக்கவில்லை என்றாலும் காதலை நாம் கடக்கவில்லை என்றாலும் வாழறதுக்கான அர்த்தமே இல்லையாம்.

காதல்ங்கற சொல்லே காதுக்கு இனிமையானதாம்.காதல் லேர்ந்து தான் கவிதை காவியம் கருணை கல்யாணம் கலவி காமம் கவலை கண்ணீர் கைகலப்பு கல்லறை எல்லாம். இந்தக் காதல் இருக்கே.. அத உச்சரிக்க உச்சரிக்க.. சுகமாய் உணர வைக்குமாம்.

அதனால தினமும் அந்தப் பொம்மையைக் காதலியா நினைச்சு காதலிச்சு புடவையைக் கட்டினா..ரொம்ப அழகா வரும்னு சொன்னாருங்க “

” என்னது சொன்னாரா!? சொன்னது ஆம்பளயா!? “

அதிர்ச்சியாய் சரவணன் மயங்க.

” நான் எப்பங்க பொம்பள கஸ்டமர் ஐடியா கொடுத்தாங்கனு சொன்னேன்! “

முரளி முழிக்க. முரளியின் காதலி கண்ணடிக்க.. இல்லை. கண் சிமிட்டியது போல் முரளிக்குத் தோன்ற.

“குக்கூ என்றது கோழி. அதன் எதிர்
துட்கென்றது என் தூஉ நெஞ்சம்
தோள் தோய் காதலர் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே”.

குறள் 703:
“குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்துங் கொளல்”

ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை எந்தப் பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ள வேண்டும்.

                =புதினம் 13=

” கறை தேடும் நிலவுகள். கரை சேருமோ! “

வாடிய முகத்துடனும் தளர்ந்த நடையுடனும் வாக்கிங் செல்ல பூங்காவை வந்தடைந்த கணேசனை மலர்ந்த முகத்துடன் வரவேற்ற சங்கரன்.

” காலை வணக்கம் கணேசன்!. என்ன ஆச்சு!? கொஞ்சம் சோகம் தூக்கலாத் தெரியுதே மூஞ்சியில! “

” வணக்கம்!. வணக்கம்!. என்ன வாழ்க்கைப்பா!. என்னதான் செஞ்சாலும் எவ்ளோதான் செஞ்சாலும் வாழ்க்கைல நிம்மதியே இல்ல “

” அட என்னப்பா! இல்லன்னு பார்த்தா எதுவுமே இல்ல. அதையே நம்ம மளிகைக் கடை ராமநாதன் மாதிரி யோசிச்சு பேசிப் பாரு. எல்லாமே இருக்கற மாதிரித் தோணும் “

” இது என்னப்பா புதுசா சொல்ற!.
அப்படி என்ன ராமநாதன் யோசிச்சி ட்டாரு? புரியலியே! “

” இப்ப நீ மளிகைக் கடை வச்சிருக்கேன்னு வச்சுக்க. உன்கிட்ட நான் வந்து உன்கிட்ட இல்லாத ஒரு பொருள்.. சரி துவரம் பருப்பு கேட்டு அது உன்கிட்ட இல்லேன்னா நீ என்ன சொல்வ!? “

” சிம்பிள்.. இல்லாதத இல்லேன்னு தானே சொல்லணும் “

” ம். அங்கதான் நம்ம ராமநாதன் என்ன சொல்வாருன்னா. இல்லேன்னு சொல்லாம எந்த பருப்பு அவர்கிட்ட இருக்கோ அது இருக்கு.

அதாவது துவரம் பருப்பு இல்லேன்னு சொல்லாம பயத்தம் பருப்பு இருக்கு. எடுத்துக்கிறியளா? ன்னு கேப்பாரு “

” சரி. அதுக்கும் இப்ப என் பொண்டாட்டி என்னை வையறதுக்கும் என்ன சம்பந்தம்? “

” உனக்கு பெருக்கி மாப் போடத் தெரியலன்னு. நீ நல்லாத் தான் பெருக்கியிருப்ப.. சூப்பரா மாப் பும் போட்டிருப்ப. ஆனா எந்த சம்சாரமும் அத ஒத்துக்கிட்டு பாராட்ட மாட்டாங்கப்பா!.

நீ நல்லாவே செய்யலேன்னு சொல்லும் போது.. திட்டும் போது ok மா. துணி நல்லா தோச்சு உலர்த்தி யிருக்கன் பாரு ன்னு சொல்லு.
காஞ்ச துணிய அருமையா மடிச்சு வச்சுருக்கேன் பாருன்னு சொல்லு.

என்ன குறை சொன்னாலும். உன்னோட நிறைகளை கோபப் படாம சிரிச்சுகிட்டே சொல்லு “

” ம். அப்புறம். நீ வேற.தேள் கொடுக்கும்.. எம் பொண்டாட்டி வாயும் ஒன்னுப்பா!.. வீட்ல என்ன நடந்தாலும் அதுல எம் மேல எப்படிக் குத்தம் சொல்லித் திட்டலாம்னு லாஜிக்கே இல்லாம திட்டறாப்பா.. மனசு ரொம்பவே வெறுத்துப் போச்சு “

” அட போப்பா.. வீட்டுக்கு வீடு வாசப்படி.. இதுக்கெல்லாம் அசந்து போயிட்டேன்னா சொச்ச காலத்தை எப்படி ஒப்பேத்துவ!? “

” எல்லாத்தையும் விட எதுத்த வீட்டு சுந்தர ரொம்ப ஒசத்தியா சொல்லி என்ன மட்டம் தட்டிப் பேசறத ஜீரணிக்கவே முடியலப்பா “

” அப்படியா! அப்படி என்னப்பா அந்த சுந்தரம் ஒசத்தியாயிட்டாப்ல? எனக்கும் ரொம்ப தெரிஞ்ச தம்பிதான் அந்த சுந்தரம் “

” வீட்ட எப்படி நிர்வகிக்கணும்.. பொண்டாட்டிய எப்படி நல்ல விதமா வச்சுக்கணும்னு நான் போய் அந்த சுந்தர்ட்ட கத்துக்கிட்டு வரணுமாம் “

” ஹ.. ஹ.. ஹா.. அதோ அந்த சுந்தரம் தம்பியே இங்க வர்ராப்ல.. விஜாரிச்சுடுவோம் “

” என்னப்பா சுந்தரம் வீட்ல ரொம்ப நல்ல பேர் எடுத்திருக்க போலருக்கு. இவரோட சம்சாரம் உன்கிட்ட டியூஷன் எடுத்துக்கச் சொல்றாங்களாம் “

” அடப் போங்கண்ணே.. இவர மாதிரி நான் குடும்பத்தப் பாத்துக்கலேன்னு என் வீட்ல தெனமும் இவரப் பாத்து என்னக் கத்துக்கச் சொல்லி ஒரே டார்ச்சர்.. ரொம்பப் பொறுமை சாலியாமே இந்த அண்ணன் “

சங்கரன் இருவரையும் பார்த்து சிரித்தார்.

” கடவுள் நமக்கெல்லாம் கொடுத்திருக்கற ஓர் அருமையான வரம் ‘ ஞாபக மறதி ‘. பொண்டாட்டிங்க திட்டறதை யெல்லாம் அந்த ஞாபக மறதிங்கற பாக்ஸ்ல போட்டுட்டு உடனே refresh பண்ணிக்கிட்டா அன்பு பெருகும்ப்பா. ஒரு நாளும் அன்புங்கறத வத்தாம பாத்துக் கிட்டா.. வாழ்க்கை என்னிக்கும் இனிக்கும்.

பொஞ்சாதி வையறதையெல்லாம் பெருசா நெனச்சு மனச உழப்பிக் கிட்டருந்தா.. வேலைக்கு ஆகுமா? அவங்களுக்கு இக்கரைக்கு அக்கரை பச்சையாத் தான் தெரியும்.

ஆம்பளங்களுக்கு அந்த மாதிரி தெரியக் கூடாதுப்பா. ஏன்னா கடவுளே புருஷனா வந்தாலும்.. குறை சொல்லலேன்னா அவ பொண்டாட்டியே கிடையாது..
என்ன? “

மனம் தெளிவுற்ற கணேசனும் சுந்தரமும் சங்கரனுக்கு நன்றி சொல்லிக் கிளம்பினர்.

குறள் 154:
“நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி யொழுகப் படும்”

நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால் பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.

குறள் 157:
“திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்தறனல்ல செய்யாமை நன்று”

தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும் அதனால் அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.

                =புதினம் 14=

     " திருப்தி.. பரம திருப்தி "

சந்திரன் நினைத்தே பார்க்காததொரு திருப்பம் அவன் நண்பன் ரகுவுடன் திருப்பதி சென்று திரும்பியதும் நடக்க. அவனுக்குப் பெரிதும் ஆச்சர்யமும் ஏழுமலையான் மீது அபரிமித நம்பிக்கையும் ஏற்பட்டது.

அவனது நண்பன் ரகு வருடம் தோறும் புரட்டாசி மாசம் மூன்று முறை பெருமாளைச் சேவித்து வர.

எண்ணிய யாவும் திண்ணியமாக நிறைவேறும் என்று சொல்லித் தான் அவனை அழைத்துச் சென்றிருந்தான்.

முதல் முறை சென்று திரும்பியதுமே.

அவனது ஸ்டார்ட் அப் கம்பெனி மார்க்கெட்டில் ஒரு நல்ல நிலையைப் பிடிக்க.

அடுத்தடுத்து. இரண்டு முறையும் சென்று பெருமாள் தரிசனம் செய்து திரும்பியதும் அவனது கம்பெனி ஒரு பேர் பெற்ற கம்பெனியாக அவனே எதிர் பார்க்காத விதத்தில் வளர்ச்சி யடைய.

மனப்பூர்வமாக ஒரு முடிவெடுத்தான். திருப்பதி பெருமாளைத் தன் பார்ட்னராக்கத் தீர்மானித்து மாதந்தோறும் ஒரு கணிசமான தொகையை திருப்பதி உண்டியலில் சேர்க்க.

சேமித்து வர ஆரம்பித்தான்.

அவனே எதிர் பார்க்காத அளவு அவனது பிசினஸ் டெவெலப் ஆக ஆரம்பித்து.

உற்சாகத்தில் பெருமாள் பக்தி அவனைப் பூரணமாய் ஆட் கொண்டது.

அன்றைய தினம் ஆபீஸ் வரும்போது எப்போதும் உற்சாகமாய் ஸல்யூட் அடித்து சிரித்த முகமாய் அவனை வரவேற்கும் செக்யூரிட்டி ரொம்பவும் டல்லாய் கவலையில் முகம் தொங்கிப் போய் கடமைக்கு ஸல்யூட் செய்ததைக் கவனித்து.

தனது அறைக்கு வந்தவுடன் செக்யூரிட்டியைக் கூப்பிட்டான்.

” என்ன ராமசாமி.. என்ன ஆச்சு!?.
என்ன கவலை உனக்கு? ” என்று விசாரிக்க.

” ஐயா. அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்கய்யா ” என்று மறுத்தார்.

” சொல்ல விருப்பம் இல்லேன்னா சொல்ல வேண்டாம். என்னால ஏதாவது செய்ய முடியும்னு நீ நம்பினா என்கிட்ட சொல்லு “

கொஞ்சம் தயங்கிய ராமசாமி
” பொண்ணுக்கு கல்யாணம் முடிவு செஞ்சுருக்கேன்யா.. அதுக்கு என்கிட்ட வச்சுருக்கிற பணம் பத்தலை.. கேட்ட இடத்திலல்லாம் கையை விரிச்சிட்டாங்க. என்ன பண்ணப் போறேன்னு புரியாம ஒரே பயமாயிருக்குங்கையா “

கண்களில் கையாலாகாத ஒரு பலவீனமும் கலக்கமும் தெரிய
எங்கிருந்தாவது எப்படியாவது ஏதாவது ஆதரவு கிடைக்காதா என்று ஏக்கமாய்ப் பார்க்கும் ராமசாமியைப் பார்க்கும் போது மனதில் அவருக்கு எதாவது உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணம் என்ன காரணத்தினாலோ ஏற்பட்டது.

” எவ்வளவு குறைகிறது!? என்ன மாதிரியான உதவி உனக்குத் தேவை சொல்லு!? “

” ஐயா!. ஒரு மூணு.மூணறை லக்ஷம் இருந்தா செஞ்சுப் புடுவேன்யா. இந்த உதவிக்குக் காலம் பூரா உழைச்சு நான் நன்றிக் கடன் தீர்ப்பேங்கய்யா “

மிகவும் உணர்ச்சிவசப்பட்டார் ராமசாமி.

” சரி.. ராமசாமி.. உன் பொண்ணு கல்யாணத்துக்கு ஒரு குறையும் வராம நான் பாத்துக்கறேன். உனக்குக் குறையற காச நான் தர்றேன்.. நீ பதிலுக்கு எனக்கு ஒண்ணும் செய்ய வேண்டாம் “

கால்களில் விழ வந்த ராமசாமியைத் தடுத்த சந்திரன் தனக்குள் இருந்து அந்த நம்பிக்கையான வார்த்தைகள் பேச வைத்தது யாரென்று யோசிக்க ஆரம்பித்தான்.

திருப்பதி பெருமாளுக்கென்று ஐந்தரை லக்ஷம் சேர்ந்திருந்தது.

அதிலிருந்து ஒரு மூணரை லக்ஷம் ராமசாமி பெண் கல்யாணத்திற்கு எடுத்துக் கொடுத்தான்.

மனதின் ஒரு ஓரம் திருப்பதி பெருமாள் உண்டியலுக்கான காசிலிருந்து எடுத்த குற்ற உணர்ச்சியையும் மீறி ஒரு
‘ திருப்தி ‘ மனம் முழுக்க ஆக்கிரமிக்க.

மறு நாள்.. அவனது ஆபீஸ் க்ளையன்ட் பாலாஜி அவனிடம் ஓர் உதவி கேட்டு வந்தார்.

அவர் பெயர் ‘ பாலாஜி ‘ என்பதால் அவருக்கு எப்போதும் ஒரு இம்பார்ட்டன்ஸ் கொடுப்பது சந்திரன் வழக்கம்.

” சந்திரன் என்னோட டிரஸ்ட் மூலமா ஒரு பத்து மாணவர்களுக்கு வருஷா வருஷம் படிப்புச் செலவுக்கு உதவி செஞ்சு வரேன். அந்தக் கோட்டா பத்து பேர் முடிஞ்சப்புறம் இன்னும் ஒரு மூணு பேர் உதவி கேட்டு வந்துருக்காங்க.. உங்களால ஏதாவது பண்ண
முடியுமா!? “

” எவ்வளவு தேவைப்படும் பாலாஜி!?”

” ஒரு ரெண்டு லக்ஷம் இருந்தாப் போதும். முடிஞ்சா உதவி பண்ணுங்க.

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்;
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்;
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல் ன்னு நம்ம மகாகவி பாரதியார் சொல்லியிருக்கிறார். முடியுமா!? “

கரெக்ட்டா திருப்பதி உண்டியலுக்கான சேமிப்பில் மிச்சம் இருக்கும் ரெண்டு லக்ஷத்தை பெருமாள் பெயரைத் தாங்கியிருக்கும் ‘ பாலாஜி ‘ கேட்டது அந்தத் திருப்பதி பெருமாளே சொன்னது போல் உணர்ந்த சந்திரன் மறு வார்த்தை எதுவும் பேசாமல்.

அந்த ரெண்டு லக்ஷம் படிப்பு செலவுக்காக கொடுத்த போது அவன் மனதில் ஏற்பட்டது ” பரம திருப்தி “.

செக்யூரிட்டி ராமசாமி தன் மகள் கல்யாண அழைப்பிதழ் கொண்டு வந்து கொடுத்தார்.

மணப்பெண்ணின் பெயரைப் பார்த்த சந்திரன் “திருப்தி ” யுடன் புன்னகைத்தான்.

பெண்ணின் பெயர் ‘ பத்மாவதி ‘.
மாப்பிள்ளையின் பெயர்
‘ ஸ்ரீனிவாசன் ‘.

அதே நேரம் சந்திரனால் கல்வி உதவி பெற்ற மூன்று மாணாக்கர்களும் அவனுக்கு நன்றி தெரிவிக்க வந்திருந்தனர்.

அவர்களின் பெயர்களைக் கேட்டறிந்த சந்திரனுக்கு ஏற்பட்டது
” பரம திருப்தி “.

ஏழுமலை. திருமலை. திருப்பதி.
அனைத்தும்.. 🙏

குறள் 511:
“நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்”

ஒரு செயலை அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதனையே செய்ய வேண்டும்.

குறள் 516:
“செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ டெய்த உணர்ந்து செயல்”

செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்து காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்தவேண்டும்.

                =புதினம் 15=

    " அனுமானம்..அவமானம் "

அன்றைய பூஜை நிகழ்ச்சியில் தான் பட்ட அவமானம் திரும்பத் திரும்ப நினைவில் வந்து சாமா சாஸ்திரிகளை மறுகி மறுகி வேதனைப் பட வைத்தது.

தன்னை அழைத்து பூஜை மந்திரம் செய்யச் சொல்லி இப்படி அவமானப் படுத்தி அனுப்பியது நியாயமா!?.

ஊர்ப் பெரிய மனிதர் நிஜமான பெரிய மனிதராய் இருக்க வேண்டாமா?.

அவர் இப்படி அவமானப்படுத்தி அனுப்புமளவு தான் என்னதான் தவறு செய்திருக்க முடியும்!?.

விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து அவரது மனைவி அவரை விட இன்னும் ஆதங்கப் பட்டாள்.

பூஜை புனஸ்காரம் கர்ம சிரத்தையாய்ச் செய்யும் தன் கணவருக்கு நேர்ந்தது மிகப் பெரும் கொடுமையாய் நினைத்து ஊர்ப் பெரிய மனிதரான ராமநாதனை வாய் விட்டே வைய ஆரம்பித்தாள்.

அப்படி என்னதான் கொடுமை நடந்து விட்டது?.

சாமா சாஸ்திரிகளையும் அவரது இரு உதவியாளர்களையும் பூஜை முடிந்த பின்பு மரியாதை செய்த ஊர்ப் பெரியவர் ராமநாதன் சாமா சாஸ்திரிகளுக்கு தட்டில் வைத்துக் கொடுத்த வேஷ்டியைத் திரும்ப எடுத்து அந்த வேஷ்டியை சாமா சாஸ்திரிகளின் உதவியாளரின் தட்டில் சாமா சாஸ்திரிகளின் கண்ணெதிரிலேயே அதிகப் படியாய் வைத்துக் கொடுத்து விட்டார்.

ராமநாதனின் அந்த செயலை அங்கிருந்த யாரும் எதிர் பார்க்க வில்லை.

தங்களுக்குள் குசு குசு வென்று பேசிக் கொண்டனர்.

சாமா சாஸ்திரிகள் கண்ணில் கண்ணீர் எட்டிப் பார்க்க அந்த அவமானத் திலிருந்து வெளியே வர முடியாமல் வெகுவாய் அவஸ்தைப் பட்டார்.

தனக்குக் கொடுக்காமல் விட்டாலும் பரவாயில்லை.. அதை எடுத்துத் தன் உதவியாளரிடம் கொடுத்தது தன்னை அவமானப் படுத்தவே என்றெண்ணி திரும்பத் திரும்ப அந்தக் காட்சி மனதில் rewind ஆக ரொம்பவே குமுறலுக்கு ஆளானார்.

ஏதும் பேசாமல். யாரிடமும் ஒரு வார்த்தை கூட சொல்லிக் கொள்ளாமல் தளர் நடையுடன் ராமநாதன் கூப்பிடக் கூப்பிடத் திரும்பிப் பார்க்காமல் வீடு வந்து சேர்ந்தார்.

ஒரு ஒரு மணி நேரம் அவமானத்தின் அனுமான அவஸ்தையில் சாமா சாஸ்திரிகளும் அவர் சகதர்மினியும் புழுங்கிய பின்.

வீட்டு வாசலில் ராமநாதன் குரல் கேட்டது.

குரல் கேட்டு வெளியில் வந்த சாஸ்திரிகளை நோக்கி.

” சாஸ்திரிகளே! இந்தாங்க. உங்களுக்கான சரியான அளவுள்ள வேஷ்டி “

தட்டு நிறைய பழங்களும் மிக உயர்ந்த விலை உயர்வானதொரு வேஷ்டி அங்க வஸ்திரமும் வைத்துக்கொண்டு முகம் மலர்ந்த சிரிப்புடன் அவரிடம் அந்தத் தட்டை நீட்டினார் ராமநாதன்.

அவ்வளவு நேரமும் மனதில் குமைந்து கொண்டிருந்த சாஸ்திரிகள் ” வாங்கோ.
என்னது இது!? ” வியப்புடன் வினவினார்.

” மன்னித்துக் கொள்ளுங்கள் சாஸ்திரிகளே!.. பூஜையின் போது தட்டில் வைத்துக் கொடுத்த வேஷ்டி உங்களுக்குச் சரியான அளவில் இல்லாததை அப்போதான் கவனிச்சேன். வாங்கினவங்க சின்னதா வாங்கி வச்சுருக்காங்க. நானும் கவனிக்கல.

அதனால அந்த வேஷ்டி ஸைஸுக்கு சரியாயிருந்த உங்க உதவியாளருக்கு அதை உங்களிடமிருந்து திரும்ப வாங்கிக் கொடுத்து விட்டேன்.

அதைச் சொல்லி உங்களிடம் மன்னிப்பு கேட்பதற்குள் நீங்க கிளம்பிட்டீங்க.

இதோ உங்க அளவுக்கு என் மனஸு திருப்தியா நானே இத வாங்கி வந்திருக்கேன். லேட்டானத்துக்கு மன்னிச்சுக்குங்கோ “

அவ்வளவு நேரமும் புழுங்கிக் கொண்டிருந்த சாமா சாஸ்திரிகளுக்கு பூ மழையும் பன்னீர் மழையும் மனசில் பொழிய இப்போது வெகுவாய் உணர்ச்சி வசப் பட்டு.

” நீங்க தான் என்ன ஷமிக்கணும்.. அவசரப் பட்டு உங்களத் தப்பா நெனச்சுட்டேன்.. உங்கள்ட்ட சொல்றதுக்கு என்ன. என்ன நீங்க அவமானப் படுத்தினதா நெனச்சு ரொம்பவே மனசு கஷ்டப் பட்டுட்டேன்.

ஆனா பெரிய மனுஷா.. பெரிய மனுஷா தான்னு நீங்க நிரூபிச்சுட்டேள்.. உக்காருங்கோ சித்த. ஒரு வாய் காபி சாப்டுட்டு போகலாம் “

திரும்பித் தன் பார்யாளைக் கூப்பிடு முன் பார்யாள் ஸ்டராங் பில்டர் காபி யுடன் நின்று கொண்டிருந்தாள்.

குறள் 31:
“சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு”

அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்களுக்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?.

குறள் 352:
“இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு”

மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்த பின் அறியாமை அகன்று நலம் சேரும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.