யானை வாகனம்

யானை வாகனம்

பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தில் வருஷம் முழுவதும் உற்சவம் தான். சித்திரை தொடங்கி பங்குனி வரை விதவிதமாய் திருநாள் காண்பார் ரங்கநாதன். அவருக்கென்ன ரங்கராஜா!

சித்திரை பிறந்தால் வித வித நறுமண மலர்களுடன் பூச்சார்த்தி விழா,கோடை வெப்பம் தணிய குளு குளு கேடாக்குழி உற்சவம். அதாவது ரங்கநாதர் மண்டபத்தில் எழுந்தருளுவார். சுற்றி ஒரு பள்ளம் நிறைய தண்ணீர் ஊற்றியிருக்கும். ஜிலு ஜிலுன்னு இயற்கை ஏ.சி. ஆகா அந்தச் சூழலில் அரங்கனைச் சேவிப்பது ஆனந்தம்.

இது போக ஊஞ்சல்,பவித்ரோத்ஸவம்,நவராத்ரின்னு மாதத்தில் பத்து நாள் கோவிலும் ஊரும் களைகட்டும்.

இதே மாதிரி தான் வைகுண்ட ஏகாதசி திருநாள். இருபது நாள் கோலாகலம். ஊரே பாசிட்டிவ் எனர்ஜீல மிதக்கும் என்றால் மிகையில்லை.

பெருமாள் சேவிக்க வரோம்னு லெட்டர் போட்டு சொந்தக்காரா,சொந்தக்காரரின் சொந்தக்காரா, சொந்தக்காராளுக்குத் தெரிஞ்சவா இப்படிப் பலர் வந்து தங்குவா. இப்போ நிறைய விடுதிகள் இருக்கு.
நாங்க வளர்ந்த காலத்தில் உள்ளூர்வாசிகள் தான் தங்க இடம் தருவோம்.

வந்தாரை வாழவைக்கும் ஸ்ரீரங்கவாசிகள்!

வைகுண்ட ஏகாதசியன்னிக்கு ‘சொர்க்க வாசல் மிதிச்சாச்சா’ என்பது தான் ஒரே கேள்வி.

என் வயதுப் பிள்ளைகளுக்கு பகல் பத்து ,பரமபதவாசல் இதெல்லாம் விட பட்டாணி கடலை,பஞ்சு மிட்டாய், எலாஸ்டிக் கட்டிய ரப்பர் பந்து இதெல்லாம் முக்கியம்.

அந்தக் காலத்தில் ரங்கநாதர் கோவில் மணல்வழி தான் கடலில்லாத beach எங்களுக்கு. இராப்பத்து சமயத்தில் சம்பார தோசையும் செல்வரப்பமும் வாங்கிப் பங்கு போட்டுக்கொண்டு மணல்வழியில் அமர்ந்து சுவைப்பதே சுகம். இந்த செல்வரப்பம்ங்கிறது நீங்க நினைக்கிறா மாதிரி மென்மையா இருக்காது.

அதை உடைப்பவருக்குத்தான் என் பெண்ணை கட்டிவைப்பேன்னு நாட்டாமை சவால் விடலாம்.
அப்படி இருக்கும். ஆனால் எங்க ரங்கனுக்கு அது தான் ரொம்பப் பிடிக்கும். அதனால் எங்களுக்கும்.

இப்படி ஓடி ஓடி கோவில்ல போய் சேவிச்ச ரங்கன் தை, மாசி,பங்குனி,சித்திரை மாதங்களில் எங்களைத் தேடி வீதி வழியே வருவான். அன்ன பட்சி, ஹனுமந்த வாகனம்,தங்கக் கருடன்,கற்பக விருட்சம்,சேஷ வாகனம், யாளி,குதிரை,யானை என ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வாகனத்தில் நகர்வலம் வருவது கண்கொள்ளாக் காட்சி.

தை ,மாசித் திருநாளில் உத்திர வீதியில் பெருமாள் சேவிக்கப் போவது மறக்கமுடியாத அனுபவம்.

இருள் சூழ் வேளையில் மூணு அதிர் வேட்டு சத்தம் கேக்கும். முதல் வேட்டு தான் கோவிலில் புறப்பாடு ஆகும் சிக்னல். இருபது நிமிஷம் ஆகும் மேல உத்திர வீதி வர்றதுக்கு. ஆனா எங்களுக்கு அதெல்லாம் பிரச்சனையில்லை.
முதல் வேட்டு சத்தம் கேட்க வேண்டியது தான். எடு ஓட்டம்!

புத்தகம் பேனாவெல்லாம் மூடக் கூட நேரமெடுக்காமல் மின்னல் வேகத்துல உத்திர வீதில லேண்டிங் ஆகிடுவோம் எங்க வீதிப் பசங்கல்லாம். ஓடிப்பிடித்து விளையாடுதல், ஐஸ் பாய்ஸ் எல்லாம் உண்டு( அது ஐ ஸ்பையாம்.சமீபத்துல தான் தெரிஞ்சது)

தெருவை அடைத்து கோலம் போட்டிருப்பா ஒவ்வொரு வீட்டு வாசல்லயும் வீதிலயும். ஒவ்வொரு கோலமா நின்னு வேடிக்கைப் பார்த்துட்டு ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்டுன்னு சொல்லும் ஜட்ஜ் மாதிரி நகர்வோம்.

இதுக்குள்ள எங்க பெற்றோரெல்லாம் ஒவ்வொருவராக வர ஆரம்பிப்பா. அக்கம் பக்கத்து மாமிகள் தவிர அடையவளைஞ்சான்,உத்திர வீதிப் பெண்களுடனும் கொஞ்சநேரம் அரட்டை அடிக்க அவகாசம் அது.
அந்தக் காலத்து வாட்ஸாப்,ஃபேஸ்புக்,இன்ஸ்டாகிராம் எல்லாமே அது தான்.

பாவம்! இந்த அரை மணிநேரம் தான் ரிலாக்சேஷன் எங்கள் கால அம்மாக்களுக்கு. இந்த ஆரவாரத்திற்கிடையே யானை வரும் மணியோசையும் எங்க ஊர் சிறப்பு ‘ஒத்தைக் கொட்டு’ டண்….டண்….டண்ணும் கேட்கும்………

ரங்கன் மூலையில் திரும்புவான். அடடா! தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் அவன் கோடி சூர்ய பிரகாசனாக நெருங்கி வர வர சிலிர்க்கும்.

அவனைச் சுமந்து வரும் ஸ்ரீமான்தாங்கிகளின் ஒய்யார நடையில் கம்பீரமாக பவனி வரும்
அவனைக்காணவா, வாகனத்தின் அழகான வேலைப்பாடுகளை ரசிக்கவா! தினமும்
நின்று நிதானமாக சேவை சாதிக்கும் ரங்கன் யானை வாகனத்தன்று மட்டும் ஒரே ஓட்டமா ஓடிடுவான்.

அவ்வளவு கனம். வெள்ளி யானை.மேலே ரங்கன்.அவனைப்பிடித்துக்கொண்டு ஒருவர்.அவருக்குக் குடைபிடிக்க ஒருவர்.ரெண்டு பேர் சாமரம் வீச! இவ்வளவு பேரையும் சுமப்பதால் ஓட்டமாக ஓடுவார்கள்.ஆனால் சீரான ஓட்டம்.துளிக்கூட பிசிறில்லாத ஓட்டம்.கம்பீரமான ஓட்டம்.

வாகன ஓட்டத்துக்கு இடையூறு இல்லாமல் முதலில் நிஜ யானை, பிறகு குதிரைகள் ,பின் வேதகோஷம் போக, வெகு தூரத்தில் தான் யானை வாகனம் வரும். வாகனத்தின் முன் சிறுவர்கள் ஹோன்னு கத்திண்டே ஓடுவா.

மிஸ் பண்ணிடுவோமோன்னு பக்தர்கள் வாகனத்தின் கூடவே ஓடி வருவா.மூலைக்கு மூலை தான் நிற்பான் ரங்கன்.ஒவ்வொரு மூலையிலும் ஒரு நிமிஷம் மட்டுமே ஆசுவாசம்.டக்குனு கிளம்பிடுவா.
மறுபடியும் ஹோன்னு கத்திண்டே ஓட்டம்.

குழந்தைகள்லேர்ந்து குச்சி ஊனும் தாத்தா பாட்டி வரை இந்த யானை வாகனத்துக்காக ஒரு மணிநேரம் கூட காத்திருப்பதுண்டு.

யானை வாகனம் சேவிச்சுட்டு கலைஞ்சு போகும் போது ஒரு சந்தோஷம், உற்சாகம், புத்துணர்வு, கொண்டாட்ட மனநிலை உடலெல்லாம் பரவுவது கண்கூடு. இதை அப்போ விவரிக்கத் தெரியலை.

ஆனால் போன வாரம் நடந்த தெப்பத் திருவிழாவில் பல வருஷம் கழிச்சு யானை வாகனம் சேவிச்சபோது இந்த உற்சாகம்,ஆனந்தம் அதே அளவில் இருந்தது.அப்போ தான் புரிந்தது.நாம தான் மாறிட்டோம்.

ரங்கனும் அவனுடைய உற்சவங்களும் ஸ்ரீரங்கவாசிகளின் பக்தியும் அதே பொலிவுடன்.

இப்போ யோசித்தால் புரியறது. தெப்பமும் தேரும் தீபோத்ஸவமும் தீ மிதியும் நம் முன்னோர் ஏன் ஏற்படுத்தினர்?

பக்தியை வளர்க்க மட்டுமல்ல கூடவே சமூக நல்லிணக்கம்,சோஷியல் கேதரிங்னு இப்போ சொல்லறோமே அந்த மாதிரி பரஸ்பர சந்திப்பு,கொண்டாட்டம் ,அன்றாட வாழ்க்கைச்சுமையிலிருந்து சில மணி நேர விடுதலை ,பொழுதுபோக்கு என எவ்வளவோ விஷயங்களை உள்ளடக்கியவை தான் நமது கோவில்களும் அவைசார்ந்த கோலாகலங்களும்.

பக்தியை வாழ்வியலோடு பின்னிப் பிணைத்த பண்பாடு பாரம்பரியத்தை வியந்து போற்றாமல் இருக்கமுடியுமோ?

About Author