விநாயகர் சதுர்த்தி மட்டுமல்லாது சின்ன ஊர்களில் கூட “தஹி ஹண்டி” எனப்படும் நம்ம ஊர் உறியடி, ஹோலி கோலாகலங்கள்,தசரா, மராட்டி புது வருஷம் ஆன “குடி படுவா” போன்ற எல்லா பண்டிகைகளையும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.
மராட்டி மொழி கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. மராட்டி சானலில் செய்திகள், சீரியல்கள், படங்கள் பார்த்ததின் மூலம் மொழி முழுமையாக வசப் படாவிட்டாலும், மராட்டியில் பேசினால் ஹிந்தியில் பதில் சொல்லி சமாளிக்கிற அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டது. நம்ம பக்கம் சென்னை, மதுரை, கோவை,திருநெல்வேலி பேச்சுத்தமிழில் வித்தியாசம் இருப்பதுபோலவே, மராட்டியிலும் பேச்சு மொழியில் வித்தியாசம் இருந்தது . கடைத்தெருவில் ஒருவர் பேசுகிற பேச்சு மொழியை வைத்து, அவர் இந்த ஊர்காரரா என கேட்டுத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது. இதனால் பல ஆதாயங்களும் உண்டாயின. எதிராளியின், கண்ணுக்கு தெரியாத ஒரு நரம்பை அசைத்து பார்க்க முடிந்தது. கிராமப்புற பேச்சு வழக்கிற்கும் நகர்புற பேச்சு வழக்கிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன.
மாநிலத்தின் கடைக்கோடி கிராமம் வரை அரசியல் விரிந்து பரவி இருக்கிறது. அண்ணன் தம்பி பேச்சுவார்த்தை நின்று போகும் அளவுக்கு, குடும்பத்தில் குழப்பம் உண்டாகும் அளவுக்கு அரசியல் வேரூன்றியுள்ளது. தங்கள் அரசியல் கட்சியின் சார்பு நிலையில் காரணமாக, சில சமயம் ஊரே இரண்டாகி பிரிந்து நிற்பதும் காணக்கிடைத்தது.
மகாராஷ்டிர பெண்கள் கூச்ச சுபாவம் இன்றி இயல்பாகப் பழகுவார்கள். நடனம் ஆடுவதற்கு துளியும் சங்கோஜப்பட மாட்டார்கள். எங்கள் அலுவலகத்தில் நடக்கும் ஆண்டு விழா கொண்டாட்டங்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு பத்து பதினைந்து நாட்களுக்கு முன்னதாகவே பயிற்சி தொடங்கிவிடும். தயக்கமில்லாமல் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் கிட்டத்தட்ட எல்லோரும் பெயர் கொடுப்பார். பயிற்சியிலும் விடாமல் கலந்து கொள்வார்கள். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களின் குழந்தைகள் தயாரித்து அளிக்கும் கலை நிகழ்ச்சிகள் தரம் வாய்ந்தவையாகவும் சிறப்பாகவும் இருக்கும். மராட்டிய பாரம்பரியக் கலைகளான லாவணி நடனம் , மல்கம்ப் (வழுக்கு மரம் ஏறுதல் )கயிற்றில் தொங்கியபடி யோகாசனங்கள் செய்தல் போன்றவை மிகச் சிறப்பாக இருக்கும்.
பக்தி மற்றும் சரித்திர நாடகங்களும் அரங்கேற்றுகிறார்கள். சத்ரபதி சிவாஜி மகராஜ் என்றுதான் பயபக்தியோடு சொல்கிறார்கள். சத்ரபதி சிவாஜி வேடம் தாங்கி நடிப்பவர் மேடையில் தோன்றிய கணமே கைதட்டல்களும் விசில் சத்தங்களும் காதைத் துளைக்கும். முழு நிகழ்ச்சியும் முடியும்வரை உற்சாகத்துடன் பங்கு கொள்வார்கள். சிறு குழந்தைகளில் இருந்து வயதான பெற்றோர் வரை ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். மிகச்சிறப்பான உடையணிந்து உற்சாகத்துடன் பங்கேற்பார்கள். அன்றைய தினம் அலுவலகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். பெரிய இடத்தில் பெண் கொடுத்தது போல, ஒவ்வொருவரும், மும்முரமாக என்ன செய்கிறோம் என்பது தெரியாமலேயே,, இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருப்பார்கள்.
கிளர்ந்த மனநிலையில் இருப்பார்கள். இரவு உறங்கும்போது, இதன் நீட்சியாக அவர்கள் கனவு கூட காணலாம். யார் கண்டது. ஒரு வாரம் வரை நிகழ்ச்சிகளை போஸ்ட்மார்ட்டம் செய்து சந்தோஷப்படுவார்கள். இதனால் ஒருவருக்கு ஒருவர் இடையேயான தொடர்பு பலமடைவதுடன், நட்பின் காரணமாக அடுத்தவர் மூலம் தேவைப்படும் அலுவலக வேலைகளும் சீக்கிரமாக முடிந்துவிடுவது கூடுதல் லாபம்.
இன்னும் வரும்.
ஹூம், பெருமூச்சுத் தான் விட முடியும். இங்கே ராஜ ராஜ சோழன் என்றாலோ, ராஜேந்திர சோழன் என்றாலோ அவர் யார்? எனக் கேட்கும் மக்களே அதிகம். அவங்க வளர்த்த தமிழ் இலக்கியமான பக்தி இலக்கியம் இன்று மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. 😦
மொழி பற்றிய கருத்துகள் நிஜம். பழக பழக எல்லாம் எளிது. அவர்கள் மொழியில் நாம் கேள்வி கேட்கும்போது நாம் அவர்களுக்கு நெருங்கியவர்களாகிறோம்!
ஆம்