மராட்டியர்களின் பண்டிகை கொண்டாட்டங்கள் பற்றி சொல்லியே ஆகவேண்டும் முக்கிய பண்டிகை கணேஷா. அதாவது விநாயகர் சதுர்த்தியை தான் இப்படி அழைக்கிறார்கள். எல்லா மதத்தினரும் எல்லா பண்டிகைகளையும் உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்.
விநாயகர் மும்பையின் காவல் தெய்வம் . மும்பைச்சா ராஜா .அது மட்டுமல்ல, அவர் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு தெருவிலும், நகரின் ஒவ்வொரு பகுதிக்கும் ராஜா. மாஹிம்ச்சா ராஜா,அந்தேரிச்சா ராஜா லால்பாக்ச்சா ராஜா இப்படி பல பெயர் இவருக்கு. இவர்களில் ரொம்ப பணக்காரர் லால்பாக்ச்சா ராஜா. வரிசையில் நின்று இவரை தரிசனம் செய்ய குறைந்தது 16 மணி நேரமாவது ஆகும் .மக்கள் நிற்பார்கள் பக்தியோடு.அவ்வளவு அன்பு அவர்மீது. பணிநிமித்தம் எனக்கும் தொடர்ந்து பல வருடங்கள் இவரது தரிசனம் பெற வாய்ப்பு கிடைத்தது பெரும்பாக்கியம் என்றே நினைக்கிறேன் நாம் நின்றபடி அவரது கால் கட்டை விரலின் மீது கொட்டப்பட்டிருக்கும் குங்கும மலையை பார்க்கலாம் அப்படி என்றால் அவர் எவ்வளவு உயரம் இருப்பார் என்பதை உங்கள் ஊகத்திற்கு விட்டுவிடுகிறேன். தத்தம் வீடுகளில் விநாயகரை அமர்த்தி வழிபடுபவர்கள், ஒன்றரை நாள், ஐந்து நாள், 11 நாள் என விநாயகரை அமர வைத்து வழிபடுவார்கள்.
ஊரே திருவிழா கோலம் பூண்டிருக்கும்.பெண்கள் “நவ்வாரி” என்கிற கொசுவம் வைத்த, மராட்டி ஸ்டைல் புதுப் புடவையும், தலையில் ஜிகினா பேப்பர் மினுங்கும் “வேணி” என்கிற பூச்சரமும் மூக்கில் மஹாராஷ்டிரப் பெண்களின் முத்திரையான நத்து புல்லாக்கையும் அணிந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு மஞ்சள் குங்குமம் பெற்றுக்கொள்ள போய்க் கொண்டிருப்பார்கள் ஊரே காற்றில் மிதப்பது போல தோற்றமளிக்கும்.
விநாயகர் பந்தல்கள் ஆங்காங்கே விதவிதமான தீம்களில் அமைப்பதும் பார்க்க சுவாரசியமாக இருக்கும். அந்தந்த சூழலுக்கு தகுந்தவாறு, அமுல் விளம்பரம் போல பந்தல்கள் அமைத்து கொண்டாடுவார்கள். தினமும் மாலையில் இசை நிகழ்ச்சிகளும் குழந்தைகளின் வகைவகையான நிகழ்ச்சிகளும் நடக்கும். குழந்தைகளுக்குப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவார்கள்
விநாயகரை அழைத்துவரும் வண்டியின் முன்பாக ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் களி நடனம் புரிந்த படி வருவார்கள் அதுபோலவே அவரை கடலில் கரைக்கும் போதும் அதே உற்சாகம் குறையாமல் ஆடுவார்கள். “கணபதி பாப்பா மோரியா அடுத்த வருஷம் திரும்பி வா” என்கிற கோஷங்கள் விண்ணைப் பிளக்கும் லால்பாக்ச்சா ராஜா பதினைந்து நாட்கள் தங்கிவிட்டு புறப்படும் நாளன்று கண்டிப்பாக மழை பெய்யும் பள்ளிகளுக்கும் அலுவலகங்களுக்கும் அன்று அரைநாள் விடுமுறை.
20 லிருந்து 24 மணி நேரம் கூட சில சமயம் ஆகிவிடும் லால்பாக்ச்சா ராஜா சமுத்திரத்தை சென்றடைய.அவரை கடலில் அமிழ்த்தி வழி அனுப்பிவிட்டு வருகையில் மனதில் இனம்புரியாத பாரம் இருக்கும். போடப்பட்ட பந்தல்கள், அலங்கார வளைவுகள், வண்ண விளக்குகள், பூந்தொட்டிகள் எல்லாம் மறுபடி தத்தம் பெட்டிகளுக்குள் அடங்கிவிடும் அடுத்த வருஷக் கொண்டாட்டத்தை எதிர்பார்த்தபடி. வாழ்க்கையும் இப்படித்தானே ,பிரிவதும் மறுபடி கூடுவதுமாய்.
கணேஷா பண்டிகையைப் பற்றி ஒரு தனிக் கட்டுரையே எழுதலாம் அவ்வளவு விஷயம் இருக்கு.
இன்னும் வரும்.
இந்தக் கட்டுரையே கணேஷா பண்டிகை பற்றியது தானே? இன்னொன்றா? 😁
சுவாரசியமான விவரங்கள்.