புனிறு தீர் பொழுது – 3

This entry is part 3 of 5 in the series Postpartum depression

பெண்களில் மனச்சோர்வு ஏன் அதிகமாக உள்ளது?

ஏன் என்பதை புரிந்து கொள்ள முதலில் மனச்சோர்வைப் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கடினமான காலங்களை கடந்து செல்வது எவ்வளவு கஷ்டமானது என்பது கிட்டத்தட்ட நம் அனைவருக்கும் தெரியும்.

பெரும்பாலும் கட்டுப்படுத்த முடியாத எதிர்மறை உணர்வுகளோடும், நம்பிக்கையிழந்தவர்களாக, எதிலும் நாட்டமில்லாமல், செய்யும் வேலைகளில் ஆர்வமில்லாது உணர்ந்தால், ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

உதாரணத்துக்கு டியர் காம்ரேட் என்ற ஒரு திரைப்படம். அதில் தொழில்முறை சிக்கலில் மாட்டிக்கொண்டு கதாநாயகி மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவார். அமைதியாக ஒதுங்கி இருப்பதன் மூலம் அதை சரி செய்து விடமுடியும் என்று நம்புவார். நாயகன் உறவுச் சிக்கல் மற்றும் தாத்தாவின் மரணத்தால் ஏற்பட்ட மனஅழுத்தத்தை சமாளிக்க சூழலில் இருந்து escape ஆகி பறவைகள் குரல்களை பதிந்து, ஊர் ஊராக நாடோடி போல சுற்றுவது என்று அலைவார். இப்படியெல்லாம் ஊரைச்சுற்றி தீர்த்துவிட மனச்சோர்வு என்பது “ப்ளூஸ்” மட்டுமல்ல. தன் சொந்த முயற்சியில் சரியாகி விடக்கூடிய ஒன்றல்ல. எந்த ஊருக்குப் போனாலும் மண்டை பத்திரமாக உங்களோடு தானே இருக்கும். பிரச்சினை மண்டையில் தானே.

இதை சுலபமாக புரிந்து கொள்ள பெண்களின் மாதவிடாய் சுழற்சியின் போது அவள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மாதவிடாய் சுழற்சியின் போது ஈஸ்ட்ரோஜன் அளவு இரண்டு முறை உயரும், குறையும். mid-follicular கட்டத்தில், அதாவது மாதவிடாய் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஈஸ்ட்ரோஜன் அளவுகள் அதிகரித்து, ovulation / கருமுட்டை வெளியிட்ட பின்னர் அதிவேகமாகக் குறையும். இது முதல் முறை.

இதைத் தொடர்ந்து, மாதவிடாய் சுழற்சியின் முடிவில் குறைவதோடு, இது கருமுட்டை வெளியிட்ட பின்னரும் மாதவிடாய் தொடங்கும் முன்னும் ஏற்படும். இந்த நேரத்தில், கருப்பையின் lining (uterus lining) கர்ப்பத்திற்கு தயாராகும் வகையில் தடிமனாக இருக்கும். இந்தக் கட்டத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் இரண்டாம் முறை உயர்கிறது.

மாதவிடாய் சுழற்சியில் 10 முதல் 17 வரை ஈஸ்ட்ரோஜனின் உச்சநிலையால் தொடர்ச்சியான ஹார்மோன் மாற்றங்கள் எல்லா நாளிலும் நிகழ்கிறது.

பெண்களுக்கேயான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மனச்சோர்வுடன் தொடர்புடையது.  பெண்களில் மனஉளைச்சல் (2வது கட்டம் மனஅழுத்தம், 3வது கட்டம் மனச்சோர்வு) பாதிப்பின் தொடக்கமானது அவர்களின் இனப்பெருக்க ஆண்டுகளுடன் (14 முதல் 44 வயது வரை) ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகியவை நியூரோட்ரான்ஸ்மிட்டர், நியூரோஎண்டோகிரைன் மற்றும் சர்க்காடியன் அமைப்புகளை பாதிக்கின்றன.

ஏற்கனவே ஹார்மோன் பாதிப்புகள், ஏற்கனவே பரம்பரை நோய் பாதிப்பு வரலாறு இருக்கும் பட்சத்தில் அப்பெண் அவளுக்கு இருக்கும் கல்வி, தொழில், மற்றும் சமூக உறவுகள் போன்ற புற அழுத்தங்களைப் (environmental stressors) பொறுத்து அதிகரிக்கும்.

இதை சுலபமாகப் புரிந்து கொள்ள, ஒரு உதாரணம் சொல்கிறேன். ஏற்கனவே ஒரு கோப்பை பாதி நிரம்பி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதாவது குடும்பத்தில் ரத்த சம்பந்தம் உடைய ஒருவருக்கு நோய் பாதிப்பு ஏற்கனவே இருக்கிறது (தாய்வழி / தந்தைவழி) என்று வைத்துக் கொள்வோம். இது பாதி நிரம்பிய கோப்பை.

சூழ்நிலை அழுத்தங்கள் அந்தக் கோப்பையை நிரப்பும். சூழ்நிலை அழுத்தங்கள் மேலும் மேலும் அதிகமாக ஆகும் போது கோப்பை நிரம்பி வழியும். இது spill-over. இந்த spill over தான் மனஅழுத்தம் மனச்சோர்வாக மாறும் கட்டம். இதை நாம் தெளிவாக புரிந்து கொண்டால் prevention is possible.

ஏற்கனவே பரம்பரை பாதிப்பு இருக்கும் பட்சத்தில், சூழலும் அவளுக்கு பதற்றம் நிறைந்ததாக அமையும் போது,  பருவமடையும் பெண் மன அழுத்தத்திற்கு ஆளாகிறாள்.  மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை நிகழ்வுகளின் விளைவாக மிகவும் சிக்கலான தேவையற்ற பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

உணரப்பட்ட சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் மனச்சோர்வு யாரையும் பாதிக்கலாம். ஒவ்வொரு நபருக்கும் அவர்தம் தனிப்பட்ட காரணிகள் மற்றும் அறிகுறிகள் இருந்தாலும், மூளை வேதியியல் மாற்றங்கள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மரபணு காரணிகள் பெரும்பாலும் பொதுவானதாகவே இருக்கின்றது.

சமூக பாலின வேறுபாடுகள் மனச்சோர்வின் விகிதங்களிலும் ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும். 13-25 வயது வரை பெண்கள் பொதுவாக மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பவராகவும், நட்பு பாராட்டுபவராகவும், உணர்திறன் உடையவர்களாகவும் இருக்கிறார்கள். அதே சமயம் அதே வயதுடைய ஆண்களோ தங்கள் வாழ்க்கையில் தன்னிச்சையாக நடக்கவும் மற்றும் சுதந்திரமாக இருக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். அதேபோல, ஸ்டோய்ஸிசம் (ஞானம், நீதி, வீரம் மற்றும் நிதானம் போன்ற திறன்கள்), தைரியம் மற்றும் உணர்ச்சிகளை உள்ளபடி அப்படியே வெளிக்காட்டுவது போன்ற சமூகத் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் பெண்ணுக்கு உரியதாகக் கருதப்படும் எதையும் தவிர்ப்பது போன்ற விதிமுறைகளை வலியுறுத்துகிறது.

இல்லத்தரசிகளாகவும் தாயாகவும் மாறும் பெண்களைப் பொறுத்தவரை சமூகத்தில் அவர்கள் பங்களிப்புக்கள் மதிக்கப்படாமலே போய்விடுகிறது என்பது ஒரு பின்னடைவாகவே இருக்கிறது. இதற்கிடையில், வீட்டிற்கு வெளியே ஒரு வேலையை/தொழிலைத் தொடரும் பெண்கள் பாலினப் பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையை எதிர்கொள்ளலாம். அதோடு மனைவி மற்றும் தாயாக குடும்பத்தில் அவர்களின் பங்கு மற்றும் அவர்களின் தொழில் ஆகியவற்றுக்கு இடையே ஓயாத அல்லாட்டத்தை உணர்கிறார்கள் என்பதும் கவனிக்கவேண்டிய ஒன்று.

பங்களிப்பு vs நன்மைகள் என்ற பார்வையில் குடும்பம் மற்றும் தொழிற் சூழல்கள் இரண்டுமே பெண்களை விட ஆண்களுக்கு பயனளிக்கிற ஒன்றாகவே இருக்கிறது. இது பெண்களில் மனச்சோர்வு அதிகரிக்க ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

பெண் மனநிலை மற்றும் பாலின ஹார்மோன்களுக்கு இடையிலான தொடர்பையும் தெளிவாகக் காட்டுகிறது.

அப்போது மாதவிடாய் நின்று போகும் மெனோபாஸ் என்பது ஒரு பெண்ணின் பிரச்சினைகளில் இருந்து விடுதலையா?  அதுவும் கிடையாது. ஒரு பெண்ணின் மனச்சோர்வுக்குப் பங்களிக்கும் பிற ஹார்மோன் காரணிகளான ஹைபோதாலமிக்-பிட்யூட்டரி-அட்ரீனல் (HPA) ஆக்சிஸ் மற்றும் தைராய்டு செயல்பாடு தொடர்பான வேறுபாடுகள் ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டால் அதிகமாகும். பெரி-மெனோபாஸ் என்பது தீவிர மனச்சோர்வின் வரலாற்றைக் கொண்டவர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் காலமாகும்.  பெரிமெனோபாஸ் என்பது மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் மாற்றம். பெண்களுக்கு வெவ்வேறு வயதுகளில் பெரிமெனோபாஸ் தொடங்குகிறது. சிலருக்கு 40களில் மாதவிடாய் ஒழுங்கற்ற தன்மை, அதிக ரத்தப்போக்கு, 5-6 நாட்களுக்கும் மேல் தொடரும் ரத்தப்போக்கு, போன்ற அறிகுறிகளை கவனிக்கலாம். இது தவிர மன உளைச்சல், தூக்கமின்மை, எரிச்சலான உணர்வு, உடல் உறவில் நாட்டம் குறைவது, அதிக வியர்வை, படபடப்பு, தலைவலி, யோனி வறட்சி, அவ்வறட்சியால் ஏற்படும் புண்கள் மற்றும் வலிமிகுந்த உடலுறவு போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம்.

மாதவிடாய் சுழற்சியின் தொடக்கத்திற்கு முன் ஏற்படும் மனச்சோர்வு அறிகுறிகள் அதாவது ப்ரீ மென்ஸ்டூரல் டிஸ்ஃபோரிக் டிஸார்டர் (PMDD), பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வு (PPD),  மற்றும் மாதவிடாய் நின்றபின் மனச்சோர்வு (PMD) மற்றும் பதட்டம் உள்ளிட்ட உளவியல் நோய்களின் குறிப்பிட்ட வடிவங்களை பெண்கள் அனுபவிக்கின்றனர், அவை கருப்பை ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையவையாகவும் இருப்பினும், அடிப்படை காரணங்கள் ஏதும் தெளிவாக இல்லை; எனவே, பெண்களுக்கு என்று குறிப்பிட்ட சிகிச்சைகள் இதுவரை உருவாக்கப்படவில்லை.

அப்படியென்றால் எப்படி சமாளிப்பது? பெண்கள் பிரச்சினைகளைச் சரிசெய்யும் திறன் கொண்ட ஒரு மேஜிக் பட்டன் இருக்கிறதா?

Series Navigation<< புனிறு தீர் பொழுது – 2புனிறு தீர் பொழுது – 4 >>

About Author