கணபதியை ஸ்தாபனம் செய்யும் போதும், அதாவது அவரை வரவேற்று அழைக்கும் போதும், விசர்ஜனம் செய்யும் போதும் அதாவது கடலில் அல்லது நீர்நிலைகளில் கரைக்கும் போதும், டோல் தாஷா என்கிற பாரம்பரிய இசைக்கருவியை பயன்படுத்துகிறார்கள்.
இந்த டோல் தாஷா பொதுவாக மூன்று வகைப்படும் . புணேரி டோல் – நகர்ப்புற இசை வடிவம். இதில் 5 அடிப்படை வகைகளில் விரல்களை உபயோகப்படுத்துவார்கள். இருபுறமும் தோலால் மூடப்பட்ட பெரிய பெரிய டோல்கள். அடுத்தது நாசிக்கீ டோல் . இது ஃப்ரீஸ்டைல் என்கிற எந்த ஒழுங்கையும் பின்பற்றாமல் வாசிக்கும் வகை. இந்த ஸ்டைல் டோல்கள் சிறியனவாக இருக்கும். பைபர் கிளாஸை உபயோகப்படுத்தி செய்யப்பட்டிருக்கும். மூன்றாவது மாவல் ஸ்டைல் இதுவும் கிராமப்புற இசை வடிவத்தை பின்பற்றிய வாணி.
டோல்கள் பெரும்பாலும் 21, 23 ,25 அல்லது 28 இன்ச் சைஸ்களில் அமைந்திருக்கும். வாசிப்பவரின் உயரத்திற்கு ஏற்ப இவை அவரது இடுப்போடு பிணைத்துக் கட்டப்பட்டிருக்கும். டோலை வாசிக்க முக்கிய தேவை உடல் பலம் மட்டுமே.
ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த டோல் தாஷாவை உபயோகிக்கும் பழக்கத்தை மராட்டியர்கள் கடைபிடித்து வருகிறார்கள். முன்பெல்லாம் புனே மற்றும் அதை அடுத்த கோலாப்பூர், சத்தாரா, சாங்லி போன்ற இடங்களிலிருந்து கூட்டம் கூட்டமாக ஒரு மாதத்திற்கு முன்பாகவே டோல் வாசிப்பவர்கள் மும்பையை நோக்கி வந்துவிடுவார்கள். இப்போது மும்பை காரர்களே தமக்கென டோல் வாசிக்கும் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் அடங்கிய குழுக்கள் அமைத்து வாசித்து வருகிறார்கள். இதற்கென ஒருமாதம் முன்பிலிருந்தே பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். டோல் வாசிக்க உடல் மற்றும் மன உறுதியோடு அர்ப்பணிப்பு மனப்பான்மையும் தேவை. கனமான தவில் போன்ற இசைக்கருவியை இடுப்போடு இணைத்து கட்டி கொண்டு தாளம் தவறாமல் வாசிப்பது, பார்க்க எளிதாகத் தோன்றினாலும் மிகவும் கடினமான ஒன்றாகும். இந்த இசை மேலுள்ள காதலின் பொருட்டு, இப்போதெல்லாம் பலரும் இந்தக் கருவியை வாசிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள். ஐடி துறையை சேர்ந்தவர்கள், கல்லூரி மாணவ மாணவியர் படம் எடுப்பவர் என்று பல துறையைச் சேர்ந்தவர்கள் விருப்பத்தோடு இணைகிறார்கள். கிட்டத்தட்ட ஒருமாத காலம், தினமும் மூன்று மணி நேரம் பயிற்சி செய்கிறார்கள்.
பெண்களும் சம அளவு பங்கேற்கிறார்கள். முழுக்க முழுக்க பெண்களால் ஆன குழுக்களும் இருக்கின்றன. வெள்ளை நிற குர்தா சுடிதார் அணிந்து காவி நிற தலைப்பாகையுடன் பெண்கள் உற்சாகமாக வாசிப்பதை காண்பதே பேரின்பம் இப்போது ஆண்களைவிட பெண்களே அதிகம் பயிற்சி பெற்று டோல் வாசிக்க வருகிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி.
மேலோட்டமாக பார்க்கும்போது, சந்தோஷமாகவும் துள்ளலுடன் இசைப்பது போல் இருந்தாலும் இவர்களும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். முக்கியமாக பயிற்சி செய்ய இடம். நான் அலுவலகத்திற்கு திரும்பும்போது இவர்கள் நடைபாதையில் அல்லது டிராபிக் சர்க்கிளில் வாசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். 90 டெசிபலுக்கு கீழே வாசிக்கவேண்டிய நிர்பந்தமும் இவர்கள் சந்திக்கும் ஒன்று.
எது எப்படியோ, புணே டோலோ, நாசிக் டோலோ அல்லது மாவல் டோலோ,கீழிருந்து ஆரம்பித்து வேகம் பிடித்து உச்சம் தொட்டு மறுபடியும் கீழே இறங்கும் போது உங்கள் ரோம கால்கள் குத்திட்டு நிற்கும். நாடி நரம்பெல்லாம் புது ரத்தம் பாய்வது போல இருக்கும். சந்தேகம் இருந்தால் கீழே கொடுத்துள்ள வீடியோவைப் பாருங்கள். நான் சொல்வது உண்மைதானென ஒப்புக் கொள்வீர்கள்.
இன்னும் வரும்.
நல்ல சரளமான நடை. தொடர்ந்து படிக்கிறேன் என்றாலும் கருத்துச் சொல்ல வர முடியலை!:( பாதி நேரம் இணையம் படுத்தல், மின்சாரம் படுத்தல்! 😦 முகநூல் மூலமே வர வேண்டி இருக்கு. 🙂
கருத்து வரலை. மாடரேஷன் இருக்கா என்ன/
ஆமாம். மாடரேஷன் வைக்காட்டி ஸ்பாம் கமெண்ட்ஸ் ஜாஸ்தி ஆகுது
நுணுக்கமான விவரங்கள். துள்ளிசை.