கலைந்த தலை, கசங்கிய புடவை, வியர்வையில் அழிந்த நெற்றி பொட்டு என மிகவும் களைத்து தன்னிலை மறந்த நிலையிருந்தாள் அவள். இவற்றிற்கெல்லாம் காரணமான அவனை எண்ணி எண்ணி மனமும் சோர்வடைந்திருந்தது.
“இந்தாம்மா! பூ வாங்கிட்டு போ ” என்ற பூக்கார அக்காவின் குரல் அவளை இவ்வுலகிற்கு அழைத்து வந்தது. அதை காதில் வாங்காதது போல் அவள் அவ்வூரின் பழமையான சிவாலயத்திற்குள் நுழைந்தாள்.
இந்த ஈசுவரன் தான் அவளுக்கு சகலமும். தன்னுடைய துக்கம் சந்தோஷம் என அனைத்தும் இந்த ஈசனிடம் தான் பகிர்ந்து கொள்வாள். இதோ இன்று கூட ஈசனிடம் ஏதோ சொல்ல தான் வந்திருக்கிறாள்.
தான் பிறந்தது முதல் ஏற்பட்ட துக்கத்திலிருந்து இன்று தனக்கும் தன் கணவனுக்கும் வாய் தகராறு முற்றி கை கலப்பானது வரை அனைத்தும் மானசீகமாக அந்த மாதொருபாகனிடம் கூறிக் கொண்டிருந்தாள்.
அக்னி ஸ்வரூபமான அவனுக்கு அபிஷேகங்கள் நடந்து கொண்டிருந்தன. மெல்ல மெல்ல கொதித்து கொண்டிருந்த அவள் மனமும் சாந்தமாகியது.தீபாரதனை காட்டும் போது பரவசத்தில் இரு கைகளை தலைக்கு மேல் சேர்த்து கும்பிட்டாள்.
‘தட் ‘என முதுகில் யாரோ அடித்தது போல் இருந்தது. திரும்பி பார்த்தால் கடுகடுவென்றிருந்த ஒரு பெண்மணியின் முகம் தெரிந்தது.
“சாமி மறைக்குது, கையை கீழே இறக்குங்க”
“அதை மெதுவா கூப்பிட்டு சொல்லிருக்காலமே, அதுக்கு ஏங்க அடிக்கிறீங்க?” கண்ணில் நீர் ததும்பியது. கணவனிடம் அடிவாங்கிய போது, அவன் முன் அழக் கூடாது என்ற அவளின் வைராக்கியம் இப்போது கட்டவிழ்ந்தது.
அடுத்த தீபாரதனையின் போது யாருக்கும் தொந்தரவில்லாது சற்று சாய்வாக நின்று கையை தலைக்கு மேல் தூக்கினாள்.இப்போது அந்த பெண்மணி, தூக்கிய அவள் கையை இறக்கினாள்.
“எத்தன வாட்டி சொல்றது?” என்று சிடுசிடுத்தாள்.
அப்பெண்மணியின் செய்கையும் பேச்சும் அப்பட்டமான அதிகார தோரணையை வெளியிட்டது. இறைவன் சன்னதி முன் எந்த தர்க்கமும் வேண்டாம் என அவள் அமைதியாக வெளியே சென்று ஒரு தூணில் சாய்ந்த வண்ணம் அமர்ந்தாள். அதற்கு நேரே தெரிந்த கருவறையிலுள்ள ஈசனை நோக்கி,
‘எத்தனை துக்கமா இருந்தாலும் உன்னை தான பாக்க வரேன். எத்தனையோ வாட்டி சங்கடத்தோட வந்து நிம்மதியா போயிருக்கேன். இங்க வந்து சங்கடமானது இப்பதான் .நீ ஒன்னுதான் இதுவரை என்னை கஷ்டப்படுத்தலை ஆனால் நீயும்…..’
பள்ளியறை பூஜைக்கு தயாரான இறைவனை கட்டியம் கூறியவாறு பல்லக்கில் வைத்து கோவிலை சுற்றி வந்தனர்.பள்ளியறைக்கு செல்வதற்கு முன், இறைவனை வெளியில் வைத்து அடியார்கள் தேவாரம் பாடினர். பல்லக்கிற்கு பக்கவாட்டில் வெண் சாமரம் வீசிக் கொண்டிருந்த அடியார் ஒருவர், ” இந்தா! நீயும் வந்து வீசு” என்று சாமரத்தை கையில் கொடுத்தார்.
சாமரத்தை கையில் வாங்கியது முதல் பொன்னூஞ்சல் முடிந்து பிரசாதம் வாங்கியது வரை எல்லாம் கனவில் நடந்தது போல் இருந்தது. பேரின்பம் உணர்ந்த அவளுக்கு பேச்சு வரவில்லை.
அந்த அடியார் இவளிடம், “நமக்கு எப்ப எதை எப்படி எங்கே நடத்தி வைக்கனும்னு அவனுக்கு தான் தெரியும்” என்றபடி கடந்தார். இறைவனின் கருணையைக் கண்ட பின் அவள் துயரமெல்லாம் உடைந்து உருகத் தொடங்கியிருந்தன.
அருமை ❤️❤️ அவனன்றி ஒர் அணுவும் அசையாது..🙏🙏🙏
Thank You