ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 13

This entry is part 13 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளை படிக்க

கால்களை அலம்பிவிடுதல்

இப்போது இந்த பிராமணர்களை நாம் பூஜிக்கிறோம். வரணம் செய்தபின் பூஜிக்கிறோம். இங்கே சாதாரணமாக பூஜை என்பது நமக்கு தெரியும். உள்ள படிகள் – தூப தீபம் என்று அத்தனையுமே செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. ஆனால் இங்கே அவ்வளவும் செய்வது இல்லை. வழக்கமாக வரவேற்று ஆசனம் கொடுத்து உட்கார வைத்து, கையில் ஜலம் விட்டு, கால்களை அலம்பி விடுவது என்பது சாதாரண பூஜை முறை. அதே தான் இங்கேயும் செய்கிறோம். தேவலோகத்திலிருந்தும் பித்ரு லோகத்தில் இருந்தும் வருவதால் இவர்கள் கால்களுக்கு பூஜை செய்யும் அந்த இடத்தில் ஆசனம் தர்பம் சந்தனம் அக்ஷதை ஆகியவற்றை நாம் போடுகிறோம்.

முன்போலவே கோத்திரம் சர்மாக்களை கூறி, அவர்களுக்காக செய்யும் இந்த சிராத்தத்தில் விஸ்வேதேவர் விஷ்ணு பித்ருக்கள் ஆகியவர்களுக்கு பாத்யம் கொடுக்கும் இடத்தில் அர்ச்சனை செய்யவேண்டும். ஆசனம், தர்ப்பம், சந்தனம், மீதி தூப தீப ஆராதனைகளுக்காக அக்ஷதை (பித்ருக்களுக்கு எள்) ஆகியவற்றை நாம் போடுகிறோம். பின் விஸ்வேதேவரை அவரது மண்டலத்தின் எதிரே கிழக்கு முகமாக அமர வைத்து அக்‌ஷதையுடன் நுனிக்காலில் போடப்படும் தீர்த்தத்துக்கு மந்திரம் சொல்கிறோம். அதன் அர்த்தம் ‘ஓ ஜல தேவதையே! எங்களுக்கு பிரியமான பானமாகவும் சுக ஹேதுவாகவும் ஆகவேண்டும். மேலும் சுகம் உண்டாகவும் துக்கம் அகலவும் எங்களுக்கு நான்கு புறமும் நீ பிரவாகமாக இருக்க வேண்டும்’. இப்படி சொல்லி அக்ஷதை உடன் ஜலத்தை சேர்த்து விஸ்வேதேவர் வலது நுனிகாலில் விடவேண்டும்.

பிறகு பவித்ரத்தை கழற்றி நம் வலது காதில் வைத்துக் கொள்ள வேண்டும். மேற்கொண்டு செய்வதை ஒருபோதும் பவித்ரம் அணிந்து செய்யலாகாது. அப்படி செய்தால் வ்ருத்ராசுரன் வஜ்ராயுதத்தால் அடிக்கப்பட்டது போல பித்ருக்களும் தேவர்களும் அடிக்கப்படுகிறார்களாம். அதே போல பவித்ரத்தை கழற்றி பூமியில் வைத்துவிடக்கூடாது. அப்படி நடந்து விட்டால் அதை விட்டுவிட்டு புதிய பவித்ரம் அணிய வேண்டும். இரண்டு பாதங்களின் அடியிலும் மந்திரம் சொல்லி நெய் தடவ வேண்டும். கால்களின் உள் புறத்தில் பசுஞ் சாணம் தடவி கை அலம்பி வலது பாதம் கணுக்கால்கள் முதல் விரல்கள் இடை வரை அலம்ப வேண்டும். இதற்கு மனைவி ஜலம் விட வேண்டும்.

நெய் தடவ மந்திரத்திற்கு ‘நீ சுக்கிரன் என்னும் தாதுவாகவும் ஜ்யோதிஸாகவும் தேஸசாகவும் இருக்கிறாய்’ என்று பொருள் வரும். இதனால் இது உபசாரமும் ஆகிறது. பிராமணர் ரூபத்திற்கு ஏற்ப தேஜஸ்வியாகவும் ஆகிறார். சாணம் தடவுகையில் ‘கந்தத்வாராம்’ என்ற மந்திர. இதனால் தேஜஸ் குறையாமலும் புனிதமாகவும் இருக்கும்படியும் பார்த்துக்கொள்கிறோம். ‘நல்வாசனைக்கு துவாரமும், எவராலும் அசைக்க முடியாததும், எப்போதும் நிறைந்துள்ளதும், ஸர்வ ஸம்ருத்தி உள்ளதும், எல்லாப் பிராணிகளுக்கும் ஈஸ்வரி ஆகவும் இருக்கிற ஸ்ரீதேவியை அழைக்கிறேன்’ என்ற பொருள் வரும்.

பிராம்ஹணரை பார்த்து சொல்லும் மந்திரம் ‘எல்லா செல்வங்களையும் பெற காரணம் ஆனதும், வரும் ஆபத்துகளை அகற்ற வால் நட்சத்திரம் ஆனதும், கரையில்லா பிறவிக்கடலுக்கு அணையாகவும் உள்ள பிராமணரின் பாததூளி புனிதம் ஆக்கட்டும் . மன நோய், உடல் நோய்களை அகற்றுவதும் மனிதரின் மரணத்தையும் வறுமையையும் அழிப்பதும், செல்வம் புஷ்டி கீர்த்தி ஆகியவற்றைத் தருவதுமான பிராமணரின் பாத கமலத்தை நான் நமஸ்கரிக்கிறேன். பிராமண சமூகத்தின் தரிசனத்தால் பாபராசிகள் தேய்கின்றன. நமஸ்கரித்தால் மங்கலம் உண்டாகிறது. அர்ச்சனை செய்வதால் அழியாத பதவி கிடைக்கும்’. இதுவே விஸ்வேதேவருக்கு செய்யும் உபசாரங்களில் மந்திரங்களின் பொருள். இப்படி அலம்பி விட்ட ஜலத்தால் தன்னையும் பத்னியையும் ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும்.

Series Navigation<< ஶ்ராத்தம் – 12ஶ்ராத்தம் – 14 >>

About Author