பெண் உரிமை

பெண் உரிமை

நிமிர்ந்த நன்னடை
நேர் கொண்ட பார்வை
நிலத்தில் யாருக்கும் அஞ்சத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதல்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்
அமிழ்ந்து பேரிரு ளாமறியாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது
கேட்டீரோ
                              -பாரதியார்

முண்டாசு கவிஞன்    இதில் பெண் என்பவள் எவ்வாறு இருக்க வேண்டும் என் மேற்கோள் காட்டியுள்ளார். ஆனால் தற்கால வாழ் நாகரிக யுகத்தில் இதன் உள் அர்த்தத்தை அறியாமல் முகில் மறைத்த ஆதவனாய் உள்ளனர். முகிலானது ஆதவனை மறைத்தாலும் அதன் ஒளி மங்குமே தவிர குறையாது. ஆம்! அது போல் “பெண் உரிமையை” அறியாமை எனும் முகில் மறைத்து அதன் ஒளி வெளிவராமல் தடுக்கப்பட்டுள்ளது. சரி களத்திற்கு வருவோம். ஆணுக்கு பெண் சமம், இல்லை இல்லை பெண் ஆணை விட உயர்ந்தவள். ஆனல் சில அன்னிய சக்திகளாலும், தவறானோர் போதனையாலும் பெண் உரிமை, அவள் விடுதலை அவளது உண்மைத் தன்மை தவறாக சித்தரிக்கப்பட்டு பெருமை அற்று ஆக்கப்பட்டுள்ளது. அப்படியானல் நாம் அனுபவித்து வரும் அனைத்தும் பெண் சுதந்திரம் இல்லையா??? நாம் பேசும் அனைத்தும் பெண் உரிமை இல்லையா?? பெண்ணை அடுப்படி விட்டு வெளி கொண்டு வந்தோம் என கூவியது உண்மையில்லையா?? பின் எது தான் உரிமை, சுதந்திரம், பெருமை, அழகு ,தனித்தன்மை..பார்ப்போம்…….

                          ஆண் சாதித்துள்ள அனைத்து துறைகளிலும் பெண் சரிசமமாக சில இடத்தில் அதற்கும் மேலாக. நாகரிக உடை அணிந்து , மேற்கத்திய உணவு உண்டு, பன்னாட்டு நிறுவனங்களில் லகரத்தில் சம்பளம் வாங்கி, நேரம் காலம் இல்லாது உழத்து, பற்பல கேளிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தவறு என்று கூறவில்லை. அது அவரவர் விருப்பம். ஆனால் நம் பாரம்பரியத்தின் உண்மை நிலையையும் அறிந்து கொண்டு செயல் பட வேண்டும்.   

                          பெண் உரிமை பற்றி பேசவேண்டுமெனில் சங்ககாலம் தாண்டி, வேத காலத்தில் பயணித்து, கற்காலத்தை அடைய வேண்டும்.

                    மேற்கத்திய கூற்று படி ஆதாம் முதலில் படைக்கப்பட்டு பின் துணையாக ஏவாள் படைக்கப்பட்டாள். இது அனேக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.    பாரத நாட்டின் கூற்று படி இறைவன் தன்னிலிருந்து ஒரு ஜீவனை உருவாக்கி இறைவியாக கொண்டான். ஆக ஒரு ஆணின் பாதுகாப்பு பெண்ணால் மட்டுமே என்பது முதல் உரிமை“. மனிதனுக்கு எந்த ஒரு செல்வம் இல்லையென்றாலும் துணைக்கு ஒரு ஆள், அதுவும் மனைவியாக ஒருவள் இருந்தால் அந்த ஆண்மகன் பெரும் செல்வந்தன் ஆவான்.

                      வேத காலத்தில் ஆண் பெண் இருவரும் கல்வியில் சிறந்து விளங்கினர். ரிஷி பத்தினிகள் பாடசாலையில் “கல்வி கற்பிக்க, கற்றுக்கொள்ள உரிமை பெற்றிருந்தனர். சித்தரும், தமிழ் துறவியும், தெற்கின் இலக்கியத் தலைவரும், சிறந்த முனிவருமான அகத்தியரின் சகதர்மினி “லோக முத்ரா” சிறந்த தத்துவஞானி. ரிக் வேதத்தில் இவரது பங்கு உள்ளது. இவர் மட்டுமல்லாது கார்கி, வாடவ பிரதிதேயீ, சுலப மைத்ரேயி போன்ற பெண்மணிகளின் குறிப்புகள் உபநிடத்துகளிலும், வேதங்களிலும் உள்ளது.

                    பெண் உரிமை பேசும் நம் அறிவாளிகளில் எவ்வளவு சதவீத மக்கள் தன் மனைவியை சமமாக பார்த்துள்ளனர்? தலை குனிந்து மாங்கல்யத்தை ஏற்பதால் அவள் தலை வணங்குபவளே தவிர அடிமை இல்லை. இன்றும் பெண்ணாக பிறந்த ஒருவள் தந்தை, கணவன், மகன் என் எதோ ஒரு ஆண்மகனை சார்ந்தே உள்ளாள். சார்ந்து இருப்பதும் அடிமைபட்டிருப்பதும் வேறுவேறு. தமிழகத்தின் தலைமகன் பாரதி தன் மனைவி செல்லம்மாவிற்கு தந்த உரிமையை விடவா நாம் தற்போது தருகிறோம். பற்பல கவிதைகள், பாடல்கள், கட்டுரைகள் எழுதியவர் அதில் சக்தி ஸ்வரூபமாக, குழந்தையாக தன் மனைவியையே மனதில் கொண்டு இயற்றியுள்ளார்..

          இடையில் சங்ககால பதிப்புகள் சிலவற்றை பார்ப்போம். பாரத தேசத்தில் ஆளுமைக்கும் அரசர்களுக்கும் பஞ்சமில்லை. சபையில் தன் மனைவியான பட்ட மகிஷியை மந்திரியாகவும் சிறந்த ஆலோசகராகவும் செயல் பட வைத்தனர் நம் அரசர்கள். கல்வி , ஞானம், வீரம் என அனைத்து குணாம்சத்தோடு அரசியானவள் விளங்கினாள். நம் அடி மரமான சோழ சாம்ரஜ்ஜியத்தில் அனைத்து பெண்களும் கல்வியில் சிறந்து விளங்கினர். கண்டாராதித்திய சோழன் செம்பியன் மாதேவியை அந்தபுரத்தில் வைத்து கேளிக்கைகளை ரசிக்கசொல்லவில்லை, மாறாக அரசவையில் அமர்த்தி முக்கிய அலுவல்களுக்கு பொறுப்புகளை தந்தார்.    இல்லாவிட்டால் தமிழகத்தில் இத்தனை ஆலயங்கள் தோன்றிருக்குமா? அந்த மாதரசி இது மட்டுமல்லாது தன் கணவன் இறப்பிற்கு பின் சோழ தேசத்தை நல்வழி படுத்திய ராஜமாதா ஆவாள். வீரமும் அழகும் விவேகமும் மிஞ்சிய அறிவாற்றலும் உடைய தென்னகத்தின் சாணக்கியர் குந்தவை நாச்சியார். இவரது அரசியல் அறிவால் இன்றளவும் தஞ்சையும், பெருவுடையார் கோவிலும், மாவீரன் ராஜராஜ சோழனும் நிலைத்த புகழோடு உள்ளனர். அவளின் புத்திக்கூர்மையும் நேர்மையுமே புலிக்கொடி பாரெங்கும் பறக்கக் காரணம். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய நாட்டு பெண் சிங்கம் தடாதகை பிராட்டி, பின்னே மீனாட்சி, மலைத்வஜன் மட்டும் அவளை பல்லாங்குழியும் பாண்டியும் போதுமம்மா என கூறியிருந்தால் உலகமே வாய் பிளக்கும் மதுரை மகிமை இல்லாது போயிருக்கும்.இந்த நிமிடம் வரை மதுரை அரசாளும் மீனாட்சியே தவிர சுந்தரேசன் இல்லை.

சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகியின் சிலம்பை விற்கும் சமயத்தில் மதுரை வீதிகளில் தன் கையில் ஒரு வடமொழி ஏட்டை படித்துக்கொண்டே நடந்தான். சில வரிகளுக்கு அர்த்தம் புரியாமல் அங்கே ஒரு வியாபார பெண்ணிடம் கேட்டான் அவளும் பதிலுரைத்தாள். இது வெளித்தோற்றத்திற்கு சாதாரண நிகழ்வு, உள் நோக்கினால் மதுரையில் அனைத்து தரப்பு மக்களும் கல்வி கற்றிருந்தனர். இது போல பல்லவ குல திலகம் சாருதேவி, மைலலாதேவி, கேட்டலா தேவி, சாளூக்கிய வம்ச ருத்திரமாதேவி(நாட்டிற்காக தன் பெண்மையை மறைத்து 26 வருடம் ஆணாக வள்ர்ந்த தியாக மங்கை), இன்னும் நம் வரலாறு கூறாத நம் முன்னவ பெண்கள் எத்தனை எத்தனையோ??? ஆக இதிலிருந்து அக்கால பெண்கள் தங்கள் உரிமையை அரசவையிலும், நிகரற்ற கல்வி புலமையிலும், உயர் பதவிகள் வகித்து சிர்ந்த நிர்வகதிலும், நாட்டை ஆள்வதிலும் பெற்றிருந்தனர்.

            மிகவும் கண்டிக்கத்தக்க சொல்லாடை ஒன்று, “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்க்கு”. மக்களே அதை பிரித்துப்படியுங்கள். “அடுப்பூதும் பெண்களுக்கு ஒரு படி பூ எதற்க்கு”, அதாவது அடுப்பு கரியின் புகையில் தன் தலையில் சூடிய ஒரு படி அளவு பூவானது வாடி வதங்கிவிடும். இதற்கே இச்சொல்லடை. மற்றொன்று “பெண் புத்தி பின் புத்தி”, அவள் பின்னே வரப்போகும் நல்ல்து கெட்டது அனைத்தையும் முன்னமே அறிந்து எச்சரிக்கும் திறனுடையவள்.

          சுதந்திர இந்தியாவை பெற முதல் விதையை சிப்பாய் கலகத்தில் இட்டவள் “மணு”, ஜான்சியின் நம்பிக்கையான ராணி லக்ஷ்மிபாய். கணவன் இறந்தும், மகனை பறிகொடுத்தும் தன் தாய் நாடே முக்க்கியம் என அக்காலத்தின் கொடுமைகளை எதிர்த்து கணவனின் அரியாசனத்தில் அமர்ந்து நாட்டை ஆண்ட வீரபெண்மணி. முதன்முதலில் பெண்களைக் கொண்டு வீரப்படை (வில், வாள், கதை, ஈட்டி, பீரங்கி ) என அனைத்தையும் கையாளும் திறனோடு அமைத்தாள். உரிமை தன் நாட்டை காத்து , படைகளை அமைத்து சுதந்திர காற்றை சுவாசிக்க வைப்பதில் இருந்தது. தமிழ்கத்தை சேர்ந்த அஜ்சலை அம்மாள், கிருஷ்ணம்மாள், அம்புஜத்தம்மாள் போன்றோர் என் வீடு என் கணவன் என் மக்கள் என் உரிமை கொண்டாடி மட்டும் இருந்தால் இன்றளவும் ஆங்கிலேயனுக்கு வந்தனம் வைத்துக்கொண்டிருப்போம். என் தாய் நாடு, என் பாரதம் என் நாட்டின் மீது உரிமை கொண்டாடினர், சுதந்திரத்தின் மீதி உரிமை கொண்டாடினர். ஆக அவர்கள் உரிமையெங்க கோரி வாங்கித்தந்த சுதந்திரத்தை சரிவர பயன்படுத்த வேண்டும். பெற்ற சுதந்திரத்தை காப்பது நம் உரிமை அன்றோ???

      ஆக பெண் உரிமையும், பெண் சுதந்திரமும் ஆண்களைப் போல் கால் சராய் அனிவதும், கனரக வாகனங்கள் ஓட்டுவதிலும், இரவு நேர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதிலும் இல்லை. மாமரத்தில் பலாப்பழம் காய்க்குமா? அதற்க்கு இட்ட வேலை அததற்க்கு உண்டு. ஆண் சாதித்த அனைத்திலும் பெண் சாதிக்கிறாள். விண்வெளியில் கல்பனா சாவ்லா, குத்துச்சண்டையில் மேரி கோம், அரசியலில் இந்திரா காந்தி, ஜெயலலிதா, மக்களவையில் நிர்மலா சீத்தாராமன், தடகளத்தில் பி.டி.உஷா, துடுப்பாட்டத்தில் மித்தாலிராஜ், இறகு பந்தில் சாய்னா நேவால், படப்பிடிப்பில் சுதா கோங்க்ரா இன்னும் பலர்.

              தமிழரின் கலை பரதநாட்டியம் . உலகமே வியந்து ஜாதி மத இன பாகுபாடு இல்லாமல் அனைவரும் கற்றுக்கொள்ளும் ஒரு கலை பரதம். அக்காலத்தில் சலங்கை கட்டாத கால்களே இல்லை. இடையே வந்த சில அன்னிய படையெடுப்பிலும், தவறான மனிதர்களின் தலையிடுதலாலும் தன் பெருமையை இழந்தது. அதை திருப்பி உயிரூட்டி இன்று உலகம் முழுவதும் செழிக்க வைத்தது ஒரு பெண். ருக்மணிதேவி அருண்டேல், அவர்தான் காலக்ஷேத்ராவின் நிறுவனர்.

                    ஆக நாம் உரிமை முழக்கம் செய்து வந்த எல்லாம் உரிமை அல்ல.    மாறாக ஆண் வர்கத்தின் மீதுள்ள பொறாமையும் தவறான பிரசாரமும் தான்.

                  படிப்பிற்கு ஏற்ற வேலை செய்து, குடும்பத்தை தாங்கி, வருங்கால உலகின் தூண்களை உருவாக்கும் பிள்ளைபேறு பெற்று அவைகளை நல்வழி படுத்துவதும் ஒரு தாயின் கடமை . களைப்புடன் வரும் கணவனுக்கு முகமலர வரவேற்று சூடான ருசியான உணவு அளிப்பது இல்லாளின் கடமை. அப்பா என்று சொல்லி கால்களை கட்டிக்கொள்ளும் போழுது தந்தையை அனைத்தையும் மறக்கசெய்வது குட்டி இளவரசியின் உரிமை. உரிமையின் உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். நம் நாடு பாரம்பரிய பாரத நாடு, நமக்கு முன்னோர்கள் விதித்திட்ட வழி நடக்க வேண்டும்.

                    ஆண்களுக்கு ஒரு செய்தியுடன் முடித்துக்கொள்கிறேன். மனைவியை வேலைக்கு அனுப்புவதும், மகளை மேற்படிப்பு படிக்க வைப்பதும், சகோதரிக்கு செல்வ செழிப்பாக திருமணம் நிகழ்த்துவதும், அன்னைக்கு ஆண்மீக பயணம், புதினம் வாங்கித்தருவதில் இல்லை நீங்கள் அங்கு காட்டும் அன்பு பாசம். உண்மையான உரிமை பாசம் என்பது மனைவியின் உள்ளம் அறிந்து, துன்பம் உற்ற பொழுது அனைக்கும் கரங்களிலும், விரல் பிடித்து நடக்கும் மகளுக்கு உலகின் நல்லது கெட்டதை கற்பித்தலிலும், பிறந்த வீட்டின் பெருமையை உணர்ந்து செயல்படும் தமக்கையின் தன்மையிலும், உங்களை ஆளாக்க தன்னை இழந்த தாய்க்கு செய்யும் அனைத்து கடமைகளிலும் இருக்கிறது ஒரு ஆணின் உரிமை, இதை உணர்ந்து பெண்மையை காப்பதில் உள்ளது ஒரு பெண்ணின் உரிமை.

உணர்வோம்! தெளிவோம்!

பதிவுகளை உடனுக்குடன் பெற

தொழில்நுட்ப கட்டுரைகள் படிக்க

About Author

4 Replies to “பெண் உரிமை”

  1. நன்று. தமிழோடு வீர நடையிட்டு வெற்றி பல கண்டு சுதந்திரமாய் இன்புற்று மேலும் பல எழுத கோதாவிற்கு வாழ்த்துக்கள்…..

  2. எளிய மொழியில் பெண் உரிமை குரல். மிக்க நன்று வாழ்த்துக்கள்

Comments are closed.