மார்கழி மாத ராசி பலன்கள்

ப்லவ வருட மார்கழி மாத ராசி பலன்கள்

வருகிற 16.12.2021 அதிகாலை 03.44.10 மணிக்கு சூரியபகவான் விருச்சிக ராசியில் இருந்து  தனூர் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அவர் தனூர் ராசியில் 14.01.2022 பிற்பகல் 14:29:28 மணி வரை சஞ்சரிக்கிறார். ஒவ்வொரு ராசிக்குமான மார்கழி மாத ராசி பலன்கள் கீழே.

இது லஹரி அயனாம்ஸத்தை ஒட்டி கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டது. 

வாக்கியப்படி 16.12..2021 காலை 08.57 மணிக்கு பெயர்ச்சிஆகிறார்.

ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் லஹரி அயனாம்ஸ பஞ்சாங்கப்படி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கிரஹ பாத சாரங்கள் : மார்கழி மாத பிறப்பின் போது

லக்னம் – துலாம் – விசாகம் – 1
சூரியன் – தனூர் – மூலம் – 1
சந்திரன் – மேஷம் – பரணி – 4
செவ்வாய் – விருச்சிகம் – அனுஷம் – 2
புதன் – தனூர் – மூலம் – 3
வியாழன் – கும்பம் – அவிட்டம் 4
சுக்ரன் – மகரம் – உத்திராடம் – 2
சனி – மகரம் – திருவோணம் -2
ராகு – ரிஷபம் – கிருத்திகை – 4
கேது – விருச்சிகம் – அனுஷம் – 2

கிரஹ வலிமைகள் :

மிக வலுவான கிரஹம் செவ்வாய், சந்திரன், சுக்ரன்

சூரியன்,புதன், குரு, சனி இவை மத்ய பலனை கொடுக்கும்

வலுவற்ற கிரஹம் ராகு, கேது

இவை மாதம் பிறக்கும் போது உள்ள நிலை. ஒவ்வொரு கிரஹமும் அந்த மாத்தத்தில் சஞ்சார நிலை கொண்டு வலிமை மாறுபடும்

மார்கழி மாத ராசி பலன்கள்

இவற்றை கணக்கில் கொண்டு பலன் சொல்லப்படுகிறது. மேலும் ஜாதகர் பிறப்பு லக்னத்தை ஒட்டி பலன் சொல்லப்படுகிறது உதாரணமாக மேஷ ராசி ஜாதகர் கடக லக்னத்தில் பிறந்தால் கடகராசி பலனும் அவருக்கு பொருந்தும். உங்களது பிறந்த லக்னம் தெரிந்தால் அந்த ராசிக்கான பலனையும் சேர்த்து பார்த்து அறியவும்.

பாரத தேசம் & தமிழகம் பொருத்தவரை, செவ்வாய் கேது 1 டிகிரிக்குள் இணைவு, சில குழப்பங்கள் மக்களிடம் பீதி ஆட்சியாளருக்கு சோதனைகள் பிரச்சனைகள் என இருந்தாலும், தமிழகம் கடகராசி என்பதால் குடிமக்களின் மனவருத்தம் அதிகம் ஆகும்படி ஆட்சியாளர்களுக்கு சோதனைகளும் அதனால் அவர்கள் எடுக்கும் முயற்சிகளில் தோல்வியும் இருக்கும். கவன சிதறல்கள் மற்றும் அந்நிய தேச உறவுகளில் விரிசல், போன்றவை இருந்தாலும் குருவின் பார்வை மற்ற புதன் சுக்ரன், ராகு சஞ்சாரங்கள் ஓரளவு நன்மை தரும்படி அமையும். ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள், செயல்பாடுகளில் அதிக கவனமுடன் செயல்பட்டால் கெட்ட பெயர் நீங்கும், நல்ல ஆலோசகரை கொண்டு செயல்படுவது நன்மை தரும்.

மேஷம் (அஸ்வினி 4 பாதம், பரணி 4 பாதம், கார்த்திகை 1பாதம் முடிய) :

உங்கள் ராசிநாதர் செவ்வாய் 8ல் இருக்கிறார். அந்த செவ்வாய்க்கு 2ல் சூரியன். ராசிக்கு 9ல் மிக நல்ல பலன்களை நிதானமாக அள்ளி தருகிறார். பொதுவாக 9ல் சூரியன் இருந்தால் பெற்றோர் ஆரோக்கிய பாதிப்புகள், உத்தியோகம், தொழில் ஜீவன வகையில் பாதிப்பு என்பதாக சொல்வர் ஆனால் இங்கு அவர் மிகுந்த நல்ல நட்பு சூழலில் இருப்பதாலும் 3ம் இடத்தை பார்ப்பதும் மனதில் உறுதியும் தெம்பும் வந்துவிடும். மேலும் லாபஸ்தானத்தில் குரு 3,5,7 இடங்களை பார்ப்பது இல்லத்தில் புதியவரவு, திருமணம் குழந்தை பாக்கியம் என்று சிறப்பாக இருக்கும் வருமானம் பெருகி இல்லத்தேவைகள் பூர்த்தியாகும். புதனும் லாபத்தில் வந்து புனித யாத்திரை, உத்தியோகம் சொந்த தொழில் போன்றவற்றில் முன்னேற்றம் என்று நன்றாகவே இருக்கிறது இந்த மாதம் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சுக்ரன் வக்ர கதி தனுரில் சுப விரயம் இருக்கும். அதேபோல ராசிநாதர் 8ல் இருப்பது தெய்வ அனுகூலத்தை தரும். அவர் லாபத்தை பார்ப்பது மருத்துவம், ஹோட்டல், கட்டுமான துறை ஆட்டோமொபைல் துறை போன்ற பணிகளில் இருப்போர் தொழில் செய்வோருக்கு நன்மைகள் அதிகம் உண்டாகும். செவ்வாய் கேது 1 டிகிரிக்குள் இணைவு இங்கு இந்தராசிக்கு நன்மை செய்கிறது. கேதுவலுவற்று இருக்கிறது. அதே நேரம் சந்திரனின் சஞ்சாரம், ராகு, வக்ர சுக்ரன் மற்றும் சனி இவர்கள் உறவு நட்பு வகையில் மனவருத்தம், தேவையற்ற அலைச்சல் பயணம், கோபம் அதனால் சிறு மன உளைச்சல் போன்றவற்றை தரும். இருந்தாலும் இந்த மாதம் மேஷராசி /மேஷ லக்ன காரர்களுக்கு அதிக நன்மையே. வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

அஸ்வினி சந்திராஷ்டமம்: 30.12.21 இரவு 09.08 மணி முதல் 31.12.21 இரவு 07.34 மணி வரை
பரணி சந்திராஷ்டமம்: 31.12.21 இரவு 07.34 மணி முதல் 01.01.2022 மாலை 05.58 மணி வரை
கார்த்திகை 1ம் பாதம் சந்திராஷ்டமம்: 01.01.2022 மாலை 05.58 மணி முதல் 02.01.2022 04.18 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : நரசிம்ஹர், துர்கை , சாஸ்தா போன்ற தெய்வங்களை வழிபடுதல், அருகில் கோயிலுக்கு சென்று விளக்கேற்றுதல் மற்றும் குலதெய்வம் இஷ்ட தெய்வ வழிபாடு மிக சிறந்த பலனை தரும். அன்னதானம், வஸ்திர தானம் நல்ல பலனை தரும்.

ரிஷபம் (கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோஹிணி 4 பாதம், மிருகசீர்டம் 1,2 பாதங்கள் முடிய):

உங்கள் ராசிநாதர் சுக்ரன் 31.12.2021 வரை பத்தில் நட்பு வீட்டில் அதனால் ஆடை ஆபரண சேர்க்கை, நகை சேர்க்கை என்று மனதில் இஷ்டப்பட்ட எதையும் வாங்கும் நிலை, விருந்து கேளிக்கைகள் 31ம் தேதிக்கு பின் வக்ரமாய் 9ல் நட்பாக இதுமே நல்ல நிலை குறிப்பாக மாணவர்களுக்கும், நகை தொழில் ஆடை தொழில் செய்வோருக்கும். மேலும் புதனும் நல்ல சூழலை அமைத்து எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற்றுகிறார். உத்தியோகம், சொந்த தொழில் ஜீவன வகை நன்றாக இருக்கும்படி குரு, சனி, செவ்வாய், இவர்கள் செய்வதால் இல்லத்தேவைகள் பூர்த்தியாகும். தாமதமாகி கொண்டிருந்த திருமணம், குழந்தை பாக்கியம் நிறைவேறும். 7ல் இருக்கும் செவ்வாய் இதை செய்கிறார். அதே நேரம் உங்களின் பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய் பலமற்று இருந்தால் மட்டும். செவ்வாய் கேது இணைவு சில தடைகளையும், வாழ்க்கை துணைவர் வகையில் மருத்துவ செலவுகளையும் தரும். மற்ற சூரியன் சந்திரன், ராகு பரவாயில்லை என்ற அளவில் கெடுதல் செய்யவில்லை. கேது குழப்பத்தையும் சில வேண்டாத வம்புகள் வழக்குகளை தருகிறார். எந்த ஒரு இடத்திலும் அமைதியும் பொறுமையும் கொண்டு செயல்பட்டால் இந்தமாதம் நன்றாக இருக்கும் என்பதை உணரலாம். பொதுவில் இந்த மாதம் பரவாயில்லை என்னும்படியும் முயற்சிகளில் வெற்றியையும் தரும்படி அமையும்.

கார்த்திகை 2,3,4 பாதங்கள் சந்திராஷ்டமம்: 01.01.2022 மாலை 05.58 மணி முதல் 02.01.2022 04.18 மணி வரை
ரோஹிணி சந்திராஷ்டமம்: 02.01.2022 மாலை 04.18 மணி முதல் 03.01.2022 பிற்பகல் 02.46 மணி வரை
மிருகசீரிடம் 1,2 பாதங்கள் சந்திராஷ்டமம்: 03.01.2022 பிற்பகல் 02.46 மணி முதல் 04.01.2022 பிற்பகல் 01.28 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : பிள்ளையார், தன்வந்த்ரி பகவானை வழிபடுவது, ஞாயிறு, வியாழன் நாளில் கோயிலில் விளக்கேற்றுவது விநாயகர் அகவல் படிப்பது நன்மை தரும். மேலும் முடிந்தவரையில் தான தர்மங்களை செய்யுங்கள்.

மிதுனம் (மிருகசீரிடம் 3,4 பாதங்கள், திருவாதிரை 4 பாதம், புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய):

உங்கள் ராசி நாதர் புதன் 29.12.21 வரை பாக்கியத்தில் சூரியனுடன், அதன் பின் ஜீவன ஸ்தானத்தில் சனியுடன் இரண்டுமே நன்மை தரும்படி அமைகிறது. மேலும் 6ம் வீட்டில் செவ்வாய் வலுவாக இருந்து ருண ரோக சத்ருவை அழிப்பதோடு மறைமுக வருமானத்தையும் தருகிறது. வியாதிகளின் தாக்கம் குறைந்து மருத்துவ செலவை கட்டுப்படுத்துகிறது. மேலும் 6ல் கேது இணைவு நன்மையாகவே முடிகிறது. அதே போல் 7ல் சூரியன்+வக்ர சுக்ரன் (31.12.21 முதல்) வாழ்க்கை துணைவர் வகையில் மன வருத்தம் வைத்திய செலவு தந்தாலும் இல்லத்தில் புதியவரவு, சுப செலவுகள் என்றும் தருவதால் இதுவரை தாமதம் ஆகிக்கொண்டிருந்த திருமணம் , குழந்தை பாக்கியம், உத்தியோக வகையில் பதவி சம்பள உயர்வு போன்றவையும் சிலருக்கு வெளியூர்,வெளிநாட்டு உத்தியோக வாய்ப்புகளும் உண்டாக்கும் மாதமாக அமையும்படி செய்கிறார்கள். கடந்த கால வழக்குகள், கடன்கள் தீருவதற்கான வழிகளை குரு, ராகு செய்கிறார்கள், செவ்வாயின் 9ம் இட பார்வை இதுவரை கிடைக்காமல் இருந்தவற்றை கிடைக்க செய்து நன்மைகள் அதிகம் உண்டாகும்படியாக மற்ற கிரஹங்களும் அதிக நன்மை செய்வதாகவே இந்த மாதம் அமைகிறது.

மிருகசீரிடம் 3,4 பாதங்கள் சந்திராஷ்டமம்: 03.01.2022 பிற்பகல் 02.46 மணி முதல் 04.01.2022 பிற்பகல் 01.28 மணி வரை

திருவாதிரை சந்திராஷ்டமம்: 04.01.2022 பிற்பகல் 01.28 மணி முதல் 05.01.2022 பிற்பகல் 12.24 மணி வரை

புனர்பூசம் 1,2,3 பாதங்கள் சந்திராஷ்டமம்: 05.01.2022 பிற்பகல் 12.24 மணி முதல் 06.01.2022 காலை 11.40 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் :. ஸ்ரீராமர், ஆஞ்சநேயர் வழிபாடு நின்ற திருக்கோல பெருமாள்,தாயார் வழிபாடு நன்மை தரும். ராம நாமம் சொல்வது விளக்கேற்றுவதும், மற்றும் முடிந்த அளவு தான தருமம் செய்வதும் நன்மைகளை தரும்.

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம் 4பாதங்கள், ஆயில்யம் 4 பாதங்கள்):

கடக ராசியில் பிறந்தவர்களை ஏன் ஆபத்தானவர்கள் என்று கூறுகிறார்கள் தெரியுமா? |  Negative Traits of Cancer Born People - Tamil BoldSky


உங்கள் ராசிநாதர் சந்திரன் மாதம் பிறக்கும் போது ஜீவன வீட்டில் நல்ல நிலையில் அதனால் மனதில் தெளிவும் தெம்பும் ஏற்படும், இதுவரை இருந்துவந்த குழப்பங்கள் விரக்தி போன்றவை விலகும். குருபகவானின் 12, 2,4ம் இடம் பார்வைகள் திருமணம், குழந்தை போன்ற பாக்கியங்களை தரும், மேலும் 7ல் சனி சுக்ரனும், பின் 29 முதல் சனி புதன் என்று வாழ்க்கை துணைவரின் முன்னேற்றம், இல்லத்தில் மகிழ்ச்சி சுப விரயம், ஆடை ஆபரண சேர்க்கை விருந்து கேளிக்கைகள், மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம், வீடு வாகன யோகம், பராமரிப்பு பணிகளில் முன்னேற்றம், 5ல் செவ்வாய் ஆட்சி புதிய வரவு, கல்வி கேள்விகளில் நல்ல நிலை, 11ல் ராகு பொருளாதார ஏற்றம் என்று நன்றாகவே இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். அதே நேரம் 5ல் கேது செவ்வாய் இணைவு, 6ல் சூரியன், மன உளைச்சல், பயம், ஒரு இனம் புரியாத கலக்கம் அதனால் செயல்பாடுகளில் மந்தம், காரிய தடை போன்றவையும் இருக்கும். எதிலும் கவனமுடன் செயல்படுவதும், நிதானம் பொறுமை இவற்றை கடைபிடிப்பதும் நன்மை தரும். பெரும்பாலும் நன்மையாக அமைந்தாலும் சில தடைகள் மன உளைச்சலும் கூடவே இருக்கும்.

புனர்பூசம் 4ம் பாதம் சந்திராஷ்டமம்: 05.01.2022 பிற்பகல் 12.24 மணி முதல் 06.01.2022 காலை 11.40 மணி வரை

பூசம் சந்திராஷ்டமம்: 06.01.2022 காலை 11.40 மணி முதல் 07.01.2022 காலை 11.18 மணி வரை

ஆயில்யம் சந்திராஷ்டமம்: 07.01.2022 காலை 11.18 மணி முதல் 08.01.2022 காலை 11.26 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : வைத்யநாதர், மற்றும் வைத்ய வீரராகவர் வழிபாடும் வியாழக்கிழமைகளில் விளக்கேற்றி வைத்யநாதாஷ்டகம், மற்றும் திருமங்கையாழ்வார் காசையாடை என துவங்கும் பாசுரமும் படிப்பது மனதில் தைரியத்தை உருவாக்கி செயலில் வெற்றியை தரும். முடிந்த அளவு அன்னதானம், இயலாதோர்க்கு உதவி செய்வதும் அதிக நன்மை தரும்

மார்கழி மாத ராசி பலன்கள்

சிம்மம் (மகம் 4பாதம், பூரம் 4பாதம், உத்திரம் 1ம் பாதம் முடிய):


ராசிநாதன் சூரியன் 5ல் நட்பாகவும், வலுவாகவும் இருக்கிறார். ராசிக்கு குருபார்வை இருக்கிறதும் ஒரு பலம் பொருளாதார நிலை நன்றாக இருக்கும் பணப்புழக்கம் தாராளம், மேலும் சுக,பாக்யாதிபதி 4ல் ஆட்சி பார்வையால் லாபத்தை பார்ப்பதும் மனதில் தைரியமும், உற்சாகமும் தரும்படி அமைகிறது. இதுவரை தாமதம் ஆகி கொண்டிருந்த திருமணம் குழந்தை பாக்கியம், வீடுவாகன யோகம், உத்தியோகம் சொந்த தொழில் போன்றவற்றில் முன்னேற்றம் என்று அனைத்தும் கிடைக்கும்படியாக இந்த மாதம் அமையும் சுக்ரன், புதன் ராகு இவர்கள் வருவாயை பெருக்கி செயல்களில் வெற்றியை தருவர். செவ்வாய் கேது 1 டிகிரியில் இணைவு யுத்தம் என்றாலும் செவ்வாயின் பலம் முன்னேறி செல்லும் நிலை இவை பாதிப்புகள் எதுவும் இல்லாமல் செய்கிறது. இந்த மாதம் உங்கள் தேவைகள் பூர்த்தியாகுதல், வீடு பராமரிப்பு பணிகளில் நிறைவு, செயல்களில் வெற்றி என நன்றாகவே அமைகிறது. பிறப்பு ஜாதகம் நன்றாக இருந்தால் இன்னும் கூடுதலான நன்மைகள் உண்டாகும். அதே நேரம் 4ல் கேது 3ம் இடம் நோக்கிய நகர்வு மன உளைச்சல் இல்லத்தில் வைத்திய செலவுகள் எதிர்பாரா விபத்துகள் அதனால் விரயங்கள், என்று தருவார் கவனம் தேவை, நிதானம் கொண்டு செயல்படுவது நன்மை தரும். பொதுவில் நல்ல மாதம்.

மகம் சந்திராஷ்டமம் : 08.01.2022 காலை 11.26 மணி முதல் 09.01.2022 பிற்பகல் 12.02 மணி வரை
பூரம் சந்திராஷ்டமம் : 09.01.2022 பிற்பகல் 12.02 மணி முதல் 10.01.2022 பிற்பகல் 01.08 மணி வரை
உத்திரம் 1ம் பாதம் சந்திராஷ்டமம் : 10.01.2022 பிற்பகல் 01.08 மணி 11.01.2022 பிற்பகல் 02.43 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : அகிலாண்டேஸ்வரி தாயார் சமேத ஸ்ரீஜம்புகேஸ்வரரையும் தாயுமானவரையும் வழிபடுவது, கோயில் விளக்கேற்றுவது, திங்கள் கிழமைகளில் லிங்காஷ்டம் சிவாஷ்டகம் படிப்பது, நந்தி தரிசனம் ப்ரதோஷ வேளையில் இவை நன்மை தரும். அன்னதானம் மிக நல்லபலனை தரும்.

கன்னி :(உத்திரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம் 4 பாதம், சித்திரை 1,2 பாதங்கள் முடிய):


உங்கள் ராசிநாதர் 4ல் 29.12.2021 வரை பின் 5ம் இடம். இரண்டுமே அதிக நன்மைகள் தருவதாக அமைகிறது. மேலும் 3ல் செவ்வாய் ஆட்சியாக 6ம் இடம் பார்ப்பது இதுவரை இருந்துவந்த வியாதிகள், கடன் தொல்லை, எதிரிகள் இவற்றிலிருந்து விடபடவும், மன அழுத்தம் நீங்குதல், காரணமின்றி உண்டாகும் பயம் போவது மன தைரியம் உண்டாவது என நன்றாக இருக்கும். விரையாதிபதி சூரியன் சுக ஸ்தானத்தில், தேவையில்லாத சங்கடங்கள், செவ்வாய் கேது 1 டிகிரி இணைவு எதிர்பாரா செலவுகள், இடமாற்றம் உத்தியோகம் சொந்த தொழிலில் மந்தம், வருமான குறைவு அல்லது அதற்கேற்ற செலவு அதிகரித்தல் என இருந்து கொண்டிருக்கும். சித்திரை நக்ஷத்திரக்காரர்களுக்கு ஓரளவு பரவாயில்லை என இருக்கும் மற்றவர்கள் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும். அதே நேரம், சனி புதன், சுக்ரன் பொருளாதாரம் நன்றாக இருக்கும் படியும், ஆடை ஆபரண சேர்க்கை மகிழ்ச்சிதரும் செலவுகள், இல்லத்தில் புதிய வரவு என நன்றாக இருக்கும்படி செய்கின்றனர். பிறப்பு ஜாதகத்தில் கேது நன்றாக அல்லது சுபமாக இருந்தால் பெரிய சங்கடங்கள் இருக்காது. மேலும் சந்திரன் ராகு சேர்க்கை நாளில் ஒரு நன்மை எதிர்பார்த்த வரவு என நன்றாக இருக்கும். ராகுவும் ஓரளவு நன்மை செய்கிறார். பொதுவில் இந்த மாதம் நன்றாக இருந்தாலும் முயற்சிகளில் கவனமும் பேச்சில் நிதானமும் தேவை குறிப்பாக குடும்ப உறவுகள், உயர் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், பெரியோர்கள் இவர்களிடம் வார்த்தைகளை தவறாக பிரயோகித்தல், கோபத்தில் பேசுதல் இவற்றை குறைத்து அமைதியுடன் செயல்பட்டால் இந்த மாதம் நன்மை தரும் மாதம்.

உத்திரம் 2,3,4 பாதங்கள் : சந்திராஷ்டமம் : 10.01.2022 பிற்பகல் 01.08 மணி 11.01.2022 பிற்பகல் 02.43 மணி வரை
ஹஸ்தம்: சந்திராஷ்டமம் : 16.12.2021 காலை 09.29 வரையிலும் & 11.01.2022 பிற்பகல் 02.43 மணி முதல் 12.01.2022 மாலை 04.44 மணி வரை
சித்திரை 1,2 பாதங்கள் : சந்திராஷ்டமம் : 16.12.2021 காலை 09.29 மணி முதல், 17.12.2021 காலை 11.54 மணி வரை & 12.01.2022 மாலை 04.44 மணி முதல் 13.12.21 இரவு 07.03 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : திருவரங்க நாதர், அனந்த சயன பெருமாளை வழிபடுதல் கோயிலில் விளக்கேற்றுதல் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் இவை நன்மை தரும் முடிந்த அளவு தான தர்மம் செய்வது நலம்.


துலாம்:( சித்திரை 3,4 பாதங்கள், ஸ்வாதி 4 பாதம், விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய):

வெற்றிமீது வெற்றிவந்து என்னை சேரும் அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் சூரியனை சேரும் என பாடலாம், தைரியஸ்தானத்தில் அமர்ந்து இருக்கும் சூரியபகவான் உங்களது மனதை தைரியமாகவும், இதுவரை இருந்துவந்த பிரச்சனைகள் சூரியனை கண்ட பனி போல விலகிவிடவும் செய்கிறார். உடல் ஆரோக்கியம் மேம்படும் முயற்சிகளில் வெற்றியும் உண்டாகும். 4ல் ஆட்சியான சனிபகவான், ராசியை 5ல் இருந்து பார்க்கும் குருபகவான், ராசிநாதர் சுக்ரனின் 5, 4 சஞ்சாரங்கள், புதன், செவ்வாய் இவர்களும் அளப்பரிய நன்மைகளை செய்வதால் இந்த மாதம் பொருளாதாரம், பணப்புழக்கம் தாராளம், உத்தியோகம் ஜீவனவகையில் நன்மையும், கடந்தகால முயற்சிகள் கைகூடுதலும் சிலருக்கு திருமணம், குழந்தை பாக்கியம் மற்றும் சிலருக்கு வீடு வாகன யோகங்களும் இந்த மாதம் உண்டாகலாம். தெளிவான நிலை இருக்கிறது அதனால் செயல்பாடுகள் சிறக்கும், பேர் புகழ் அதிகம் ஆகும் கலைத்துறை, அரசியல், மின்சாரம், போக்குவரத்து துறை கல்வித்துறை நல்ல பலனை பெறுவர், இவற்றில் சொந்த தொழில் செய்வோருக்கும் நன்மை அதிகம் இருக்கும். அதே நேரம் 8ல் இருக்கும் ராகு 9ம் இடம் நோக்கி நகர்வது தந்தை வழியில் மருத்துவ செலவுகளையும், வாகன விபத்து போன்றவற்றையும் தரலாம் கவனமுடன் செயல்படுவதும். தாய் தந்தையர் தேவை அறிந்து செயல்படுவதும் ஓரளவு நன்மை தரும். வாழ்க்கை துணைவர் வகையில் சில கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலும் பின் நன்மையாக முடியும் அனுசரித்து போவது நல்லது. குடும்பத்தில் உறவினர் வகையில் இந்தமாதம் சில பிரிவுகள் தவிர்க்க இயலாது. இது கொஞ்சம் வருத்தம் தரும். இருந்தாலும் இந்த மாதம் நன்மைகள் மிக அதிகம்.
சித்திரை 3,4 பாதங்கள்: சந்திராஷ்டமம் : 16.12.2021 காலை 09.29 மணி முதல், 17.12.2021 காலை 11.54 மணி வரை & 12.01.2022 மாலை 04.44 மணி முதல் 19.11.21 இரவு 07.03 மணி வரை
ஸ்வாதி 4 பாதங்கள் : சந்திராஷ்டமம் : 17.12.2021 காலை 11.54 மணி முதல் 18.12.2021 பிற்பகல் 02.26 மணி வரை
விசாகம் 1,2,3 பாதங்கள் : சந்திராஷ்டமம் : 18.12.2021 பிற்பகல் 02.26 மணி முதல், 19.12.21 மாலை 04.58 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : சூரிய வழிபாடு, நரசிம்ம வழிபாடு போன்றவை நன்மை தரும் கோயிலில் விளக்கேற்றுங்கள், கல்வி தானம், வஸ்திர தானமும் அன்னதானம் என்று செய்வதும் நலம் தரும்.

விருச்சிகம்:( விசாகம் 4ம்பாதம், அனுஷம் 4பாதம், கேட்டை 4 பாதங்கள் முடிய):

ராசிநாதர் பலமாய் ஆட்சியில் மேலும் ராசியில் கேதுபகவானோடு 1 டிகிரி இணைவு இருந்தாலும் பெரிய சங்கடங்கள் இல்லை காரணம் இதுவரையிலும் கூட பல துக்கங்களை அனுபவித்து வந்திருப்பதால் இதனால் ஏற்படும் சங்கடங்கள் பெரிய பாதிப்பை தராது. 2ல் இருக்கும் சூரியன் குடும்பத்தில் சில மகிழ்ச்சிகளை உண்டாக்குவார் இருந்தாலும் கடந்தகால குடும்ப வாழ்வில் இருந்த சிக்கல்கள் தொடர்வதால் ஓரளவு பரவாயில்லை என்பதாக அமையும். சுக்ரன் புதன் இவர்கள் அதிக நன்மை செய்கிறார், பணப்புழக்கம் தாராளம், உத்தியோகம், சொந்த தொழில் ஜீவன வகையில் நன்றாக இருக்கும். கல்வி நல்ல நிலை, விவசாய தொழில் நன்மை தரும், போக்குவரத்து, சட்டம், நீதி வாகன உதிரிபாக தொழில்கள், பத்திரிகை துறை மிக நன்மைகள் இருக்கும். பொருளாதாரம் நன்று. அதேநேரம் 7ல் ராகு வாழ்க்கை துணைவர் வகையில் மருத்துவ செலவு, கூட்டாளிகளினால் தொல்லை பண விரயம், 5க்குடைய குரு 4ல் இருப்பது குடும்பம் பிள்ளைகள் வழியில் மன வருத்தம் அதிகரித்தல் என இந்த மாதம் சுமாராக இருக்கிறது. எதிலும் ஒரு நிதானம், பொறுமை முக்கியமாக வார்த்தைகளை விடுவதில் கவனம், எதிர்மறை எண்ணங்களை விட்டுவிடுதல், கோபத்தை கட்டுப்படுத்தல், இயலாமையால் ஏற்படும் எரிச்சல்களை தியானப்பயிற்சிகள் மூலம் நீக்கிவிடலாம். உங்கள் இஷ்ட தெய்வத்தை கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள் அவநம்பிக்கையில் வார்த்தைகளை விடுவது பிற்காலத்தில் பாதிப்பை தரும். பொறுமை நிதானம் அவசியம்.

விசாகம் 4ம் பாதம் : சந்திராஷ்டமம் : 18.12.2021 பிற்பகல் 02.26 மணி முதல், 19.12.21 மாலை 04.58 மணி வரை

அனுஷம் 4பாதங்கள் : சந்திராஷ்டமம் : 19.12.21 மாலை 04.58 மணி முதல் 20.12.21 இரவு 07.23 மணி வரை

கேட்டை 4 பாதங்கள் : சந்திராஷ்டமம் : 20.12.21 இரவு 07.23 மணி முதல் 21.12.21 இரவு 09.31 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : இஷ்ட தெய்வம், குல தெய்வ வழிபாடு மிக சிறந்த ஒன்று. தியானப்பயிற்சிகள் இறைநாமம் பாராயணம் இவை நன்மை தரும் முடிந்த அளவு தர்மம் செய்தல் நலம் தரும்.


தனூர்(மூலம் 4 பாதம், பூராடம் 4 பாதம், உத்திராடம் 1ம் பாதம் முடிய):

ராசிநாதர் குரு 3ல் தைரிய ஸ்தானம், பலமாய் மேலும் 7,9,11ம் இடங்களை பார்ப்பதும் சகல் ஐஸ்வர்யம் திருமணம், உத்தியோகத்தில்/சொந்த தொழிலில் வளர்ச்சி என இருக்கும். அதே போல் புதன் சனி சேர்க்கை குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் கூடும். ராசியில் சுக்ரன் சுப விரயங்கள் பயணங்களால் மகிழ்ச்சி இல்லத்தில் சுப நிகழ்வுகள் என தருகிறார். பொருளாதாரம் பரவாயில்லை. உத்தியோகம், சொந்த தொழில், ஜீவன வகையில் நன்றாக இருக்கும். மாணவர்கள், சட்டம், நீதி துறை, அரசு நிர்வாக துறை வங்கிகள் இரும்பு சம்பந்தப்பட்ட துறைகள், சினிமா, மீடியா, தொலைத்தொடர்பு, ஆடை வடிவமைப்பு இவர்களுக்கு நல்ல நேரம் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் முன்னேறலாம், குரு,சனி,புதன், சுக்ரன் மற்றும் 6ல் இருக்கும் ராகு இவர்கள் அதிக நன்மை தருகின்றனர். அதேநேரம் 9க்குடைய சூரியன் ராசியில் இருந்து பெற்றோர் வழியிலும், தனக்கே கூட உஷ்ணம் தலை,கண், வயறு சம்பந்தப்பட்ட பிரச்சனையால் மருத்துவ செலவுகள் வைக்கும். செவ்வாய் கேது 12ல் இணைவு பெரிய பாதிப்பை தராது ஆனாலும் உறவினர், உற்ற நண்பர்கள் மட்டுமல்லாது உடன் வேலை செய்வோர், தொழிலாளிகள் வகையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு மன வேதனையும் வீண் செலவும் உண்டாகும் கவனம் தேவை பொதுவில் 80% நன்றாக இருக்கு. சமாளித்து விடுவீர்கள்

மூலம் 4 பாதங்கள் சந்திராஷ்டமம் : 21.12.21 இரவு 09.31 மணி முதல் 22.12.21 இரவு 11.16 மணி வரை

பூராடம் 4 பாதங்கள் சந்திராஷ்டமம் : 22.12.21 இரவு 11.16 மணி முதல் 23.12.21 இரவு 12.32 மணி வரை
உத்திராடம் 1ம் பாதம் சந்திராஷ்டமம் : 23.12.21 இரவு 12.32 மணி முதல் 24.12.21 இரவு 01.18 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : மதுரகாளியம்மன், குரு, சித்தர் வழிபாடு போன்றவை கோயிலுக்கு சென்று தாயார் சன்னதிக்க்கு விளக்கேற்றுதல், அம்பாள் ஸ்லோகம் சொல்லுதல், அன்னதானம், ஏழை குழந்தை படிக்க உதவிகள், சரீர ஒத்தாசைகள் இவற்றை செய்ய நலம் உண்டாகும்.

மகரம்:(உத்திராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம் 4 பாதம், அவிட்டம் 1,2 பாதங்கள் முடிய) :

ராசிநாதன் ராசியில் வலுவாய், 2ல் குரு,, 11ல் செவ்வாய் கேதுவுடன் ஆனால் செவ்வாய் பலம், 5ல் ராகுவும் நன்மை தரும் நிலையில், சுக்ரன் புதன் அளப்பறிய நன்மை தருவர். ஆக பொருளாதாரம் மேம்படும், உத்தியோகம்,தொழில் ஜீவன வகையில் முன்னேற்றம் ஏற்படும், சிலருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், வீடுவாகன யோகங்கள் உண்டாகும். குரு 8ம் இடம் பார்ப்பது வலு, ஏற்கனவே வழக்குகள், கெடு சம்பவங்களால் மன உளைச்சல் இருந்தால் இந்த மாதம் அவை தீரும். கேது கொஞ்சம் பொருளாதார தடையை மற்றும், முயற்சிகளில் தேக்கத்தை உண்டாக்கும். ஆனாலும் அனைத்து கிரஹ நிலைகளும் சாதகமாய் இருப்பதால் பெரும் கஷ்டங்கள் ஏதுமில்லை. 12ல் இருக்கும் சூரியன், உட;ல் சோர்வு, உஷ்ணம் தலைவலி போன்றவற்றையும், மன சஞ்சலத்தையும் தருவார் பண விரயம் உண்டாகும். ஆனாலும் 12ல் சுக்ரன் வக்ரியாக அதை சுப விரயமாக மாற்றிவிடுவார். புதன் கல்வியில் சிறக்கவும், எழுத்து, கலை, கணிதம், வங்கி, ஆடிட் போன்ற துறைகளில் இருப்போர்க்கும், பத்திரிக்கை துறையினருக்கும் வளர்ச்சி உண்டாகும் மாதம். குடும்ப அங்கத்தினரிடமும், வெளியிடங்களிலும் பொதுவாக அமைதி காப்பது விட்டுக்கொடுத்து செல்வது, வார்த்தைகளை விடுவதில் கவனம் என்று இருந்தால் இந்த மாதம் பெரும்பாலும் நன்மைகள் மட்டுமே இருக்கும். முயற்சிகளை செய்யும் போது யோசித்து செயல்படுவது அல்லது தகுந்த ஆலோசனை பெற்று செய்வது நல்ல பலனை தரும்.

உத்திராடம் 2,3,4 பாதங்கள் சந்திராஷ்டமம் : 23.12.21 இரவு 12.32 மணி முதல் 24.12.21 இரவு 01.18 மணி வரை
திருவோணம் 4 பாதம் சந்திராஷ்டமம் : 24.12.21 இரவு 01.18 மணி முதல் 25.12.21 இரவு 01.35 மணி வரை
அவிட்டம் 1,2 பாதங்கள் சந்திராஷ்டமம் : 25.12.21 இரவு 01.35 மணி முதல் 26.12.21 இரவு 01.25 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள்: திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர், மணக்குள விநாயகர் வழிபாடு கோயிலில் விளக்கேற்றுதல், ஸ்லோகங்கள் சொல்லுதல் நலம் தரும். முடிந்தவரையில் தான தர்மங்களை செய்வது நல்லது

கும்பம்:( அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம் 4 பாதம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய):

ஜென்ம குரு சிறைவாசம் என்பர் ஆனால் உங்கள் நிலை முழு சுதந்திரம் காரணம் குரு பார்வை 5,7,9 இடங்கள் நன்மை தருவதாக அமையும், திருமணம், குழந்தை பாக்கியம் எல்லாம் கைகூடிவரும் நேரம் இது. மேலும் ராசிநாதன் 12ல் ஆட்சியாய் சுப விரயம், மேலும் லாபத்தில் சூரியன் வருமானம் அதிகரிக்கும் பொருளாதார நிலை மேம்படும். மேலும் செவ்வாய், புதன், சுக்ரன் என மிக அதிக நன்மைகள் விளையும் மாதம் இது, புதிய முயற்சிகள் வெற்றி அடையும், போட்ட திட்டங்கள் புதிய வேலைக்கு முயற்சி, சொந்த தொழில் தொடங்கும் எண்ணம் கல்வியில் மேல்படிப்பு உத்தியோகத்தில் உயர்நிலை என்று நன்றாகவே இருக்கும். சிலருக்கு புதுவீடு குடிபோகும் யோகம் அல்லது புதிய இடமாற்றம் ஏற்படும். வரும் காலங்களில் நல்ல நிலை உண்டாகும் வகையில் ராகு சந்திரன் தவிர அனைத்து கிரஹங்களும் சிறப்பான செயல்பாடுகள் மகிழ்ச்சியை தரும் வகையில் அமைகிறது. ராகு சில உடல் பிரச்சனைகள், தாயார் வழியில் துக்க செய்தி, வாகன பயணத்தில் அடிபடுதல் போன்ற செயல்களை செய்யும் கொஞ்சம் கவனம் தேவை, சமயத்தில் மறதியை தரும். பொதுவில் பெரும்பாலான கிரஹ நிலைகள் சாதகமாய் இருப்பதால் இந்த மாதம் உங்களுக்கு நன்மையான மாதம்.

அவிட்டம் 3,4 பாதங்கள் சந்திராஷ்டமம் : 25.12.21 இரவு 01.35 மணி முதல் 26.12.21 இரவு 01.25 மணி வரை
சதயம் 4 பாதங்கள் சந்திராஷ்டமம் : 26.12.21 இரவு 01.25 மணி முதல் 27.12.21 இரவு 12.47 மணி வரை

பூரட்டாதி 1,2,3 பாதங்கள் சந்திராஷ்டமம் : 27.12.21 இரவு 12.47 மணி முதல் 28.12.21 இரவு 11.50 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் யோக ஹயக்ரீவர், தக்ஷிணாமூர்த்தி, பரமேஸ்வர வழிபாடுகள் நன்மை தரும், நலிந்த கோயில்களில் உழவாரப்பணி, விளக்கேற்றுதல் போன்றவையும் இயன்ற அளவு தான தர்மங்களை செய்வதும் நன்மை உண்டாகும்.

மீனம்:( பூரட்டாதி 4ம்பாதம், உத்திரட்டாதி 4 பாதம், ரேவதி 4 பாதம் முடிய):

ராசிநாதர் குருபகவான் 12ல் சுப செலவுகளை கொடுத்து கொண்டிருக்கிறார். மேலும் லாபத்தில் சனி ஆட்சி, பணவரவு அதிகம். உத்தியோகம், சொந்த தொழில் ஜீவனம் என்று நன்றாகவே இருக்கும். விரும்பிய இடமாற்றம், வேலை மாற்றம் நடக்க வாய்ப்புகள் அதிகம், உற்சாகம் அதிகம் இருக்கும். 9ல் செவ்வாய் ஆட்சி, கேது இருந்தாலும் கெடுதல் இல்லை, இதுவரை தடைபட்டு வந்த தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும், சிலருக்கு திருமணம் கைகூடும். சிலர் புதிய வீடு வாங்குதல் வண்டி வாங்குதல் போன்ற செயல்களில் வெற்றி காண்பர். 6க்குடைய சூரியன் 10ல் வருமானத்தை அதிகரிக்க செய்வார். மாணவர்கள் வெளியூர் வெளிநாட்டு படிப்பு என செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது. தந்தை வகையில் ஆதாயம் உண்டாகும் சிலருக்கு பூர்வ சொத்துகள் வர ஏற்பாடு ஆகும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த வீடு பிரச்சனை முடிவுக்கு வரும். தொழில் விருத்தி அடையும், தேவையான வங்கி கடன் கிடைக்கும். பெரியோர்கள் குருமார்கள் ஆலோசனை ஆசீர்வாதம் கிடைக்கும், புனித யாத்திரை விருந்து கேளிக்கைகளும் இருக்கும். பொதுவில் நன்மை அதிகம் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளவும். அதே நேரம் 9ல் கேது உடல் ரீதியான பாதிப்புகள் தந்தை வழியில் மருத்துவ செலவுகள் போன்றவை, பொருளாதார சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதானமாக செயல்பட்டால்,பெரியோர் ஆலோசனை கேட்டு நடந்தால் இவை தவிர்க்கலாம் பொதுவில் நன்மைகள் சற்று அதிகம் உண்டாகும் மாதம்.

பூரட்டாதி 4ம் பாதம் சந்திராஷ்டமம் : 27.12.21 இரவு 12.47 மணி முதல் 28.12.21 இரவு 11.50 மணி வரை

உத்திரட்டாதி 4 பாதம் சந்திராஷ்டமம் : 28.12.21 இரவு 11.50 மணி முதல் 29.12.21 இரவு 10.35 மணி வரை

ரேவதி 4 பாதம் சந்திராஷ்டமம் : 29.12.21 இரவு 10.35 மணி முதல் 30.12.21 இரவு 09.08 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள்: ஸ்ரீமீனாக்ஷி சமேத சொக்கநாதரை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும். கோயிலில் அம்பாளுக்கு விளக்கேற்றுதல் , முடிந்த அளவு தான தர்மங்களை செய்தல் நன்மை அதிகரிக்க செய்யும்.

அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹச்சாரி(ரவி சாரங்கன்)
ஜோதிடர்,
D1-304, Block D1, Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Land Line : 044-35584922
ஃபோன் நம்பர் : 8056207965 (வாட்ஸப்)
Email ID : mannargudirs1960@hotmail.com

!!ஸுபம்!!

About Author