- புனிறு தீர் பொழுது -1
- புனிறு தீர் பொழுது – 2
- புனிறு தீர் பொழுது – 5
- புனிறு தீர் பொழுது – 3
- புனிறு தீர் பொழுது – 4
பிறப்புக்கு முந்தைய கர்ப்பகாலம் மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய காலங்களில் மிகவும் பொதுவான ரீதியில் உளவியல் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவ்வுளவியல் சிக்கல்கள் பல்வேறு தீவிரத்தன்மை மற்றும் பலவகையான அறிகுறிகளுடன் இருக்கின்றன.
மனநல கோளாறுகளின் அறிகுறிகளுக்கு தெளிவான காரணங்கள் எதுவும் இல்லை. மகப்பேற்றுக்கு பிறகான மனநல கோளாறு இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில், பெண்களிடையே பாலின அடிப்படையிலானதாகவும், குடும்ப வரலாற்றில் பரம்பரை நோயாக மனநல நோய்கள் இருந்து வந்திருப்பின் அதிகமாக ஏற்படுகிறது. திட்டமிடப்படாத கர்ப்பம், டீனேஜ் கர்ப்பம், திருமணம் ஆகாமல் கர்ப்பமானது, கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்திற்குப் பின் கணவர் மரணமடைதல்/பிரிதல், கணவர் அல்லாத மற்றவர்களோடு உடல் உறவு வைத்திருத்தல், குறைவான அல்லது போதுமான கல்வியறிவு இல்லாத தாய்மார்கள், புகைபிடிக்கும் / மதுவருந்தும் பழக்கம் உள்ள பெண்கள், பொருளாதாரத் சிக்கல்கள், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை நிகழ்வுகள், குழந்தை பராமரிப்பு தொடர்பான மன அழுத்தங்கள் தைராய்டு கோளாறு, குறைந்த எடையுடன் குழந்தை மற்றும் பிறவி குறைபாடுள்ள குழந்தை பிறந்த தாய்மார்கள் போன்ற பல்வேறு காரணிகளால் பாதிப்படையும் மரபணு பாதிப்பு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றின் கலவையால் ஏற்படலாம்.
மிகவும் பொதுவான மனநலப் பிரச்சனைகளில் ஒன்று பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு ஆகும். முதல் குழந்தை பிறந்த முதல் வருடத்தில் முதல் சில வாரங்களில் ஏற்படுகிறது. கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள் கர்ப்ப காலத்தில் முதலில் மனச்சோர்வடைவார்கள்.
மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு மேற்கத்திய சமூகங்களில் உள்ள அனைத்து தாய்மார்களிலும் தோராயமாக இந்தியப் பெண்களில் 23% என சமீபத்திய தொற்றுநோயியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா காலகட்டத்தில் பதிவாகியுள்ள மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வின் காரணம் 34 சதவீதம் பெண் குழந்தை பிறப்போடு தொடர்புடையது என்று அறியத் தருகிறது.
பல ஆய்வுகள் நீண்டகால, கடுமையான மனச்சோர்வு அப்பெண்களின் சமூக உறவுகள், குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கத்தை ஆவணப்படுத்தியுள்ளன. இதன் காரணமாக அதிக விவாகரத்து விகிதங்கள், குழந்தையுடன் அதிக பிணைப்பு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் அப்பெண், அவள் குடும்பம் பாதிப்படைவது மட்டும் அவளுக்கு பிறந்த குழந்தைகளிடையே உடல் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியைக் குறைக்கிறது.
என்னோடு பணியில் இருந்த 50 வயதுப் பெண்மணி ஒருவர், சிறந்த தலைமைப் பண்புகள் உடையவர். முக பக்கவாத பாதிப்பு உடையவர். இது அவர் இரண்டு வயதுக்கு குழந்தையாய் இருந்த போது அவரது அம்மா அடித்ததால் ஏற்பட்ட பாதிப்பு. இதனால் அவருக்கு அவருடைய அம்மா மீது தீராத ஆனால் வெளிப்படுத்த முடியாத வன்மமும், கோபமும் உண்டு. முக பக்கவாதத்தால் பேசும் போது அவரது வாய் இடது புறமாய் இழுத்துக்கொள்ளும். ஆனால் புதிதாகப் பார்ப்பவருக்கு (அல்லது) இந்த விஷயம் தெரியாதவருக்கு அதை கவனிக்கத் தோன்றாது. ஆனால், அப்பெண்மணியோ அவர் உரையாடும் போதும், மேடைப் பேச்சின் போதும் மிகவும் பதட்டமாய் இருப்பார். அவர் தாய்க்கு PPD.
23 வயது பெண், அவள் தாய்க்கு self harming / self injurious behaviour symptoms கொண்ட PPD. பிறந்ததில் இருந்து 15 வருடங்கள் தாயைப் பிரிந்தே வளர்த்திருக்கிறாள். அவள் பருவம் எய்திய போது தாய் அவளோடு இருக்கவில்லை. 23 வயதிலும் அவளுக்கு தன் உணர்வுகளை சரியான விதத்தில் வெளிப்படுத்தத் தெரியவில்லை, அதிக மகிழ்ச்சி அல்லது துக்கம் ஏற்படும் போது கார்ட்டூன் காரெக்டர்கள் (டோரேமான், மிக்கி மவுஸ் போன்றவை) போல குரல் எழுப்புகிறாள். அவளால் யாரையும் நம்ப முடியாத trust issues இருக்கிறது. யாராவது வேலை சொன்னால், சோர்வாக இருந்தாலும் கூட அதை செய்கிறாள் – அமைதியாக. உரத்த குரலில் பேசினால் பயப்படுகிறாள்.
ஒரு உதாரணத்துக்குத் தான் சொல்லி இருக்கிறேன். தாயின் PPD பாதிப்பு, குழந்தைகளுக்கு ஒரு ஸ்பெக்ட்ரம் போன்ற பலவகைப்பட்ட மனநல பாதிப்பை உண்டாக்கும்.
தாய்வழி மனநலப் பிரச்சனைகள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல; இது குறைவான உணர்திறன் கொண்ட குழந்தைகளின் நடத்தை பிரச்சனைகளோடு தொடர்புடையதாக இருக்கிறது. பிறந்த குழந்தைகளுக்கும் அவர்களின் தாய், மற்றும் முதன்மை பராமரிப்பாளர்களுக்கும் இடையிலான அன்றாட தொடர்புகள் குழந்தைப் பருவம் முழுவதும் நரம்பியல், அறிவாற்றல், உணர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சியை பாதிக்கின்றன.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியில் தாய்வழி மனநலக் கோளாறுகளின் எதிர்மறையான விளைவுகள் வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீண்டகால சமூகத் துன்பங்களின் காரணமாக உள்ளன என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. குறைந்த வருமானம் கொண்ட சமூக அமைப்புகளில், தாய்வழி மனச்சோர்வு குறைந்த பிறப்பு எடை மற்றும் முதல் வருடத்தில் ஊட்டச்சத்து குறைவாக இருப்பது, அதிக வயிற்றுப்போக்கு நோய்கள், குறைவான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி குறைபாடு ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்புடையதாக இருக்கின்றது.
அதிக வருமானம் கொண்ட நாடுகளில், பிரசவத்திற்குப் பின் வழக்கமான கவனிப்புடன் உளவியல் ஆலோசனைகள் மனச்சோர்வைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை சான்றுகள் காட்டுகின்றன.
அதேபோல, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருந்தாலும் கூட, இந்தியாவில் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு, நீண்ட நாட்கள் தொடர்ந்து தாய்ப்பாலூட்டுதல், குழந்தை பராமரிப்பில் குடும்ப ஆதரவின் மூலம் சிக்கல் தீர்க்கும் திறன் மற்றும் குழு உளவியல் நுட்பங்கள் இந்திய குடும்ப அமைப்பில் மிகவும் பயனுள்ளதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கின்றன.
இந்தியாவின் பெரும்பாலான இடங்களில், பெண்கள் பிரசவங்கள் பொதுவானதாக இருக்கும் கூட்டுக் குடும்பங்களிலும், நெரிசலான இடங்களில் வசிக்கும் குடும்பங்களிலும், ஒட்டுமொத்த குடும்பம் மற்றும் சமூகம் சம்பந்தப்பட்ட தலையீடுகள் அதிகமிருக்கும் பெண்களுக்கு, இப்படிப்பட்ட சூழ்நிலைகள் மனஅழுத்தத்தைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று தெரியவருகிறது.
பல தலைமுறைகளாக கூட்டுக் குடும்பங்களில் பெண்கள் வாழும் அமைப்புகளில், இந்த அணுகுமுறை புதிய குழந்தை மற்றும் தாயைப் பராமரிக்கும் பொதுவான முயற்சியில் முழு குடும்பத்தையும் ஈடுபடுத்துவதை சாத்தியமாக்கும்.
ஆனால் அதே சமயம் மனநோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களைப் பராமரிப்பதற்கான ஒரு மாதிரியை உருவாக்க நாம் ஒரு சமூகமாய் ஒன்றுபட்டு முன்னெடுக்க வேண்டும். இதில் குடும்பம் தவிர, மகப்பேறு மருத்துவர், மனநல நிபுணர், மற்றும் சமூக நலப் பணியாளர்/செவிலியர்கள்/பயிற்சி பெற்ற மருத்துவச்சிகள் அல்லது ஆயாக்கள் ஆகியோரைக் கொண்ட தாய்-சேய் பராமரிப்பில் கவனம் செலுத்தும் குழுவை உள்ளடக்கி ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தி அதை சமூகத்திற்கு அணுகக்கூடிய வகையில் உத்திகள் பரிசீலிக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.
குழந்தை பிறப்பதற்கு முன்பும், பிறக்கும் போதும், பின்பும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதுகாப்பாக உணர்வது ஒவ்வொரு பெண்ணின் உரிமை. மனநல நிபுணர்கள், மகப்பேறியல் நிபுணர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் நிரல் திட்டமிடுபவர்கள் தங்கள் நாட்டிற்கு அல்லது உள்ளூர் சமூகத்திற்கு ஏற்ற மலிவு விலையில் உத்திகளைத் திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் கூடுதல் பொறுப்பு ஏற்று பாதுகாப்பான தாய்மை மற்றும் குழந்தை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் கலாச்சார ரீதியாக நல்ல நடைமுறைகளை உருவாக்கி பரிந்துரைப்பது அவசியம்.
தொடரும்