ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 17

This entry is part 19 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – இதுவரை

வஸ்திரம் முதலிய உபசாரங்கள்

இப்படி பிராமணர்களுக்கு கையில் அளித்த தீர்த்தம் கீழே சிந்தும். அதற்கு புத்திரனை கொடுக்கும் என்ற ஒரு காம்யமும் இருக்கிறது. அதனால் இதை கீழே விடாமல் ஒரு டபரா போன்ற பாத்திரத்தில் க்ரஹித்து அதை அக்னியின் மேற்கில் கீழே விட்டு, தொட்டு கண்களை துடைத்துக் கொள்ளச் சொல்லுகிறார்கள். பழக்கத்தில் கர்த்தா 80 வயசோ 40 வயசோ 20 வயசோ இதை செய்யச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்! போகட்டும். அடுத்து வஸ்திரம். உபவீதியாக விஸ்வேதேவரிடம் சென்று வஸ்திரங்களை கொடுக்க வேண்டும்.

நடைமுறையில் இதை முன்னையே கொடுத்து விடுகிறோம் இப்போது கொடுப்பதாக பாவனையாக செய்கிறோம். கீழே கட்டிக்கொண்ட வஸ்திரம், மேலே தரித்துக் கொண்ட வஸ்திரம், மூன்றாவது வஸ்திரம் கொடுத்து இருந்தால் அதையும் தொட்டு மந்திரங்களை சொல்லுகிறோம். (‘யுவாஸு வாஸா’ என்று மந்திரம் சில சம்பிரதாயங்களில்). பூணூல் கொடுத்திருந்தால் ‘தாரணார்த்தம் இதம் யக்ஞோபவீதம்’ என்கிறோம். பிறகு அலங்காரத்துக்காக சந்தனம் கொடுக்கிறோம். புஷ்பங்களுக்கு பதில் துளசி இலைகளை கொடுக்கிறோம். பிறகு உபசாரத்துக்காக மீண்டும் சந்தனம் கொடுக்கிறோம். இங்கே ‘புஷ்பாவதி’ என்ற மந்திரம். அர்த்தம்: புஷ்பம் மாத்திரம் உள்ளதும் புஷ்பத்துடன் பழம் உள்ளதும், புஷ்பம் இல்லாமலே பழுப்பதும், மூன்றும் இல்லாமல் வெகுகாலம் உயிருடன் இருப்பதுமான ஓஷதிகள்… வேகமாக சென்று வெற்றியை கொடுக்கும் குதிரைகள் போல் இருந்து, இங்கு நமக்கு நன்மையை கொடுக்கட்டும். இது பூஜையில் மந்திர புஷ்பம் சொல்வது போல ஆகும்.

அடுத்து தூபம் காட்டுவதற்காக ‘தூர்வஸி’ என்ற மந்திரம் இருக்கிறது. அதன் பொருள்: அக்னியில் பலது உள்ளன. ஒன்று இம்சிக்கும் குணம் உள்ளது. அதைப் பார்த்து “ஓ தூர்வ, நீ இம்சிக்கும் தூர் எனப்படுவாய். எனது பாவத்தை இம்சி. எங்களை இம்சிக்கும் ராக்ஷசரை இம்சி. நாங்கள் வெறுக்கும் ஆலஸ்யம் முதலான கெட்ட குணங்களை இம்சி. நீ தேவர்களுக்குப் பிரியமானவன், சொந்தமானவன், நிறைந்தவன், ஹவிஸை சுமந்து தேவரை அழைப்பவன்; திருடமானவன். உலகிற்கு மித்திரன் ஆன சூரியனது திருஷ்டியால் உன்னை பார்க்கிறேன். உன்னை நான் இம்சிக்க மாட்டேன், அஞ்சாதே!

இது இஷ்டியில் நெல்லை கொண்டு வரும் போது சொல்லும் மந்திரம். இருந்தாலும் தர்ம சாஸ்திரத்தில் இந்த மந்திரத்தை இங்கே கூறச் சொல்லி இருக்கிறது. அப்படித்தான் பலதும் இருக்கின்றன. அவை நமக்கு தெரிவதில்லை. சாஸ்திர நூல் சொன்னால் அதைச் செய்யத்தான் வேண்டும். அதன் பொருள்: விச்வேதேவர்களே நீங்கள் முகருவதற்காக இந்த தூபம்.

தீபம் காட்டுகையில் கூறும் ‘உத்தீப்யஸ்வ” என்னும் மந்திரத்தின் பொருள்: ‘அக்னியே எனது பாவத்தை போக்கி பிரகாசமாக இருங்கள். பசுக்களையும் நீண்ட ஆயுளையும் கொடுங்கள். திக்குகள் எல்லாம் நான் வசிப்பதற்கு யோக்கியதை உள்ளதாக ஆகட்டும். ஓ அக்னே, பசு, குதிரை, என்னை சார்ந்த மனிதர், வீடு முதலியவற்றை நிருருதி இம்சிக்காமல் இருக்கட்டும். என் குற்றத்தை மனதில் வைக்காமல் எல்லா ஸ்ரேயஸ்களும் உண்டாகும்படி செய்வீராக.’

யார் இந்த நிருருதி? திக் பாலர்களில் இவர் தென்மேற்கு திசையில் காவலர்.

Series Navigation<< ஶ்ராத்தம் – 18ஶ்ராத்தம் – 20 >>

About Author