மும்பை நினைவுகள் – 9

This entry is part 9 of 9 in the series மும்பை நினைவுகள்

திருமண நிகழ்வுகள் முடிந்ததும் மிகவும் எளிமையான ஆனால் சுவையான உணவு பரிமாறப்படுகிறது மராட்டிய திருமணங்களில் நான் கண்டு வியந்த விஷயம் அவர்களது எளிமை ஆடம்பரம் அறவே அற்ற திருமணங்கள்.

உப்பும் மஞ்சளும் வாங்கி திருமணச் செலவை ஆரம்பிக்கிறார்கள். ஒரு நோட்டுப் போட்டு எல்லா செலவுகளையும் குறித்து வைக்கிறார்கள் பெண் வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் செலவைப் பாதி பாதியாக பகிர்ந்து கொள்கிறார்கள். உறவினர்களை அழைப்பதும் அப்படியே. இருபக்கத்திலும் சம எண்ணிக்கையில் உறவினர்கள் வருகிறார்கள். அனாவசியமான டாம்பீகம் இல்லை. கூட்டம் சேர்ப்பதில்லை. கவர் கொடுக்கவும்,பூங்கொத்து கொடுக்கவும் நீளமான வரிசையில் கால்கடுக்க காத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை சாப்பாடு முடித்ததும் இருவீட்டாரும் அவரவர் சாமான்களை சேகரித்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்பி விடுகிறார்கள் . மணமகன் வீட்டில் அன்றோ அல்லது மறுநாளோ சத்தியநாராயண பூஜை நடத்துகிறார்கள் .

அதற்கு அடுத்த நாள், வழக்கம்போல வாழ்க்கையை தொடங்கி விடுகிறார்கள். திருமண அழைப்பிதழிலும் பரிசுகளைத் தவிர்க்கவும் என்று அச்சடிப்பதோடு மட்டுமல்லாமல், அதை முழுவதுமாகக் கடைபிடிக்கிறார்கள். எவ்வளவு வற்புறுத்தினாலும் பரிசுப் பொருளையும் பணத்தையோ பெற்றுக் கொள்வதில்லை. இதில் தீர்மானமாக இருக்கிறார்கள்.

நான் பார்த்த மராட்டி திருமணங்கள் அனைத்துமே மத்திய வர்க்க திருமணங்கள் அதாவது எல்லோருமே சால் வாசிகள். முதலில் உங்களுக்கு சால் என்பதை புரிய வைக்க வேண்டும் . ஒரு பெரிய கதவையோ அல்லது வளைவையோ தாண்டி உள்ளே
நுழைந்ததும், இருபுறமும் ஒன்றோடொன்று ஒட்டியவாறு, நான்கு அல்லது ஐந்து வீடுகள் இருக்கும். நான்கு அல்லது ஐந்து மாடிகள் இருக்கலாம். இந்த கட்டிடத்தில் எந்த வீட்டின் பெண்ணுக்கு திருமணம் நடந்தாலும் அத்தனை பேரும் ஒன்றாக தங்கள் வீட்டுத் திருமணமாகக் கருதி உற்சாகத்துடன் வேலை செய்கிறார்கள்.

மேல் மாடியில் இருந்து தரை வரை வண்ண வண்ண ரங்கோலிக் கோலங்கள் போடுகிறார்கள். வண்ண விளக்குகள் தொங்கவிட்டு அழகு பார்க்கிறார்கள். எந்த வேலை தந்தாலும் சிட்டாக பறக்கிறார்கள். எள் என்பதற்கு முன் எண்ணையாக நிற்கிறார்கள். இது என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய விஷயம்.

இன்னும் வரும்

Series Navigation<< மும்பை நினைவுகள் – 8

About Author