மும்பை நினைவுகள் – 8

This entry is part 8 of 9 in the series மும்பை நினைவுகள்

சுவாசினி பூஜை

திருமணமான பெண்களை அழைத்து பூஜை செய்து, திருமண வேலைகளை ஆரம்பிக்கிறார்கள். உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்து பெண்கள் ஒன்று சேர்ந்து ,வாஷிங்டனில் திருமணத்தைப் போல, பொடி வகைகள், அப்பளம் வடகம் மற்றும் திருமணத்திற்கு தேவையான தின்பண்டங்கள் போன்றவற்றை தயார் செய்கிறார்கள். இப்போது அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டது. அப்படி எதுவும் நடப்பதில்லை. சிம்பாலிக்காக, ஒரு சிறிய மேடையில் சில பொருட்களை காட்சிப்படுத்துகிறார்கள்.

சீமந்த் பூஜா

மணமகன் தன் வீட்டாருடன் திருமண மண்டபத்திற்கு நுழையும் முன், மணமகளின் பெற்றோர், மணமகனின் கால்களை கழுவி, மணமகனுக்கும் பெற்றோருக்கும் பரிசுப் பொருட்களை வழங்கி உள்ளே அழைத்துச் செல்கிறார்கள்

கணேச பூஜா

முதல் பூஜை முதல் கடவுளுக்கு. திருமணம் எந்த தடையுமின்றி நிறைவேறவும், மணமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வை தொடங்கவும் கணேசருக்கு பூஜை செய்கிறார்கள்.

இதற்குப் பிறகு, மணமகன் வீட்டாருக்கும் காலை உணவு பரிமாறப்படுகிறது. பெண் வீட்டாருக்கு பல சடங்குகளும் பூஜைகளும் இருப்பதால், அவர்கள் அதிகாலையிலேயே அதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள்.

கௌரி ஹர பூஜா

மணமகள், தன் பெற்றோருடன் தேவி பார்வதியின் அருளை வேண்டி கௌரி பூஜை செய்கிறாள். கௌரி பூஜைக்கு பிறகு, தாய் மாமன்,மணமகளை மணமேடைக்கு அழைத்துச் செல்கிறார். அச்சமயம் தாய் மாமன் அளித்த புது புடவையை மணமகள் அணிகிறாள். ஏற்கனவே சொன்னது போல இந்தப் புடவை, மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் ஆறு அல்லது ஒன்பது கஜப் புடவை.

மணமகன் வேட்டி குர்தா அல்லது பைஜாமா குர்தா அணிந்து தலையில் ஒரு மகாத்மா காந்தி தொப்பி அணிந்திருப்பார். மணமக்கள் இருவருக்குமே “முண்டாவல்யா” என்கிற தலையாபரணத்தை அணிவிக்கிறார்கள். பூக்களோ அல்லது முத்துக்களோ கோர்க்கப்பட்ட இருபுறமும் இரட்டைச் சரங்கள் தொங்கும் வகையில் நெற்றியில் அணியப்படும் ஆபரணமே முண்டாவல்யா . திருமணம் முடியும் வரை மணமக்கள் இதை அணிந்திருக்கிறார்கள்.இது மராட்டிய திருமணங்களுக்கே உரித்தான சிறப்பு அம்சமாகும்.

அந்த்தர் பட் சடங்கு

திருமணம் முடியும் வரை மணமகனும் மணமகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூடாது என்பதால், இருவருக்குமிடையில் பட்டால் ஆன திரைச்சீலையை தொங்க விடுகிறார்கள். மந்திர உச்சாடனமும் சடங்குகளும் முடிந்த பிறகு, திரை அகற்றப்பட்டு, மணமக்கள் ஒருவருக்கொருவர் மாலை அணிவிக்கிறார்கள். உறவினர்கள் மங்கள அட்சதை தூவி வாழ்த்துகிறார்கள்.

கங்கணம் கட்டுதல்

மணமகளின் சகோதரர்களோ அல்லது நெருங்கிய ஆண் உறவினர்களோ, மேடைக்கு அழைக்கப்பட்டு, மணமக்களை சுற்றி, பஞ்சால் ஆன திரிவயொன்றை சுற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பிறகு அந்த நூலில் மஞ்சள் கிழங்கை கோர்த்து மணமக்களின் மணிக்கட்டில் காப்பு போல கட்டுகிறார்கள்.

கன்னியா தான்

மணமகளின் தகப்பனார், தன் மகளை மணமகனுக்கு தானமாக அளிக்கிறார். மணமகன் மணமகளுக்கு தாலி அணிவித்து நெற்றியில் குங்குமம் இடுகிறான். மணமகளும் மணமகனின் நெற்றியில் சந்தனமும் குங்குமமும் இடுகிறாள்

ஹோமம், சப்தபதி,அக்னியை வலம் வருதல் போன்ற சடங்குகள் ஒனறின் பின் ஒன்றாக நடக்கின்றன.

மணமகளின் அத்தை, மணமக்கள் அக்னியை வலம் வரும் முன், இருவரது ஆடைகளையும் சேர்த்து முடிச்சுப் போடுகிறார். திருமணம் முடிந்ததும், இந்த முடிச்சை அவரே அவிழ்க்கிறார். இதற்காக அவருக்கு சிறப்பு வெகுமானம் அளிக்கப்படுகிறது.

கர்ம சம்பாதி

மணமகளின் சகோதரனோ, மற்ற ஆண் உறவினர்களோ, மணமகனின் காதை திருகுகிறார்கள். என் சகோதரியை நன்றாக கவனித்துக் கொள்,இல்லையேல் மவனே நடக்குறதே வேற என்று போலியாக மிரட்டுகிற ஒரு விளையாட்டு சடங்கு. மணமகன் மைத்துனருக்கு பணமோ அல்லது பரிசோ கொடுத்த பின்பே தன் காதை விடுவித்துக் கொள்ள முடியும்.

மேற்கூறிய சடங்குகள் முடிந்தபின் திருமணம் நிறைவுற்ற காக கருதப்படுகிறது.

இன்னும் வரும்.

Series Navigation<< மும்பை நினைவுகள் – 7மும்பை நினைவுகள் – 9 >>

About Author

2 Replies to “மும்பை நினைவுகள் – 8”

  1. சுவையான பதிவு. திருமண நடைமுறைகள் பெரும்பாலும் நம்முடையதை ஒத்தே இருந்தாலும் சில மாற்றங்களும் உள்ளன.

  2. நிறைய வழக்கங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது என்றாலும், நம்மூரில் செய்யும் சுவாசினி பூஜை வேறு முறையோ?

Comments are closed.