மன்னிப்பாயா

மன்னிப்பாயா….

“கௌதம்! எங்க போன? இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு! ட்ரெஸ்லாம் எடுத்து வைக்கல. ஊருக்குப் போக வேணாமா? ” அறை நண்பன் தேவா சத்தம் போட்டுக் கொண்டிருந்தான்.

தேவா நிஜமாவே தேவன் தான். கௌதமுக்குப் போதிக்கும் புத்தன்.

“கௌதமுக்கு வேலை கிடைச்சுருச்சா..அதுவும் உள்ளூர்லயே வேலையா..அட!” என சொந்தக்காரர்கள் அவர்கள் பெண்ணுக்காக அவன் வீட்டுக்குப் படையெடுத்ததை பார்த்துப் பயந்து ஒரு மாதம் , ஒரே மாதத்தில் டிரான்ஸ்பர் என்ற பெயரில் ஊரை விட்டு பம்பாய்க்கு வந்தவன் தான் கௌதம். அவனின் பால்ய நண்பன், அவனை விட ஒரு வயது மூத்தவனான தேவாவுடன் அறையெடுத்துத் தங்கிக் கொண்டான். தேவாவுக்கும் இன்னும் திருமணம் ஆக வில்லை.

போன் வந்தது.

கைலாசம் அழைத்திருந்தார். கௌதமின் அப்பா.

“என்னப்பா தேவா! என்ன சொல்றான் என் பையன். இந்தத் தடவையாவது வந்து கல்யாணம் பண்ணி பொண்டாட்டியோட குடித்தனம் நடத்தப் போறானாமா இல்லையாமா? அவனுக்காகப் பார்த்த பொண்ணுங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகிட்டே வருது. என்ன செய்ய? அவன் ராசி அப்படி. இப்பல்லாம் கல்யாண ராசியே இல்லாத பொண்ணைக் கூட கௌதமுக்குன்னு பார்க்க ஆரம்பிச்சிட்டா கல்யாணம் கூடி வரும்ன்னு கூட பேசிக்கறாங்க. சே! வெட்கமா இருக்குப்பா. இப்ப இந்தப் பொண்ணு மாசக் கணக்குல பெரிசு ஆனாலும் ஒரே வயசு தான். இதையும் விட்டுப்புட்டா அவன் ஆம்பள ஔவையார் தான். சொல்லிடு அவங்கிட்ட!” இரைந்தார்.

“இதோ கிளம்பிட்டான்ப்பா! நேர அங்க தான் வரான்!”

“நேர வீட்டுக்கு வேண்டாம்! பொண்ணு வீட்டுக்கே வரச் சொல்லு. என்ன எங்க தெருவுக்கு அடுத்த தெரு தானே! நல்ல நேரம் போறதுக்குள்ள நிச்சயத்த வைச்சிடலாம்!”

விமான நிலையம் வந்தார்கள்.

“டைமாச்சே! வெயிட் பண்ணுமா?” தேவா கேட்டான்.

“பின்ன? இதானே வழி? நீ சொல்லிக் கொடுத்த வழி!’

” உன்னை விட ஒரு மாசம் மூத்ததாம்டா அந்தப் பொண்ணு. வயசு ஒண்ணு தானேன்னு நிச்சயம் பண்றாங்களாம். அதான் அந்த யோசனையைச் சொன்னேன்”

“நீ சொன்ன யோசனையில் நான் என் பங்குக்கும் சேர்த்துக்கிட்டேன்!”

“இதுக்கு நான் பொறுப்பில்லடா! என்னை மாட்டி விட்டுறாதே!”

“சே! சே! உன்னை மாட்டுவேனாடா!” கௌதம் சிரித்துக் கொண்டான்.

“மவனே! நீ சிரிக்கறன்னா ஏதோ விஷயம் இருக்குடா. என்னன்னு தெரிலயே.. எக்குத் தப்பா என்னை உங்கப்பா கிட்ட மாட்டி விடப் போற!”

“ஹா! ஹா! இல்லடா நண்பா! உனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்துட்டேன். அதுக்குத் தான் சிரிச்சேன்.”

“பழிகாரா! மாட்டி விட்டுட்டியேடா! ஹான்..ட்ரெஸ்லாம் எடுக்கலில்ல. என்னால வர முடியாது.”

“எல்லாம் எடுத்து வைச்சாச்சு. தோ! அறிவிப்பு வந்தாச்சு. ஏறலாம் வா!”

இருவரும் ஏறி உட்கார.. நடு சீட்டில் அமர்ந்திருந்த இளம்பெண்..

“ஹாய்! ஐ அம் சுஷ்மா!” என்றாள்.

இறங்கும் போது தேவாவை விட கௌதம் சுஷ்மாவோடு நெருங்கி இருந்தான்.

இறங்கி காரில் பயணித்து வீடு வரும் போது காலை மணி பத்து. நேரே பொண்ணு வீட்டுக்கே கைலாசம் சொன்ன படி போயாகி விட்டது. காரை வாசலில் நிறுத்தி விட்டு.. கௌதம் மட்டும் இறங்கி உள் சென்றான். ஷூ கூட அவிழ்க்க வில்லை. அவிழ்க்க நேரம் இல்லை. உள்ஹாலில் சொந்தக் காரர்கள் குழுமியிருக்க.. கைலாசம் தன் மனைவியுடன் மகன் வருவானா மாட்டானா என்று ஒத்தையா இரட்டையா போட்டுக் கொண்டிருந்தார்.

வராண்டாவில் கௌதமுக்குப் பார்த்திருந்த பெண் அகல்யா இயல்பாக நின்று கொண்டிருந்தாள்.

“என்னம்மா மருமகளே! பொண்ணு பார்த்து நிச்சயம் பண்ற சமயத்துல இப்படி வராண்டாவுல நிக்கற? எம் பையனுக்காகவாக்கும்! அவனைப் பார்த்ததில்லல்ல நீ? போட்டோவும் பார்க்க மாட்டேனுட்ட. சின்ன வயசில் பார்த்த பையனை நானே கண்டுபிடிச்சிடுவேன்னு வீம்பால்ல நிக்கற? வந்துடுவான்! வந்துடுவான்!” கௌதமின் அம்மா ஜன்னல் வழி குரல் கொடுக்க கைலாசமும் சேர்ந்து அகமகிழ்ந்து சிரித்தார்.

பெண் அவரின் தூரத்துச் சொந்தம். வெகு நாளாகத் தொடர்பில்லை. இப்போது தொடர ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. பையன் தான் மனசு வைக்கணும்.

‘தடால்!’ சப்தம் கேட்டது. திகைத்தாள் அகல்யா.

“யாரது? என்னதிது? எழுந்திருங்க!”

“மன்னிச்சிட்டேன்னு சொல்லுங்க அண்ணி!”

“யாருன்னு முதல்ல முகத்தைக் காண்பிங்க!”

“மன்னிச்சிட்டேன்னு சொல்லுங்க அண்ணி!”

“யாருன்னே தெரியாம இப்படி சட்டுன்னு வந்து கால்ல விழுந்தா நான் என்னத்தன்னு நினைக்க? அதுவும் என்னய நிச்சயம் பண்ண மாப்பிள்ளை வர சமயத்துல.. என்ன நாடகம் இது..” அகல்யா சொல்ல அதற்குள் அகல்யாவின் பெற்றோரும், கௌதமின் பெற்றோரும் உள்ளே வர..

மீண்டும் சொன்னான்..

“மன்னிச்சிட்டேன்னு சொல்லுங்க அண்ணி!”

“மூன்றாவது முறை.. அட.. எழுந்திருக்க மாட்டாரு போல. எதுக்குன்னே தெரில.. சரி..போகுது..மன்னிச்சிட்டேன்.. எழுந்துருங்க.” அகல்யா சொன்னதும் எழுந்தவனைப் பார்த்து..

“அட! கௌதமு!” என்றார் கைலாசம்.

“என்னடா இது கூத்து? கால்ல விழுந்துக்கிட்டு..அதுவும் உனக்குப் பார்த்து வைச்சிருக்கற பொண்ணு கால்ல போய்.. சே! சே! மானம் போகுது!”

சட்டெனக் காரில் இருந்தவர்கள் இறங்கி வர..
தடாலடியாக பெற்றோர் காலிலும் விழுந்தான்.. விழுந்தான் அல்ல இப்போது அவன் கூட ஒருவளும்.

“மன்னிச்சிடுங்கப்பா! மன்னிச்சுடுங்கம்மா! இவ தான் என் மனைவி. இல்ல.. இனி தான் மனைவி ஆகணும். நான் ஒரு வருஷமா காதலிக்கிற என் காதலி ..எங்க ஆபீஸ்ல வேலை பார்க்கறா.. சுஷ்மா! இவங்க தான் உன் மாமனார், மாமியார்!”

“அப்ப எம் பொண்ணுக்கு வழி..? அகல்யாவின் அப்பா சத்தம் போட..

” நான் தான் அண்ணின்னுட்டேனே! அப்படின்னா.. எங்க அந்த அண்ணன்னு நீங்க கேட்கணும்.. கேளுங்க இப்போ!” கௌதம் சுஷ்மாவின் கையைக் கோத்தபடி பேசினான்.

“எங்க அந்த அண்ணன்?” அகல்யாவின் அப்பா கேட்டார்.

“இதோ.. எங்க அண்ணன்.. தேவா என்ற தேவராஜன்.. அகல்யா அண்ணியை ஸ்கூல் படிக்கற காலத்துல இருந்து தன் மனசுல பூஜிக்கறவர்.. தேவா என்றால் அண்ணிக்குமே ஸ்பெஷல் தான்… அதை நீங்க அவங்க ரெண்டுபேர்ட்டயும் கேட்டுக்கங்க!”

தேவாவை முன்னே தள்ளி விட்டான்

“இதான் உன் ப்ளானா மாப்பிள்ள?’ சிரித்தபடியே முன் நின்றான் தேவா

“அகல்யா கால்ல விழுந்த நேரம் எம் பையனுக்கும் கல்யாண யோகம் வந்தாச்சு! ” கௌதமின் அப்பா கைலாசம் சொல்ல..

எனக்கும் கல்யாணமாகணுமே.. அப்ப நானும் விழுந்தடவா? அகல்யாவைப் பார்த்துக் குறும்பாகக் கேட்டான் தேவா.

“அது உங்க வசதி மாப்பிள்ள! அறைக்குள்ளன்னா ஆட்கள் இருக்க மாட்டோம்..”

ஜோடிகள் சிரித்தனர்.

சுபம்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.